திங்கள், 19 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்-25


வளலாய் இராணுவ தொடர்காவல்நிலைகள் (1992 ) மீதான தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன்னும் இந்த தாக்குதலுக்கு சென்று திரும்பினோம் .  ஏன் திரும்பினோம் என்பது தெரியவில்லை. என்ன காரணத்திற்காக நிறுத்தப்பட்டது என்பதும் தெரியவில்லை. அன்று காலை எதிர்பாராத வகையில் நானும் தம்பியும் எங்கள் வீட்டில் சந்தித்துக்கொண்டோம். இருவருமே வீட்டில் இருந்து வேளைக்கு செல்ல வேண்டும் என்பதிலேயே கரிசனையாக இருந்தோம். அம்மா புட்டும் கத்தரிக்காய் கறியுடன் முட்டை ஒன்றை பொரித்து பாதி பாதியாய் பிரித்து போட்டுவிட்டார். சாப்பிடும்போது கதைத்ததுதான் பிரிந்துவிட்டோம்.  பின்னேரம் அச்சுவேலியில் சந்தித்தோம் வெறும் சிரிப்புடன் பிரிந்தோம். இருவரும் போராளிகளாய் இருந்தும் ஆளுக்கு ஆள் இயக்க இரகசியங்களை மறைப்போம். 
ஆனையிறவில் காவல்நிலைகள் மீதான தாக்குதலுக்குச் சென்றும் திரும்பியிருந்தோம்.  இரண்டு தாக்குதல்களும் நடைபெறாததால் எது முதல் எது பின்பு என்பதை என்னால் தற்போது ஞாபகப்படுத்தமுடியவில்லை. அந்தக்காலங்களில் கிளாலி ஊடான மக்கள் பயணங்களுக்கு எமது கடல்படை  பாதுகாப்புக்கொடுக்கும் .  நானும் மாறி மாறி களமருத்துவத்திற்கு செல்வேன் . எனது அன்றைய நாட்கள் களைப்படைந்த நாட்களே.
  தம்பி வீரச்சாவு அடைந்து சிலகாலத்திற்குப்பின் பைப் (பாவரசன்) அண்ணை கதைக்கும்போது சொன்னார் " நான் இயக்கத்தில் டாம் என்ற விளையாட்டில் தோற்றுப்போனது இவனிடம்தான்"  .       
தம்பி மலரவன் டாம், செஸ் போன்றவிளையாட்டுக்களிலும் புலியாகவே இருந்தான். 


Share/Save/Bookmark

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன் - 24


2004 ஆம் ஆண்டு அது ஒரு முக்கிய விசாரணை . போராளிகளுக்கான பொதுப்பிரச்சனைகளுக்கான விசாரணைக்குழுவில்  நடேசன் அண்ணை பொறுப்பாகவும் நான் ஒரு உறுப்பினனாகவும் இருந்தேன். பெண்கள் சம்மந்தமான பிரச்சனை வரும்போது பெண்போராளி ஒருவர் உறுப்பினராக  இருந்தார். இந்த விசாரணைக்கு பொட்டம்மானும் நானும் நியமிக்கப்பட்டோம். விசாரணை முடிவில் இருவரும் தனித்தனி அறிக்கைகளை கொடுத்தோம். இரு அறிக்கைகளும் ஒன்றாக இருக்கவில்லை. தலைவர் எனது அறிக்கையை (மருத்துவ காரணங்களுக்காக) தேர்ந்தெடுத்தார். தலைவரின் தளபதிகளுக்கான சந்திப்புக்கு தலைவர் கூட்டிச்சென்றார்.
அந்த சந்திப்பில் பலவிடயங்களை  தளபதிகளுக்கு விளங்கப்படுத்த வேண்டியிருந்தது. பொட்டம்மானும் விதுசாவுமே அதிக கேள்விகள் கேட்டனர். இறுதியில் எனது பக்கத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.எனது அறிக்கையின்படி தொடர் நடவடிக்கை எடுக்க தலைவர் முடிபு கூறினார். சந்திப்புமுடிய  தளபதி ஜெயமும் தீபனும் எனக்கு கைலாகு தந்தனர்.  சந்திப்பின்போது நான் தலைவருக்கு சற்றுத்தொலைவாக இரட்ணம்  மாஸ்டருக்கு அருகில் இருந்தேன். தலைவர் என்னை அழைத்து தனக்கு இடதுபக்க இருக்கையில் அமர்த்தினார். தலைவருக்கு வலதுபுறத்தில் பொட்டம்மான் இருந்தார். விசாரணை சம்மந்தமான கலந்துரையாடல் முடிய வேறுவிடங்கள் கலந்துரையாடவேண்டியிருந்தது. நான் எழுந்தேன்   வெளியில் போய் இருக்க, தலைவர் "  பிரச்சனையில்லை நீங்க இருங்கோ என்றார்".     
      


