வெள்ளி, 29 மே, 2020

திரும்பிப்பார்க்கிறேன்


2004 ஆம் சித்திரை மாதம் , தலைவரை சந்திக்கிறோம். அடுத்தநாள் காலை திருகோணமலைக்கு வெளிக்கிடவேண்டும். யாருடைய முகத்திலும் ஈயாடவில்லை. அண்ணையின் முகத்திலும் சோகரேகைகளே விரிந்திருக்கிறது. அண்ணை சொல்கிறார் " இரண்டு பக்கமும் எங்கட ஆட்கள்தான், இன்னுமொரு டொக்டர் போனால் நல்லா இருக்கும்" என்னைப்பார்த்து  "யார் வந்தால் நல்லா இருக்கும்"?.  அடுத்தநாள் மனோஜ், அஜோ அண்ணையுடன் நாங்கள் வெளிக்கிட்டோம். மற்றபக்கமும் எம்மால் உருவாக்கப்பட்ட மருத்துவ அணிதான், அது மனதுக்கு திருப்தியாக இருந்தது.   எனது சத்திரசிகிச்சைகூடம் சம்பூரில் இயங்கிற்று, என்னுடன் மருதனும் இருந்தார். அஜோ அண்ணையின் சத்திரசிகிச்சைகூடம் எங்களுக்கும் சண்டைபிரதேசத்திற்கும் நடுவில் இயங்கிற்று. எங்களிடம் காயமடைந்து வந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தோம். உண்மையிலேயே இருபக்கத்தினரும் இருந்தனர். ஆனால்       
நாங்கள் அவர்களைப்பற்றி கேட்கவேயில்லை. 


Share/Save/Bookmark

வியாழன், 28 மே, 2020

திருப்பிப்பார்க்கிறேன்

1994 ஆம் ஆண்டு, சிறப்பு பயிற்சி முகாம், முகாம் பொறுப்பாளராக கடாபி அவர்கள் இருந்தார். பயிற்சியின் இணைப்பாளராக ராஜு அண்ணை இருந்தார். நான் முகாமின் மருத்துவப்பொறுப்பாளராய் இருந்தேன். மூவரும் பயிற்சியிலும் பங்குபற்றினோம். பயிற்சி காலை ஐந்து மணிக்கு தொடங்கி மாலை ஆறு மணிக்கு முடியும். கடாபி அவர்கள் மிக நேர்த்தியாக நிர்வாகம் செய்தார். ராஜு அண்ணையும் கடாபி அவர்களும் தங்களுக்கே உரிய கடமைகளை ஆர்ப்பாட்டமில்லாமல் அழகாக செய்தார்கள்.எங்களது முழு உழைப்பும் அந்த பயிற்சி முகாமை வெற்றிகரமாய் முடிப்பதுதான். எங்களுடன் பயிற்சி எடுத்த சக போராளிகளின் பாடத்திட்டங்களில் ஏற்படும் சந்தேகங்களை அப்பப்ப நானும் நிவர்த்தி செய்தேன்.ஓய்வுநேரங்களில் ராஜு அண்ணை பயிற்சி வழங்குபவர்களுடன் இராணுவ விஞ்ஞானத்தில் உள்ள தெரியாத விடயங்களை கேட்டுக்கொண்டிருப்பார். அநேகமாக நானும் ராஜு அண்ணையுடன் இருப்பேன். அந்த பயிற்சி முகாம் எங்கட அமைப்பின் வளர்ச்சியில் முக்கியமானது. அந்த பயிற்சி முகாமில் வசந்தன், மாதவன், ராஜேஷ், குமரன், மணியரசன், அறிவன் உள்ளிட்ட பலர் பயிற்சி எடுத்திருந்தார்கள். ராஜு அண்ணையையும், கடாபி அவர்களும் நண்பராய், சகோதரராய், ஆசான்களாய் என்றும் என் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள் .


Share/Save/Bookmark

செவ்வாய், 5 மே, 2020

பழைய நினைவுகளிலிருந்து

எனது கணிசமான எழுத்துக்கள் பொதுவெளிக்கு வராமல் ஏதோ ஒரு காரணத்தால் அழிந்துபோயிற்று. அழிவதற்கு பலவழிகள் இருந்திருக்கின்றன. நான் களமருத்துவ கடமையிற்கு செல்லும்போது எப்போதும் என்னிடம் note book உம் பேனையும் இருக்கும். இயற்கையை ரசிப்பதும் கவிதைகள் எழுதுவதும்தான் ஓய்வுநேரத்தில் என் பொழுதுபோக்கு. அப்படித்தான் 1991 ஆம் ஆண்டு ஆனையிறவு தாக்குதல்   
காலத்திலும் ஒரு சிறுகவிதைகள் நிரம்பிய note book எனது காற்சட்டை பையினுள் இருந்தது. தொடையில் காயமடைந்து இரத்தக்குழாய் அறுந்த  போராளி ஒருவரின்  இரத்தப்போக்கை கட்டுப்படுத்துகையில் எனது note book போராளியின் குருதியில் ஊறிற்று. கவிதைகள்  அழிந்துபோனாலும் அந்த போராளியின் காலினை காப்பாற்றிய திருப்தி இன்றும் இருக்கிறது.1993 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும்  ஒரு கவிதைக்கொப்பியை தவறவிட்டிருக்கிறேன். இந்த கவலையில் சிலகாலம் கவிதை எழுதாமலும் இருந்திருக்கிறேன். 1987 இல்  இந்திய இராணுவத்தாலும் 2009 இல் இலங்கை இராணுவத்தாலும் என் எழுத்துக்கள் அழிந்துபோயிற்று. ஒரு கடின வாழ்க்கையின் பதிவுகளை காப்பாற்றமுடியாமல் போன துயர் என்றும் என் மனதில் அப்பியிருக்கும்.  


Share/Save/Bookmark
Bookmark and Share