புதன், 11 ஜூலை, 2018

திரும்பிப்பார்க்கிறேன் -51


இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம் அம்மாதான் எடுத்திருந்தார். யாவும் கறுப்பு வெள்ளை படங்கள். அம்மா ஒரு சிறந்த புகைப்படக்கலைஞர். நான் அறிந்த முதலாவது புகைப்படக்கலைஞரும் என் அம்மாதான். எனது பள்ளிக்காலங்களில் அம்மாவின் வரையும் திறனைக்கண்டு வியந்திருக்கிறேன். அம்மா ஒரு குடும்பப்பெண்ணாகவே வாழ்ந்ததால் ஒரு நல்ல கலைஞர் உலகிற்கு தெரியாமல் போய்விட்டார். அம்மாக்கள் எப்போதும் தங்களது குடும்பத்திற்காகவே வாழ்ந்துமுடித்துவிடுகிறார்கள்.       
  


Share/Save/Bookmark

சனி, 30 ஜூன், 2018

திரும்பிப்பார்க்கிறேன்-50


நாம் சிறுவர்களாக இருக்கும்போது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டுதடவைதான் புது உடுப்பு கிடைக்கும். அது சித்திரை வருடப்பிறப்போ தீபாவளியாகவோ இருக்கும்.  அப்பா ஒரு roll shirt துணியும் ஒரு roll காற்சட்டை துணியும் வாங்கிவருவார். அம்மா எனக்கும் சகோதரர்களுக்கும் அப்பாவிற்கும் shirt உம் எங்களுக்கு காற்சட்டையும் அப்பாவிற்கு நீளக்காற்சட்டையும் தைப்பார். நாங்கள் uniform போலத்தான் போட்டுத்திரிவோம்.நாங்கள் சகோதரர்கள் என்று அடுத்த ஊர்க்காரனும் கண்டுபிடித்துவிடுவான். சங்கக்கடையில் சீத்தைத்துணி ஒரு roll வாங்கி எல்லோருக்கும் சாரம். பாடசாலைக்கு மட்டுமே செருப்பு(பாட்டா) போடுவோம். இப்போது காலம் அப்படியில்லை. வீட்டுக்குள்ளும் செருப்பு போடுகிறார்கள் . வயலிலும்  செருப்பு போடுகிறார்கள். எனக்கு எதுவும் பிழையாக தெரியவில்லை.   


Share/Save/Bookmark

வெள்ளி, 29 ஜூன், 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 49

   

1992 ஆம் ஆண்டு நிதர்சனம் நிறுவனத்தின்  சிறப்பான ஒழுங்கமைப்பில் யாழ் தின்னவேலியில் சிறுகதை, கவிதைப்பட்டறை வார இறுதிநாட்களில் நடைபெற்றது. என் சகமாணவர்களாக ஆதி அக்கா, தமிழினி(கயல்விழி),மேஜர் பாரதி,தமிழவள் உள்ளிட்ட பல பெருமைக்குரியவர்கள் இருந்தார்கள். பட்டறைகளின் வளவாளர்களாக சொக்கன்,கவிஞர் முருகையன், கவிஞர் சோ.பத்மநாதன்(சோ.ப),அ. யேசுராசா, சு.வில்வரத்தினம் (சு.வி)உள்ளிட்ட பல பெருந்தகைகள் இருந்தார்கள். சு.வி யின் ஓ--- வண்டிக்காரா பாடல் இன்னும் காதில் கேட்டுக்கொண்டிருக்கிறது.  


Share/Save/Bookmark

புதன், 27 ஜூன், 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 48


சிறுதுப்பாக்கி சுடும் பயிற்சிகளின் போது மட்டுமல்ல அம்பு, கத்தி எறிதலிலும் நான் அநேகமாக இரண்டாம் நிலையில் வருவேன். கடாபிதான் முதலாவதாக வருவார். அம்பில் கடாபி முதலாவதாக வர நானும் ராஜேசும் இரண்டாவதாய் வந்தது இன்றும் மனதில் பசுமரத்தாணியாய் இருக்கிறது.நான் பார்த்ததில்  கடாபி அளவுக்கு குறிசுடுபவர் யாருமில்லை. துர்க்காவும் நல்ல குறிசுடுநராக இருந்தார். தமிழ்ச்செல்வனும் நல்ல குறிசுடுநராக இருந்தார்.நான் அறிந்தவரையில் கடாபிற்கு அடுத்த நிலையில் துர்க்கா, தமிழ்சசெல்வன் உள்ளிட்ட சிலர் இருந்தனர். 



Share/Save/Bookmark
எனது ஒரு தோளில் மக்களுக்கான பணியும் மறுதோளில் விடுதலைப்போராட்ட பணியும் ஏற்றப்பட்டிருந்தது. இருபணிகளையும் நேர்மையாக செய்தேன். ஒவ்வொரு பணியின் வெற்றிக்குப்பின்னும் பலர் இருந்தார்கள். எந்த நேரமும் சாவை எதிர்கொள்ளும் மனநிலையுடனேயே பயணித்தேன். இன்னும் இன்னும் அதிகமாக செய்திருக்கமுடியுமா என்பதே இன்றும் என் மனதின் அவா. இன்று ஒரு சாதணனனாக வாழ்கிறேன். 


Share/Save/Bookmark

செவ்வாய், 26 ஜூன், 2018

     என்மண்ணில்
     ஆக்கிரமிப்போ  அடக்குமுறையோ
    திடீரென வரும் - தானாக
    போராட்டமும் எழும்
     இன்னுமொரு  ஆக்கிரமிப்போ
    அடக்குமுறையோ
    திடீரென வரும்
    போராட்டம் குடிபெயரும்
   பழைய ஆக்கிரமிப்போ
    அடக்குமுறையோ
    திளைத்து வளரும்
    மீண்டும் ஆக்கிரமிப்போ
    அடக்குமுறையோ
     புது/ பழைய வடிவில் 
    வேறு இடத்தில் திடீரென---- 
    போராட்டம் மட்டும் குடிபெயரும்
    வழமைபோல்
    ஊடகமும் பின்செல்லும்
    பழையன வேர்விடும்
   
   களைகளும் நெற்பயிரை போல
   என்மண்ணில் களைகட்டியிருக்கிறது
   என் தேச எல்லை
   பகல்கொள்ளை போகிறது 
   என் நிலம் அன்னியமாகிறது   



Share/Save/Bookmark

சனி, 23 ஜூன், 2018

திரும்பிப்பார்க்கிறேன்-47


வைகாசி 2009 இலங்கையில் போர் அராஜகமான முறையில் ஓய்வுக்கு கொண்டுவரப்பட்டது. பல ஆயிரம் தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசால் திட்டமிட்டு கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்கள் போக மிகுதியானோர் திறந்தவெளி சிறைகளிலும், சிறைகளிலும் அடைக்கப்பட்டனர். உள்ளுக்கு நடந்தவிடயங்களை  ஸ்ரீலங்கா அரசு குறிப்பிட்ட காலத்திற்கு உலகிற்கு மறைக்க தீவிரமாய் முயன்றது. அந்தக்காலமும் தமிழர்களின் வரலாற்றில் முக்கியகாலம். நானும் அக்காலத்தில் சாட்சியாகி என்பங்கை நிறைவேற்றியது இன்று மனதிற்கு ஆறுதல் தருகிறது. ஆனால் உலகம் எம்மை ஏமாற்றும் என்பதை நான் அறிந்தே வைத்திருந்தேன். அதுவே நடந்தது.      


Share/Save/Bookmark

வியாழன், 21 ஜூன், 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 46


நான் முள்ளிவாய்க்காலை விட்டு நகரும் போது ஒரு கடமையை ஓரளவு செய்துவிட்ட உள்உணர்வு  அதாவது மக்கள் முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து போய்விட்டார்கள். தொற்றுநோய்களில் இருந்து மக்களை காப்பாற்றிவிட்டோம். மற்றைய கடமை நெஞ்சை பிசைந்துகொண்டிருந்தது.  நான் தலைவனுக்கு உரிய மருத்துவன். அவருக்கு அருகில் நிற்கவேண்டியவன். அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் நேற்றிரவு(16/05/2009) தப்பியிருப்பார் என என்மனமும் அருகில் சுதர்சனும்  சொல்லிக்கொண்டிருந்தார்கள். வேறுவழியில்லை. அருகில் சிங்கள இராணுவம். சில நேரம் சுதர்சன் என்னோடு நின்றிருக்காவிட்டால் நான் வந்திருக்கமாட்டேன். வந்தும் சுதர்சனை இழந்துவிட்டேன். சுதர்சனுக்கு என்ன நடந்தது என கூட தெரியவில்லை.           


Share/Save/Bookmark

திங்கள், 11 ஜூன், 2018

திரும்பிப்பார்க்கிறேன் -45

 
1983 ஆம் ஆண்டு ஆடிமாதத்தில் தென்னிலங்கையில் சிங்கள அரசின் மேற்பார்வையில் தமிழர் மீது ஏற்படுத்தப்பட்ட பாரிய தாக்குதலின் பின் தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் கற்றுக்கொண்டிருந்த தமிழ் மாணவர்களும் தமிழ்ப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருந்தனர். 1984ஆம் ஆண்டு ஆரம்பத்தில் யாழ் பல்கலையில் இடம்பெயர்ந்திருந்த மாணவர்கள் சார்பில் சிலர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். இடம்பெயர்ந்திருந்த மாணவர்களை தமிழ்ப்பகுதியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவைத்தே உண்ணாவிரதம் இருந்தனர். சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவர்களில் என் அண்ணனும் (பெரியப்பாவின் மகன்) ஒருவர். அவர் அப்போது பெரதெனியா பொறியியல்பீடத்தில் படித்துக்கொண்டிருந்தார். நானும் சில நாட்கள் அடையாள உண்ணாவிரதத்தில் பங்குபற்றியிருந்தேன். அப்போதுதான் பாலன் அண்ணாவுடன் இறுதியாக கதைத்தும் இருந்தேன். நாங்கள் படிக்காவிட்டாலும் இடம்பெயர்ந்த மிகுதிப்பேர் படிக்கோணும் என்ற உறுதியுடனேயே என் அண்ணன் இருந்தான்.   அன்று பாலன் அண்ணா, மதி அக்கா, ஜனனி அக்கா போன்றவர்கள் தொடர்ந்து கற்கமுடியாமல் போனாலும் இன்று தமிழ்ப்பகுதியில் இருந்து பொறியியலாளர்கள் வெளிவருகிறார்கள் என்பது மனதை குளிர்மைப்படுத்துகிறது. அதுவும் அறிவியல்நகரில் இருந்துவருகிறார்கள் என்பது பலரை நினைக்கவைக்கிறது குறிப்பாக தமிழ்ச்செல்வன், பூவண்ணன் இவர்களுடன் தமிழேந்தி அண்ணை.


