வியாழன், 31 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன் - 43


இன்றுதான் யாழ் நூலகம் சிங்கள படைகளின் உதவியுடன் அமைச்சர் ஒருவரின் தலைமையில் எரிக்கப்பட்ட நினைவுநாள். முற்பத்தேழு  வருடங்கள் கடந்தபின்னும் அந்த வலி அப்படியே ஆழ்நெஞ்சில்   இருக்கிறது. எனது அம்மப்பா ஒரு மூத்த எழுத்தாளர் . அவர் தனது பிரசுரமான எழுத்துக்களை பாதியளவுதான் சேர்த்துவைத்திருந்தார் . அதுவும் தொண்ணூற்றி ஐந்து இடப்பெயர்வுடன் அழிந்துபோயிற்று. யாழ் நூலகம் இருக்கும்வரை தனது பெரும்பாலான பிரசுரமான ஆக்கங்கள் அங்கு இருக்கிறது என்று சொல்லியே எங்களை வளர்த்திருந்தார்.  யாழ்நூலகம் எரிக்கப்பட்டபின் அம்மப்பா என்னிடம் சொன்னார் " என் அஸ்தி அங்கதான் கிடக்கு" . யாழ் நூலகம் நினைவுவர அம்மப்பாவின் நினைவுகளை தவிர்க்கமுடியவில்லை.   இப்போது அந்த நூலகம் மீளக்கட்டுப்பட்டுள்ளது ஆனால் அந்த நூல்கள் இல்லை. மீள இந்தநூலகமும் அவர்களால் எரிக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.  இந்த நாளுடன்  என் அமைதியான வாழ்வு திசைமாறிற்று.


Share/Save/Bookmark

செவ்வாய், 29 மே, 2018

தமிழீழ சுகாதாரசேவையின் திலீபன் நடமாடும் மருத்துவசேவையின் பொறுப்பதிகாரி Dr தேவா அக்கா அவர்கள் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தன் இனத்தின் விடுதலைக்காகவும் மக்கள் பணிக்காகவும் ஒப்புவித்தவர்.  திலீபன் நடமாடும் மருத்துவசேவையின் ஊடாக மருத்துவ வசதி குறைந்த இடங்களுக்கும், வன்னியில் இயங்கிய  சிறுவர், முதியோர், மனநிலை பாதிப்பு, அங்கவீனமடைந்தோர் இல்லங்களுக்கும் மருத்துவசேவையை கிரமமாக கொண்டுசென்றவர். இருதடவைகள் ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பியவர். இறுதிப்போரில் தான்தங்கியிருக்கும் இடங்களை மருத்துவநிலையமாக்கி மக்களுக்கான மருத்துவப்பணியாற்றியவர்.


Share/Save/Bookmark

திங்கள், 28 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன்-42


நான் கிளிநொச்சி சுகாதார விஞ்ஞானக்கல்லூரியின் கற்கைகளான Dip  in  Medicine , Dip in Nursing , Dip in Pharmacy , Dip in Food & Nutrition போன்ற கற்கைகளுக்கான தனித்துவமான பாடத்திட்டத்தை வரைந்தேன். அதேபோல் அப்போதைய கிளிநொச்சி சந்தையின் ஒவ்வொரு அமைவிடங்களையும் உறுதிசெய்தேன். நான் இலங்கையில் பல சந்தைகளை பார்த்திருக்கிறேன். ஏனோ தெரியவில்லை எனக்கு கிளிநொச்சி சந்தைதான் பிடித்திருந்தது.எப்போதும் காக்கையிற்கு தன்குஞ்சே பொன்குஞ்சு.


Share/Save/Bookmark

வியாழன், 24 மே, 2018

எங்களைவிட பத்து மடங்கு சனத்தொகையில் அதிகமான எதிரியோடதான் சண்டை பிடித்தோம். எதிரி தனித்து நிற்கமுடியாமல் பல நாடுகளை கூட்டிவந்தான். நாம் தோற்றிருக்கலாம் ஆனால் எம்கொள்கையை தோற்கடிக்கமுடியவில்லை என எதிரி மூக்கால் அழுகிறான். எம் தலைவர் ஏற்கனவே சொல்லியிருந்தார் " பிரபாகரன் தோற்கலாம் வரலாற்றில் இன்னுமொருத்தன் வருவான் அவன் என்னைமாதிரி ஈவு இரக்கம் பார்க்கமாட்டான்". நீதி வாழமுடியாமல் போனால் அழிவு தவிர்க்கமுடியாமல் போகும்.     


