சனி, 29 ஜூன், 2013

சுருளி அண்ணையின் ஆயுதக்கிடங்கு ஒன்று

நாங்கள் இரண்டு பேர், இயக்கத்தில சேர்ந்த புதிது.எங்களுக்கு குட்டி விலாசம். சாரத்தோட பெக்கி சேட்டுமாய்  எங்களைவிட்டால் ஆள் இல்லை என்றமாதிரி திரிவம்.ஒரே சைக்கிள் அடிதான்.சிலநேரம் திலீபன் பத்து ரூபாய் காசு தரும் .அப்ப ஒரு நெக்டோ சோடா நாலு ரூபாய் ஐம்பது சதம் . ஒரு சோடா வாங்கி இரண்டு பேரும் பிரிச்சு குடிப்பம்.காலமை ஒருக்கா பின்னேரம் ஒருக்கா குடிப்பம்.ஒரு ரூபாயிட்கு கச்சான்தான்.சின்ன சின்ன வேலைத்திட்டங்களாய் பறந்துதிரிவம். நாங்கள் ஒரே திரியிற அழகான கிராமம் ஒன்றில ஒராள அடிக்கடி சந்திப்பம்.அந்த ஆளின்ர சைக்கிளில உமல் பை தொங்கும்.நாங்கள் முறைச்சு பார்க்கிறதை பார்த்திட்டு அந்த ஆள்  நிலத்தை பார்த்துக்கொண்டு போயிடுவார். எங்களுக்கு அவரில சந்தேகம்.எங்களுக்கு என்று வேற வேலைகள் இருந்ததால அவரை பின்தொடர ஏலாமல் போயிற்று.ஆனால் கெதியில அவரை பின்தொடருற திட்டம் இருந்தது.ஒரு நாள் சுதுமலையில ஒரு ஒழுங்கைக்க நின்று திலீபன் உடன் கதைத்துக்கொண்டு நின்றம்.அந்த ஆள் சைக்கிளில வாறார். நாங்கள் இன்றைக்கு சிங்கனை அமத்துவம் என்று மனசுக்குள் யோசித்தம்.திலீபனுக்கு ஆளை காட்டினோம்.திலீபன் தன்ர கரியல் சைக்கிளில் இருந்து மெதுவாய் இறங்கிச்சு .நாங்களும் நினைச்சம் அமத்தத்தான் என்று. திலீபன் இறங்கி அந்த ஆளுக்கு இராஜ மரியாதை.பிறகென்ன அசுரகதியில நாங்களும் சைக்கிளைவிட்டு பாய்ந்தோம்.அவர் ஒரு முக்கிய போராளி திலீபன் அவரை சுருளி அண்ணை என்டு அறிமுகப்படுத்திச்சு.நாங்கள் வழிஞ்சுகொண்டு நின்றம்.சுருளி அண்ணை நன்கு சிரித்துக்கதைத்தார்(ஒன்றும் தெரியாத மாதிரி). பின் சுருளி அண்ணையின் ஆயுதக்கிடங்கு ஒன்று என்ற பொறுப்பில இருந்தது.   

அந்த ஆயுதக்கிடங்கைப்பற்றியும் சொல்லோனும் .  அந்த ஆயுதக்கிடங்கு ஒரு ஒதுக்குபுறமான பொது வளவுக்க இருந்தது.இந்த நாசமாய்ப்போவாங்கள் ( எங்கட ஆட்கள்தான்) அதுக்குப்பக்கத்தில வைச்சு இந்தியன் ஆமிக்கு அடியெண்டால் செம அடி.ஆமி பிறகு வந்து சுத்தியிருக்கிற வீடுகள் எல்லாம் கொழுத்தி  சனத்தை சுட்டு,அடிச்சு தங்கட வழமையான வேலையை செய்திட்டு போட்டாங்கள் .நான் மூன்று நாள் குட்டி போட்ட நாய் மாதிரி திரிஞ்சன்.


ஓவியன்


Share/Save/Bookmark

ஏதாவது தேவை என்றால் கேளுங்கோ

எண்பத்தியாறாம் ஆண்டு ஒரு வேலைத்திட்டமாய் சாவகச்சேரிக்குப்போனேன்.நான் அங்கு இரண்டு வாரம் தங்கி
அவ்வேலைத்திட்டத்தை செய்யவேண்டும்.சாவகச்சேரி மருத்துவமனைக்கு சற்று  தள்ளிய முன் ஒழுங்கையில் (ரெயில் தண்டவாளத்தைத் தாண்டி) கொஞ்ச தூரத்தில் வலப்பக்கமாய் அந்த முகாம் இருந்தது.அந்த முகாமுக்கு போய்ச்சேர அங்கு எவரும் தெரிந்த
முகங்களாய் இலலை.அந்த வேலைத்திட்டத்தை நிர்வகிப்பவர் எனக்குரிய
அடிப்படை வசதிகளை செய்து தந்து ,அன்றே வேலைத்திட்டம் நடக்கும்
இடத்திற்கும் கூட்டிப் போய் வந்தார். அந்த வேலைத்திட்டம் பெரிய முக்கிய வேலைத்திட்டம் இலலை.அது ஒரு சாதாரண வேலைத்திட்டம்.நானும் ஒரு சாதாரண போராளி. அந்த முகாமில் ஒரு பத்துப்பேர்தான் இருந்திருப்பார்கள் .அந்த முகாமில் ஒரு மேசையில் கரம் போட் இருந்தது.அது எப்போதும் பிஸியாய் இருக்கும்.
அதைவிட ஆறு ஏழு கதிரை இருக்கும்.ஒரு கட்டில் இருந்தது. மற்றம்படி பெரிதாய் சொல்ல ஒன்றும் இல்லை. போராளிகளின் துப்பாக்கிகள்தான்.
இரவு படுக்கும் போது சென்றி போட்டார்கள். என் பெயரையும் போடச்சொன்னேன் .அது சரியில்லை என்றிட்டார்கள். விறாந்தையில் கரைப்பக்கமாய் பாய் போட்டுவிட்டார்கள்.நடுவில போட்டால் ஆட்களை சென்றிக்கு உலுப்பி எழுப்பைக்க உங்களுக்கு சிவராத்திரி ஆயிடும் என்றார்கள்.    
படுத்து நான் நித்திரையாய் போயிட்டன்.யாரோ வந்து என்னை தட்டி எழுப்பிச்சினம் .நான் என்னடா என்று யோசிச்சன் சென்றிக்குத்தான் மாறி எழுப்புறாங்களோ? எதுவும் புரியயில்லை.அண்ணை வந்து அந்த கட்டில்ல படுங்கோ .இல்லை நான் இதில படுக்கிறான்.ச்சீ அதுல வந்து படுங்கோ .
இதுக்கு மேலயும் ஒன்றும் செய்யேலாது.நான் போய் படுத்து நித்திரையாகிட்டன்.காலமை எழுந்து பல்லுத்தீட்டைக்க இரவு என்னை நித்திரையால எழுப்பினவர் வந்தார்.நல்லா கதைத்தார்.இடைக்கிடை தனது தோளை உயர்த்திப்பதிக்கும் பழக்கம் இருந்தது.ஏதாவது தேவை என்றால் கேளுங்கோ என்றார்.அவர் விடை பெறும்போது கேட்டேன் நீங்கள் யார் என்று. நான் தான் கேடில்ஸ் என்றார்.



