திங்கள், 15 ஜூன், 2026

எழுத்தாளர் சு.ராஜசெல்வி

படத்திற்கான கவிதைப்போட்டியில் சு.ராஜசெல்வியின் சுமார் 280 கவிதைகள் ஈழநாதத்தில் (வெள்ளிநாதம் ) பிரசுரமாகியிருக்கிறது . அதில் 40 கவிதைகள் பரிசுக்குரியதாகவும் மிகுதி பாராட்டுக்குரிய கவிதைகளாகவும் பிரசுரமாகின. சு.ராஜசெல்வி, ரா.சுஜந்தன் , எஸ் ஆர் எஸ் , சு.செல்வி, எஸ்.ஆர்.செல்வி, எஸ்.ராஜி ஆகிய பெயர்களில் இவர் எழுதியிருக்கிறார்.இப்போட்டிகளில் பலதடவைகள் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகள் பிரசுரமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது சிலகவிதைகள் வானொலியில் ஒலிபரப்பாயிருக்கிறது.இவர் நிகழ்வுகளிலும் கவிதை வாசித்திருக்கிறார். முகநூலுக்கூடான அகில உலக ரீதியான போட்டிகளில் கவிதைகளுக்காக, புகைப்படங்களுக்காக, சிறுகதைகளுக்காக ஐம்பதிற்கும் மேற்பட்ட வெற்றியாளர் சான்றிதழ்கள் பெற்றிருக்கிறார். இவரது முப்பது விஞ்ஞானக்கட்டுரைகள் போர்க்காலத்தில் கிளிநொச்சியில் வெளியான "விழி " மருத்துவ இதழ்களில் பிரசுரமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் எழுதிய "கைவிளக்கு" என்ற சிறுவர் நூல் 2010 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. கொரோனா காலத்தையொட்டி "ஜீவநதி" இதழ் அகில உலக ரீதியாக நடாத்திய கவிதை போட்டியில் தெரிவான கவிதைகளின் கவிதைத்தொகுதியிலும் இவரது கவிதை இடம்பெற்றிருக்கிறது. " தடாகம்" அமைப்பு 2018 ஆம் ஆண் டு உலகம் தழுவிய ரீதியில் 2018 ஆம் ஆண்டு நடாத்திய கவிதைப்போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று "கவின்கலை" பட்டத்தையும் பெற்றார். பாடசாலை வாத்திய அணியில் melodica வாத்தியத்தை வாசிப்பவராக இருந்திருக்கிறார்.1998 ஆம் ஆண்டு கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியின் "வளர்பிறை" கையெழுத்துச் சஞ்சிகை வடகிழக்கு மாகாணத்தில் பாடசாலை சஞ்சிகைகளுக்கான பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்றது, இவர் அச்சஞ்சிகையின் ஆசிரிய ஆலோசகருக்கான சான்றிதழை கல்வித்திணைக்களத்திடமிருந்து பெற்றார்.இவர் ஒளிப்படங்கள் எடுப்பதிலும் ஆர்வமுள்ளவர். svartsol12.blogspot.com என்ற வலையிணையத்தில் நோர்வேஜிய மொழியிலும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தாய்நாட்டை விட்டு புலம்பெயர்ந்த பின் தமிழ்பாடசாலையொன்றின் ஆசிரியர்களில் ஒருவராக கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவருகிறார்.


Share/Save/Bookmark

ஞாயிறு, 14 ஜூன், 2026

துடைத்துவிடும் கைகள் இன்று இல்லை

கண்ணீர் விடுகையில் துடைத்துவிடும் கைகள் இன்று இல்லை என்பது கண்களுக்கு தெரிவதில்லை


Share/Save/Bookmark

ஒப்பாரி தான் வேறொன்றுமில்லை

விடுதலை வேண்டிய மக்களை கொன்று குவிக்கும் குண்டுகளின் சத்தம் உலக மனச்சாட்சி செத்ததிற்கான ஒப்பாரி தான் வேறொன்றுமில்லை


