செவ்வாய், 15 மே, 2012

செயலில் வாழ்ந்த வீரன் நீ

சகோதரனே !
இன்று 
உன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் 
ஒன்றாய் வளர்ந்தோம் 
ஓரணியில் விளையாடினோம் 
கால அழைப்பை ஏற்று 
இன விடுதலைக்காய் உழைத்தோம் 
உனக்கும் எனக்கும் 
ஏழு வயது இடைவெளி -ஆனால் 
ஒரே நாளில் பிறந்தோம் 
எங்கு நின்றாலும் 
நம் பிறந்த நாளில் 
உன்னை நினைப்பேன் 
நீயும் அப்படித்தான் 

ஒரு குழந்தையின் மனநிலை கருதி 
நீண்ட நாள் காத்திருந்த இலக்கு 
கையிற்கு எட்டியபோதும் 
கைவிட்டு வந்தவன் நீ 
மீண்டும் சென்று வென்றுவந்த 
செயலில் வாழ்ந்த வீரன் நீ 

உனது தாக்குதல்கள் 
எங்கும் பேசப்பட 
நீயோ 
ஏதும் அறியாதவனாய் நகர்வாய்
வீரனே 
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
நான் உன் வீடு வந்து திரும்பும் போது
நீதான் என்னை 
சைக்கிளில் ஏற்றிவந்து 
பஸ்ஸில் நான் ஏறும்வரை 
காவல் நிற்பாய் 
எனது உருவம் தெரியும்வரை 
கை அசைப்பாய்  
அந்த நாள் மீளவருமா?

முள்ளிவாய்க்காலில் 
கூப்பிடு தூரத்தில் நான் நிற்க 
ஏன் எனக்கு கை அசைக்காமல் போனாய்?
மயிரிழைகளில் உயிர்தப்பி
கடமையில் மூழ்கிக்கிடந்தேன் நான் -நீ
இவ்வுலகில் இல்லை என்று அறியாமல் 

உன் தாய் 
நீ வருவாய் என்று 
காத்திருக்கிறாளேடா!
என்னடா சொல்ல ?



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share