Share/Save/Bookmark

ஞாயிறு, 10 ஜூன், 2018

திரும்பிப்பார்க்கிறேன்-44

 
10 .06 .1990 அன்று இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாயிற்று.கோட்டையில் இருந்து இராணுவம் இடைக்கிடை ஷெல் அடிக்கத்தொடங்கியது.  யாழ் மருத்துவமனை வெறிச்சோடத்தொடங்கியது.  இந்திய இராணுவம் யாழ் மருத்துவமனையினுள் உட்புகுந்து நடாத்திய கொலைகளின் பயமாக இருக்கவேண்டும் பெரும்பாலானான நோயாளர்களும்  பணியாளர்களும்  வெளியேறிவிட்டார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய ஊழியர்களே அங்கு எஞ்சியிருந்தார்கள். சண்டைக்களத்தில் இருந்து காயமடைந்து போராளிகள் வந்துகொண்டு இருந்தார்கள். சிலநாட்கள் இரவு பகலாக படாத பாடுபட்டோம். சாப்பிடக்கூட கடைகள் இல்லை. பின்  யாழ் மருத்துவமனை மானிப்பாயிற்கு  இடம்பெயர்ந்தது. நான் ஒரு தொகுதி நோயாளர்களுடன் வட்டுக்கோட்டையிற்கு போனேன்.     


Share/Save/Bookmark

வெள்ளி, 1 ஜூன், 2018

நூல்கள் எரிந்த சாம்பலில் நாங்கள் துளிர்த்தோம் 
எங்கள் ஆசைக்கனவுகளை சாம்பலாக்கினோம் 
நட்டாற்றில் வலியோடு நாம் நின்றாலும்  
வழி மாறோம் தலைமீது ஆணை


Share/Save/Bookmark

வியாழன், 31 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன் - 43


இன்றுதான் யாழ் நூலகம் சிங்கள படைகளின் உதவியுடன் அமைச்சர் ஒருவரின் தலைமையில் எரிக்கப்பட்ட நினைவுநாள். முற்பத்தேழு  வருடங்கள் கடந்தபின்னும் அந்த வலி அப்படியே ஆழ்நெஞ்சில்   இருக்கிறது. எனது அம்மப்பா ஒரு மூத்த எழுத்தாளர் . அவர் தனது பிரசுரமான எழுத்துக்களை பாதியளவுதான் சேர்த்துவைத்திருந்தார் . அதுவும் தொண்ணூற்றி ஐந்து இடப்பெயர்வுடன் அழிந்துபோயிற்று. யாழ் நூலகம் இருக்கும்வரை தனது பெரும்பாலான பிரசுரமான ஆக்கங்கள் அங்கு இருக்கிறது என்று சொல்லியே எங்களை வளர்த்திருந்தார்.  யாழ்நூலகம் எரிக்கப்பட்டபின் அம்மப்பா என்னிடம் சொன்னார் " என் அஸ்தி அங்கதான் கிடக்கு" . யாழ் நூலகம் நினைவுவர அம்மப்பாவின் நினைவுகளை தவிர்க்கமுடியவில்லை.   இப்போது அந்த நூலகம் மீளக்கட்டுப்பட்டுள்ளது ஆனால் அந்த நூல்கள் இல்லை. மீள இந்தநூலகமும் அவர்களால் எரிக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.  இந்த நாளுடன்  என் அமைதியான வாழ்வு திசைமாறிற்று.


Share/Save/Bookmark

செவ்வாய், 29 மே, 2018

தமிழீழ சுகாதாரசேவையின் திலீபன் நடமாடும் மருத்துவசேவையின் பொறுப்பதிகாரி Dr தேவா அக்கா அவர்கள் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தன் இனத்தின் விடுதலைக்காகவும் மக்கள் பணிக்காகவும் ஒப்புவித்தவர்.  திலீபன் நடமாடும் மருத்துவசேவையின் ஊடாக மருத்துவ வசதி குறைந்த இடங்களுக்கும், வன்னியில் இயங்கிய  சிறுவர், முதியோர், மனநிலை பாதிப்பு, அங்கவீனமடைந்தோர் இல்லங்களுக்கும் மருத்துவசேவையை கிரமமாக கொண்டுசென்றவர். இருதடவைகள் ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பியவர். இறுதிப்போரில் தான்தங்கியிருக்கும் இடங்களை மருத்துவநிலையமாக்கி மக்களுக்கான மருத்துவப்பணியாற்றியவர்.


Share/Save/Bookmark

திங்கள், 28 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன்-42


நான் கிளிநொச்சி சுகாதார விஞ்ஞானக்கல்லூரியின் கற்கைகளான Dip  in  Medicine , Dip in Nursing , Dip in Pharmacy , Dip in Food & Nutrition போன்ற கற்கைகளுக்கான தனித்துவமான பாடத்திட்டத்தை வரைந்தேன். அதேபோல் அப்போதைய கிளிநொச்சி சந்தையின் ஒவ்வொரு அமைவிடங்களையும் உறுதிசெய்தேன். நான் இலங்கையில் பல சந்தைகளை பார்த்திருக்கிறேன். ஏனோ தெரியவில்லை எனக்கு கிளிநொச்சி சந்தைதான் பிடித்திருந்தது.எப்போதும் காக்கையிற்கு தன்குஞ்சே பொன்குஞ்சு.


Share/Save/Bookmark

வியாழன், 24 மே, 2018

எங்களைவிட பத்து மடங்கு சனத்தொகையில் அதிகமான எதிரியோடதான் சண்டை பிடித்தோம். எதிரி தனித்து நிற்கமுடியாமல் பல நாடுகளை கூட்டிவந்தான். நாம் தோற்றிருக்கலாம் ஆனால் எம்கொள்கையை தோற்கடிக்கமுடியவில்லை என எதிரி மூக்கால் அழுகிறான். எம் தலைவர் ஏற்கனவே சொல்லியிருந்தார் " பிரபாகரன் தோற்கலாம் வரலாற்றில் இன்னுமொருத்தன் வருவான் அவன் என்னைமாதிரி ஈவு இரக்கம் பார்க்கமாட்டான்". நீதி வாழமுடியாமல் போனால் அழிவு தவிர்க்கமுடியாமல் போகும்.     


Share/Save/Bookmark

ஞாயிறு, 20 மே, 2018

விடுதலைப்புலிகள் அமைப்பு இன, மத, வேறு எந்த பாகுபாடுகளும் அற்ற அமைப்பு . அது ஆக்கிரமிப்பு அல்லது அடக்குமுறைக்கு எதிராகவே போராடியது. அந்த அமைப்பின் அரசியல் ஆலோசகர் பாலா அண்ணையின் மனைவி ஆங்கிலேயர், வெளிநாட்டு தொடர்புகளுக்கு பொறுப்பாக இருந்தவரின் மனைவி தாய்லாந்தை சேர்ந்த புத்த மதத்தவர், காவல்துறை அரசியல்துறையிற்கு பொறுப்பாகயிருந்த நடேசண்ணையின் மனைவி சிங்கள இனத்தவர், நான் சந்தித்த கரும்புலி ஒருவரின் மனைவியும் சிங்கள இனத்தவர்- அவரின் குடும்பம் கிளிநொச்சிற்கு வரும்போது பிள்ளைக்கு டெங்கு நோய், சிகிச்சை வெற்றிபெறும்வரை முக்கியவர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர். நாம் மௌனித்துப்போனதால் எம்வரலாற்றை எவரும் திரித்து எழுதலாம் ஆனால் உண்மை சாகாது.                 


Share/Save/Bookmark

வியாழன், 17 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன் - 41


எனது போராட்டகாலத்தின் ஆரம்பம் எது? எனக்குள்ளேயே கேட்டுக்கொள்கிறேன். சிறுவயதிலேயே பலவிடயங்களை தெரிந்தோ தெரியாமலோ அறிந்திருக்கிறேன். எனது போராட்ட பின்னணி அழகானதுதான். நான் எப்போதும் மனித உயிர்களை மதிப்பவன். மனிதர்களுக்குள் வேறுபாடுகாண்பது என்றும் எனக்கு விருப்பமானது அல்ல. இருப்பினும் நான் இராணுவ முகாமைத்துவத்தில் ஓரளவு நன்றாக புடம்போடப்பட்டேன். அதற்கு தலைவர்( அண்ணா) என்மீது காட்டிய ஈர்ப்புத்தான் காரணம் என்று நினைக்கிறேன். அதுகூட ஏன் என்று இன்றுவரை புரியவில்லை. நான் இலகுவில் வளைந்துகொடுப்பவனில்லை. நான் நினைப்பதைத்தான் செய்துவந்திருக்கிறேன். நான் போராட்டகாலத்தின் இறுதிவரை நேர்மையாக உழைத்திருக்கிறேன். எப்படியிருந்தாலும் இப்போது மனதை வாட்டுவது தலைவனின் இறுதிக்கணத்தில் அவரோடு இருக்கவில்லை என்பதே. நான் அவரது தனிப்பட்ட மருத்துவன் நான் அவரோடு இருந்துதான் இருக்கவேண்டும். அண்ணா இன்னுமொரு பிறப்பிருந்தால் உங்களது தம்பியாகவே பிறந்துவிடவேண்டும். நான் இப்பிறப்பில் செய்யாத கடன்களை அடுத்த பிறப்பிலாவது செய்துவிடவேண்டும்.       
   



