சனி, 30 ஜூன், 2018

திரும்பிப்பார்க்கிறேன்-50


நாம் சிறுவர்களாக இருக்கும்போது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டுதடவைதான் புது உடுப்பு கிடைக்கும். அது சித்திரை வருடப்பிறப்போ தீபாவளியாகவோ இருக்கும்.  அப்பா ஒரு roll shirt துணியும் ஒரு roll காற்சட்டை துணியும் வாங்கிவருவார். அம்மா எனக்கும் சகோதரர்களுக்கும் அப்பாவிற்கும் shirt உம் எங்களுக்கு காற்சட்டையும் அப்பாவிற்கு நீளக்காற்சட்டையும் தைப்பார். நாங்கள் uniform போலத்தான் போட்டுத்திரிவோம்.நாங்கள் சகோதரர்கள் என்று அடுத்த ஊர்க்காரனும் கண்டுபிடித்துவிடுவான். சங்கக்கடையில் சீத்தைத்துணி ஒரு roll வாங்கி எல்லோருக்கும் சாரம். பாடசாலைக்கு மட்டுமே செருப்பு(பாட்டா) போடுவோம். இப்போது காலம் அப்படியில்லை. வீட்டுக்குள்ளும் செருப்பு போடுகிறார்கள் . வயலிலும்  செருப்பு போடுகிறார்கள். எனக்கு எதுவும் பிழையாக தெரியவில்லை.   


Share/Save/Bookmark

வெள்ளி, 29 ஜூன், 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 49

   

1992 ஆம் ஆண்டு நிதர்சனம் நிறுவனத்தின்  சிறப்பான ஒழுங்கமைப்பில் யாழ் தின்னவேலியில் சிறுகதை, கவிதைப்பட்டறை வார இறுதிநாட்களில் நடைபெற்றது. என் சகமாணவர்களாக ஆதி அக்கா, தமிழினி(கயல்விழி),மேஜர் பாரதி,தமிழவள் உள்ளிட்ட பல பெருமைக்குரியவர்கள் இருந்தார்கள். பட்டறைகளின் வளவாளர்களாக சொக்கன்,கவிஞர் முருகையன், கவிஞர் சோ.பத்மநாதன்(சோ.ப),அ. யேசுராசா, சு.வில்வரத்தினம் (சு.வி)உள்ளிட்ட பல பெருந்தகைகள் இருந்தார்கள். சு.வி யின் ஓ--- வண்டிக்காரா பாடல் இன்னும் காதில் கேட்டுக்கொண்டிருக்கிறது.  


Share/Save/Bookmark

புதன், 27 ஜூன், 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 48


சிறுதுப்பாக்கி சுடும் பயிற்சிகளின் போது மட்டுமல்ல அம்பு, கத்தி எறிதலிலும் நான் அநேகமாக இரண்டாம் நிலையில் வருவேன். கடாபிதான் முதலாவதாக வருவார். அம்பில் கடாபி முதலாவதாக வர நானும் ராஜேசும் இரண்டாவதாய் வந்தது இன்றும் மனதில் பசுமரத்தாணியாய் இருக்கிறது.நான் பார்த்ததில்  கடாபி அளவுக்கு குறிசுடுபவர் யாருமில்லை. துர்க்காவும் நல்ல குறிசுடுநராக இருந்தார். தமிழ்ச்செல்வனும் நல்ல குறிசுடுநராக இருந்தார்.நான் அறிந்தவரையில் கடாபிற்கு அடுத்த நிலையில் துர்க்கா, தமிழ்சசெல்வன் உள்ளிட்ட சிலர் இருந்தனர். 



Share/Save/Bookmark
எனது ஒரு தோளில் மக்களுக்கான பணியும் மறுதோளில் விடுதலைப்போராட்ட பணியும் ஏற்றப்பட்டிருந்தது. இருபணிகளையும் நேர்மையாக செய்தேன். ஒவ்வொரு பணியின் வெற்றிக்குப்பின்னும் பலர் இருந்தார்கள். எந்த நேரமும் சாவை எதிர்கொள்ளும் மனநிலையுடனேயே பயணித்தேன். இன்னும் இன்னும் அதிகமாக செய்திருக்கமுடியுமா என்பதே இன்றும் என் மனதின் அவா. இன்று ஒரு சாதணனனாக வாழ்கிறேன். 