ஓவியன்


Share/Save/Bookmark

எதிரியோடு நிற்பவர்கள் மட்டும் தான் துரோகிகள்

திலீபன் எப்போதும் முன்னுதாரணப் போராளி ,அப்போது பல போராட்ட இயக்கங்கள் இருந்தன.எல்லா இயக்கங்களிலும் மக்கள் அவரவருக்கு கிடைத்த தொடர்புகளின்படி / நம்பிக்கையின் படி இனத்திற்கு விடுதலை பெறும் அவாவுடன் போராளிகளாய் இணைந்தார்கள்.புலிகள் இயக்கத்திலும் பலர் இணைய வந்தும் அவர்களை உடனடியாய் உள்ளீர்த்து பயிற்சி கொடுக்க இயக்கத்திடம் பொருளாதாரப்பலம் இருக்கவில்லை.அதனால் எங்கள் தொடர்பில் இருந்த பலர் மற்றைய இயக்கங்களுடன் இணைந்தனர்.
பல இயக்கங்கள் இருந்தமை எங்கள் இனத்தின் விடுதலைப்பலத்தை மிகவும் பாதித்தது.துரதிஷ்டவசமாய் ஒற்றுமை சாத்தியப்படவே இல்லை.
இந்தியா எப்போதும் தனது தேவைக்காய் எங்களைப்பிரித்தும் ,தன் நலத்தையே கையாண்டு வந்தது.எண்பத்தி ஐந்தாம் ஆண்டில் ஒருநாள் திலீபன் சொன்னார் இந்தியா ஆமி இலங்கைக்கு வரும்  அவங்கள் போராட்டத்தை உய்யவிடமாட்டாங்கள். எனக்கு அப்போது அதை சரியாய் புரிந்துகொள்ளும் அறிவு இருக்கவில்லை.
எங்களது சகோதரர்கள்/நண்பர்கள்தான் அடுத்தடுத்த இயக்கங்களில் இருந்தார்கள். திலீபனுக்கு பல இயக்க மாவட்ட மட்ட பொறுப்பாளர்களுடன் நல்ல உறவு இருந்தது.பலமான ஒரு இயக்கம் யாருடைய கைப்பொம்மையும் இல்லாமல் இருப்பதே விடுதலைக்கு தேவையானது.அதனால் பிற இயக்கங்கள் தடை செய்யப்பட்டன.பல மற்றைய இயக்கப்போராளிகள் தனித்தனியாய் எங்களுடன் இணைந்துகொண்டார்கள்.
எங்களுடைய இயக்கத்தில் இருந்திருந்தாலும்,மற்றைய இயக்கத்தில் இருந்திருந்தாலும் எதிரியோடு நிற்பவர்கள் மட்டும் தான் துரோகிகள்.   
கிட்டண்ணா மீதான கைக்குண்டு தாக்குதலின் பின் அருணா அண்ணாவின் நடவடிக்கையால் மற்றைய இயக்கப்போராளிகள் கொல்லப்பட்டார்கள்.அருணா அண்ணை இயக்கத்தின்ர முக்கியமானவராய் இருந்தும் ,இந்தியன் ஆமிக்கு எதிரான நடவடிக்கையில் வீரச்சாவு அடைந்தும் அவர் மாவீரர் பட்டியலில் இறுதிவரை இணைத்துக்கொள்ளப்படவில்லை.    
தலைவர் மனதிலும் கவலைகள் இருந்தன.அவர் எப்போதும் விடுதலை என்ற இலக்கை நோக்கியே செயட்ப்பட்டுக்கொண்டிருந்தார்.அவர் தன்னை எப்போதும்  மக்களில் ஒருவனாகவே எண்ணிக்கொண்டார்.
ஒரு போராளிகளின் திருமண நிகழ்வின் போது  அந்த மணப்பெண்ணின் தந்தை,வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்,அவர் அண்ணை சிறுவனாய் இருக்கும்போது கண்டிருக்கிறார்.அண்ணையை கண்டு கதைத்துக்கொண்டிருன்தவர்.திடீரென அண்ணையின் காலில் வீழ்ந்து கும்பிட்டார்.அண்ணை ஐந்து அடி பின்னகர்ந்துவிட்டது.அண்ணைக்கு அது பிடிக்கவேயில்லை.

ஓவியன்    


Share/Save/Bookmark

வெள்ளி, 28 ஜூன், 2013

ராஜு அண்ணை

ராஜு அண்ணை, அண்ணையின் விஞ்ஞான  எதிர்பார்ப்புகளை செய்து முடிப்பவர் / முடிக்க சதா முயல்பவர் என்றால் அது மிகையாகாது என்று நினைக்கின்றேன்.ராஜு அண்ணை நான் இயக்கத்தில சந்தித்தவர்களில் வித்தியாசமானவர்.ஒரு அதிவேக மூளையின் சொந்தக்காரன். எதைப்பார்த்தாலும் ஆக்கிவிடுவேன் என்னும் செயல்வீரன்.இயக்க வளர்ச்சியில் இவர் பங்கு அளப்பரியது. இவர்  ராதா அண்ணை மீது தனி மதிப்பு வைத்திருந்தார்.ராதா அண்ணை என்றவுடன் பலருக்கு ஐ சே போட்டு கதைக்கிறதுதான் ஞாபகம் வரும் ,பாலா அண்ணையும்  ஐ சே போட்டு கதைக்கிறவர்.
தொண்ணூற்றி நான்காம் ஆண்டு நானும் ராஜு அண்ணையும் ஒரு பணிக்காக இரண்டு கிழமைகள் வன்னியில் நின்றோம்.அப்போது அநேகமாய் முத்தையன்கட்டு குளத்து மீன்தான் அடித்தோம்.யாழ்ப்பாணம் வந்து ஒரு கிழமையால எனக்கு நெருப்புக்காய்ச்சல் தொடங்கிற்றுது . பதினொரு நாள் அவசரசிகிச்சைப் பிரிவில் இருந்து மீண்டுவந்தேன்.ராஜு அண்ணைக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.என்னை இருதடவைகள் மருத்துவமனைக்கு வந்து பார்த்துப்போனார்.
ராஜு அண்ணைக்கு புற்று நோய் என்றவுடன் நம்பமுடியாமல் இருந்தது.ராஜு அண்ணையின் நிறை எப்பவுமே அறுபத்தி எட்டு கிலோதான் ( புற்றுநோய் அடையாளப்படுத்தப்படும்வரை  ). ராஜு அண்ணை ஒரு சாம்பல்நிற ஸ்கூட்டர் வைச்சிருந்தவர்.அதில அவர் ஓடுறதில்லை பறக்கிறது கண்ணுக்கு முன்னால தெரியுது.
ராஜு அண்ணை கல்யாணம் கட்டின பிறகும் வீட்டில நிற்கிறதில்லை. ராஜு அண்ணையின் மனைவியும் ஒரு போராளி,இறுதி யுத்தத்தில் கடல் சண்டையில் ஒரு கொமாண்டராய் வீரச்சாவு அடைந்தார்.ராஜு அண்ணை தாங்கள் வீட்டை நிற்போம் வாங்கோ என்று கல்யாணம் கட்டின புதிதில் ஒருநாள் சொன்னார்.அப்போது அவர்கள் ஒட்டிசுட்டான் புதுக்குடியிருப்பு பாதையில் ஒட்டிசுட்டானுக்கு அருகாமையில் இருந்தார்கள்.நான் போனவுடன் பிளேன்ரி தந்தார்கள்.வீட்டில்  ஆட்கள் வசிக்கக்கூடிய சாமான்கள் இருக்கவில்லை.பிளேன்ரியை நான் கதைத்து கதைத்து ஆறுதலாய் குடித்துக்கொண்டிருந்தேன்.ராஜு அண்ணை சொன்னார் விரைவாய் குடிச்சிட்டு தேத்தனிக்கோப்பையை  தாங்கோ, கங்கா சோற்றுக்கு அரிசி போட இந்தக்கோப்பையைத்தான்  பார்த்துக்கொண்டிருக்கு.
 நான் வன்னேரிக்குளம் என்ற கிராமத்தில் தங்கியிருந்தேன்.ஒரு நாள் அதிகாலை ஆறு மணிக்கு ராஜு அண்ணை பிக்கப்பில் வந்தார்.எல்லோருக்கும் பிளேன்ரி கொடுத்தோம்.எங்கட முகாமில் ஒரு புது மேசைப்பந்து மேசை போட்டிருந்தோம்.வாங்கோ கொஞ்ச நேரம் விளையாடுவோம் என்று கூப்பிட்டார்.விளையாட்டு தொடங்க எனக்கு இப்படி ஒன்று வாங்கித்தருவீங்களா?என்று கேட்டார்.நான் ஆம் என்றேன். சிறிது நேரத்தில் இந்த மேசை வேண்டாம் இதை நான் செய்வேன்.நீங்கள் மிகுதியை வாங்கித்தாங்கோ என்றார்.பிறகு கொஞ்ச நேரம் செல்ல உந்த நெற்றும் தேவையில்லை என்றார்.கொஞ்ச நேரத்தால ரக்கட்டும் தேவையில்லை பந்துமட்டும் வாங்கித்தந்தால் சரியென்றார்.மிச்ச    மெல்லாம் நான் செய்திடுவன் என்றார்.விளையாடிமுடிய சொன்னார் பந்து தாங்கள் செய்வம் ஒன்றும் தேவையில்லை என்றார். 