Share/Save/Bookmark

செவ்வாய், 15 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 40

கிளி முல்லை மாவட்டங்களின் வருமுன்காப்பு சுகாதார அணியினர் ( இலங்கை செஞ்சிலுவை சங்க சுகாதார பணியாளர் உள்ளீடாய் ) அநேகமானோர் என்னாலும் நேரடியாய் வளர்க்கப்பட்டவர்கள் ஆதலால் நான் தமிழீழ சுகாதாரசேவையை பொறுப்பெடுக்கும்போது எப்படியும் இந்தப்பிரதேசத்தில் தொற்றுநோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பேன் என்ற நம்பிக்கையிருந்தது. இறுதிவரை அந்தநம்பிக்கை வீண் போகவில்லை. தமிழீழ சுகாதாரசேவைகளின் தொற்றுநோய் தடுப்பு பொறுப்பாளர் லோலோ அவர்கள் படுகாயம் அடைந்து படுத்துக்கிடக்கும்போதும் இறுதியாய் அவர் என்னிடம் வினவியதும்  தொற்றுநோய் தடுப்பு பற்றியே. முள்ளிவாய்க்காலைவிட்டு வெளியேறும்போதும் மனதுக்கு சிறு ஆறுதலாய் இருந்தது  தொற்றுநோய் தடுப்பின் வெற்றியே.       

         


Share/Save/Bookmark

ஞாயிறு, 13 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 39



நான் ஏன் இடம்பெயர்ந்தேன்? வென்றவன் எழுதுவதுதான் வரலாறாகப்போகும் ( அது உண்மை வரலாறு அல்ல ), வென்றவன் முடிந்தவரை இருப்பவரை பயன்படுத்துவான் புனைவு வரலாறு எழுத, நானும் ஒருவனாய் அதில் இருக்கக்கூடாது என்பதால் புலம்பெயர்ந்தேன். சாட்சிகளற்ற இனஅழிப்பையே சிங்களம்  எம்மண்ணில் நடாத்தியது. அந்த முகத்திரை கிழியுமோ இல்லையோ என் பங்களிப்பை வழங்க  புலம்பெயர்ந்தேன். தேவையான நேரத்தில் என் பணி செய்தேன்.  என் மனச்சாட்சிற்கு தவறு செய்யக்கூடாது என்பதற்காய் நான் கொடுத்த விலையே என் புலம்பெயர்வாழ்வு.   



Share/Save/Bookmark

சனி, 12 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 38

 

நான் எனது பணியை செய்தேன் . அப்பா, அம்மா, சகோதரர்கள்    தங்களுக்குரிய பணியை செய்தார்கள். எங்களது குடும்பம் தன் இனத்தின் விடுதலைக்கான எங்களுக்குரிய பணியை செய்திருக்கிறது என்பதே இப்போது எம்குடும்பத்தின் திருப்தி. சமூகத்தில் குடும்பநிலையில் எம்குடும்பம் பின்னடைந்து இருக்கலாம். அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. எப்பொழுதுமே நாங்கள் உண்மையாக இருந்தோம். 


Share/Save/Bookmark

திரும்பிப்பார்க்கிறேன் - 37



அண்ணையுடன் (தலைவர்) அவர்களுடன் ஓரளவிற்கு மனம்விட்டு பழகியிருக்கிறேன்.
இரண்டாயிரமாம் ஆண்டு தொடக்ககாலங்களிலேயே எமது அமைப்பு தோற்றுப்போகும் ஏதுநிலைகள் இருப்பதை மறைமுகமாய் பலதடவைகள் சொல்லியிருக்கிறார்.  நாங்கள்தான் அதை பெரிதாக எடுக்கவில்லை . ஆனால் எமது கொள்கை தோற்காது என்பதிலும் உறுதியாய் இருந்திருக்கிறார் .  பேரழிவை சந்திக்கப்போகிறோம் என்பதை நேரகாலத்துடனேயே தெரிவித்திருந்தார்.  சில தசாப்தங்களுக்குப்பின் மீண்டும் போர் தொடங்கும் அப்போதைய எம் தலைவன் தன்னைப்போல் ஈவிரக்கம் பார்க்கமாட்டான் என்றும் தெரிவித்திருந்தார். எமது இனம் நிச்சயமாக விடுதலை அடையும். நாங்கள் எதிர்கால சந்ததிக்கு வீரவரலாற்றை கொடுத்துப்போகவேண்டும் என விரும்பினார் .     



Share/Save/Bookmark

வெள்ளி, 11 மே, 2018

முள்ளிவாய்க்கால்

  இந்தி(யாவி)ற்கு ஈழத்தமிழரின் விடுதலையில் துளியும் விருப்பில்லை. அப்படியிருந்தும் இயக்கங்களை வளர்த்துவிட்டு , இயக்கங்களுக்கிடையில் முரண்களை உருவாக்கி , எங்களுக்குள்ளேயே அழிவை நயவஞ்சகமாய் செய்தது இந்தி(யா). எங்களை அணைப்பதுபோல் அணைத்து முதுகில் குத்தும் இந்தி(யா). ராஜீவை தாக்கிய சிங்களன் இலங்கையில் சுதந்திரமாக ஜனாதிபதி தேர்தலில் நின்றான். இந்தியா பெரிய தேசம் ஈழத்தில் தமிழனின் தனித்துவத்தை அழிப்பதே அதன் ஈழக்கொள்கை. ஸ்ரீ லங்கா மட்டும் எதிரியாக இருந்திருந்தால் ஈழம் எப்போதோ கிடைத்திருக்கும்.

ஒரு சிறு இனத்தின் வீரத்திற்கு உலகம் பயந்தது. ஒரு பேரழிவின் ஊடாக  அந்த இனம் விடுதலைக்கனவை மறந்துவிடவேண்டும் என உலகம் விரும்பியது. நாளை விரியப்போகும் அந்த குவிபுள்ளியே முள்ளிவாய்க்கால்.              


Share/Save/Bookmark

திரும்பிப்பார்க்கிறேன்- 36



நாம் சுகாதாரசேவைக்காக பிரத்தியேகமான குறுந்தூர ஒலிபரப்பு வானொலியையும் உருவாக்கினோம். இந்த உருவாக்கத்தில் மருத்துவர் கலை அவர்களின் பங்கு அளப்பரியது. நாங்கள் எம் நடமாடும் சேவையுடன் இவ்வானொலியையும் இணைத்துக்கொண்டோம். சுமார் ஆறு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் மக்கள் எமது வானொலியை கேட்டார்கள். சில விசேட தினங்களிலும் எமது அலுவலகத்தில் இருந்து ஒலிபரப்பினோம். புலிகளின் குரல் வானொலியும் ஒரு  குறுந்தூர ஒலிபரப்பு வானொலியை மாதத்திற்கு ஒருதடவை வெவ்வேறு இடங்களில் பல நிகழ்ச்சிகளுடன் நடத்திவந்தது. ஒருதடவை அந்த புலிகளின் குரல் வானொலியின்  குறுந்தூர ஒலிபரப்பு வானொலி பழுதானதால் நண்பன் ஜவான் எங்களுடைய  குறுந்தூர ஒலிபரப்பு வானொலியை தரமுடியுமா? என வந்து கேட்டார். அதே நாளே எங்களுக்கும்  நடமாடும் சேவை இருந்ததால் உதவமுடியாமல் போய்விட்டது.


Share/Save/Bookmark

செவ்வாய், 8 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 35


1981 ஆம் ஆண்டு மே மாதத்தில் நானும் இணைத்தலைமையாக இருந்து ஒரு நாள் பாடசாலை பகிஷ்கரிப்பு போராட்டத்தை செய்தோம். யாழ் நூலகத்தை இலங்கை அரசு எரித்ததற்கான அடையாள போராட்டம். அன்று அந்த போராட்டத்தை வெற்றியாக்கி அந்த இடத்தைவிட்டு நகர்கையில் இராணுவம் அந்த இடத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது. எமக்கு தெரிந்த ஒருவரே இராணுவத்திற்கு பாடசாலைக்கு அருகில் இருந்த தபாற்கந்தோரின் தொலைபேசிக்கூடாக தகவல் கொடுத்திருந்தார். அந்தக்காலத்தில் இருந்து போராட்டவாழ்வு ஏதோவொருவகையில் பொதுவெளியில்   தொடர்ந்து கொண்டிருக்கிறது.  1985 இல் என்னை இராணுவம் தேடியது  .   நளின் செனிவரத்ன என்ற இராணுவ பொறுப்பதிகாரியே எனது பல்கலைக்கழக பீடத்துடன் தொடர்புகொண்டு என்னைப்பற்றி விசாரித்திருந்தார். நான் எந்தவித குற்றங்களிலும் ஈடுபடாமல் போராடிக்கொண்டு இருக்கிறேன். ஆரம்பகால அரசியல் வேலைத்திட்டங்களில் இருந்து மருத்துவப்பணி முடித்து நீதிக்கான பங்களிப்பு வழங்கி நான் நகர்ந்துகொண்டிருக்கிறேன்.          


Share/Save/Bookmark

வெள்ளி, 4 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 34

 
 சமாதானகாலத்தில் ( ரணில் பிரபா ஒப்பந்தகாலம்) இயக்கத்தில் சிலருக்கு க பொ த உயர்தரம் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. விரும்பிய சிலருக்கு கிடைக்கவில்லை. நான் தமிழீழ மருதுவக்கல்லூரியை பொறுப்பெடுத்த ஆரம்பகாலம் மலரவன் அவர்கள் என்னை சந்திக்க வந்தார். பிரியவதனா க பொ த உயர்தரம் படிக்க விரும்புவதாக சொன்னார். நான் அனுமதி கொடுத்து , யாரிடமும் சொல்லவேண்டாம் , அப்படி யாரும் அறிந்து கேட்டால் நான்அனுமதி தந்ததாக சொல்லுங்கள் என்று சொல்லி சில உதவிகளையும் செய்தேன். பின்  பிரியவதனா மருத்துவபீடத்திற்கு தெரிவானதும், அண்ணையின் மகள் துவாரகாவிற்கும்  பிரியவதனா படிப்பித்தார். கிளி பொன்னம்பலம் மருத்துவமனையில் மலரவனினதும் பிரியவதனாவினதும் மருத்துவப்பணி பொன் எழுத்துக்களால் பொதிக்கப்படவேண்டியது.

