வியாழன், 5 டிசம்பர், 2019

தனோஜன்

இன்று அதிகாலை வாமனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. ஓ தனோஜனும் எங்களைவிட்டு போய்விட்டானாம். ஒவ்வொருமுறையும் இழப்புகளை அறிகையில் மனதில் எங்கிருந்து என்று தெரியவில்லை புதியவலி வருகிறது. நான் இருக்கும் இடத்தில் தனோஜனை அறிந்தவர் யாருமில்லை அதனால் என்துக்கத்தை பகிரமுடியாமல் திக்குமுக்காடினேன். மதியம்தான் வாமனுடன் கதைக்கமுடிந்தது. என்னவேலை செய்தாலும் தனோஜன்தான் முன்னுக்கு நிற்கிறான். 2007 ஆம் ஆண்டில் சுட்டதீவு (பரந்தன்) கடற்கரையோரமாய் ஒருதொகுதி காவலரண்களை நாங்கள் பொறுப்பெடுத்திருந்தோம். காவலில் இருக்கின்ற எம் சகபோராளிகள் பகல் நேரங்களில் பதுங்குகுழி அமைக்கின்ற கடினவேலைகளையும் செய்வார்கள். அநேகமாய் நான் அங்கு செல்லும்போது எனது மோட்டார் சைக்கிளில் எனக்கு பின்னுக்கு அவன் இருப்பான். தனோஜனாய் கேட்டுத்தான் வருவான். பரந்தன் சந்தையில மரவள்ளிக்கிழங்கும் மாட்டிறைச்சியும் வாங்குவோம் என்பான் ,வாங்கிப்போவோம். காவலரண் கடமையில் இருப்பவர்களுக்கு நல்ல உணவு சமைத்துக்கொடுக்கும் அவா அவனிடம் இருக்கும்.தனோஜன் மாட்டிறைச்சியும் மரவள்ளிக்கிழங்கும் போட்டு சமைப்பது எனக்கு மட்டுமல்ல எங்கள் எல்லோருக்கும் புதிதுதான் , அதன் சுவையும் தனிதான். தனோஜன் எமது சகபோராளி, எமது பணிமனையின் கணனி இயக்குனரும் தான் . முன்பெல்லாம் எங்களுக்குள் இழப்புகள் வரும்போது எஞ்சியிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் ஆற்றுப்படுத்துவோம். இழப்புகளின் வலியை திசை திருப்ப எமது வேலைகளில் அதீதமாய் ஈடுபடுவோம். இன்றைய நாள் நீண்ட கடினமான நாளாக இருக்கிறது.


Share/Save/Bookmark

சனி, 19 அக்டோபர், 2019

அன்றொரு மதிய பொழுது

இராணுவப்பிரதேசத்திற்குள் காயமடையும் போராளிகளுக்கு அங்குதான் எங்காவது சிகிச்சை வழங்கப்படும். அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கி காயம், சிகிச்சையின்  முன்னேற்றம் தொடர்பாய் அறிக்கை வழங்கவேண்டும். அப்படியொருநாள் (திருநகரில்) தொலைபேசியில் பேசிமுடித்து வெளியில் வர  மலரவன் மாஸ்டர் என் ஒன்றுவிட்ட தம்பி நின்றுகொண்டிருந்தான். போகாதையுங்கோ அண்ணை உங்களுக்கு தெரிந்த இன்னொரு ஆளோடையும்
கதைக்கோணும். அவன் தொலைபேசியில் தொடர்பெடுத்து தந்தான். நான் கதைத்தவன் மிக ஆவலாய் கதைத்தான். அவனுக்கு தேவையான மருத்துவ உதவியை எப்பவோ செய்திருந்தேன். உண்மையில் பலருக்கு அப்படி உதவியை (கடமையை) செய்வதுண்டு எனக்கு பிறகு அவர்களை ஞாபகம் இருப்பது அரிது. அன்றும் அப்படித்தான் இருந்தும் ஞாபகம் இல்லை என்றால் அவன் புண்பட்டு விடுவான் என்று அவனை தெரியும் என்றேன். சிலகிழமைகளுக்கு பின்  அவன் உயிரோடு இல்லை என்பதை சொல்லி மலரவன் மாஸ்டர் கலங்கினான்.  மலரவன் மாஸ்டர் இளகிய மனம் உள்ளவன் அவனையும் களமுனையில் இழந்துவிட்டோம்.    


Share/Save/Bookmark

வியாழன், 20 ஜூன், 2019

விடுதலைப்புலிகளுக்கென்று தனித்துவமான சல்யூட் இருந்தது. அந்த சல்யூட்டினை ஒரு அணியாக முதலில் செய்தவர்களில் நானும் ஒருவன். எமது ஆசிரியர்களுக்கான பயிற்சியின்(TOT ) போதே அது ஒத்திகை பார்க்கப்பட்டு அதன் வீடியோ தலைமைக்கு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்பட்டது.  நாங்கள் அந்த பயிற்சியை பெறும்போது அந்த பயிற்சிமுகாமுக்கு தளபதி ஜெயம் அவர்கள் பொறுப்பாக இருந்தார்.



Share/Save/Bookmark

வியாழன், 16 மே, 2019

ஒரு வீரயுகம் முடிந்தது.