- ஓவியன்-


Share/Save/Bookmark

வியாழன், 27 ஜூன், 2013

அப்பா

அண்ணையின் அப்பா அம்மாவை நாங்களும் அப்பா அம்மா என்றுதான் கூப்பிடுவம் . அண்ணையையும் அண்ணையுடன் நின்ற இளைய போராளிகள் தங்களுக்குள் அப்பர் என்று கதைத்துக்கொள்வார்கள். அண்ணையின் அப்பாவும் அம்மாவும் சமாதானக்காலத்தில்த்தான் இந்தியாவில் இருந்து வன்னிக்கு வந்து சேர்ந்தார்கள்.அவர்களை மாதத்தில் ஒரு தடவையாவது சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்.அவர்கள் வாழ் நாளில் பல துன்பங்களையும் அனுபவித்தவர்கள்.மிக மிக நல்லவர்கள்.அப்பா ஓய்வுபெற்ற உயர் அரச அதிகாரி,மிகவும் பக்குவமாய் பழகும் எளிமையான மனிதர்.அம்மா ஒரு பாரிசவாத நோயாளி ,அவ கதைப்பது குறைவு. அம்மாவின் பராமரிப்பை இறுதிவரை அப்பாவே செழுமையாய் செய்துவந்தார்.அம்மாவிற்கு நாளுக்கு நிறைய மருந்து குளுசைகள் எடுக்கவேண்டியிருக்கும்.அப்பா நேரம் தவறாமல் கொடுப்பார்.அப்பா ஒரு கடவுள் பக்தர்.அவர் வல்வெட்டித்துறை சிவன்கோயிலுடன்  தொடர்புடைய பரம்பரையைச் சேர்ந்தவர்.அந்தக்கோயிலின் மலர் (புத்தகம்)ஒன்றை உறையெல்லாம் போட்டு கொண்டுவந்து தந்தார்.கவனமாய் வாசித்துவிட்டு தருமாறு.எனது வேலைப்பளுவால் என்னால் அந்த புத்தகத்தை வாசிக்கமுடியவில்லை.கவனமாய் திருப்பி கொடுத்துவிட்டேன்.

2007 ஆம் ஆண்டு ஒரு நாள் காலை வழமை போல் விடிந்தது.அன்று நான் எனது சிறு அணியுடன் மாங்குளம் போய் மல்லாவி போகவேண்டும்.வாகனத்தில் ஏறி டயரியை பார்த்துக்கொண்டிருந்தேன்.சாரதி வாகனத்தை எடுக்கவும் ஒரு போராளி வந்து வாகனத்திட்கருகில் நிற்கவும் சரியாய் இருந்தது.என்ன என்று வினவ ,அவன் அண்ணையின் அப்பா அம்மா வந்திருப்பதாய் சொன்னான்.வழமையாய் அறிவித்துத்தான் வருவார்கள்.அன்று திடீரென வந்திருந்தார்கள்.நான் இறங்கினேன் .கிளிநொச்சி மாவட்டப் பொறுப்பாளர் சொன்னார் நேரம் போயிடும் தாங்கள் போயிட்டு வாகனத்தை அனுப்பிவிடுவதாய் ,நான் ஆம் சொல்லி இறங்கிப்போனேன். அன்று எனது வாகனம் கிளைமர் தாக்குதலில் அகப்பட்டுக்கொண்டது.

  2008 ஆம் ஆண்டு ஒரு நாள் சந்திக்கும்போது அப்பா மிகவும் சந்தோசமாய் இருந்தார்.அண்ணை தற்செயலாய் வீட்டை வந்திருக்கிறார் அன்றைக்கு அப்பான்ர பிறந்த நாள் , அக்கா சொல்லித்தான் அண்ணைக்கு தெரியும்.அண்ணை கேக் வீட்டை இருக்கோ என்று அக்காட்ட கேட்டிருக்கிறார்.அக்கா தேடி ஒரு துண்டு கேக்கை குடுத்திருக்கிறா.அண்ணை அப்பாவின்ர ரூம் தேடிப்போய் அப்பாவிற்கு கேக் தீத்திவிட்டிருக்கிறார்.அப்பா சிரிச்சு சிரிச்சு சொன்னார்.கண்ணாலயும்
ஆனத்தக்கண்ணீர் வந்திருந்தது.  

1970 களில போலிஸ் அண்ணையை தேடி வீட்டை வரத்தொடங்கிச்சாம் , அப்ப அப்பா அண்ணையிட்ட சொன்னாராம்.துரை நீ வீட்டை வராத உன்னால மற்றப்பிள்ளைகளுக்கும் பிரச்சனை,அண்ணையின்ர வீட்டுப்பெயர் துரை .அண்ணை அப்பாவை ஐயா என்றுதான் கூப்பிடுவார்.அப்பா சொன்னதுக்கு அண்ணை ஒன்றும் கதைக்கவில்லையாம் தலையாட்டிட்டு போனாராம். அண்ணை பிறகு ஒரு நாளும் வீட்டை வரயில்லையாம்.இந்தியாவில்தான் ஒருக்கா சந்திச்சாராம்.அண்ணை சொல்வதை செய்வார் என்ற நம்பிக்கை அந்த தந்தையிடம் இருந்தது. 

2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் பதின்நான்காம் திகதி சாமம் ஒரு சந்திப்பு முடித்து ( முள்ளிவாய்க்காலில் ) நடந்து போய்க்கொண்டிருந்தேன்.அப்போது ஒரு போராளி சொன்னான் அப்பாவும் அம்மாவும் அந்த பங்கருக்குள்ள இருக்கினம் என்று.அவர்களுடன் செஞ்சோலையில் நின்ற பெண்ணொருவரும் இருந்தார்.அப்பாதான் கொஞ்சம் கதைத்தார்.நான் இறுதியாய் விடைபெற்றுச் சென்றேன்.


- ஓவியன்-    


Share/Save/Bookmark

துப்பாக்கியில பிழை சொல்லாதையிங்கோ

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு,ஒரு சிறப்பு பயிற்சிமுகாம்.அந்த சிறப்பு பயிற்சி முகாம் வன்னியில் ஒரு காட்டினில் ஆடம்பரமற்றும்அழகாகவும் அமைக்கப்பட்டிருந்தது.அந்த அமைப்பு பணியை முன்னாள் இம்ரான் பாண்டியன் தளபதி ராஜேஸ்தான் செய்துமுடித்திருந்தார். அந்த பயிற்சி முகாமின் பொறுப்பாளராய் தளபதி கடாபி இருந்தார்.நானும் கடாபியும் நல்ல நண்பர்கள் அந்த முகாமில் ஒரே தங்குமிடத்தில் தங்கியிருந்தோம்.காலை ஐந்து மணிக்கு பயிற்சிக்கு எழுந்தால் பயிற்சி முடியும்வரை ஒன்றாகத்தான் திரிவோம்.கடாபி ஆதவன்,3/8 ஆகிய பெயரிலும் அழைக்கப்படுவார்.நான் 3/8என்றுதான் அழைப்பேன்.முன்பும் ஒரு பயிட்சிமுகாமில் நாங்கள் ஒன்றாக நின்றோம் அப்போது சங்கர் அண்ணாவும் எங்களுடன் இருந்தார்.
இரவு பயிற்சி முடிந்தாலும் கடாபி நிர்வாக வேலைகளை செய்துவர சாமம் ஆகிடும் எனது நித்திரையை குழப்பக்கூடாது என்று லைட் போடாமல் மெதுவாக போய் தனது படுக்கையில் படுப்பார்.போராளிகளுக்கு கண்டிப்பானவராய் தெரிவார்.எங்களுக்கு ஒரு உத்தமராய் தெரிந்தார்.அதித உழைப்பு ,இறுக்கமான நிர்வாகம் அவருடையது.சிறந்த துப்பாக்கி சூட்டாளர். சிறப்பு பயிற்சி முகாமில் ஞாயிறு ஓய்வு நாள்.அன்றும் ஒரு காலை காலை உணவிற்குப்பின் முகாமை சுற்றிப்பார்க்க இருவரும் சென்றிருந்தோம்.எல்லா இடங்களையும் பார்த்து
சூட்டு பயிற்சி நடக்கும் இடத்திற்கு போனோம்.அப்போது நல்ல சூட்டுப்  போராளி ஒருவன் ஒரு துப்பாக்கியை கடாபியிடம் காட்டி இந்த துப்பாக்கி  வலு சீராக்க ( Zero setting )வேண்டும் சுடுகின்றபோது சரியான விலத்தல் இருப்பதாய் சொன்னான்.  அப்போது கடாபி அந்த குழுவின் தலைவனிடமும் அது பற்றி கேட்டார்.அவனும் ஆமோதித்தான் .இப்போது கடாபி அந்த துப்பாக்கியை வாங்கி எழுபத்தைந்து மீட்டர் தூரத்திலிருந்த ஏழு இலக்குகளுக்கு( Targets) ஒவ்வொரு ரவைகள் படி அடித்தார். போய் அந்த இலக்குகளை பார்த்துவருமாறு அந்த போராளியிடமும்,குழுத்தலைவனிடமும் கூறினார்.  அவர்கள் இருவரும் போய் வந்து முதல் ஆறும் குறிதவறவில்லை (Bபுள்),
ஏழாவது இலக்கில் குறிபட இல்லை என்றார்கள்.அப்போது கடாபி அந்த ஏழாவது இலக்கில் வலது கண்ணை வடிவாய் பார்த்திட்டு வாங்கோ என்றார்.இந்தத் தடவை ஆவலில் நானும் போனேன்.என்ன ஆச்சரியம் வலது கண்ணின் கறுப்புப்புள்ளிக்கூடாக சன்னம் போயிருந்தது.சாதரணமாய் சொன்னார் துப்பாக்கியில பிழை சொல்லாதையிங்கோ. கடாபி மிகச்சிறந்த சூட்டாளன் அதனால்த்தான் இயக்கத்திற்ற இருந்த ஒரேயொரு மக்னம் பிஸ்டலை கடாபியிடம் கொடுத்திருந்தார் தலைவர். 