   


Share/Save/Bookmark

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

புலம்பெயர் உறவுகளே! உங்கள் பார்வை இங்கும் செல்லட்டும்.

 என் தாயகத்திற்கு நாளாந்தம் பெரும்தொகையில் புதிய பொருட்கள் போகின்றன. பழையவற்றிற்கு என்ன நடக்கிறது? மீள் சுழற்சி (recycling ) நடக்கவேண்டும். கடலை தூய்மையாக வைத்திருங்கள். நிலங்களை பகுப்பாய்வு செய்யுங்கள். சிறந்த ஆலோசனையுடன் மாத்திரமே உரங்களை பாவியுங்கள். விளைநிலங்களை பாதுகாவுங்கள். கழிவுகளை, கழிவுவாய்க்காய்களை உரிய ஆலோசனையுடன் மேற்கொள்ளுங்கள். நிலஅடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள். மழைநீரை இயன்றவரை சேமிக்க நடவடிக்கை எடுங்கள். கடல் அரிப்பை தடுக்க உழையுங்கள். கடற்கரைகளில் மரங்களை நடுங்கள். மீன்பிடி, விவசாயம் போன்றவற்றில் நவீனமுறைகளை பாவிக்கவேண்டும் ( சிறு நிலத்தில் பெரிய பயிர்ச்செய்கை, மீன் வளர்ப்பு, விலங்கு வளர்ப்பு). புலம்பெயர் உறவுகளே! உங்கள் பார்வை இங்கும் செல்லட்டும்.   


Share/Save/Bookmark

சனி, 21 ஏப்ரல், 2018

  வழிதேடி வரவில்லை
 வழி தவறியும் வரவில்லை
 வேறு வழியற்று வந்தேன் 
 விழி நனைய வலி சுமந்து



Share/Save/Bookmark

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

15 /05 /2009  அதிகாலை துப்பாக்கி ரவைகளும், ஷெல்லும்  கீஸும் பொழுது,  இசைவாணன்  உள்ளிட்ட காயமடைந்தவர்களை காவிவந்து முள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் மரநிழலில் கிடத்தினோம். காலைக்கும் மதியத்திற்கும் இடைப்பொழுதில்  இசைவாணன் இவ்வுலகைவிட்டு பிரிந்துவிட்டான். நானும் எம் சகமருத்துவன் மணிவண்ணனும் அவனது உயிரற்ற உடலை ஸ்ட்ரெச்சரில் தூக்கிப்போனம். நானும் என் சகமருத்துவர்களும் அவனுக்கான புதைகுழியை சுடும் மண்ணில் வெட்டினோம். எவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நேரத்திலும்,துயிலும் இல்லம் போன்றே எல்லோரும் மண் போட்டு , ஒரு பெரும் வீரனின் உடலை மண்ணுக்குள் புதைத்தோம். இறுதி நிகழ்வில் இசைவாணனின் மனைவியுடன் எம் சகமருத்துவர்கள் வாமன், மணிவண்ணன், வான்மதி, ராபிகா மற்றும் தீபன்,ரெஜி உற்பட சிலர் கலந்துகொண்டோம். 


Share/Save/Bookmark

வியாழன், 12 ஏப்ரல், 2018

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கு கொலை அச்சுறுத்தல்

வஞ்சகமாய் காணாமல் போனவர் பட்டியல்
  மதகுரு, மருத்துவர், வீரர்கள், அவர் குடும்பங்கள், கர்ப்பவதி , மழலை, சிறுவர், சிறுமியர்--- என நீளும்.
 யாராவது இந்தப்பட்டியலை மகாவம்சத்தில் சேர்த்துவிடுங்கள். சர்வதேச விசாரணைக்கே பயந்த சிங்களம் சிங்க முகத்தை/ முகமூடியை எப்போது மாற்றும்?ஒவ்வொரு தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் இருக்குமா? காலம்தான் பதில் சொல்லும்.    



Share/Save/Bookmark

திரும்பிப்பார்க்கிறேன் - 33


நான் யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது சைக்கிளில்த்தான் என்  கடமைகளுக்கு சென்றுவருவேன். தேவையான எனது தூர வேலைத்திட்டத்திற்கு இயக்கம் வாகனம் ஒழுங்கு செய்யும். வன்னிக்கு வந்த பின்பு மோட்டார் சைக்கிள் தேவைப்பட்டது. அப்பாவிடம்  மோட்டார் சைக்கிள் பெற்று பயன்படுத்தினேன். இயக்கம் புது மோட்டார் சைக்கிள் தந்தபோது நான் பாவித்த அப்பாவின் மோட்டார் சைக்கிளை இயக்கத்திடம் கொடுத்துவிட்டேன். இயக்கம் மீண்டும் மீண்டும் புது மோட்டார் சைக்கிளை தரும்போது , பாவித்த பழைய மோட்டார் சைக்கிளை வேறு தேவையான இயக்க போராளிகளிடம் கொடுத்துவிடுவேன். எனது தம்பியும் வீட்டு மோட்டார் சைக்கிளைத்தான் இயக்கவேலைக்கு கடைசிவரை பயன்படுத்தினான். 


Share/Save/Bookmark

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

மது அருந்தி வாகனம் ஓடாதே !




Share/Save/Bookmark

திரும்பிப்பார்க்கிறேன் -32


2008 இல் மீண்டும் எமது நிலம் அந்நிய சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிப்பு தொடரத்தொடங்கியது. எமது சத்திரசிகிச்சை கூடங்களையும் ஒவ்வொரு தடவையும் பின் நகர்த்த வேண்டியிருந்தது. பெரியமடு,  கள்ளிக்காடு, முழங்காவில், ஜெயபுரம், மல்லாவி, அக்கராயன், கிளிநொச்சி, வட்டக்கச்சி, தருமபுரம், சுண்டிக்குளம், உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், இரணைப்பாலை, மாத்தளன்,வலைஞர் மடம், முள்ளிவாய்க்கால் என  எமது சத்திரசிகிச்சை கூடங்களும் நகர்ந்தது. ஒரு மருந்து பொருட்களும்  விடுபடவில்லை என்பதை இறுதியில் நேரடியாய் உறுதிப்படுத்தியே வெளிக்கிடுவோம். எமது சத்திரசிகிச்சை அணிகள் இழப்புக்களை அவ்வப்போது சந்தித்தபோதும் இறுதிவரை மக்களையும் போராளிகளையும் காப்போம் என்ற உறுதியுடன் களத்தில்  நின்றோம். எமது அணிகளை அர்ப்பணிப்புடன் வழிப்படுத்திய பெரும் வீரர்கள் வீழ்ந்தபோது ஒரு கணம் மனம் உலுப்பப்பட்டாலும் அடுத்த கணமே புதிய திட்டங்களுடன் ஒன்றானோம். இன்று இழப்புக்களின் வலி தாங்கமுடியாமல் இருக்கிறது.     
   


Share/Save/Bookmark

சனி, 7 ஏப்ரல், 2018

வடமாகாணசபை தனது உபஅலுவலகத்தை மணலாறில் திறக்கவேண்டும். மணலாறின் பூர்வீகமக்கள் கடந்த 35 வருடங்களாய் அகதிகளாய் வாழ்கிறார்கள். மணலாறு இல்லாமல் வடகிழக்கு இணைப்பு சாத்தியமில்லை. தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்குள் குற்றம் காணாமல் தமிழ்மக்களின் நீண்டகால நலனிற்காக உழைக்கவேண்டும். சிங்கள அரசாங்கம் தேவைக்கேற்ற முறையில் தமிழரையும் , அவர் வளங்களையும் கபடமாக பயன்படுத்தி வருகிறது. மணலாறு போன்று கிழக்கு மாகாணத்திலும் பல வளமிக்க ஊர்களை இழந்துவிட்டோம். அரசியல்வாதிகள் செயலில் இறங்கவேண்டும், நிலவைப்பார்த்து நாய் குரைப்பதால் பயனில்லை.  


Share/Save/Bookmark

வியாழன், 5 ஏப்ரல், 2018

திரும்பிப்பார்க்கிறேன் -31


மன்னாரில் இருந்து மக்களின் இடப்பெயர்வு தொடங்கியபின் ஒவ்வொரு இடப்பெயர்வு முகாம்களிலும் விசேட தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி தொற்றுநோய்களை பூரண கட்டுப்பாட்டில் இறுதிவரை வைத்திருந்தேன். சில விசேட நாட்களை (உ+ம் - கரும்புலி நாள்) மிகவும் பொருளாதாரத்தில் பின் தங்கிய  மக்கள் வாழும் இடப்பெயர்வு முகாமை தேர்வு செய்து பூரண மருத்துவமுகாமுடன் அவ் இடப்பெயர்வு முகாமின் அணைத்து மக்களுக்கும் சமைத்த மதிய உணவையும் வழங்கி அவர்களுடனேயே அந்நாட்களை போக்குவோம்.     


Share/Save/Bookmark

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 30


1993 ஆம் ஆண்டு பிற்பகுதி நானும் ராஜு அண்ணையும் எமது விசேட பயிற்சி முகாமில் (பளை) இருந்து தலைவரை சந்திக்க கொக்குவிலுக்கு சென்றிருந்தோம். தலைவர் எமது பயிற்சியின் வீடியோ  பார்த்துக்கொண்டிருந்தார். நாங்கள் பதினொருவர் பங்குபற்றும் எமக்குரிய தனித்துவமான சலூட்டினைத்தான் மீண்டும் மீண்டும் பார்த்தார். என்னிடம் இதில் ஏதாவது கடினம் உள்ளதா? என வினவினார்.
எமக்குரிய தனித்துவமான சலூட்டினை இயக்கத்தில் நடைமுறைப்படுத்துவோம் என்றார்.  வழமைபோல் செயலுக்கும் கொண்டுவந்தார்.      