Share/Save/Bookmark

சனி, 13 ஜூன், 2026

எழுதாத என்கவிதை மாவீரர்களிடம் இருக்கிறது

எழுதி முடிக்கப்படவில்லை என் கவிதை - அதை நீ மட்டுமல்ல நானும் அறிவேன் இடைநடுவில் எழுந்துபோதல் என் முடிவல்ல நிரந்தரமில்லாதது யாவும்தான் மகளே! எழுதாத என்கவிதை மாவீரர்களிடம் இருக்கிறது


Share/Save/Bookmark

சனி, 6 ஜூன், 2026

பிள்ளை பசித்து அழ

அப்பு ஆச்சி ஆசையோடு நட்ட தென்னைகள் சந்ததி பசிபோக்க தம் சத்தினை புதைத்த நிலம் சிக்கியிருக்கிறது சிங்கள ஆக்கிரமிப்புக்குள் பிள்ளை பசித்து அழ இளனியை கூட அவரிடம் விலைகொடுத்து வாங்குகிறோம்


Share/Save/Bookmark

ஞாயிறு, 31 மே, 2026

"விழி " மருத்துவ மாத இதழ்

"விழி " மருத்துவ மாத இதழ் போர்ப்பிரதேசத்திற்குள் கிளிநொச்சியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்தது.2000 - 2008 ஆம் ஆண்டுவரை மாதம் தவறாது 95 இதழ்கள் வெளிவந்தன . இதன் ஆசிரியராகவும் ஸ்தாபராகவும் நான் இருந்தேன். பொருளாதாரத்தடைக்கிடையில் மாதம் 1350 பிரதிகள், விசேட இதழ்கள் 2000 பிரதிகள் வெளியாகியது ஒரு அதிசயம்தான்.


Share/Save/Bookmark

புதன், 27 மே, 2026

திரும்பிப்பார்க்கிறேன்

1996 ஆம் ஆண்டு நான்காம் மாத முடிவில் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்தேன். 2009 ஆம் ஆண்டு மேமாதம் 17 ஆம் திகதிவரை தமிழர்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழ்ந்தேன். இக்காலப்பகுதிற்குள் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சை கூடங்களில் பணிபுரிந்திருக்கிறேன். பெரும்பாலான சத்திரசிகிச்சைகூடங்கள் casualty theatres தான், சத்திரசிகிச்சையாளனாகவும் , சத்திரசிகிச்சைகூட அணிகளைை வழிநடத்துபவனாகவும் , சிகிச்சையாளர்களை உருவாக்கவும் பங்களித்திருக்கிறேன். எங்களால் உருவாக்கப்பட்டவர்கள் முள்ளிவாய்க்கால் இறுதிக்கணம்வரை மட்டும்மல்ல , தாயகமெங்கும் அளப்பரிய பணி செய்திருக்கிறார்கள். சம காலத்திலேயே ஒன்றுக்கு மேற்பட்ட சத்திரசிகிச்சைகூட அணிகளையும் வழிநடத்தியிருக்கிறேன்.


Share/Save/Bookmark

சனி, 25 ஏப்ரல், 2026

கல் எறிபவர்கள்

குளத்தில் கல் எறிபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் காய்த்த மாமரத்திற்கு கல் எறிபவர்களை போல


Share/Save/Bookmark

வெள்ளி, 24 ஏப்ரல், 2026

"பாதுகாப்பு வலயம்" பெயர்சூட்டி சிங்களம் பொழிந்தது ஷெல்மழையை உயிர்காக்க ஓடிச்சென்றோம் சிதறிய தசைகளையும் குஞ்சு குருமனின் கைகால்களையும் பதுங்ககழியில் இட்டு மூடினோம் சிவந்திருந்தது மண் நூலிழையில் தொங்கிக்கொண்டிருந்தது என் இதயம்


Share/Save/Bookmark

திங்கள், 6 ஏப்ரல், 2026

தொலைந்து போயிருக்கிறது ஒரு சொல் " ஈவிரக்கம்"

இரைகிறது வானம் வெடிக்கிறது குண்டு பறக்கின்றன தசைகள் சிவக்கிறது நிலம் தொலைந்து போயிருக்கிறது ஒரு சொல் " ஈவிரக்கம்"