  • ஓவியன் -


Share/Save/Bookmark

விசாரணைக்குழு

நடேசன் அண்ணை  போராளிகளின் சிவில் பிரச்சனைகளுக்கான விசாரணைக்குழுவிற்கும்  பொறுப்பாக இருந்தார்.நான் அந்தக்குழுவில் ஒருவனாய் இருந்தேன். மாதத்திற்கு ஒரு தடவை அல்லது இருதடவை சந்தித்து முடிவுகள் எடுப்போம்,/விசாரனைகளை செய்வோம்.எங்களுடைய பரிசீலனைக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.அது ஒரு பெண்ணிடம் இருந்து வந்திருந்தது.அந்தக்கடிதத்தில் இயக்கத்தின்ர ஒரு பிரிவில் சாரதியாக இருக்கும் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் தன்னை இரு வருடங்களாய் காதலித்ததாயும் தற்போது திருமணம் செய்ய மறுப்பதாயும் தனக்கு உதவுமாறும் கோரப்பட்டிருந்தது. அந்தப்பெண்பிள்ளையின் குடும்பமும் வறுமை நிலையில் இருந்தது.
நாங்கள் அப்போராளியின் தனி நபர் கோவையை பார்த்தபோது அதில் அவர் யாரையும் காதலிப்பதாய் குறிக்கப்பட்டிருக்கவில்லை.நாம் அந்த போராளியை வரவழைத்து அவர் மீது வந்த புகாரை தெரிவித்து பூரண விளக்கத்தை கடிதம் மூலமாய் தருமாறு கோரினோம்.  
அவர் காதலித்ததை ஏற்றுக்கொண்டு ,திருமணம் செய்ய மறுத்திருந்தார்.
அவர் மறுத்தலுக்கான காரணம் அந்தப்பெண்ணின் சகோதரன் இந்திய ஆமியுடன் சேர்ந்தியங்கிய மாற்றுக்குழுவில் இருந்து புலிகளுடனான மோதலில் இறந்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது.அது தனக்கு அண்மையில்த்தான் தெரிந்ததாகவும் எழுதியிருந்தான்.நாங்கள் அந்தக்காரணத்தை ஏற்கமுடியாது நீர் திருமணம் செய்யவேண்டும் என்று கூறினோம்.அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.அதனால் அண்ணையிடம்
இப்பிரச்சனையை கொண்டுபோனோம்.அண்ணை உறுதியாய்ச் சொன்னார் அந்தப்போராளி இணங்காவிடின் அவரை இயக்கத்தில் இருந்து நிறுத்தி குற்றத்திற்கு உரிய தண்டனையை வழங்குமாறு சொன்னார். அந்தப்பெண்பிள்ளைக்கும் இயக்கநிறுவனம் ஒன்றில் வேலைக்கு ஒழுங்குசெய்து குடும்ப வறுமையை தீர்க்குமாறும் கூறினார்.அண்ணை கூறியது போன்றே எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டன. 

  • ஓவியன் -   


Share/Save/Bookmark

இனத்தின் விடுதலை,மேம்பாடு

ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு அண்ணையோடு கதைத்துக்கொண்டு இருந்தோம்.அப்பொழுது கிரிக்கட் பற்றி கதை தொடங்கிற்று.தமிழேந்தி அண்ணைதான் ஆரம்பித்துவைத்தார்.தமிழேந்தி அண்ணை ஒரு இந்திய அணி ஆதரவாளர்.அதிலும் டெண்டுல்காரின் விசிறி .அந்த நேரம் இலங்கைக்கும்
அவுஸ்திரேலியாவிட்கும்  போட்டி நடக்கயிருந்தது.தமிழேந்தி அண்ணை
அண்ணையிட்ட சொன்னார் " தம்பி சொர்ணம் இலங்கை அணியின்ர ஆதரவாளர்" . சொர்ணம் அண்ணையிட்ட சொல்லிச்சு அண்ணை சிங்களவன் எப்படியெண்டாலும் எங்களை ஒத்தவன் அவன் அப்படியில்லை.அண்ணை சொர்ணம் சொன்னதை ஆமோதித்தார்.
நான் வெஸ்ட்இண்டீஸ் ஆதரவாளன்.எனக்கு ஏனோ இலங்கை இந்தியா பிடியாது.ஒவ்வொருத்தர் ஒவ்வொருமாதிரித்தானே.அண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ எதுவும் இருந்ததில்லை.அவர் அருகில் இருந்தவர்கள்  சிலர் இன்னும் உயிரோடு அங்கும் இங்கும் இருப்பார்கள்
அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.தூரத்தில் இருப்பவர்கள்தான் அவரை நா கூசாமல் விமர்சிக்கிறார்கள்.இனத்தின் விடுதலையும் மேம்பாடும்தான் அவரின் சதா சிந்தனையாய் இருந்தது. அதில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடம் இல்லை.ஒவ்வொரு போராளியும் மாவீரர் ஆகும்போது அந்த சுமை அவரின் நெஞ்சில் கூடிக்கொண்டே போனது. 
இயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளரின் மனைவி சிங்கள இனத்தை சேர்ந்தவர்.அரசியல் ஆலோசகரின் மனைவி வெள்ளை இனத்தை சேர்ந்தவர்.இன்னுமொருவரின் மனைவி தாய்லாந்தை சேர்ந்தவர்.சில போராளிகள் சிங்கள பெண்களை மணந்திருந்தார்கள்( தேவை கருதியும்,விரும்பியும்).ஒரு தடவை சிங்களப்பெண்ணை மணந்த போராளியொருவன்  குடும்பமாய் வன்னிக்கு வந்திருந்தான்.வரும்போதே அவனது நான்கு வயது பெண்குழந்தைக்கு டெங்கு நோய் இருந்திருக்கிறது.
இங்கு சீரியஸ் ஆகிவிட்டது.பல போராளிகள் அந்த பிள்ளையை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று துடித்தார்கள்.அந்த பிள்ளைக்கு இரத்தம் ஏற்றவேண்டும் ஒரு பொறுப்பாளர் தனது இரத்தத்தை ஏற்றச்சொன்னார் ஆனால் அந்த இரத்தம் பொருந்தவில்லை.இன்னுமொரு போராளியின் இரத்தம் ஏற்றப்பட்டது.அந்த குழந்தை காப்பற்றப்பட்டதுடன் அந்த குழந்தை அந்த மருத்துவமனையில் இருந்து வெளிக்கிட மறுத்தும்விட்டது. குழந்தை பணியாளர்களுடன் மிகவும் ஒட்டிவிட்டது.பின் அந்த குடும்பம் தலைவரை சந்தித்து சிங்கள தேசத்திற்கு போனது. 
 அந்த உன்னத தலைவனை எழுதும் அருகதை எனக்கு கிடையாது.இருந்தும் சிலரின் விமர்சனம் எழுதத்தூண்டுகிறது.