Share/Save/Bookmark

ஞாயிறு, 20 மே, 2018

விடுதலைப்புலிகள் அமைப்பு இன, மத, வேறு எந்த பாகுபாடுகளும் அற்ற அமைப்பு . அது ஆக்கிரமிப்பு அல்லது அடக்குமுறைக்கு எதிராகவே போராடியது. அந்த அமைப்பின் அரசியல் ஆலோசகர் பாலா அண்ணையின் மனைவி ஆங்கிலேயர், வெளிநாட்டு தொடர்புகளுக்கு பொறுப்பாக இருந்தவரின் மனைவி தாய்லாந்தை சேர்ந்த புத்த மதத்தவர், காவல்துறை அரசியல்துறையிற்கு பொறுப்பாகயிருந்த நடேசண்ணையின் மனைவி சிங்கள இனத்தவர், நான் சந்தித்த கரும்புலி ஒருவரின் மனைவியும் சிங்கள இனத்தவர்- அவரின் குடும்பம் கிளிநொச்சிற்கு வரும்போது பிள்ளைக்கு டெங்கு நோய், சிகிச்சை வெற்றிபெறும்வரை முக்கியவர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர். நாம் மௌனித்துப்போனதால் எம்வரலாற்றை எவரும் திரித்து எழுதலாம் ஆனால் உண்மை சாகாது.                 


Share/Save/Bookmark

வியாழன், 17 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன் - 41


எனது போராட்டகாலத்தின் ஆரம்பம் எது? எனக்குள்ளேயே கேட்டுக்கொள்கிறேன். சிறுவயதிலேயே பலவிடயங்களை தெரிந்தோ தெரியாமலோ அறிந்திருக்கிறேன். எனது போராட்ட பின்னணி அழகானதுதான். நான் எப்போதும் மனித உயிர்களை மதிப்பவன். மனிதர்களுக்குள் வேறுபாடுகாண்பது என்றும் எனக்கு விருப்பமானது அல்ல. இருப்பினும் நான் இராணுவ முகாமைத்துவத்தில் ஓரளவு நன்றாக புடம்போடப்பட்டேன். அதற்கு தலைவர்( அண்ணா) என்மீது காட்டிய ஈர்ப்புத்தான் காரணம் என்று நினைக்கிறேன். அதுகூட ஏன் என்று இன்றுவரை புரியவில்லை. நான் இலகுவில் வளைந்துகொடுப்பவனில்லை. நான் நினைப்பதைத்தான் செய்துவந்திருக்கிறேன். நான் போராட்டகாலத்தின் இறுதிவரை நேர்மையாக உழைத்திருக்கிறேன். எப்படியிருந்தாலும் இப்போது மனதை வாட்டுவது தலைவனின் இறுதிக்கணத்தில் அவரோடு இருக்கவில்லை என்பதே. நான் அவரது தனிப்பட்ட மருத்துவன் நான் அவரோடு இருந்துதான் இருக்கவேண்டும். அண்ணா இன்னுமொரு பிறப்பிருந்தால் உங்களது தம்பியாகவே பிறந்துவிடவேண்டும். நான் இப்பிறப்பில் செய்யாத கடன்களை அடுத்த பிறப்பிலாவது செய்துவிடவேண்டும்.       
   



Share/Save/Bookmark

செவ்வாய், 15 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 40

கிளி முல்லை மாவட்டங்களின் வருமுன்காப்பு சுகாதார அணியினர் ( இலங்கை செஞ்சிலுவை சங்க சுகாதார பணியாளர் உள்ளீடாய் ) அநேகமானோர் என்னாலும் நேரடியாய் வளர்க்கப்பட்டவர்கள் ஆதலால் நான் தமிழீழ சுகாதாரசேவையை பொறுப்பெடுக்கும்போது எப்படியும் இந்தப்பிரதேசத்தில் தொற்றுநோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பேன் என்ற நம்பிக்கையிருந்தது. இறுதிவரை அந்தநம்பிக்கை வீண் போகவில்லை. தமிழீழ சுகாதாரசேவைகளின் தொற்றுநோய் தடுப்பு பொறுப்பாளர் லோலோ அவர்கள் படுகாயம் அடைந்து படுத்துக்கிடக்கும்போதும் இறுதியாய் அவர் என்னிடம் வினவியதும்  தொற்றுநோய் தடுப்பு பற்றியே. முள்ளிவாய்க்காலைவிட்டு வெளியேறும்போதும் மனதுக்கு சிறு ஆறுதலாய் இருந்தது  தொற்றுநோய் தடுப்பின் வெற்றியே.       