Share/Save/Bookmark

சனி, 17 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்-23

போர்ச்சூழலில் சிறுவர்களுக்காய் ஓரளவு திருப்தியாய் பணிசெய்ததாய் உணர்கிறேன். சிறுவர் பட்டினிச்சாவு தவிர்ப்புத்திட்டத்தில் முக்கிய பணி ஆற்றியிருக்கிறேன். பாடசாலை விலகிய பிள்ளைகளை மீள பாடசாலைகளுக்கு கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன். உலக உணவுத்திட்டத்தின் தேவைப்பகுப்பாய்வு நிபுணரான பணியாற்றி அத்திட்டத்தை வன்னிக்கு கொண்டுவர உதவியிருக்கிறேன். Children  Development  Council (NGO)இன்  ஆலோசகராக இருந்து முன்பள்ளி பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு உழைத்திருக்கிறேன். வருமுன்காப்புப்பணியில் தொற்று நோய்கள் வராமல் தடுப்பதில் முக்கியபணியாற்றியிருக்கிறேன். நோயுற்ற , காயமுற்ற சிறுவர்களின் சிகிச்சை அளித்தலிலும் பங்குபற்றியிருக்கிறேன்.           


Share/Save/Bookmark

வியாழன், 15 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 22


எனது நெருங்கிய உறவுகள் ஐவர் எமது மக்களின் நல்ல எதிர்காலத்திற்காக களத்தில் வீழ்ந்தார்கள். ஐவரும் சுயநலமாக வாழ்ந்திருந்தால் நல்ல வசதியான வாழ்வை பெற்றிருப்பார்கள். கல்வித்துறையில் ஐவரும் முத்திரை பதித்திருப்பார்கள். எமது குடும்பங்களும் சமூகத்தில் மேல் அந்தஸ்தில் வாழ்ந்திருக்கும். மனட்சாட்சி, மனிதாபிமானம் அவர்களை போராளிகளாய் மாற்றிவிட்டது.  விடுதலைப்போராட்டம் வெற்றியடையாவிட்டால் சிலகுடும்பங்கள் நிர்க்கதியாகுவது தவிர்க்கமுடியாதுதான்.   
எங்களது வலி  போராட்டம் தோற்றபின் பலமடங்கு அதிகரித்துவிட்டது.


Share/Save/Bookmark

புதன், 14 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 21


நான் சமாதானகாலத்தில் மலேரியா சம்மந்தமான செயலமர்வுக்கு பதுளைக்கு சென்றுவந்தேன். அப்போது மலையகத்தை மேலோட்டமாக அலசிவந்தேன்  . என் சிறுபராயத்தில் மலையகத்தில் வாழ்ந்ததால் மலையகவாழ்வை நன்கு அறிந்திருந்தேன். சுமார் 25 -30  வருடங்களுக்குப்பின் அவர்களது வாழ்விடங்கள் , வாழ்வில் எந்த முன்னேற்றங்களையும் காணமுடியவில்லை. இது எனது மனதை குடைந்துகொண்டிருந்தது. என் பிரயாணத்திற்குப்பின் தலைவரை சந்திற்கும்போது சம்பாஷணையில்  இந்தவிடயத்தை இணைத்தேன். தலைவர் மிகவும் கரிசனையுடன் நீண்டநேரம் உரையாடினார். அந்தமக்களுக்கு எங்களால் முடிந்த நன்மைகளை நாங்கள் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அப்போது தமிழ்ச்செல்வன் வெளிநாட்டில் இருந்தார். தமிழ்ச்செல்வன் வந்தபின் மீண்டும் உரையாடுவோம், ஏதாவது யோசனைகள் இருப்பின் ஞாக்கப்படுத்திவைத்திருங்கள் என்றார். பின் சரியான தருணங்கள் அமையவில்லை. நான் சிலவிடயங்களை தயார்ப்படுத்தி வைத்திருந்தேன்.        