Share/Save/Bookmark

ஞாயிறு, 29 மார்ச், 2026

இறுதிப்போர் சாட்சி

முள்ளிவாய்க்காலில் இறுதிப்போர் முடிந்ததும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தான் செய்த இனப்படுகொலையை மூடிமறைக்க முழுமுயற்சி எடுத்தது. இந்தக்காலத்தில்த்தான் நான் புலம்பெயர்ந்தேன். இறுதிப்போரில் நடைபெற்ற விடயங்களை உலகிற்கு தெரியப்படுத்த என்னால் முயன்றதை செய்தேன். எனக்கு அது ஒரு கடினகாலம். உலக மனிதயுரிமை அமைப்புகளோடு உரையாடவேண்டிவந்தது. நடந்த சோகங்களை மீள்நினைவூட்டவேண்டியிருந்தது. அவர்களோடான ஒவ்வொரு சந்திப்புகளுக்கு பின்னும் மனநிலையில் மேலும் சோர்ந்து போவேன். நித்திரையில்லா நாட்கள் அவை. 2012 ஆம் ஆண்டுடன் அந்த கடமை நிறைவுற்றதாக உணர்ந்து அதிலிருந்து வெளியேவந்தேன்.


Share/Save/Bookmark

ஞாயிறு, 15 மார்ச், 2026

வாழ் நிழலில் நெருப்பேறி தோப்பு சாம்பலாயிற்று பறவைகளோடு வானும் நிலமும் காற்றும் ஒரே நிறமாயிற்று ஓய்ந்தபின் எழுதப்பட்டிருந்தது " சமாதானம்"


Share/Save/Bookmark

வெள்ளி, 13 மார்ச், 2026

Sujanthan Kasilingam



Share/Save/Bookmark

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

மலேரியா அற்ற பிரதேசம்

1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டம் உள்ளீடாக புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிற்குள் மலேரியா நோயின் தாக்கம் வெகுவாக அதிகரித்தது , 1998 ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின் படி ஒட்டுமொத்த இலங்கையின் மலேரியா நோயாளர்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தின் தொகை அதில் எழுபது வீதமாக இருந்தது. சிறுவர்,கர்ப்பிணிகள் உள்ளீடாய் நூற்றுக்கணக்கானவர்கள் அந்த வருடம் எமது பகுதிற்குள் இறந்திருந்தார்கள். அந்த நேரத்தில்த்தான் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மலேரியா தடுப்பு அதிகாரியாக நான் பொறுப்பெடுத்தேன். அந்த நேரம் கிளிநொச்சி , முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப்பணிப்பாளராக இருந்த DR சிவகுரு ஐயாவுடனான முதலாவது சந்திப்பு இப்போதும் நினைவிருக்கிறது. நான் கேட்டேன் எப்படி மலேரியா நோயினை எமது பிரதேசத்திலிருந்து இல்லாமல் ஆக்கலாம்? அவர் சொன்னார் " மலேரியாவை இந்த பிரதேசத்தில் இருந்து இல்லாமல் ஆக்க முடியாது, உலக சுகாதார ஸ்தாபனத்தால் இந்த பிரதேசத்தில் இருந்து மலேரியாவை அகற்றமுடியாது என பிகடனப்படுத்தப்பட்டுள்ளது, முயற்சி செய்தால் கட்டுப்படுத்தலாம் ". நான் சந்திப்பை முடித்து நேரடியாக மலேரியா தடுப்பு காரியாலயம் சென்றேன். காரியாலய நிர்வாக கடமையாற்றிய எங்களின் சிவகுரு ஐயாவை சந்தித்தேன்.எமக்கு தேவையான ஆளணியில் பத்து வீதம் கூட இல்லை, பொருளாதார மருந்து தடை வேறு . இருப்பவர்களை நாளையே கூப்பிடுங்கள். ஐந்து வருடத்தில் எமது கட்டுப்பாட்டு பிரதேசத்தை மலேரியா அற்ற பிரதேசம் ஆக்கினோம். உண்மையில் இலங்கையில் முதலில் மலேரியாவை இல்லாமல் ஆக்கியது நாங்கள்தான். அதற்கு பல வருடங்களுக்கு பிறகே இலங்கை மலேரியா அற்ற நாடாகியது.


Share/Save/Bookmark
Bookmark and Share