         


Share/Save/Bookmark

ஞாயிறு, 13 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 39



நான் ஏன் இடம்பெயர்ந்தேன்? வென்றவன் எழுதுவதுதான் வரலாறாகப்போகும் ( அது உண்மை வரலாறு அல்ல ), வென்றவன் முடிந்தவரை இருப்பவரை பயன்படுத்துவான் புனைவு வரலாறு எழுத, நானும் ஒருவனாய் அதில் இருக்கக்கூடாது என்பதால் புலம்பெயர்ந்தேன். சாட்சிகளற்ற இனஅழிப்பையே சிங்களம்  எம்மண்ணில் நடாத்தியது. அந்த முகத்திரை கிழியுமோ இல்லையோ என் பங்களிப்பை வழங்க  புலம்பெயர்ந்தேன். தேவையான நேரத்தில் என் பணி செய்தேன்.  என் மனச்சாட்சிற்கு தவறு செய்யக்கூடாது என்பதற்காய் நான் கொடுத்த விலையே என் புலம்பெயர்வாழ்வு.   



Share/Save/Bookmark

சனி, 12 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 38

 

நான் எனது பணியை செய்தேன் . அப்பா, அம்மா, சகோதரர்கள்    தங்களுக்குரிய பணியை செய்தார்கள். எங்களது குடும்பம் தன் இனத்தின் விடுதலைக்கான எங்களுக்குரிய பணியை செய்திருக்கிறது என்பதே இப்போது எம்குடும்பத்தின் திருப்தி. சமூகத்தில் குடும்பநிலையில் எம்குடும்பம் பின்னடைந்து இருக்கலாம். அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. எப்பொழுதுமே நாங்கள் உண்மையாக இருந்தோம். 


Share/Save/Bookmark

திரும்பிப்பார்க்கிறேன் - 37



அண்ணையுடன் (தலைவர்) அவர்களுடன் ஓரளவிற்கு மனம்விட்டு பழகியிருக்கிறேன்.
இரண்டாயிரமாம் ஆண்டு தொடக்ககாலங்களிலேயே எமது அமைப்பு தோற்றுப்போகும் ஏதுநிலைகள் இருப்பதை மறைமுகமாய் பலதடவைகள் சொல்லியிருக்கிறார்.  நாங்கள்தான் அதை பெரிதாக எடுக்கவில்லை . ஆனால் எமது கொள்கை தோற்காது என்பதிலும் உறுதியாய் இருந்திருக்கிறார் .  பேரழிவை சந்திக்கப்போகிறோம் என்பதை நேரகாலத்துடனேயே தெரிவித்திருந்தார்.  சில தசாப்தங்களுக்குப்பின் மீண்டும் போர் தொடங்கும் அப்போதைய எம் தலைவன் தன்னைப்போல் ஈவிரக்கம் பார்க்கமாட்டான் என்றும் தெரிவித்திருந்தார். எமது இனம் நிச்சயமாக விடுதலை அடையும். நாங்கள் எதிர்கால சந்ததிக்கு வீரவரலாற்றை கொடுத்துப்போகவேண்டும் என விரும்பினார் .     



Share/Save/Bookmark

வெள்ளி, 11 மே, 2018

முள்ளிவாய்க்கால்

  இந்தி(யாவி)ற்கு ஈழத்தமிழரின் விடுதலையில் துளியும் விருப்பில்லை. அப்படியிருந்தும் இயக்கங்களை வளர்த்துவிட்டு , இயக்கங்களுக்கிடையில் முரண்களை உருவாக்கி , எங்களுக்குள்ளேயே அழிவை நயவஞ்சகமாய் செய்தது இந்தி(யா). எங்களை அணைப்பதுபோல் அணைத்து முதுகில் குத்தும் இந்தி(யா). ராஜீவை தாக்கிய சிங்களன் இலங்கையில் சுதந்திரமாக ஜனாதிபதி தேர்தலில் நின்றான். இந்தியா பெரிய தேசம் ஈழத்தில் தமிழனின் தனித்துவத்தை அழிப்பதே அதன் ஈழக்கொள்கை. ஸ்ரீ லங்கா மட்டும் எதிரியாக இருந்திருந்தால் ஈழம் எப்போதோ கிடைத்திருக்கும்.

ஒரு சிறு இனத்தின் வீரத்திற்கு உலகம் பயந்தது. ஒரு பேரழிவின் ஊடாக  அந்த இனம் விடுதலைக்கனவை மறந்துவிடவேண்டும் என உலகம் விரும்பியது. நாளை விரியப்போகும் அந்த குவிபுள்ளியே முள்ளிவாய்க்கால்.              