இறுதிக்கட்டம் , ஆயுததளபாடங்கள் முடிகிறது. மகாவீரனின் வாக்கு " நான்கு சயனைட்குப்பி மருந்துகளை ஒன்றாக்கி வாயிற்குள் போட்டு தண்ணீர் குடிப்பது, இருவர் இறந்ததை உறுதிப்படுத்தி முகத்திற்கு சேதம் வராமல் (அடையாளம் காண்பதற்காய்) நெற்றிப்பொட்டில் வெடிவைத்து (இறப்பை மேலும் உறுதிப்படுத்த), மகாவீரன் இறந்ததை உலகம் அறிவதற்காய் உடல்விடப்படவேண்டும் " கட்டளை நிறைவேறியபின் எஞ்சிய வீரர்களின் எதிரி மீதான அகோரத்தாக்குதலுடன் யாவும் முடிந்தது. ஒரு வீரயுகம் முடிந்தது.கனவு கலைந்தது.



Share/Save/Bookmark

செவ்வாய், 14 மே, 2019

அழிவில் சிரித்த ஈனர்கள்

பத்துவருடங்களுக்கு முன் தமிழர்களின் அழிவைப்பார்த்து சிங்களவர்களும், சிங்களவர்களின் பங்காளியான முஸ்லீம்களும் கொண்டாடினார்கள்.                                                                                                                                                            அன்று- விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாய் திரிவுபடுத்தியவர்களுக்கு இன்று உண்மைவடிவ பயங்கரவாதம் காட்சியாயிற்று. ஆனால் அன்றும் இன்றும் என்றும் மாறமுடியாதது அரசபயங்கரவாதம்.முஸ்லீம் மக்களுக்கெதிரான தாக்குதல்கள் ஸ்ரீலங்கா பாதுகாப்பு தரப்பினரின் அனுசரணையுடன் நடப்பது யாவருக்கும் தெரியும். சிறிலங்காவிற்கு எதிரானவர்கள் அரசியல்வாதிகளும் மதவாதிகளும்தான். இலங்கையில் நெடுங்காலமாய் இரு சட்டங்கள் உண்டு. ஒன்று- சிங்களவருக்கும், அரசுக்கு முட்டுக்கொடுப்பவர்களுக்குமானது. அடுத்தது- மற்றையவர்களுக்கானது. இந்த மலின நாட்டில் ஜனநாயகம் இருப்பதான வதந்தியும் காலம்பூராய் வாழ்கிறது.


Share/Save/Bookmark

ஞாயிறு, 12 மே, 2019

போய்வா உதயகீதா!

 மீண்டும் ஒரு இழப்பு , மனது பிசைந்து வலித்து ஓலமிடுகிறது . உதயகீதன், ஒரு முன்னாள் மருத்துவப்போராளி, எங்களால் உருவாக்கப்பட்டவன், கடினகாலங்களில் தோளோடு தோளாய் நின்று சிலுவை சுமந்தவன். கலிகாலத்தில் வழமைபோல்  செய்யாத குற்றத்திற்காக அல்லது செய்த புண்ணியத்திற்காய் சகாக்களோடு சிறையிருந்தவன். எமது மக்களின் மீள்குடியேற்றத்தின் முதன்மை பணியான மிதிவெடி அகற்றலில் கள மருத்துவ உதவியாளனாக தொழில் புரிந்தவன். எப்போதும் மக்களுக்காய் வாழ்ந்தவனை, மருத்துவ மனத்தினனை , நோயில் இழந்ததுயர் நெஞ்சை இடிக்கிறது. போய்வா உதயகீதா, அங்கும் உன் உயிர்ச்சகோதரர்கள் இருக்கிறார்கள்.  மீண்டும் சந்திப்போம்.  


Share/Save/Bookmark

வியாழன், 7 மார்ச், 2019

அப்பா

அப்பா குறைந்தளவுதான் கதைக்கிறார். ஆனாலும் அப்பாவின் ஒற்றைச்சொல்கூட மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. பதினைந்துவருடங்களாக அப்பாவையோ அம்மாவையோ நேரில்பார்க்கமுடியவில்லை. முதுமையில் தனிமை எவ்வளவு கொடியது.  அம்மா தன் இயலாமையிலும் அப்பாவை நன்கு கவனிக்கிறார். அப்பா அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்.  அப்பா 58 வருடங்கள் மருத்துவராய் கடமை செய்தார் (1958 -2015). அதில் 26 வருடங்களுக்கு மேல் வன்னியில் போர்ச்சூழலில் மருத்துவராய் கடமை செய்தார். தன் வாழ்நாளில்  அவர் செய்த நன்மைகளுக்காக நிச்சயமாக திருப்தியான மனநிலையில் இருப்பார். ஆனாலும் தமிழர்களின் எதிர்காலம் பற்றிய கவலையில் உறைந்திருப்பார். இப்போதெல்லாம் அப்பா அம்மாவைப்பற்றிய கவலைகளுடன் என் தனிமை கழிந்துவிடுகிறது.



Share/Save/Bookmark

ஐ நாவின் கால அவகாசம்

நீளுகிறது
ஐ நாவின் கால அவகாசம்
காணாமல் போனவரின் உறவுகளின்
ஆயுளை
காலன் தினமும் களவாடுகிறான் 
நீளுகிறது
ஐ நாவின் கால அவகாசம்
எந்தக்கவலையுமில்லாமல்


Share/Save/Bookmark
Bookmark and Share