-  ஓவியன்-


Share/Save/Bookmark

அவர் இறந்ததை உறவினர்களுக்கு அறிவிக்கமுடியவில்லை.

தொண்ணூறுகளின்ற  ஆரம்ப காலம்யாழ்ப்பாணத்தில ஒரு அழகான கிராமத்தின்ர மூன்று சிறு ஒழுங்கைகள் சந்திக்கும் சந்தியில் சைக்கிளில்  நின்று நாங்கள் மூவர் கதைத்துக் கொண்டு இருந்தோம். மூன்று பேரும் ஒவ்வொரு பாதையால் வந்ததால் அந்த இடம் எங்களுக்கு பொதுப்புள்ளியாயிற்று.அப்போது ஒருபாதையால் ஒருவர் சைக்கிளில் பாட்டோடு வந்து கொண்டிருந்தார்.சைக்கிள் இரண்டு பக்க பனைவேலியையும் மாறி மாறி தொட்டுக்கொண்டுவந்தது.அவருக்கு வெறி என்பதை நாங்கள் ஊகித்துக்கொண்டோம்.நான் மற்றவர்களை அவதானமாய் தள்ளி நிற்கச்சொன்னேன். அவரி வாயில் இருந்து "ராஜாதி ராஜன் இந்த ராஜா ராஜா" என்ற பாடல் ராகமாய் போய்க்கொண்டிருந்தது.
சந்திக்கு கிட்ட வரவும் அவரை துரத்தி வந்த நாய் அவரில பாயவும் சரியாய் இருந்தது.ஒரு கொஞ்ச நேரத்தில உருட்டி உருட்டி கடிச்சுப்போட்டுது.அவர் உடுத்திருந்த சாரம் கந்தலாய்ப்போயிற்று. நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து கத்தினம் நாய் விட்டிற்று போயிற்று.அந்த மனிதனைப்பார்க்க பாவமாய் இருந்தது.அயல் சனங்களும் வந்திற்றுது.நாங்கள் வந்த சனங்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்பிட்டு ,அயல் வீடு ஒன்றில பழைய சாரம் வாங்கி அந்த ராஜாவுக்கு கொடுத்தம்.
அந்த ராஜா மீண்டும் இந்தப்பாட்டோட போனார்.ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை வாழ,ஒரு ராணியும் இல்லை ஆள---  என்ற பாட்டோட போனார்.

நான் அவரை மீண்டும் எதிர்பாராது வன்னியில் கண்டேன்.அதுவும் இயக்க நிறுவனமொன்றில் ஊழியராய்.அவர் என்னை அடையாளம் கண்டதை நான் உணர்ந்துகொண்டேன்.நான் அவரை அடையாளம் கண்டதாய் அவர் இறக்கும்வரை காட்டிக்கொள்ளவில்லை.அவர் ஒரு சிறந்த அர்ப்பணிப்புமிக்க ஊழியராய் இருந்தார்.கைவேலியில் காயமடைந்த மக்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருக்கும்போது செல்தாக்குதலில்
உடல் சிதறி இறந்து போனார்.அவரது தலையையும் இரு பாதங்களையும் ஒரு பலாமரத்துக்கருகில் புதைத்தோம்.புதைகுழியிட்குள் ஒரு மூக்குப்பேனியையும் அடையாளத்திட்காய் வைத்தோம்.உறவினர்களுக்கு
அவர் இறந்ததை அறிவிக்கமுடியவில்லை.           

  • ஓவியன் -


Share/Save/Bookmark

வெள்ளி, 21 ஜூன், 2013

தாங்கள் உண்ணாமல் உணவு தந்த பல உயிர்கள்

எங்களுக்கு நீண்ட காலமாய் வழங்கல் சாப்பாடுதான்.அது பல பேருக்கு சமைக்கிறதால எப்படி சமைச்சாலும் ஆக நல்லா வராது என்று தான் நான் சொல்லுவன்.சிலர் இதை மாறியும் சொல்லலாம்.சுவை என்றது அவரவர் மனதைப்பொருத்ததும்தான். இயக்கத்திற்கு கஸ்டம் வரயிக்க சாப்பாட்டிலும் பிரதி பலிக்கும்.ஜெயசுக்குறு காலத்தில கத்தரிக்காயும் சோறும் கொஞ்ச நாள் நிரந்தரமாயிற்றுது.சில நாட்களில நாங்களும் ஏதாவது கறி வைப்பம்.அது நாங்கள் எத்தனை பேர் இருக்கிறம் என்றதைப் பொறுத்தது . எப்படி என்றாலும் எல்லோரும் ஒரே சாப்பாடுதான் சாப்பிடுவம்.  இரண்டாயிரம் ஆண்டுக்குப்பிறகு சாப்பாட்டின்ர தரம் கூடிற்றுது அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.தொன்நூறுகளின்ர   ஆரம்பத்தில சில நடவடிக்கைகளுக்கு போயிருக்கைக்க சாப்பாடு சரியாய் பிந்திவரும் ,சில நேரம் பழுதாகியும் வரும்.பலவேகய ஒன்றில நாற்பத்தியொரு நாளும் பலவேகய இரண்டில முற்பது நாளும் மின்னலில  முற்பது நாளும் இப்படி போயிற்று.   
நாங்கள் முகாமைவிட்டு வெளிக்கிட்டு களைச்சுப்போனால் சில வீடுகளில சாப்பிடுவம் . அநேகமாய் அவை மாவீரர் அல்லது போராளிகளின் வீடுகளாய் இருக்கும்.அந்த வீடுகளும் மட்டு மட்டான வாழ்க்கை வாழுற வீடுகளாய்த்தான் இருக்கும்.நாங்கள் இரண்டு பேர் அல்லது நாலு பேர் போவம்.வீட்டுச்சாப்பாடு சாப்பிடுற அவா இருந்தாலும் அதை தவிர்க்கத்தான் விரும்புவம் ஆனால் அதுகள் விடாதுகள்.சில நேரம் கடையில எங்களுக்கு என்று சாப்பாடு கட்டிப்போய் அதுகளிற்ற அதை குடுத்திற்று வீட்டுச் சாப்பாட்டை நாங்கள் சாப்பிடுவம் அது எங்களிற்ற இருக்கிற காசைப்பொருத்தது. நான் நெடுந்தீவுல இருந்து தம்பிலுவில் வரை  மக்களிற்ற வாங்கி சாப்பிட்டு இருக்கிறன். இறுதிப்போரில் தேவிபுரம், இரணைப்பாலை,மாத்தளன்,வலைஞர்மடம்,இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் என  ஒன்றன் பின் ஒன்றாக எங்களுக்கு தாங்கள் உண்ணாமல் உணவு தந்த பல உயிர்கள் உடல் சிதறிப்போயின.நாளும் உயிரிழந்த மக்களின் செய்திகள் எங்களைப்புண்ணாக்கின.இறுதி இரு கிழமைகளும் நாளுக்கு ஒரு நேர கஞ்சியுடன் எங்கள் கடமை முடிந்தது.


- ஓவியன்-


Share/Save/Bookmark

எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது

அது சமாதானக்காலம். நாங்கள் அண்ணையுடன்( தலைவர் ) ஒரு உரையாடலில் இருந்தோம். அண்ணையின் பாதுகாப்புப் போராளியூடாக ஒரு அவசரக்கடிதம் ஒன்று அண்ணையிடம் கொடுக்கப்பட்டது. அண்ணை 
அதை பிரித்துப்பார்த்தார் அது சிங்களத்தில் எழுதப்பட்டிருந்தது.அண்ணை 
இது என்ன என வினவி சிங்களம் வாசிக்கக்கூடிய ஒரு போராளி அழைக்கப்பட்டார்.
விடுதலைப்புலிகளால் போரில் கைது செய்யப்பட்ட பாதுகாப்புப்  படையினரை அவர்களின் உறவினர்கள் வந்து பார்த்துச் செல்வது வழக்கம். அந்தக்கடிதத்தை ஒரு எட்டு வயது பிள்ளை எமது தலைவருக்கு எழுதியிருந்தது.தனது தகப்பனை விடுதலை செய்யுமாறும் தான் தனது தகப்பனை மீண்டும் படையில் சேர விடமாட்டேன் என்று தனது குழந்தை மொழியில் எழுதியிருந்தது.வழமை போல அண்ணையின் கண்கள் உருண்டன.இப்ப எத்தின மணி இப்ப நீ போனி எண்டால் அந்த பஸ் வெளிக்கிடமுதல் போயிடுவியா? அந்த போராளி ஆம் என்றான். போய்
அந்த ஆமியை அந்த பிள்ளையின்ர கையில பிடிச்சு கொடுத்து அனுப்புற ஒழுங்கை செய் என்று அனுப்பி  வைத்தார். 
 எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அண்ணை ஒரு சொல்லுக்கூட அந்த ஆமி எப்படிப்பட்டவன்.அவனின் ராங் ( நிலை) என்ன என்று கேட்கவில்லை.   




