புதன், 31 ஜனவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 15



  1977    இல் தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழீழக்கோரிக்கையை முன் வைத்திருந்தது. அப்போது நாம் சிறுவர். எமது தொகுதியில் தேர்தலுக்கு நின்ற தர்மலிங்கம் ஐயாவின் ஆதரவாளர். நடைபவணிகளில் , தேர்தல் மேடைகளில் முன்வரிசைகளில் ஒலிக்கும் " லிங்கம்   லிங்கம்  தர்மலிங்கம் " என்று ஒலித்த குரல்களில் என்குரலும் ஒன்று. அந்தக்காலத்திலேயே " வேதனை, சோதனை, சாதனை" என்ற நீண்ட கட்டுரையை எழுதினேன். பாடசாலையில் ஆசிரியரின் வேண்டுகோளுக்கு இணங்க வகுப்பறை முன் வாசித்துக்காட்டினேன். இதுதான் நான் அறிந்தவரையில் என் முதலாவது ஆக்கம். எமது தமிழ் ஆசிரியர் வேறு உயர்வகுப்பு ஒன்றிலும் இக்கட்டுரையை வாசித்துக்காட்டியிருந்தார். இக்கட்டுரையின் மூலப்பிரதியும்  1987  இல் இந்திய இராணுவத்தால் எரிக்கப்பட்ட எங்கள் வீட்டுடன் சேர்ந்து எரிந்த
என் ஆவணங்களுடன் ஒன்றாகிப்போயிற்று.         



Share/Save/Bookmark

செவ்வாய், 30 ஜனவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன் - 14

 

ஒரு குறிப்பிட்டு சொல்லக்கூடிய  காலம் போராளியாய் வாழ்ந்தேன். எனக்கு தரப்பட்ட எல்லாக் கடமைகளையும் சிறப்பாக முடித்ததாய் உள்மனம் சொல்கிறது. எந்த சந்தர்ப்பத்திலும் என் உயிரை காக்க ஒரு போதும் சிந்தித்தவனல்ல. பலதடவைகள் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறேன். இன்று ஒரு சாதாரண மனிதவாழ்விற்கு திரும்பினாலும் இழந்துபோன என் சகோதர நண்பர்களின் நினைவுகள் என்னை, என் சமநிலையை அலைக்கழிக்கின்றன . எந்த சந்தர்ப்பத்திலும் இனத்தின் விடுதலைக்கு அல்லது விடுதலைப்பாதைக்கு சிறுதுளியும் தீங்கிழைத்தவன் அல்ல. என் போராட்டகாலம் முழுக்க ஓய்வில்லாமல் இயங்கியிருக்கிறேன். நோயோடும் பணியாற்றியிருக்கிறேன்.தலைவனின் நம்பிக்கையை இறுதிவரை பெற்றிருந்தேன். எமது விடுதலை அமைப்பின் வளர்ச்சியிலும் அதே காலத்தில் போருக்குள் வாழ்ந்த மக்களின் மருத்துவ சேவையிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பங்களிப்பை செய்திருக்கிறேன்.  என்னோடு சுமை தூக்கிய என் சகோதர நண்பர்களின் தியாகங்களை எழுத்திலாவது வடிப்பேன்-  இது உறுதி.        