Share/Save/Bookmark

செவ்வாய், 26 ஜூன், 2018

     என்மண்ணில்
     ஆக்கிரமிப்போ  அடக்குமுறையோ
    திடீரென வரும் - தானாக
    போராட்டமும் எழும்
     இன்னுமொரு  ஆக்கிரமிப்போ
    அடக்குமுறையோ
    திடீரென வரும்
    போராட்டம் குடிபெயரும்
   பழைய ஆக்கிரமிப்போ
    அடக்குமுறையோ
    திளைத்து வளரும்
    மீண்டும் ஆக்கிரமிப்போ
    அடக்குமுறையோ
     புது/ பழைய வடிவில் 
    வேறு இடத்தில் திடீரென---- 
    போராட்டம் மட்டும் குடிபெயரும்
    வழமைபோல்
    ஊடகமும் பின்செல்லும்
    பழையன வேர்விடும்
   
   களைகளும் நெற்பயிரை போல
   என்மண்ணில் களைகட்டியிருக்கிறது
   என் தேச எல்லை
   பகல்கொள்ளை போகிறது 
   என் நிலம் அன்னியமாகிறது   



Share/Save/Bookmark

சனி, 23 ஜூன், 2018

திரும்பிப்பார்க்கிறேன்-47


வைகாசி 2009 இலங்கையில் போர் அராஜகமான முறையில் ஓய்வுக்கு கொண்டுவரப்பட்டது. பல ஆயிரம் தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசால் திட்டமிட்டு கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்கள் போக மிகுதியானோர் திறந்தவெளி சிறைகளிலும், சிறைகளிலும் அடைக்கப்பட்டனர். உள்ளுக்கு நடந்தவிடயங்களை  ஸ்ரீலங்கா அரசு குறிப்பிட்ட காலத்திற்கு உலகிற்கு மறைக்க தீவிரமாய் முயன்றது. அந்தக்காலமும் தமிழர்களின் வரலாற்றில் முக்கியகாலம். நானும் அக்காலத்தில் சாட்சியாகி என்பங்கை நிறைவேற்றியது இன்று மனதிற்கு ஆறுதல் தருகிறது. ஆனால் உலகம் எம்மை ஏமாற்றும் என்பதை நான் அறிந்தே வைத்திருந்தேன். அதுவே நடந்தது.      


Share/Save/Bookmark

வியாழன், 21 ஜூன், 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 46


நான் முள்ளிவாய்க்காலை விட்டு நகரும் போது ஒரு கடமையை ஓரளவு செய்துவிட்ட உள்உணர்வு  அதாவது மக்கள் முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து போய்விட்டார்கள். தொற்றுநோய்களில் இருந்து மக்களை காப்பாற்றிவிட்டோம். மற்றைய கடமை நெஞ்சை பிசைந்துகொண்டிருந்தது.  நான் தலைவனுக்கு உரிய மருத்துவன். அவருக்கு அருகில் நிற்கவேண்டியவன். அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் நேற்றிரவு(16/05/2009) தப்பியிருப்பார் என என்மனமும் அருகில் சுதர்சனும்  சொல்லிக்கொண்டிருந்தார்கள். வேறுவழியில்லை. அருகில் சிங்கள இராணுவம். சில நேரம் சுதர்சன் என்னோடு நின்றிருக்காவிட்டால் நான் வந்திருக்கமாட்டேன். வந்தும் சுதர்சனை இழந்துவிட்டேன். சுதர்சனுக்கு என்ன நடந்தது என கூட தெரியவில்லை.           