Share/Save/Bookmark

வியாழன், 20 ஜூன், 2013

இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆரம்ப மாதங்களில் ஒரு நாள்

இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆரம்ப மாதங்களில் ஒரு நாள் பின்னேரம் நான்கு மணி இருக்கும் ஒரு வேலை முடிந்து மத்தியான சாப்பாட்டிற்கு முகாம் திரும்பிக்கொண்டிருந்தேன். நடைபேசியில் அவசர அழைப்பு பூநகரியில நிற்கிற எங்கட பெடியங்களுக்கு நேற்று காலமைக்குப் பிறகு சாப்பாடு போகயில்லையாம்.தலைசுற்றிச்சு .என்ன என்று வினவினேன்.சமையல்கூடம் நேற்று மாத்தினவையாம் அதுக்குப்பிறகுதான் ஏதோ பிரச்சனையாய் இருக்க வேண்டும்.பூநகரி களமுனையில எங்களுக்கும் ஒரு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.அதில முன்னுக்கு நாலு பேரும் பின்னுக்கு ஆறு பேரும் நிற்கினம்.முன்னுக்கு நிற்கிறவைக்கு சாப்பாடு போயிருக்கு.   பின்னுக்கு நிற்கிற ஆட்களுக்கு ஏதோ தொடர்பாடல் சரியாய் இல்லாததால சாப்பாடு கிடைக்கவில்லை.அவங்களும் எங்களுக்கு உடன அறிவிச்சிருக்கலாம் ஆனால் எங்களுக்கு கரைச்சல் குடுக்கக்கூடாது என்று தவிர்த்துட்டாங்கள்.நான் முகாமுக்குப்போய் ஒரு பெடியனைக் கூட்டிக்கொண்டு முதல்ல கிளிநொச்சி கரடிபோக் சந்திக்கு அருகாமையில இருந்த பைந்தமிழ் பேக்கரிக்குப்போனோம்.
இந்த இடத்தில நான் கட்டாயமாய் பைந்தமிழ் பேக்கரியைப்பற்றி சொல்லோனும்.பாண் என்றால் பாண்தான் பணிஸ் என்றால் பணிஸ்தான்
சொல்லிவேலையில்லை.  எட்டு றாத்தல் பாண் வாங்கினம் பரந்தன் சந்தியில இரண்டு கிலோ கதலி
வாழைப்பழம் வாங்கினம்.அரை மணித்தியாலத்தில பெடியங்களின்ர இடத்திற்கு போயிட்டம்.அவங்கள் என்னென்டால் இளநி  குடிச்சு கோம்பையை வெட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறாங்கள்.ஆட்கள் கொஞ்சம் வாடித்தான் போய்ச்சினம் ஆனால் சிரிப்புக்கு குறைவில்லை.
உடன சாப்பிடச் சொன்னோம் அவங்கள் எங்களுக்கு பிளேன்டி ஊத்தப்போறாங்கள். பேசித்தான் சாப்பிடஇருத்தினம்.   அவங்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கைக்கேயே எங்கட நிர்வாகப்பொறுப்பாளர் இன்னொருத்தரையும் ஏத்திக்கொண்டு மோட்டச்சையிக்கிளில வாறார். பின்னுக்கு இருக்கிறவர் இரண்டு வாளி
வைச்சிருக்கிறார்.நிர்வாகப்பொறுப்பாளருக்கு   நாங்கள் வெளிக்கிட்டது தெரியாது.அவர் எங்கட முகாம் சாப்பாட்டைக்கொண்டு வெளிக்கிட்டு இருக்கிறார்.பெடியள் சாப்பிடுறதை பார்த்துட்டுத்தான் அவற்றை முகம் வெளிச்சுது.   நீங்கள் சாப்பிட்டிங்களோ? என்று என்னைப்பார்த்துக் கேட்டார்.நான் சாப்பிடயில்லைத்தான் ஆனால் அவருக்கு சாப்பிட்டன் என்று சொன்னன். நீங்கள் சாப்பிட்டியளோ? என்றன்.சாப்பிட்டமாதிரி அக்ஸன் போட்டார்.எனக்கு தெரியும் அவர் சாப்பிடயில்லை என்று.அவர் தான் போய் பெடியளின்ரை சாப்பாட்டை ஒழுங்குபடுத்திட்டு  வாறன் என்று வெளிக்கிட்டார்.அவர் போய் முடிய எங்கட பிரிவின்ர இன்னொரு   போராளி வாறார்.அவர் தங்கட வீட்டை போய் மனிசி சமைச்சு வைச்ச சோறு கறியை கொண்டுவாறார். அவரும் அவரின் மனைவியும் போராளிகள்தான் . விடிய சமைச்சால் இரவு போய் சாப்பிடுவினம்.
அன்றைக்கு அதைபோய் வழிச்சுக்கொண்டு வந்திட்டார்.பெடியள் எதை சாப்பிடுறது என்று தெரியாமல் நின்றாங்கள்.   ஐயோ எங்கட முகாம் தொடர்பாளர் பெடியள் சாப்பிட இல்லை என்றோன டென்சனில எல்லோருக்கும் அறிவிச்சிருக்கிறார் போல.எங்கட பிரிவின்ர உப பிரிவொன்றின்ர பொறுப்பாளர் ஒருவர் சிறப்பு வேலையாய் முட்கொம்பனுக்க நின்றவர்.அவரும் வாகனத்தில வாறார்.வன்னிக்கு உள்
பகுதிகளில தேத்தனிக்கடைகளில பெரிய அளவில சாமான் இருக்காது. அவர் கடையில இருந்த முழு வாய்ப்பனையும் வாங்கி வந்திட்டார்.அந்த ஊரில யார் யார் திட்டிச்சினமோ தெரியாது.பெடியள் சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில நிர்வாகப்பொறுப்பாளர் இரவு சாப்பாடு வாற வாகனத்தையும் கூட்டி வந்திட்டார்.வாகனக்காரர் புது ஆட்கள் இந்த இடத்தை தெரியாமல் விட்டுட்டாங்களாம். நாங்கள் வாய்ப்பனும் பிளேண்டீயும் அடிச்சம்.அவன் செல் அடிக்கிற பகுதி போங்கோ போங்கோ என்று பெடியள் எங்களை களைச்சிட்டாங்கள்.
( நினைவுகள் கடினமானவை . இச்சம்பவத்துடன் சம்மந்தப்பட்டவர்களில் இருவர்தான் உயிரோடு இருக்கிறார்கள்.)