Share/Save/Bookmark

திங்கள், 29 ஜனவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 13


  போர்க்கால கடமை என்பது அமைதிகாலத்தைவிட எப்போதும் பல மடங்கு கடினமானது. எனது கடமைக்காலத்தில் அரச சாரா நிறுவனங்களுடன்(NGO) இணைந்து மக்களுக்காய் பணி புரிந்ததும் மனதில் பதிந்துள்ளது.  OXFAM (INGO )  , FORUT (INGO )  , ICRC(INGO )  என்பன வருமுன்காப்புப்பணியில் சுகாதார பணியாளர்களை வன்னியில் கடமை செய்ய உதவியிருந்தன. இந்தப்பணியாளர்களின் பங்களிப்பும்  வருமுன்காப்புப்பணியில் வன்னியில் முக்கியமானது. போர்க்காலத்தில் சுகாதாரத்திணைக்களத்தில் பாரிய ஆளணி தட்டுப்பாடு நிலவியது யாவருக்கும் தெரிந்ததே. இந்தப்பணியாளர்களின் உருவாக்கத்தில் , வினைத்திறனை அதிகரித்ததில்,ஒருங்கிணைத்ததில் எனது பங்கு நேரடியாக முக்கியமானது. உலக உணவு நிறுவனத்தின் (WFP) need assesment ற்கான consultant ஆக இருந்ததுடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றியிருந்தேன்.  WHO நிறுவனத்தால் கிளி முல்லை மாவட்ட UN staff ற்கான medical adviser  ஆக நியமிக்கப்பட்டிருந்தேன் . சிறுவர் பட்டினிச்சாவு தவிர்ப்புத்திட்டத்தில் TRO  உடன் இணைந்து முக்கிய பணியாற்றியிருந்தேன். CHC (Centre  for  health  care )  சுகாதார நிறுவனத்தின் தலைவராகவும், CDC (Children  Development  Council ))யின் ஆலோசகராகவும் கடமையாற்றினேன். இறுதிப்போர்க்காலத்தில் பெரும் பங்காற்றிய  Health  Development  council ( சுகாதார அபிவிருத்திச்சபை  ) என்ற NGO வை உருவாக்கினேன். 



Share/Save/Bookmark

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 12


நான் தலைவரை சந்தித்து வரும்போது தலைவர் அவர்கள் ஏதாவது புத்தகங்களை தருவார்(எல்லா தடவைகளிலும் அல்ல) . நான் வாசித்துவிட்டு கவனமாக மீளக்கையளிப்பேன். ராஜு அண்ணையும் தாங்கள் இரகசியமாக வெளியிடும் புத்தகங்களை தருவார்.  நான் இரகசியமாக வாசித்துவிட்டு கவனமாக மீளக்கையளிப்பேன்.  கடாபி அவர்களும் புத்தகங்களை தந்திருக்கிறார். இவர்கள் ஏதோவகையில் என்னை வழிப்படுத்தியிருக்கிறார்கள்.  இவர்களுடன் சங்கர் அண்ணையும் இராணுவ விஞ்ஞானத்தில் நான் ஓரளவு புடம்போடப்பட உதவியிருக்கிறார்கள். இவர்களுடனான உரையாடல்கள் என் வாழ்காலத்தின் மிகுபயன் என்றால் அது மிகையல்ல.           




Share/Save/Bookmark

வெள்ளி, 26 ஜனவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்-11


சமாதானகாலத்தில் (2003 ) நெடுந்தீவிலும் அனலைதீவிலும் அந்த மக்களுக்காய் மருத்துவமுகாம் நடாத்த சென்ற குழுவில் நானும் இருந்தேன். இராணுவத்தின் நகர்வின்போது வேலணை பகுதியில் இருதடவைகள் களமருத்துவராய் நின்றிருக்கிறேன். காரைநகர், மாதகல், அராலிக்கரை , மாவிட்டபுரம், வளலாய், அச்சுவேலி, பளை, யக்கச்சி, மருதங்கேணி, ஆழியவளை, கிளாலி, மணியம்தோட்டம்  என குடாநாட்டில் பலபகுதிகளில் களமருத்துவராய்  நின்றிருக்கிறேன். யாழ்குடாவிற்குள் பல மருத்துவவீடுகளையும் நடாத்தியிருக்கிறேன். கிளிநொச்சி, முல்லைத்தீவு,மன்னார், வவுனியா வடக்கு , மணலாறு, சம்பூர் பிரதேங்களில் களமருத்துவராய் நின்றிருக்கிறேன் , பல சத்திரசிகிச்சை கூடங்களையும் நடாத்தியிருக்கிறேன். சுனாமிக்கு பின்னான மருத்துவ திட்டமிடல் , அறிக்கையிற்காக வடமராட்சி,கிளி,முல்லை,திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறையென சென்றுவந்திருக்கிறேன். ஆனால் எனது சொந்த ஊரான நயினாதீவிற்கு எனது மருத்துவ பங்களிப்பை நான் நேரிடையாய் செய்ததில்லை.    