Share/Save/Bookmark

திங்கள், 11 ஜூன், 2018

திரும்பிப்பார்க்கிறேன் -45

 
1983 ஆம் ஆண்டு ஆடிமாதத்தில் தென்னிலங்கையில் சிங்கள அரசின் மேற்பார்வையில் தமிழர் மீது ஏற்படுத்தப்பட்ட பாரிய தாக்குதலின் பின் தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் கற்றுக்கொண்டிருந்த தமிழ் மாணவர்களும் தமிழ்ப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருந்தனர். 1984ஆம் ஆண்டு ஆரம்பத்தில் யாழ் பல்கலையில் இடம்பெயர்ந்திருந்த மாணவர்கள் சார்பில் சிலர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். இடம்பெயர்ந்திருந்த மாணவர்களை தமிழ்ப்பகுதியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவைத்தே உண்ணாவிரதம் இருந்தனர். சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவர்களில் என் அண்ணனும் (பெரியப்பாவின் மகன்) ஒருவர். அவர் அப்போது பெரதெனியா பொறியியல்பீடத்தில் படித்துக்கொண்டிருந்தார். நானும் சில நாட்கள் அடையாள உண்ணாவிரதத்தில் பங்குபற்றியிருந்தேன். அப்போதுதான் பாலன் அண்ணாவுடன் இறுதியாக கதைத்தும் இருந்தேன். நாங்கள் படிக்காவிட்டாலும் இடம்பெயர்ந்த மிகுதிப்பேர் படிக்கோணும் என்ற உறுதியுடனேயே என் அண்ணன் இருந்தான்.   அன்று பாலன் அண்ணா, மதி அக்கா, ஜனனி அக்கா போன்றவர்கள் தொடர்ந்து கற்கமுடியாமல் போனாலும் இன்று தமிழ்ப்பகுதியில் இருந்து பொறியியலாளர்கள் வெளிவருகிறார்கள் என்பது மனதை குளிர்மைப்படுத்துகிறது. அதுவும் அறிவியல்நகரில் இருந்துவருகிறார்கள் என்பது பலரை நினைக்கவைக்கிறது குறிப்பாக தமிழ்ச்செல்வன், பூவண்ணன் இவர்களுடன் தமிழேந்தி அண்ணை.


Share/Save/Bookmark

ஞாயிறு, 10 ஜூன், 2018

திரும்பிப்பார்க்கிறேன்-44

 
10 .06 .1990 அன்று இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாயிற்று.கோட்டையில் இருந்து இராணுவம் இடைக்கிடை ஷெல் அடிக்கத்தொடங்கியது.  யாழ் மருத்துவமனை வெறிச்சோடத்தொடங்கியது.  இந்திய இராணுவம் யாழ் மருத்துவமனையினுள் உட்புகுந்து நடாத்திய கொலைகளின் பயமாக இருக்கவேண்டும் பெரும்பாலானான நோயாளர்களும்  பணியாளர்களும்  வெளியேறிவிட்டார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய ஊழியர்களே அங்கு எஞ்சியிருந்தார்கள். சண்டைக்களத்தில் இருந்து காயமடைந்து போராளிகள் வந்துகொண்டு இருந்தார்கள். சிலநாட்கள் இரவு பகலாக படாத பாடுபட்டோம். சாப்பிடக்கூட கடைகள் இல்லை. பின்  யாழ் மருத்துவமனை மானிப்பாயிற்கு  இடம்பெயர்ந்தது. நான் ஒரு தொகுதி நோயாளர்களுடன் வட்டுக்கோட்டையிற்கு போனேன்.     


Share/Save/Bookmark

வெள்ளி, 1 ஜூன், 2018

நூல்கள் எரிந்த சாம்பலில் நாங்கள் துளிர்த்தோம் 
எங்கள் ஆசைக்கனவுகளை சாம்பலாக்கினோம் 
நட்டாற்றில் வலியோடு நாம் நின்றாலும்  
வழி மாறோம் தலைமீது ஆணை


Share/Save/Bookmark
Bookmark and Share