Share/Save/Bookmark

திங்கள், 12 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்-20


 1992 களில் தலைவருக்கு என்று மருத்துவர் தேவை என்று உணரப்பட்டிருக்கவேண்டும். அப்போது சொர்ணம்தான் தலைவரின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்தார். நான்தான் தலைவருக்கு உரிய மருத்துவராக நியமிக்கப்பட்டேன். அப்போது நான் மருதுவக்கல்வியைக்கூட முடித்திருக்கவில்லை. பின் சிறுத்தைப்படையணி  , கரும்புலிகளுக்கு உரிய மருத்துவராய் தலைவரால் நியமிக்கப்பட்டேன் . நான் வேறுகடமைகளில் இருக்கின்ற காலங்களில் தலைவருக்கு அவசியதேவையெனில்  இன்னுமொரு மூத்த மருத்துவரும் தலைவரை பார்த்து வந்திருக்கிறார்.
தலைவரின் குடும்பத்தின் மருத்துவராக பத்மலோஜினி அக்கா இருந்தார். நான் தலைவரின் தனிப்பட்ட மருத்துவராக இருந்தமையால் தலைவருடன் இடைக்கிடை அவருடைய குடும்பத்தையும் சந்திக்கவேண்டியிருந்தது.
 
 பத்மலோஜினி அக்கா திருமணம் முடித்த (1999 ) பின்பு தலைவரின் குடும்பத்திற்குமான மருத்துவராகவும் நியமிக்கப்பட்டேன். சமாதானகாலத்தில் தலைவரின் தாய்,தந்தையரும் தலைவர் குடும்பம்பத்தோடு இணைந்தனர். இறுதிவரை என்பணி தொடர்ந்தது.  


Share/Save/Bookmark

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 19

 மஞ்சள் துண்டுக்கு கழுத்தறுத்த சிங்களவன் என்ற கதையை சிறுவயதில் கேட்டிருக்கிறேன் ( ஒரு இனத்தை அப்படி சொல்வது முறையல்ல- தவறு ) . களத்தில் புலிகளின் உடல்களை இராணுவம் கைப்பற்றினால்  உடல்கள் எந்தநிலையில் இருந்தாலும் புலிகள் ICRC ற்கூடாக பெற்றுக்கொள்வார்கள் ஆனால் இராணுவம் நல்லநிலையில் உள்ள உடல்களை மட்டுமே பெற்றுக்கொள்ளும் , சிலநேரங்களில் அதையும் பெறமறுத்துவிடும். புலிகள் பெறும் உடல்கள்   சிலநேரங்களில் அடையாளம் காண்பதே கடினமாகயிருக்கும். இராணுவநடவடிக்கையால் துண்டி முரசுமோட்டையில் இயங்கியபோது (2008 பிற்பகுதி) முப்பதிற்கு  மேலான உடல்கள் கிடைத்திருந்தது. எல்லா உடல்களையும் நான் பரிசோதித்தேன். எல்லா உடல்களிலும் பாரிய காயங்கள் இருந்தன. ஏழு உடல்களில் பாரிய காயங்களுடன் , உயிருள்ளபோதே கூரிய ஆயுதத்தால் கிழித்த  காயங்கள் கழுத்துப்பகுதியில் இருந்தன .  ஏழுகாயங்களும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக இருந்தது. வழமைபோல் அவ்வறிக்கையையும் மேலிடத்திற்கு கொடுத்திருந்தேன்.               