- ஓவியன்-   


Share/Save/Bookmark

தமிழன் தன்னைத்தானே ஆண்ட காலம்

அது தமிழன் தன்னைத்தானே ஆண்ட காலம். சமாதானக்காலம் என்றாலும் பனி மூசிப்பெய்யும் மாசிமாதம்.ஒருநாள் காலைபொழுதில்  வழமைபோல் காரியாலயத்தில் முதல் வேலையாய் பத்திரிகையை புரட்டினேன். ஒரு செய்தி நெஞ்சை பலமாய் குத்திற்று. ஒரு ஐம்பத்திநான்கு வயது மூன்று பிள்ளைகளின் தாய் குளிரினால் நேற்று அதிகாலை இறந்ததாய் செய்தி .உடனேயே எல்லா கடமைகளையும் புறந்தள்ளிவிட்டு  அந்த கிராமத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன்.இன்றுதான் மரண வீடு நடப்பதால்
வீட்டை அடையாளப்படுத்த கடினம் இருக்கவில்லை.அதை வீடு என்று சொல்வதை விட பெரிய குடிசை என்று சொல்வதே பொருத்தப்பாடானது.
அங்கு ஏற்கனவே எமது பிரிவின் மாவட்ட பொறுப்பாளரும் வேறு அரசியல் போராளிகளுடன் நின்றார்.மாவட்ட பொறுப்பாளர் அந்தப்பெண்ணின் நோய் அடையாள அட்டையை என்னிடம் காண்பித்தார்.அந்தப்பெண் சிறுநீரக பாதிப்பு  நோயாளி .ஒரு தடவை கொழும்புக்கும் போய்வந்திருக்கிறார் . அவருக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு மருத்துவர்கள் சிபார்சு செய்திருக்கிறார்கள்.எமது மாவட்டப் பொறுப்பாளர் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்துடன்  ஒழுங்குபடுத்தி அதற்குரிய செலவை புனர்வாழ்வுக்கழகம் ஏற்கயிருந்திருக்கிறது.    இரண்டு நாட்களாய் வீட்டில் இயலாமல் இருந்திருக்கிறார்.வசதியீனம் காரணமாய் மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்படவில்லை.நேற்று கூட்டிப்போகும் உத்தேசத்தில் இருந்திருக்கிறார்கள்.விதி முந்திவிட்டது. நான் அந்த தாயின் கணவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தேன்.அந்த இடைவெளிக்குள் மாவட்டப் பொறுப்பாளர் நோய் அடையாள அட்டையை பிரதி எடுத்துவந்திருந்தார். பிரதியோடு நான்புறப்பட்டேன்.எங்களால் செய்யக்கூடிய உதவிகளை ஒழுங்குசெய்ய மாவட்டப்பொறுப்பாளர் அங்கு நின்றுவருவதாய் சொன்னார்.அரசியல் போராளிகளும் தங்களது பணியை செய்துகொண்டிருந்தார்கள்.
நான் காரியாலயம் வர ஒரு போராளி எனக்காய் காத்திருந்தான்.என்னைக்கண்டதும் முதுகுப்பையில் இருந்து எடுத்து ஒரு கடிதத்தை தந்தான்.அது கடிதம் அல்ல .அந்த பத்திரிகை செய்தித்துண்டு.
மதி அக்கா ( தலைவரின் மனைவி) கொடுத்து விட்டிருந்தா.நான் விபரத்தை சரியாய் எழுதி அந்தப் போராளியிடம் கொடுத்து அக்காவிடம் கொடுக்கச்சொன்னேன்.சில நாட்களுக்குப் பின் அண்ணையை ( தலைவர்)
வேறுவிடயமாய் சந்திக்கும் போது , அவ்வளவு கடமைக்குள்ளும் அந்த பத்திரிகைச் செய்தியையும் கேட்டார். அந்த தாயின் பிள்ளைகளின் வயதை கேட்டு ,ஏதாவது உதவி அவர்களுக்கு தேவைப்படின் உரிய ஒழுங்குகளை செய்து கொடுக்கும்படி கூறினார்.


-ஓவியன்-


Share/Save/Bookmark

சனி, 8 ஜூன், 2013

சின்ன சின்ன ஞாபகங்கள்

              

வன்னி விடுதலைப்புலிகளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம் அங்கு வாழ்ந்த பலருக்கு அழகான காலம்தான். சிறிலங்காவின் பொருளாதாரத்தடைக்கு மத்தியிலும், போர்ச்சூழலுக்கு
மத்தியிலும் வன்னி தன்னை நிமிர்த்தி வைத்திருந்தது.போராளிகள் பலத்த சவால்களை சந்தித்தனர்.மக்களும் சவால்களுடனேயே முன்னேறினர்.
உழைப்பின் பின் / களைப்பின் பின் மெல்ல வீசும் தென்றல்க்காற்றில்
சுற்றி இருந்து உணவருந்தும் சுகம் இருந்தது.கலகலப்பான மனம் இருந்தது.அநேகருக்கு விடுதலை நோக்கிய உழைப்பிருந்தது.அது ஆளாளுக்கு சற்று வேறுபடினும் எல்லோரிடமும் ஒரு திருப்தியிருந்தது.
வன்னியில் இருந்து பத்திரிகை வெளியானது.வானொலி ,தொலைக்காட்சியும் ஒலிபரப்பாயிற்று. புத்தக வெளியீடுகளும் அவ்வப்போது நடந்து கொண்டே இருந்தது.விரல் விட்டு எண்ணக்கூடிய சிற்றிதழ்களும் வெளியாகிக்கொண்டிருந்தது.நானும் ஒரு சிற்றிதழின் ஆசிரியராகவும் பொறுப்பாகவும் இருந்தேன். இதழின் பெயர் "விழி" மாதாந்த மருத்துவ இதழ்.இதழாசிரியராய்  இருப்பது போன்று பொறுப்பாய் இருப்பதும் சுமையானது. அச்சடித்த புத்தகங்களை விநியோகித்து கைகடிக்காமல் பார்த்தால்த்தான் அடுத்த இதழை வெளிக்கொண்டுவரமுடியும்.வன்னி போக்குவரத்து கடினமான பகுதி,
எல்லா குடியிருப்புக்களுமே தூர இடைவெளியில் இருக்கும்.அநேகரின் பொருளாதார நிலைமை சராசரி வாழ்வாகவே இருக்கும்.இவற்றுக்கு ஈடுகொடுத்து ஒரு இதழை பின்புல பலமற்று வெளியிடுவது ஓரளவு சவாலானதுதான். 2000ஆம் ஆண்டில் மருத்துவ இதழ் வெளியிடவேண்டும் என்ற அவா தோன்றிற்று.அப்பொழுது நாங்கள் அக்கராயனில் இருந்தோம்.
இதழை வெளியிடுவதற்கான பதிப்பகத்தையும் தெரிவு செய்தோம் .அந்த (கன்னிநிலம் பதிப்பகம்,ஸ்கந்தபுரம் )பதிப்பகம் இயக்கத்தின் ஒரு பிரிவின் கீழ் இயங்கியது.அது அச்சுக்கோர்த்து அச்சடிக்கும் பத்திப்பகம் . என் ஞாபகத்தில் அப்போது கொம்புயுட்டரின் துணையுடன் அச்சடிக்கும் பதிப்பகங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தினுள் வரவில்லை.அந்த பதிப்பகத்தின் முகாமையாளராய்   பாண்டியனார் அண்ணா இருந்தார்.எனக்கு அவரை முன்பு தெரிந்திருக்கவில்லை.பாண்டியனார் அண்ணா என்றால் அளவான கதை,கடமையில் மட்டுமே கண் ,எளிமை,நல்ல தமிழறிவு இதுதான் அவர்.நான் பதிப்பகத்தை தெரிவு செய்துவிட்டேன்.   பாண்டியனார் அண்ணா விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் பேபி அண்ணையின் அண்ணன்.ஒரு பிரமச்சாரி.தமிழ்நாட்டு அரசியலில் நன்கு பரிச்சயமாய் இருந்தார்.பெரியார்,அண்ணா,காமராஜர் ஆகியோரில் மதிப்பு வைத்திருந்தார்.அவரது அச்சகம் என்பது வெறும் இரும்புதான் .ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு பிரச்சனை வரும் . பிரச்சனை தீரும்வரை சாப்பிடாமல் ஆட்களை வைச்சு வேலை செய்வார்.அவரது அச்சகத்தில் இருந்து இயக்கத்தின் போக்குவரத்துக் கண்காணிப்புக்கு உரிய படிவங்கள் உள்ளீடாய் பல படிவங்கள் அச்சிடப்படும். அச்சுக்காய்கள் தேய்ஞ்சு அச்சிட சரியாய் கஸ்டப்பட்டார். எப்படியிருந்தாலும் சொன்ன சொன்ன நேரத்திற்கு அவரது ஓடர்களை செய்துகொடுப்பார். சமாதான காலத்தில் கொம்புயுட்டர் அச்சிடுதல்கள் எல்லாம் வந்த போதும் பாண்டியனார் அண்ணாவின் அச்சகத்தையே பயன்படுத்தினோம்.
எங்களுக்கு அச்சிடும் இதழ்களை மாதத்தின் கடைசி நாள் தரவேண்டும்.நாங்கள் தொண்ணூற்றி ஐந்து இதழ்களை வெளியிட்டோம் .ஒரு தடவை கூட அவர் பிந்திதரவில்லை.வன்னியில பல நிறுவனங்களில் முதலாம் திகதிதான் மாதக்கூட்டம் நடக்கும்.அந்த கூட்டங்களில நாங்கள் விநியோகிக்க வேண்டும்.ஒவ்வொரு இதழும் 1350இல் இருந்து 2000பிரதிகள் வரை அச்சிட்டோம்.சில சிறப்பு இதழ்கள் இரண்டாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டது.  அறுவதாவது இதழ் வெளியீடு கிளிநொச்சி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் தங்கன் வெளிட்டுவைத்தார்.விழி மருத்துவ இதழில் வந்த தங்கள் ஆக்கங்களை   உரிய எழுத்தாளர்கள் ஐவர் புத்தகங்களாய் வெளியிட்டு இருக்கிறார்கள். அன்புச்செல்வனின் இரண்டு தொடர் கட்டுரைகளும்,செல்வியின் விஞ்ஞானக்கட்டுரைகளும்  புத்தகமாக்கப்பட இருந்தன.தொண்ணூற்றி ஆறாவது இதழுக்கான வேலைகள் நடக்கும் போது அச்சகம் ஸ்கந்தபுரத்தில் இருந்து விசுவமடுக்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டது. மீண்டும் அச்சகம் இயங்க போர் அனுமதிக்கவில்லை.