Share/Save/Bookmark

திரும்பிப்பார்க்கிறேன்-29


நான் முகாம் பயிற்சிகளைப்பெற்று இருந்தாலும் ராஜு அண்ணை, சங்கர் அண்ணை உடனான நெருக்கம் எனக்கு அதிக இராணுவ அறிவை தந்தது. சங்கர் அண்ணையுடன் சுமார் ஐந்து மாதங்கள் ஒரு விசேட பயிற்சி முகாமில் ஒன்றாக பணி புரிந்தேன். சங்கர் அண்ணை தனக்கு தெரிந்த அறிவை இலகுவாக பகிர்ந்து கொள்வதில் கலைத்துவமானவர். சங்கர் அண்ணையின்  எளிமையும் மக்கள் மீதான கரிசனையும் என்றும் மறக்கமுடியாதது. இறுதிப்போர்க்காலங்களில் இருவரும் இல்லாதது குறிப்பாக அண்ணைக்கு கடினமாக இருந்திருக்கும். இயக்கத்தில் சண்டைக்குரிய தளபதிகள் முழுமையான இராணுவ அறிவில் இருந்தார்கள் என்று சொல்லமுடியாது . அதேநேரம் ஓரளவு அதிக இராணுவ அறிவுடன் இருந்தவர்கள் சரியான
 சண்டைத்தளபதிகளாய் இருக்கவில்லை. இவர்கள் இணைகையில் புதுப்பரிமாணம் எடுத்திருந்தது.   


Share/Save/Bookmark

வியாழன், 29 மார்ச், 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 28


1996 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து முழுமையாக இடம்பெயர்ந்து வன்னிற்கு வந்திருந்தோம். நான் முத்தையன்கட்டில் இயங்கிய அபயன் மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவராக இருந்தேன். அப்போதுதான் இயக்கத்தில் optometry  பிரிவை ஆரம்பித்தேன். இதற்காக எனது தந்தையிடம் முறைப்படி optometry யை கற்றுக்கொண்டேன். அதற்கு தேவையான பொருட்களை தேடி சேர்த்தாலும் reading chart யை பெறமுடியவில்லை. அப்பாவிடம்தான் திருப்பி தருவதாய் வாங்கிவந்தேன் இருந்தாலும் மீளக்கொடுக்கவில்லை. போராளிகளுக்காக அபயன் மருத்துவமனையிலும், மக்களுக்காக கிளிநொச்சி மருத்துவமனையிலும் மாதம் ஒரு optometry  கிளினிக் நடத்திவந்தோம்.   வன்னிப்பகுதியில் இயங்கிய அனைத்து பாடசாலைகளின் மாணவர்களையும் கண்பார்வை பரிசோதித்து தேவையானவர்களுக்கு unicef  இன் உதவியுடன் கண்ணாடிகளையும் வழங்கினோம் .      

   
     


Share/Save/Bookmark

ஞாயிறு, 25 மார்ச், 2018

திரும்பிப்பார்க்கிறேன் -27


 ஜூலியட் மைக் என்ற சங்கேத மொழியில் அழைக்கப்படும் ஜெயம் , தனது தாயகத்தை எந்தளவு நேசித்தார் என்பதை அவருக்கு நெருக்கமாய் இருந்து அறிந்தவன் நான். எண்பதுகளின் நடுப்பகுதியில் முதல் தடவையாய் அவரை சந்தித்தேன். அப்போது கையில் காயத்துடன் வன்னியில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார். யாழில் இருந்து இந்தியாவிற்கு சிகிச்சைக்காக சென்றார். 93  இல் நடந்த விசேட பயிற்சி முகாமிற்கு பொறுப்பாய் இருந்தார். அப்போதே என் நெருங்கிய நண்பரானார். பின் காட்டு கொமோண்டோஸிற்கு பொறுப்பாக இருந்தார். ராஜு அண்ணை முழு கொமோண்டோஸிற்கும் பொறுப்பாக இருந்தார்.   இயக்கத்திற்குள் ஏற்பட்ட அசாதாரண குழப்பத்தோடு ஜெயமும் விசாரணைக்கு உற்படுத்தப்பட்டு 96 இல் விடுவிக்கப்பட்டார். அடுத்த நாளே என்னை சந்திக்க முத்தையன்கட்டில் இயங்கிய மருத்துவமனைக்கு வந்தார்.  சுமார் மூன்று மணிநேரம் கண்ணீரோடு கதைத்தது என் நெஞ்சில் இன்றும் படர்ந்து இருக்கிறது.  வீரனே! உன் தாய்த்தேசத்தின் பாசம் ஊற்று அடங்காதது. மீள ஒரு பிறப்பிருந்தால் சந்திப்போம் நண்பா.


Share/Save/Bookmark

சனி, 24 மார்ச், 2018

  உலகம் முன்னோக்கி செல்கிறதா?
  விஞ்ஞானம்   வீணாகிறதா?
  கூர்ப்பில் வளர்ந்தது வஞ்சகம்தானா?
  மனிதம் தோற்றுப்போக
  எது வென்றாலென்ன
  சுதந்திரத்தை
  சுவாசிக்கமுடியா பூமியில்
  மதங்கள் வாழ்கின்றனவா?
  நீதியில்லா  உலகைவிட
  ஆதிமனிதனே புனிதன் 


Share/Save/Bookmark

வியாழன், 8 மார்ச், 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 26


 2006 ஆம்  ஆண்டு  மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கயிருந்தது . மருத்துவப்பிரிவின் முக்கிய பொறுப்பாளர்களுக்கும் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களுக்கும் இடையில் கிளிநொச்சியில் இயங்கிய திலீபன் முகாமில் சந்திப்பு நடைபெற்றது. அதில் பிரதான சத்திரசிகிச்சை கூடங்களை மூன்று பிரதான இடங்களில் நடத்தவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, மன்னார் என  தீர்மானிக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி சத்திரசிகிச்சை கூடங்கள் ஏற்கனவே இரு மூத்த மருத்துவர்களின் பொறுப்பில் நடத்தப்பட்டுக்கொண்டு இருந்தது ஆகவே மன்னார் பகுதியை நான் பொறுப்பெடுத்துக்கொண்டேன். பள்ளமடுவில்  சத்திரசிகிச்சை கூடத்தை ஆரம்பிக்கின்ற பொறுப்பை என் சகோதர மருத்துவன் வளர்பிறையிடம் கொடுத்தேன். பெரியமடுவில் ஒரு சத்திரசிகிச்சை கூடத்தை (மேஜர் விநோதன் சத்திரசிகிச்சை கூடம்) இரகசியமாக வைத்திருக்க திட்டமிட்டேன். இரண்டாம் நிலை  சத்திரசிகிச்சை கூடத்தை முழங்காவிலில் இயக்க திட்டமிட்டேன். புதிய சத்திரசிகிச்சை  கூடங்களை ஆரம்பிக்க வேண்டியிருந்ததால் ஆளணி பெரும் பிரச்ச்சனையாக இருந்தது. அவற்றையும் நாங்களே உருவாக்கினோம். ஆரம்பத்தில் ஆளணிகளை பங்கீடு செய்து தருவதாக மருத்துவ நிர்வாகப்பொறுப்பாளர் உறுதியளித்திருந்தும் நடைமுறையில் அது சாத்தியப்படவில்லை. எப்போதும் போல என்னுடன்  கூட இருந்த சகோதர மருத்துவர்கள் எம் பணியை இலகுபடுத்தினார்கள்.   



Share/Save/Bookmark

யாவரும் அறிந்தவிடயம்தான்



Share/Save/Bookmark

திங்கள், 19 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்-25


வளலாய் இராணுவ தொடர்காவல்நிலைகள் (1992 ) மீதான தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன்னும் இந்த தாக்குதலுக்கு சென்று திரும்பினோம் .  ஏன் திரும்பினோம் என்பது தெரியவில்லை. என்ன காரணத்திற்காக நிறுத்தப்பட்டது என்பதும் தெரியவில்லை. அன்று காலை எதிர்பாராத வகையில் நானும் தம்பியும் எங்கள் வீட்டில் சந்தித்துக்கொண்டோம். இருவருமே வீட்டில் இருந்து வேளைக்கு செல்ல வேண்டும் என்பதிலேயே கரிசனையாக இருந்தோம். அம்மா புட்டும் கத்தரிக்காய் கறியுடன் முட்டை ஒன்றை பொரித்து பாதி பாதியாய் பிரித்து போட்டுவிட்டார். சாப்பிடும்போது கதைத்ததுதான் பிரிந்துவிட்டோம்.  பின்னேரம் அச்சுவேலியில் சந்தித்தோம் வெறும் சிரிப்புடன் பிரிந்தோம். இருவரும் போராளிகளாய் இருந்தும் ஆளுக்கு ஆள் இயக்க இரகசியங்களை மறைப்போம். 
ஆனையிறவில் காவல்நிலைகள் மீதான தாக்குதலுக்குச் சென்றும் திரும்பியிருந்தோம்.  இரண்டு தாக்குதல்களும் நடைபெறாததால் எது முதல் எது பின்பு என்பதை என்னால் தற்போது ஞாபகப்படுத்தமுடியவில்லை. அந்தக்காலங்களில் கிளாலி ஊடான மக்கள் பயணங்களுக்கு எமது கடல்படை  பாதுகாப்புக்கொடுக்கும் .  நானும் மாறி மாறி களமருத்துவத்திற்கு செல்வேன் . எனது அன்றைய நாட்கள் களைப்படைந்த நாட்களே.
  தம்பி வீரச்சாவு அடைந்து சிலகாலத்திற்குப்பின் பைப் (பாவரசன்) அண்ணை கதைக்கும்போது சொன்னார் " நான் இயக்கத்தில் டாம் என்ற விளையாட்டில் தோற்றுப்போனது இவனிடம்தான்"  .       
தம்பி மலரவன் டாம், செஸ் போன்றவிளையாட்டுக்களிலும் புலியாகவே இருந்தான். 