Share/Save/Bookmark

வியாழன், 8 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன் - 18


 விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களில் போர்க்காலங்களில் கூட திலீபன் மருத்துவசேவைக்கூடாக அடிப்படை மருத்துவசேவை கஷ்ட பிரதேச மக்களையும் அடைந்தது. திலீபன் நடமாடும் மருத்துவ சேவைக்கூடாகவும் விடுபட்ட சில பிரதேசங்களை  அடிப்படை மருத்துவசேவை அடைந்தது. கௌசல்யன் நடமாடும் மருத்துவசேவையை ஆரம்பித்து மேலதிக மருத்துவசேவையையும், சுகாதாரகருத்தூட்டலையும் கஷ்டப்பிரதேசங்களை நோக்கி நகர்த்தினேன். எமது பற்சுகாதாரப்பிரிவின் பொறுப்பாளர் சுதர்சன் தலைமையில் பல்மருத்துவம் சகலமக்களுக்கு மட்டுமல்ல களத்திற்கும் கிடைத்தது.

         


Share/Save/Bookmark

திங்கள், 5 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 17


நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தேன். விவசாயமே எமது பூர்வீகம். என் தந்தை வழி பேரன் ஒரு பெரு விவசாயி, எனது தந்தையாரும் 77  ஆம் ஆண்டு கலவரத்துடன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இருவருடங்கள் முழுநேர விவாசாயியாக இருந்தார்.  எமது சிறுபராயத்தில் பாடசாலை நேரம் போக மிகுதி நேரம் தோட்டத்தில் புல்பிடுங்குதல், வயல் விதைப்பு , ஆடு மாடு வளர்த்தலோடு போகிற்று. சங்கீதமோ மிருதங்கமோ இசைகளோ நீச்சலோ பயின்றதில்லை. ஆனால் நேர்மையாக வளர்க்கப்பட்டோம். எம் இனவிடுதலைக்கு அழைப்பாணை வரும்போது வீட்டில் நால்வரில் மூவர் போராளியானோம். அநேக சாதாரண குடும்பங்கள் அந்நேரம் அனுபவித்த மனவேதனையை என் பெற்றோர் அன்றிலிருந்து இன்று வரை அனுபவிக்கிறார். என் பெற்றோரின் இறுதி நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கிறது . என் பெற்றோரை காணாமல் கண்மூடப்போகிறேன் எனும் கவலை தினமும் என்னைக் கொல்கிறது.  



Share/Save/Bookmark

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 16


1992 ஒரு நாள் இரவு , ஆனையிறவு இராணுவ முகாம் ஒன்றுடன் இணைந்த
காவல்ப்பகுதி , குறிப்பிட்ட காவல்நிலைகளை தாக்கி அழிப்பதற்காக அணிகள் உட்சென்றுவிட்டன , இரவு இரண்டு  மணியிருக்கும் , நுளம்பு கடித்துக்கொண்டிருந்தது,அடிக்கமுடியாது. அவ்வளவு அருகில் அத்தாக்குதலுக்கான களமருத்துவனாக பனையொன்றுக்குப்பின் முதுகு bag  உடன் படுத்துக்கிடந்தேன் . முன்னுக்கு சிறுபத்தைகள்.   அடுத்த பனையருகில் யாழ்மாவட்ட சிறப்புத்தளபதி தமிழ்செல்வன் பனையில் சாய்ந்தபடி குந்தியிருந்தார், பனைகளுக்கு  நடுவில் எனது தம்பி மலரவன் படுத்துக்கிடந்தான்.முதல் நாள் இரவு கிளாலிக்கரையில் களமருத்துவனாய் நின்றிருந்தேன், அதனால் நித்திரைவெறியோடும் , காதை சண்டையொலியின் எதிர்பார்ப்போடு வைத்திருந்தேன் .    சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்குப்பின் மலரவன் என் அருகில் ஊர்ந்துவந்தான். "தாக்குதல் நடக்காது, பிசகிவிட்டது . நீங்கள் வந்தவழியால் திரும்புங்கள்" ஆளை ஆள் அடையாளம் காணமுடியா இருள், அவன்  தமிழ்ச்செல்வனை நோக்கி ஊர்ந்துகொண்டிருந்தான். இதுதான் என்தம்பியுடனான இறுதி சந்திப்புகளில் ஒன்று   என்று எனக்கு அப்போது தெரியவில்லை .   
      



Share/Save/Bookmark
Bookmark and Share