Share/Save/Bookmark

திங்கள், 22 ஜனவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 10


என் அம்மாவின் அப்பாவை நாங்கள் அப்பப்பா என்றே கூப்பிடுவோம். அவர் ஒரு அசாத்தியமான மனிதராய் இன்றும் எனக்கு தெரிகிறார். கச்சாய் அவரது பூர்வீகக்கிராமம். அவரது ஆரம்ப கல்வியை சொந்த ஊரிலும், பாடசாலை மேற்கல்வியை தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரியிலும் கற்றார். ஆங்கிலேயர் இலங்கையை ஆண்ட காலத்தில் அவர் மலையகத்தில் வேலை செய்ய ஆரம்பித்தார் . காலையில் பாடசாலையொன்றின் தலைமை ஆசிரியராகவும் மாலையில் அலுவலக எழுதுவினைஞராகவும் வேலை செய்தார். இதேபாடசாலையில் எனது அம்மம்மாவும் ஆறுவருடங்கள் ஆசிரியராக வேலைசெய்திருந்தார்.
அப்பப்பா வேலையில் ஓய்வு பெற்று யாழ்ப்பாணத்திற்கு நிரந்தரமாய் வந்த பின் சுழிபுரத்தில் இயங்கிய துரையப்பா அன்  சன்ஸ் என்ற பெரிய வியாபாரநிலையத்தில் பிரதம கணக்கராக வேலைசெய்தார் .  அதேகாலத்தில் வேறு பல வியாபார நிலையங்களின் கணக்காய்வுகளை வீட்டில் வைத்தே செய்துகொடுத்தார். எப்போதும் சுறுசுறுப்புடன் வாழ்ந்தவர் எங்கள் அப்பப்பா.  

என் அப்பப்பா ஒரு மூத்த எழுத்தாளர் என்பதற்கு அப்பால் ஒரு கலைஞனாகவும் இருந்திருக்கிறார். தனது மேடை நாடகங்களுக்கு ஆர்மோனியம்,புல்லாங்குழல், மௌத் ஒர்க்கன் கொண்டு தானே பக்க இசை வழங்கியிருக்கிறார். இளவயதில் நாடகங்களில் நடித்திருக்கிறார். பெண்வேடம் இட்டும் நடித்திருக்கிறார். திரைச்சீலைகளை வரையும் ஓவியனாக இருந்திருக்கிறார். பட்டம் கட்டுவதில் அவரது இறுதிக்காலம்வரை விற்பன்னராய் இருந்தார். அவர் எப்போதும் எனக்கு ஒரு அதிசயம்தான்.    

   



Share/Save/Bookmark

வெள்ளி, 19 ஜனவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 9


1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதம். நான் கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரியாகவும் கிளி முல்லை மாவட்டங்களின் மலேரியா தடை அதிகாரியாகவும் பொறுப்பேற்றுக்கொண்டேன் . Dr  சிவகுரு ஐயா கிளி முல்லை மாவட்டங்களின் DPDHS  ஆக இருந்தார். அவர் பணி சம்மந்தமாக இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு செல்கையில் அவரின் பதில் கடமையையும் நான் செய்தேன். அக்காலமும்  ஒரு நெருக்கடியான காலம். 

 எனது கடமைகளுக்கு மேலதிகமாக மல்லாவி மருத்துவமனை பதில் பொறுப்பதிகாரியாகவும் பதில் மல்லாவி சுகாதாரவைத்திய அதிகாரியாகவும் கடமை செய்தேன் (2002 -2004 ). இக்காலம் சமாதானகாலமாகையால் பணி கடினமாக இருக்கவில்லை.  



Share/Save/Bookmark

வியாழன், 18 ஜனவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 8


மக்களுக்கு , பல போராளிகளுக்கு முகம் தெரியாமல் விடுதலைக்காய் தியாகமானவர்களில் பலர் எனக்கு முகம் தெரிந்தவராய் இருந்தார்கள்.