Share/Save/Bookmark

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன் - 24


2004 ஆம் ஆண்டு அது ஒரு முக்கிய விசாரணை . போராளிகளுக்கான பொதுப்பிரச்சனைகளுக்கான விசாரணைக்குழுவில்  நடேசன் அண்ணை பொறுப்பாகவும் நான் ஒரு உறுப்பினனாகவும் இருந்தேன். பெண்கள் சம்மந்தமான பிரச்சனை வரும்போது பெண்போராளி ஒருவர் உறுப்பினராக  இருந்தார். இந்த விசாரணைக்கு பொட்டம்மானும் நானும் நியமிக்கப்பட்டோம். விசாரணை முடிவில் இருவரும் தனித்தனி அறிக்கைகளை கொடுத்தோம். இரு அறிக்கைகளும் ஒன்றாக இருக்கவில்லை. தலைவர் எனது அறிக்கையை (மருத்துவ காரணங்களுக்காக) தேர்ந்தெடுத்தார். தலைவரின் தளபதிகளுக்கான சந்திப்புக்கு தலைவர் கூட்டிச்சென்றார்.
அந்த சந்திப்பில் பலவிடயங்களை  தளபதிகளுக்கு விளங்கப்படுத்த வேண்டியிருந்தது. பொட்டம்மானும் விதுசாவுமே அதிக கேள்விகள் கேட்டனர். இறுதியில் எனது பக்கத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.எனது அறிக்கையின்படி தொடர் நடவடிக்கை எடுக்க தலைவர் முடிபு கூறினார். சந்திப்புமுடிய  தளபதி ஜெயமும் தீபனும் எனக்கு கைலாகு தந்தனர்.  சந்திப்பின்போது நான் தலைவருக்கு சற்றுத்தொலைவாக இரட்ணம்  மாஸ்டருக்கு அருகில் இருந்தேன். தலைவர் என்னை அழைத்து தனக்கு இடதுபக்க இருக்கையில் அமர்த்தினார். தலைவருக்கு வலதுபுறத்தில் பொட்டம்மான் இருந்தார். விசாரணை சம்மந்தமான கலந்துரையாடல் முடிய வேறுவிடங்கள் கலந்துரையாடவேண்டியிருந்தது. நான் எழுந்தேன்   வெளியில் போய் இருக்க, தலைவர் "  பிரச்சனையில்லை நீங்க இருங்கோ என்றார்".     
      


Share/Save/Bookmark

சனி, 17 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்-23

போர்ச்சூழலில் சிறுவர்களுக்காய் ஓரளவு திருப்தியாய் பணிசெய்ததாய் உணர்கிறேன். சிறுவர் பட்டினிச்சாவு தவிர்ப்புத்திட்டத்தில் முக்கிய பணி ஆற்றியிருக்கிறேன். பாடசாலை விலகிய பிள்ளைகளை மீள பாடசாலைகளுக்கு கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன். உலக உணவுத்திட்டத்தின் தேவைப்பகுப்பாய்வு நிபுணரான பணியாற்றி அத்திட்டத்தை வன்னிக்கு கொண்டுவர உதவியிருக்கிறேன். Children  Development  Council (NGO)இன்  ஆலோசகராக இருந்து முன்பள்ளி பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு உழைத்திருக்கிறேன். வருமுன்காப்புப்பணியில் தொற்று நோய்கள் வராமல் தடுப்பதில் முக்கியபணியாற்றியிருக்கிறேன். நோயுற்ற , காயமுற்ற சிறுவர்களின் சிகிச்சை அளித்தலிலும் பங்குபற்றியிருக்கிறேன்.           


Share/Save/Bookmark

வியாழன், 15 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 22


எனது நெருங்கிய உறவுகள் ஐவர் எமது மக்களின் நல்ல எதிர்காலத்திற்காக களத்தில் வீழ்ந்தார்கள். ஐவரும் சுயநலமாக வாழ்ந்திருந்தால் நல்ல வசதியான வாழ்வை பெற்றிருப்பார்கள். கல்வித்துறையில் ஐவரும் முத்திரை பதித்திருப்பார்கள். எமது குடும்பங்களும் சமூகத்தில் மேல் அந்தஸ்தில் வாழ்ந்திருக்கும். மனட்சாட்சி, மனிதாபிமானம் அவர்களை போராளிகளாய் மாற்றிவிட்டது.  விடுதலைப்போராட்டம் வெற்றியடையாவிட்டால் சிலகுடும்பங்கள் நிர்க்கதியாகுவது தவிர்க்கமுடியாதுதான்.   
எங்களது வலி  போராட்டம் தோற்றபின் பலமடங்கு அதிகரித்துவிட்டது.


Share/Save/Bookmark

புதன், 14 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 21


நான் சமாதானகாலத்தில் மலேரியா சம்மந்தமான செயலமர்வுக்கு பதுளைக்கு சென்றுவந்தேன். அப்போது மலையகத்தை மேலோட்டமாக அலசிவந்தேன்  . என் சிறுபராயத்தில் மலையகத்தில் வாழ்ந்ததால் மலையகவாழ்வை நன்கு அறிந்திருந்தேன். சுமார் 25 -30  வருடங்களுக்குப்பின் அவர்களது வாழ்விடங்கள் , வாழ்வில் எந்த முன்னேற்றங்களையும் காணமுடியவில்லை. இது எனது மனதை குடைந்துகொண்டிருந்தது. என் பிரயாணத்திற்குப்பின் தலைவரை சந்திற்கும்போது சம்பாஷணையில்  இந்தவிடயத்தை இணைத்தேன். தலைவர் மிகவும் கரிசனையுடன் நீண்டநேரம் உரையாடினார். அந்தமக்களுக்கு எங்களால் முடிந்த நன்மைகளை நாங்கள் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அப்போது தமிழ்ச்செல்வன் வெளிநாட்டில் இருந்தார். தமிழ்ச்செல்வன் வந்தபின் மீண்டும் உரையாடுவோம், ஏதாவது யோசனைகள் இருப்பின் ஞாக்கப்படுத்திவைத்திருங்கள் என்றார். பின் சரியான தருணங்கள் அமையவில்லை. நான் சிலவிடயங்களை தயார்ப்படுத்தி வைத்திருந்தேன்.        


Share/Save/Bookmark

திங்கள், 12 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்-20


 1992 களில் தலைவருக்கு என்று மருத்துவர் தேவை என்று உணரப்பட்டிருக்கவேண்டும். அப்போது சொர்ணம்தான் தலைவரின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்தார். நான்தான் தலைவருக்கு உரிய மருத்துவராக நியமிக்கப்பட்டேன். அப்போது நான் மருதுவக்கல்வியைக்கூட முடித்திருக்கவில்லை. பின் சிறுத்தைப்படையணி  , கரும்புலிகளுக்கு உரிய மருத்துவராய் தலைவரால் நியமிக்கப்பட்டேன் . நான் வேறுகடமைகளில் இருக்கின்ற காலங்களில் தலைவருக்கு அவசியதேவையெனில்  இன்னுமொரு மூத்த மருத்துவரும் தலைவரை பார்த்து வந்திருக்கிறார்.
தலைவரின் குடும்பத்தின் மருத்துவராக பத்மலோஜினி அக்கா இருந்தார். நான் தலைவரின் தனிப்பட்ட மருத்துவராக இருந்தமையால் தலைவருடன் இடைக்கிடை அவருடைய குடும்பத்தையும் சந்திக்கவேண்டியிருந்தது.
 
 பத்மலோஜினி அக்கா திருமணம் முடித்த (1999 ) பின்பு தலைவரின் குடும்பத்திற்குமான மருத்துவராகவும் நியமிக்கப்பட்டேன். சமாதானகாலத்தில் தலைவரின் தாய்,தந்தையரும் தலைவர் குடும்பம்பத்தோடு இணைந்தனர். இறுதிவரை என்பணி தொடர்ந்தது.  


Share/Save/Bookmark

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 19

 மஞ்சள் துண்டுக்கு கழுத்தறுத்த சிங்களவன் என்ற கதையை சிறுவயதில் கேட்டிருக்கிறேன் ( ஒரு இனத்தை அப்படி சொல்வது முறையல்ல- தவறு ) . களத்தில் புலிகளின் உடல்களை இராணுவம் கைப்பற்றினால்  உடல்கள் எந்தநிலையில் இருந்தாலும் புலிகள் ICRC ற்கூடாக பெற்றுக்கொள்வார்கள் ஆனால் இராணுவம் நல்லநிலையில் உள்ள உடல்களை மட்டுமே பெற்றுக்கொள்ளும் , சிலநேரங்களில் அதையும் பெறமறுத்துவிடும். புலிகள் பெறும் உடல்கள்   சிலநேரங்களில் அடையாளம் காண்பதே கடினமாகயிருக்கும். இராணுவநடவடிக்கையால் துண்டி முரசுமோட்டையில் இயங்கியபோது (2008 பிற்பகுதி) முப்பதிற்கு  மேலான உடல்கள் கிடைத்திருந்தது. எல்லா உடல்களையும் நான் பரிசோதித்தேன். எல்லா உடல்களிலும் பாரிய காயங்கள் இருந்தன. ஏழு உடல்களில் பாரிய காயங்களுடன் , உயிருள்ளபோதே கூரிய ஆயுதத்தால் கிழித்த  காயங்கள் கழுத்துப்பகுதியில் இருந்தன .  ஏழுகாயங்களும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக இருந்தது. வழமைபோல் அவ்வறிக்கையையும் மேலிடத்திற்கு கொடுத்திருந்தேன்.               