Share/Save/Bookmark

திரும்பிப்பார்க்கிறேன்- 36



நாம் சுகாதாரசேவைக்காக பிரத்தியேகமான குறுந்தூர ஒலிபரப்பு வானொலியையும் உருவாக்கினோம். இந்த உருவாக்கத்தில் மருத்துவர் கலை அவர்களின் பங்கு அளப்பரியது. நாங்கள் எம் நடமாடும் சேவையுடன் இவ்வானொலியையும் இணைத்துக்கொண்டோம். சுமார் ஆறு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் மக்கள் எமது வானொலியை கேட்டார்கள். சில விசேட தினங்களிலும் எமது அலுவலகத்தில் இருந்து ஒலிபரப்பினோம். புலிகளின் குரல் வானொலியும் ஒரு  குறுந்தூர ஒலிபரப்பு வானொலியை மாதத்திற்கு ஒருதடவை வெவ்வேறு இடங்களில் பல நிகழ்ச்சிகளுடன் நடத்திவந்தது. ஒருதடவை அந்த புலிகளின் குரல் வானொலியின்  குறுந்தூர ஒலிபரப்பு வானொலி பழுதானதால் நண்பன் ஜவான் எங்களுடைய  குறுந்தூர ஒலிபரப்பு வானொலியை தரமுடியுமா? என வந்து கேட்டார். அதே நாளே எங்களுக்கும்  நடமாடும் சேவை இருந்ததால் உதவமுடியாமல் போய்விட்டது.


Share/Save/Bookmark

செவ்வாய், 8 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 35


1981 ஆம் ஆண்டு மே மாதத்தில் நானும் இணைத்தலைமையாக இருந்து ஒரு நாள் பாடசாலை பகிஷ்கரிப்பு போராட்டத்தை செய்தோம். யாழ் நூலகத்தை இலங்கை அரசு எரித்ததற்கான அடையாள போராட்டம். அன்று அந்த போராட்டத்தை வெற்றியாக்கி அந்த இடத்தைவிட்டு நகர்கையில் இராணுவம் அந்த இடத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது. எமக்கு தெரிந்த ஒருவரே இராணுவத்திற்கு பாடசாலைக்கு அருகில் இருந்த தபாற்கந்தோரின் தொலைபேசிக்கூடாக தகவல் கொடுத்திருந்தார். அந்தக்காலத்தில் இருந்து போராட்டவாழ்வு ஏதோவொருவகையில் பொதுவெளியில்   தொடர்ந்து கொண்டிருக்கிறது.  1985 இல் என்னை இராணுவம் தேடியது  .   நளின் செனிவரத்ன என்ற இராணுவ பொறுப்பதிகாரியே எனது பல்கலைக்கழக பீடத்துடன் தொடர்புகொண்டு என்னைப்பற்றி விசாரித்திருந்தார். நான் எந்தவித குற்றங்களிலும் ஈடுபடாமல் போராடிக்கொண்டு இருக்கிறேன். ஆரம்பகால அரசியல் வேலைத்திட்டங்களில் இருந்து மருத்துவப்பணி முடித்து நீதிக்கான பங்களிப்பு வழங்கி நான் நகர்ந்துகொண்டிருக்கிறேன்.          


Share/Save/Bookmark

வெள்ளி, 4 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 34

 
 சமாதானகாலத்தில் ( ரணில் பிரபா ஒப்பந்தகாலம்) இயக்கத்தில் சிலருக்கு க பொ த உயர்தரம் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. விரும்பிய சிலருக்கு கிடைக்கவில்லை. நான் தமிழீழ மருதுவக்கல்லூரியை பொறுப்பெடுத்த ஆரம்பகாலம் மலரவன் அவர்கள் என்னை சந்திக்க வந்தார். பிரியவதனா க பொ த உயர்தரம் படிக்க விரும்புவதாக சொன்னார். நான் அனுமதி கொடுத்து , யாரிடமும் சொல்லவேண்டாம் , அப்படி யாரும் அறிந்து கேட்டால் நான்அனுமதி தந்ததாக சொல்லுங்கள் என்று சொல்லி சில உதவிகளையும் செய்தேன். பின்  பிரியவதனா மருத்துவபீடத்திற்கு தெரிவானதும், அண்ணையின் மகள் துவாரகாவிற்கும்  பிரியவதனா படிப்பித்தார். கிளி பொன்னம்பலம் மருத்துவமனையில் மலரவனினதும் பிரியவதனாவினதும் மருத்துவப்பணி பொன் எழுத்துக்களால் பொதிக்கப்படவேண்டியது.

   


Share/Save/Bookmark
Bookmark and Share