எனக்கும் முகம் தெரியாதவர்கள் இருந்தார்கள். அவர்கள் யார்? இராணுவப்பகுதிகளுள் சென்று காயமடைந்திருப்பர் அல்லது நோய்வாய்ப்பட்டிருப்பர். இங்கிருந்து அவர்களுடன் அல்லது அவர்களை பராமரிப்பவருடன் அல்லது அவர்களின் மருத்துவருடன் கதைத்து மருத்துவ ஆலோசனைகளை  வழங்கவேண்டியிருக்கும்.அதற்கான ஒழுங்குகள் உரியவர்களால் செய்யப்படும். உண்மைப்பெயர்களை பரிமாற  முடியாது. சிலநேரம் தெரிந்த முகங்களாகவும் கூட இருந்திருக்கலாம்.ஒவ்வொருதடவையும் எமது மேலிடத்திற்கு 
மருத்துவ அறிக்கை கொடுக்கவேண்டும். என்ன ஆச்சரியம் எந்த உயிர்களையும் அந்த தொலைபேசி மருத்துவத்தில் நான் இழக்கவில்லை. எனது தொலைபேசி மருத்துவமும் இரணைப்பாலைவரை என்னோடு பயணித்தது. அந்த முகம் தெரியாதவரில் சிலர் சரித்திரமாக வாழக்கூடும்.  இறுதியில் அவர்கள் கூறிச்சென்ற அன்புநிறைந்த சொற்கள் என்சாவோடு சாகட்டும்.     




Share/Save/Bookmark

செவ்வாய், 9 ஜனவரி, 2018

அடிமனதில்  துக்கங்களுடன் வாழும் மனிதனாய் என்காலம் நீள்கிறது. அதில் ஒன்றாய் என்மக்களுடன் நான் இன்று இல்லை என்பதுவும் இருக்கிறது. மருத்துவ பிரச்சனைகள் அங்கு எழும்போது என் மனம் ஒருகணம் ஆடிப்போகும் இருந்தாலும் எம்மால் வளர்க்கப்பட்ட பலர் இன்னும் மருத்துவ, சுகாதாரசேவையில் கடமைசெய்கிறார்கள் என்ற திருப்தியில் காலம் ஓடுகிறது.



Share/Save/Bookmark

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

"கருணை நதி"

சாதனைப்பெண்
கானவியை  நான் த.குயில் ஆக நன்கு அறிந்தவன். த.குயில் அவர்களின் ஓயாத ஒன்றரை தசாப்த உயிர்காக்கும் பணியை கண்கண்ட சாட்சியாக நான் இருக்கிறேன். அவரினதும் அவரின் அணியினதும் அளப்பரிய மருத்துவப்பணியால் (அகாலவேளையிலும்) பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.  இப்பணியை எழுத்திலோ, பேச்சிலோ எடுத்துரைப்பது  இலகு அல்ல. இதற்கு நிகரான மருத்துவப்பணி உலகில் எங்கும் நிகழ்ந்திருக்குமோ தெரியவில்லை. 
   த.குயில் அவர்களின் " மருத்துவ மடியில் " ( உண்மைக்கதைகளின் தொகுப்பு) என்ற நூலை , அவரது வேறு ஆக்கங்களை சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன் வாசித்திருக்கிறேன். அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கும் அவர் எழுதிய அன்றைய எழுத்துக்களுக்கும் வேறுபாடில்லை. உண்மைமனிதர்களின் எழுத்துக்கள் . இப்படிப்பட்டவர்களை தற்போது எங்கேனும் காண்பது அரிது.
"கருணை நதி" என்ற நாவலை ஒரு கருணைக்கடல் எழுதியிருக்கிறது என்றுதான் நான் உணர்கிறேன். கானவியிடம் நிச்சயமாக இன்னும் பல நூறு கதைகள் உண்டு , அவையும் நூலுருப்பெற வாழ்த்துகிறேன்.
- கா. சுஜந்தன்-    



Share/Save/Bookmark
Bookmark and Share