Share/Save/Bookmark

வியாழன், 8 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன் - 18


 விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களில் போர்க்காலங்களில் கூட திலீபன் மருத்துவசேவைக்கூடாக அடிப்படை மருத்துவசேவை கஷ்ட பிரதேச மக்களையும் அடைந்தது. திலீபன் நடமாடும் மருத்துவ சேவைக்கூடாகவும் விடுபட்ட சில பிரதேசங்களை  அடிப்படை மருத்துவசேவை அடைந்தது. கௌசல்யன் நடமாடும் மருத்துவசேவையை ஆரம்பித்து மேலதிக மருத்துவசேவையையும், சுகாதாரகருத்தூட்டலையும் கஷ்டப்பிரதேசங்களை நோக்கி நகர்த்தினேன். எமது பற்சுகாதாரப்பிரிவின் பொறுப்பாளர் சுதர்சன் தலைமையில் பல்மருத்துவம் சகலமக்களுக்கு மட்டுமல்ல களத்திற்கும் கிடைத்தது.

         


Share/Save/Bookmark

திங்கள், 5 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 17


நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தேன். விவசாயமே எமது பூர்வீகம். என் தந்தை வழி பேரன் ஒரு பெரு விவசாயி, எனது தந்தையாரும் 77  ஆம் ஆண்டு கலவரத்துடன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இருவருடங்கள் முழுநேர விவாசாயியாக இருந்தார்.  எமது சிறுபராயத்தில் பாடசாலை நேரம் போக மிகுதி நேரம் தோட்டத்தில் புல்பிடுங்குதல், வயல் விதைப்பு , ஆடு மாடு வளர்த்தலோடு போகிற்று. சங்கீதமோ மிருதங்கமோ இசைகளோ நீச்சலோ பயின்றதில்லை. ஆனால் நேர்மையாக வளர்க்கப்பட்டோம். எம் இனவிடுதலைக்கு அழைப்பாணை வரும்போது வீட்டில் நால்வரில் மூவர் போராளியானோம். அநேக சாதாரண குடும்பங்கள் அந்நேரம் அனுபவித்த மனவேதனையை என் பெற்றோர் அன்றிலிருந்து இன்று வரை அனுபவிக்கிறார். என் பெற்றோரின் இறுதி நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கிறது . என் பெற்றோரை காணாமல் கண்மூடப்போகிறேன் எனும் கவலை தினமும் என்னைக் கொல்கிறது.  



Share/Save/Bookmark

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 16


1992 ஒரு நாள் இரவு , ஆனையிறவு இராணுவ முகாம் ஒன்றுடன் இணைந்த
காவல்ப்பகுதி , குறிப்பிட்ட காவல்நிலைகளை தாக்கி அழிப்பதற்காக அணிகள் உட்சென்றுவிட்டன , இரவு இரண்டு  மணியிருக்கும் , நுளம்பு கடித்துக்கொண்டிருந்தது,அடிக்கமுடியாது. அவ்வளவு அருகில் அத்தாக்குதலுக்கான களமருத்துவனாக பனையொன்றுக்குப்பின் முதுகு bag  உடன் படுத்துக்கிடந்தேன் . முன்னுக்கு சிறுபத்தைகள்.   அடுத்த பனையருகில் யாழ்மாவட்ட சிறப்புத்தளபதி தமிழ்செல்வன் பனையில் சாய்ந்தபடி குந்தியிருந்தார், பனைகளுக்கு  நடுவில் எனது தம்பி மலரவன் படுத்துக்கிடந்தான்.முதல் நாள் இரவு கிளாலிக்கரையில் களமருத்துவனாய் நின்றிருந்தேன், அதனால் நித்திரைவெறியோடும் , காதை சண்டையொலியின் எதிர்பார்ப்போடு வைத்திருந்தேன் .    சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்குப்பின் மலரவன் என் அருகில் ஊர்ந்துவந்தான். "தாக்குதல் நடக்காது, பிசகிவிட்டது . நீங்கள் வந்தவழியால் திரும்புங்கள்" ஆளை ஆள் அடையாளம் காணமுடியா இருள், அவன்  தமிழ்ச்செல்வனை நோக்கி ஊர்ந்துகொண்டிருந்தான். இதுதான் என்தம்பியுடனான இறுதி சந்திப்புகளில் ஒன்று   என்று எனக்கு அப்போது தெரியவில்லை .   
      



Share/Save/Bookmark

புதன், 31 ஜனவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 15



  1977    இல் தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழீழக்கோரிக்கையை முன் வைத்திருந்தது. அப்போது நாம் சிறுவர். எமது தொகுதியில் தேர்தலுக்கு நின்ற தர்மலிங்கம் ஐயாவின் ஆதரவாளர். நடைபவணிகளில் , தேர்தல் மேடைகளில் முன்வரிசைகளில் ஒலிக்கும் " லிங்கம்   லிங்கம்  தர்மலிங்கம் " என்று ஒலித்த குரல்களில் என்குரலும் ஒன்று. அந்தக்காலத்திலேயே " வேதனை, சோதனை, சாதனை" என்ற நீண்ட கட்டுரையை எழுதினேன். பாடசாலையில் ஆசிரியரின் வேண்டுகோளுக்கு இணங்க வகுப்பறை முன் வாசித்துக்காட்டினேன். இதுதான் நான் அறிந்தவரையில் என் முதலாவது ஆக்கம். எமது தமிழ் ஆசிரியர் வேறு உயர்வகுப்பு ஒன்றிலும் இக்கட்டுரையை வாசித்துக்காட்டியிருந்தார். இக்கட்டுரையின் மூலப்பிரதியும்  1987  இல் இந்திய இராணுவத்தால் எரிக்கப்பட்ட எங்கள் வீட்டுடன் சேர்ந்து எரிந்த
என் ஆவணங்களுடன் ஒன்றாகிப்போயிற்று.         



Share/Save/Bookmark

செவ்வாய், 30 ஜனவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன் - 14

 

ஒரு குறிப்பிட்டு சொல்லக்கூடிய  காலம் போராளியாய் வாழ்ந்தேன். எனக்கு தரப்பட்ட எல்லாக் கடமைகளையும் சிறப்பாக முடித்ததாய் உள்மனம் சொல்கிறது. எந்த சந்தர்ப்பத்திலும் என் உயிரை காக்க ஒரு போதும் சிந்தித்தவனல்ல. பலதடவைகள் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறேன். இன்று ஒரு சாதாரண மனிதவாழ்விற்கு திரும்பினாலும் இழந்துபோன என் சகோதர நண்பர்களின் நினைவுகள் என்னை, என் சமநிலையை அலைக்கழிக்கின்றன . எந்த சந்தர்ப்பத்திலும் இனத்தின் விடுதலைக்கு அல்லது விடுதலைப்பாதைக்கு சிறுதுளியும் தீங்கிழைத்தவன் அல்ல. என் போராட்டகாலம் முழுக்க ஓய்வில்லாமல் இயங்கியிருக்கிறேன். நோயோடும் பணியாற்றியிருக்கிறேன்.தலைவனின் நம்பிக்கையை இறுதிவரை பெற்றிருந்தேன். எமது விடுதலை அமைப்பின் வளர்ச்சியிலும் அதே காலத்தில் போருக்குள் வாழ்ந்த மக்களின் மருத்துவ சேவையிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பங்களிப்பை செய்திருக்கிறேன்.  என்னோடு சுமை தூக்கிய என் சகோதர நண்பர்களின் தியாகங்களை எழுத்திலாவது வடிப்பேன்-  இது உறுதி.        



Share/Save/Bookmark

திங்கள், 29 ஜனவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 13


  போர்க்கால கடமை என்பது அமைதிகாலத்தைவிட எப்போதும் பல மடங்கு கடினமானது. எனது கடமைக்காலத்தில் அரச சாரா நிறுவனங்களுடன்(NGO) இணைந்து மக்களுக்காய் பணி புரிந்ததும் மனதில் பதிந்துள்ளது.  OXFAM (INGO )  , FORUT (INGO )  , ICRC(INGO )  என்பன வருமுன்காப்புப்பணியில் சுகாதார பணியாளர்களை வன்னியில் கடமை செய்ய உதவியிருந்தன. இந்தப்பணியாளர்களின் பங்களிப்பும்  வருமுன்காப்புப்பணியில் வன்னியில் முக்கியமானது. போர்க்காலத்தில் சுகாதாரத்திணைக்களத்தில் பாரிய ஆளணி தட்டுப்பாடு நிலவியது யாவருக்கும் தெரிந்ததே. இந்தப்பணியாளர்களின் உருவாக்கத்தில் , வினைத்திறனை அதிகரித்ததில்,ஒருங்கிணைத்ததில் எனது பங்கு நேரடியாக முக்கியமானது. உலக உணவு நிறுவனத்தின் (WFP) need assesment ற்கான consultant ஆக இருந்ததுடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றியிருந்தேன்.  WHO நிறுவனத்தால் கிளி முல்லை மாவட்ட UN staff ற்கான medical adviser  ஆக நியமிக்கப்பட்டிருந்தேன் . சிறுவர் பட்டினிச்சாவு தவிர்ப்புத்திட்டத்தில் TRO  உடன் இணைந்து முக்கிய பணியாற்றியிருந்தேன். CHC (Centre  for  health  care )  சுகாதார நிறுவனத்தின் தலைவராகவும், CDC (Children  Development  Council ))யின் ஆலோசகராகவும் கடமையாற்றினேன். இறுதிப்போர்க்காலத்தில் பெரும் பங்காற்றிய  Health  Development  council ( சுகாதார அபிவிருத்திச்சபை  ) என்ற NGO வை உருவாக்கினேன். 



Share/Save/Bookmark

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 12


நான் தலைவரை சந்தித்து வரும்போது தலைவர் அவர்கள் ஏதாவது புத்தகங்களை தருவார்(எல்லா தடவைகளிலும் அல்ல) . நான் வாசித்துவிட்டு கவனமாக மீளக்கையளிப்பேன். ராஜு அண்ணையும் தாங்கள் இரகசியமாக வெளியிடும் புத்தகங்களை தருவார்.  நான் இரகசியமாக வாசித்துவிட்டு கவனமாக மீளக்கையளிப்பேன்.  கடாபி அவர்களும் புத்தகங்களை தந்திருக்கிறார். இவர்கள் ஏதோவகையில் என்னை வழிப்படுத்தியிருக்கிறார்கள்.  இவர்களுடன் சங்கர் அண்ணையும் இராணுவ விஞ்ஞானத்தில் நான் ஓரளவு புடம்போடப்பட உதவியிருக்கிறார்கள். இவர்களுடனான உரையாடல்கள் என் வாழ்காலத்தின் மிகுபயன் என்றால் அது மிகையல்ல.           




Share/Save/Bookmark

வெள்ளி, 26 ஜனவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்-11


சமாதானகாலத்தில் (2003 ) நெடுந்தீவிலும் அனலைதீவிலும் அந்த மக்களுக்காய் மருத்துவமுகாம் நடாத்த சென்ற குழுவில் நானும் இருந்தேன். இராணுவத்தின் நகர்வின்போது வேலணை பகுதியில் இருதடவைகள் களமருத்துவராய் நின்றிருக்கிறேன். காரைநகர், மாதகல், அராலிக்கரை , மாவிட்டபுரம், வளலாய், அச்சுவேலி, பளை, யக்கச்சி, மருதங்கேணி, ஆழியவளை, கிளாலி, மணியம்தோட்டம்  என குடாநாட்டில் பலபகுதிகளில் களமருத்துவராய்  நின்றிருக்கிறேன். யாழ்குடாவிற்குள் பல மருத்துவவீடுகளையும் நடாத்தியிருக்கிறேன். கிளிநொச்சி, முல்லைத்தீவு,மன்னார், வவுனியா வடக்கு , மணலாறு, சம்பூர் பிரதேங்களில் களமருத்துவராய் நின்றிருக்கிறேன் , பல சத்திரசிகிச்சை கூடங்களையும் நடாத்தியிருக்கிறேன். சுனாமிக்கு பின்னான மருத்துவ திட்டமிடல் , அறிக்கையிற்காக வடமராட்சி,கிளி,முல்லை,திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறையென சென்றுவந்திருக்கிறேன். ஆனால் எனது சொந்த ஊரான நயினாதீவிற்கு எனது மருத்துவ பங்களிப்பை நான் நேரிடையாய் செய்ததில்லை.    




Share/Save/Bookmark

திங்கள், 22 ஜனவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 10


என் அம்மாவின் அப்பாவை நாங்கள் அப்பப்பா என்றே கூப்பிடுவோம். அவர் ஒரு அசாத்தியமான மனிதராய் இன்றும் எனக்கு தெரிகிறார். கச்சாய் அவரது பூர்வீகக்கிராமம். அவரது ஆரம்ப கல்வியை சொந்த ஊரிலும், பாடசாலை மேற்கல்வியை தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரியிலும் கற்றார். ஆங்கிலேயர் இலங்கையை ஆண்ட காலத்தில் அவர் மலையகத்தில் வேலை செய்ய ஆரம்பித்தார் . காலையில் பாடசாலையொன்றின் தலைமை ஆசிரியராகவும் மாலையில் அலுவலக எழுதுவினைஞராகவும் வேலை செய்தார். இதேபாடசாலையில் எனது அம்மம்மாவும் ஆறுவருடங்கள் ஆசிரியராக வேலைசெய்திருந்தார்.
அப்பப்பா வேலையில் ஓய்வு பெற்று யாழ்ப்பாணத்திற்கு நிரந்தரமாய் வந்த பின் சுழிபுரத்தில் இயங்கிய துரையப்பா அன்  சன்ஸ் என்ற பெரிய வியாபாரநிலையத்தில் பிரதம கணக்கராக வேலைசெய்தார் .  அதேகாலத்தில் வேறு பல வியாபார நிலையங்களின் கணக்காய்வுகளை வீட்டில் வைத்தே செய்துகொடுத்தார். எப்போதும் சுறுசுறுப்புடன் வாழ்ந்தவர் எங்கள் அப்பப்பா.  

என் அப்பப்பா ஒரு மூத்த எழுத்தாளர் என்பதற்கு அப்பால் ஒரு கலைஞனாகவும் இருந்திருக்கிறார். தனது மேடை நாடகங்களுக்கு ஆர்மோனியம்,புல்லாங்குழல், மௌத் ஒர்க்கன் கொண்டு தானே பக்க இசை வழங்கியிருக்கிறார். இளவயதில் நாடகங்களில் நடித்திருக்கிறார். பெண்வேடம் இட்டும் நடித்திருக்கிறார். திரைச்சீலைகளை வரையும் ஓவியனாக இருந்திருக்கிறார். பட்டம் கட்டுவதில் அவரது இறுதிக்காலம்வரை விற்பன்னராய் இருந்தார். அவர் எப்போதும் எனக்கு ஒரு அதிசயம்தான்.    

   



Share/Save/Bookmark

வெள்ளி, 19 ஜனவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 9


1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதம். நான் கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரியாகவும் கிளி முல்லை மாவட்டங்களின் மலேரியா தடை அதிகாரியாகவும் பொறுப்பேற்றுக்கொண்டேன் . Dr  சிவகுரு ஐயா கிளி முல்லை மாவட்டங்களின் DPDHS  ஆக இருந்தார். அவர் பணி சம்மந்தமாக இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு செல்கையில் அவரின் பதில் கடமையையும் நான் செய்தேன். அக்காலமும்  ஒரு நெருக்கடியான காலம். 

 எனது கடமைகளுக்கு மேலதிகமாக மல்லாவி மருத்துவமனை பதில் பொறுப்பதிகாரியாகவும் பதில் மல்லாவி சுகாதாரவைத்திய அதிகாரியாகவும் கடமை செய்தேன் (2002 -2004 ). இக்காலம் சமாதானகாலமாகையால் பணி கடினமாக இருக்கவில்லை.  



Share/Save/Bookmark

வியாழன், 18 ஜனவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 8


மக்களுக்கு , பல போராளிகளுக்கு முகம் தெரியாமல் விடுதலைக்காய் தியாகமானவர்களில் பலர் எனக்கு முகம் தெரிந்தவராய் இருந்தார்கள்.


எனக்கும் முகம் தெரியாதவர்கள் இருந்தார்கள். அவர்கள் யார்? இராணுவப்பகுதிகளுள் சென்று காயமடைந்திருப்பர் அல்லது நோய்வாய்ப்பட்டிருப்பர். இங்கிருந்து அவர்களுடன் அல்லது அவர்களை பராமரிப்பவருடன் அல்லது அவர்களின் மருத்துவருடன் கதைத்து மருத்துவ ஆலோசனைகளை  வழங்கவேண்டியிருக்கும்.அதற்கான ஒழுங்குகள் உரியவர்களால் செய்யப்படும். உண்மைப்பெயர்களை பரிமாற  முடியாது. சிலநேரம் தெரிந்த முகங்களாகவும் கூட இருந்திருக்கலாம்.ஒவ்வொருதடவையும் எமது மேலிடத்திற்கு 
மருத்துவ அறிக்கை கொடுக்கவேண்டும். என்ன ஆச்சரியம் எந்த உயிர்களையும் அந்த தொலைபேசி மருத்துவத்தில் நான் இழக்கவில்லை. எனது தொலைபேசி மருத்துவமும் இரணைப்பாலைவரை என்னோடு பயணித்தது. அந்த முகம் தெரியாதவரில் சிலர் சரித்திரமாக வாழக்கூடும்.  இறுதியில் அவர்கள் கூறிச்சென்ற அன்புநிறைந்த சொற்கள் என்சாவோடு சாகட்டும்.     




Share/Save/Bookmark

செவ்வாய், 9 ஜனவரி, 2018

அடிமனதில்  துக்கங்களுடன் வாழும் மனிதனாய் என்காலம் நீள்கிறது. அதில் ஒன்றாய் என்மக்களுடன் நான் இன்று இல்லை என்பதுவும் இருக்கிறது. மருத்துவ பிரச்சனைகள் அங்கு எழும்போது என் மனம் ஒருகணம் ஆடிப்போகும் இருந்தாலும் எம்மால் வளர்க்கப்பட்ட பலர் இன்னும் மருத்துவ, சுகாதாரசேவையில் கடமைசெய்கிறார்கள் என்ற திருப்தியில் காலம் ஓடுகிறது.



Share/Save/Bookmark

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

"கருணை நதி"

சாதனைப்பெண்
கானவியை  நான் த.குயில் ஆக நன்கு அறிந்தவன். த.குயில் அவர்களின் ஓயாத ஒன்றரை தசாப்த உயிர்காக்கும் பணியை கண்கண்ட சாட்சியாக நான் இருக்கிறேன். அவரினதும் அவரின் அணியினதும் அளப்பரிய மருத்துவப்பணியால் (அகாலவேளையிலும்) பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.  இப்பணியை எழுத்திலோ, பேச்சிலோ எடுத்துரைப்பது  இலகு அல்ல. இதற்கு நிகரான மருத்துவப்பணி உலகில் எங்கும் நிகழ்ந்திருக்குமோ தெரியவில்லை. 
   த.குயில் அவர்களின் " மருத்துவ மடியில் " ( உண்மைக்கதைகளின் தொகுப்பு) என்ற நூலை , அவரது வேறு ஆக்கங்களை சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன் வாசித்திருக்கிறேன். அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கும் அவர் எழுதிய அன்றைய எழுத்துக்களுக்கும் வேறுபாடில்லை. உண்மைமனிதர்களின் எழுத்துக்கள் . இப்படிப்பட்டவர்களை தற்போது எங்கேனும் காண்பது அரிது.
"கருணை நதி" என்ற நாவலை ஒரு கருணைக்கடல் எழுதியிருக்கிறது என்றுதான் நான் உணர்கிறேன். கானவியிடம் நிச்சயமாக இன்னும் பல நூறு கதைகள் உண்டு , அவையும் நூலுருப்பெற வாழ்த்துகிறேன்.
- கா. சுஜந்தன்-    



Share/Save/Bookmark
Bookmark and Share