 ஒரு இதழை பதினைந்து ரூபாய்க்கு விற்றோம்.எங்களுக்கு அச்சிட பதின்மூன்று ரூபாய் முடியும் . விற்பவருக்கு ஒரு இதழுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தோம் .சிறப்பு இதழ்களில் கொஞ்ச லாபம் வந்தது.எல்லா இதழ்களும் விற்று தீர்ந்துவிடும் . பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடசாலை கற்கைக்கு (ஒப்படை) இந்த இதழ்களை பின்பு தேடி வருவார்கள்.கொடுக்க இருக்காது.அலுவலக பிரதியை வாங்கி பிரதி பண்ணிவிட்டுத் தருவார்கள்.புத்தகக்கடைகளுக்கூடாகவும் விற்க முயற்சி
செய்தோம் .அது பலனளிக்கவில்லை.அவர்கள் விற்கும் இதழின் முற்பது விகிதத்தை கேட்டார்கள்.அப்படி கொடுத்தால் இதழ் பிரதியின் விலையை கூட்டவேண்டிவரும்.நான் சம்மதிக்கவில்லை.  இரண்டாயிரம் ஆண்டிலிருந்து இரண்டாயிரத்து எட்டுவரை மாதம் தவறாமல் வெளிட்டோம்.நூறாவது இதழ் வெளியிடும் கனவுகளுடன் இருந்தோம்.

பாண்டியனார் அண்ணா முள்ளிவாய்க்காலுக்குப்பின் வவுனியா முகாமில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனாராம். நான் விழி மூடுகிறேன்




-          ஓவியன் -



Share/Save/Bookmark

ஞாயிறு, 2 ஜூன், 2013

அம்மா சுகமாய் இருங்கோ

இணையங்களைப் பார்க்க மனம் மேலும் குழம்பியது.முன்பு எல்லாம் மனச்சோகம் வந்தால் துயிலும் இல்லம் போய் சிறிது நேரம் மரநிழலில்  இருந்து வந்தால் மனம் அமைதியாகும்.இன்று என்ன செய்யலாம் யோசிக்க படக் என்று அந்த ஞாபகம் வந்தது.சில நாட்களுக்கு முன்புதான் ஒரு மாவீரனின் தாயின் தொலைபேசி இலக்கம் கிடைத்திருந்தது.இன்றைக்கு அந்த அம்மாவோடு கதைப்போம்.
அம்மா அம்மா நான் என்னை அறிமுகப்படுத்தினேன்.
ஐயோ என்ர பிள்ளையே ! எப்படியிருக்கிறாய்?.நான் கேட்க வேண்டிய கேள்வியை அவ கேட்டா.
நான் நல்லா இருக்கிறன் அம்மா நீங்க எப்படி அம்மா.
நான் இருக்கிறன் .எனக்கு ஒரு குறையும் இல்லை.என்ர வீட்டுக்கு வந்திட்டன்.காலையில ஒருக்கா சமைச்சா மூன்று நேரமும் சாப்பிடுவன்.
தேங்காய் பொறுக்கி போடுவன்.ஓலை பின்னுவன். என்ர பாடு பிரச்சனை இல்லைத்தம்பி.நான் போன மாதம்தான் இந்த போனை வாங்கினனான்.அப்ப பக்கத்து வீட்டுக்காரர் எல்லாம் கேட்டவை உனக்கேன் உதை. உன்னோட யார் கதைக்க போயினம் என்று.எனக்கு தெரியும் என்ர பிள்ளைகள் எங்காவது இருப்பாங்கள் என்று.
அம்மாவுக்கு ஒரு பெடியன்தான்.மனுசனும் பெடியனுக்கு பத்து வயதாய்
இருக்கும் போது இறந்து போனார்.அவர்களுக்கு பொருளாதார பிரச்சனை பெரிதாய் இருக்கவில்லை.
பெடியன் படிப்பிலையும் விளையாட்டிலையும் கெட்டிக்காரன்.அமைதியானவனாய் இருந்தாலும் துடியாட்டக்காரன்.தாயில் கொள்ளை பாசம் வைத்திருந்தான்.தாயும் அவனில் உயிரையே வைத்திருந்தாள்.முதலில் அவன் பதின்நான்கு வயதில் இயக்கத்திற்கு வந்துவிட்டான்.அவனது வயதைக்காரணம் காட்டி
வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.பின்பு பதினாறாம் வயதில் மீண்டும் இயக்கத்திற்கு வந்துவிட்டான்.மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான் வீட்டில் ஒரு பிள்ளை என்பதற்காய்.இம்முறைதான் நான் அவனது வீட்டிற்கு முதல் தடவையாய் போயிருந்தேன். பின் இரண்டாம் தடவை அவனது வீரச்சாவுக்கு போனேன்.  
அவன் தனது பதினெட்டாம் வயதில் மீண்டும் இயக்கத்திற்கு வந்துவிட்டான். பயிற்சி முடித்து விடுமுறையில் நின்றபோது என்னைச் சந்திக்க வந்திருந்தான்.முழுமையாய் ஒரு போராளியாய் இருந்தான்.அளவாக கதைக்கின்ற அந்த பண்பு நிறைந்த போராளியின் மனதில் தாயின் சோகம் குத்தியிருந்தது.நானில்லாட்டிலும் அண்ணை (தலைவர்) என்ர அம்மாவைப்பார்ப்பார்.அவனில அந்த திருப்திஇருந்தது.
நான் ஆலோசனை கூறினேன்.நீர் ஒரு பிள்ளை என்றதால பின்னணி வேலைகளைச் செய்யலாம்.இடைக்கிடை அம்மாவையும் போய்ப் பார்க்கலாம்.நான் கதைத்துப்பார்க்கிறேன் என்றேன்.வேண்டாம் அவன் முழுமையாய் மறுத்துவிட்டான்.அவன் களமுனையில் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டான். 
இறுதியாய் அவனை முகமாலையில் பின்னனிப்பிரதேசத்தில் சந்தித்தேன்.நான் நிற்பதை அறிந்து அவன் சந்திக்க வந்திருந்தான்.மிகக் கலகலப்பாய் இருந்தான்.அம்மாவை போய்ப்பார்த்தீரா? என்றேன்.எங்க சரியான வேலை என்றான். நான் ஒரு வெள்ளைத்தாளைக்கொடுத்து
கடிதம் எழுதித்தாரும் நான் அம்மாவுக்கு கிடைக்க ஒழுங்கு செய்கிறேன் என்றேன். அவன்  சுமார் ஒருமணித்தியாலத்திட்கு  பிறகு ஏதோ எழுதி மடித்துத்தந்தான்.நான் அதை தாயிற்கு கிடைக்க ஒழுங்கு செய்தேன்.
அதுதான்  தாயிட்கான அவனது கடைசி செய்தியாய் போயிற்று.
அம்மா ஒரு இடமும் போறதில்லையோ?
இல்லைத்தம்பி பிள்ளையை விதைச்ச இடமும் இல்லை என்று பெரு மூச்சு விட்டவ. என்னைமாதிரி இன்னும் ஒரு ஆள் இருக்கிறா தம்பி அவவுக்கு உன்னைத்தெரியும்.அவவுக்கும் ஒரு பிள்ளைதான் அந்தப்பிள்ளை சரணடைந்து எங்கை என்று தெரியாது.அவ தேடாத இடம் இல்லை.இப்ப என்னட்டைதான் இடைக்கிடை வருவா .அவவின்ர போன் நம்பரைத்தாறன்   அவவிட்கும் எடு தம்பி என்று நம்பரைத் தந்தா. 

மகன் வைச்ச மாமரம் , கொய்யாமரம் நல்லாய்க்காய்க்கிதாம்  . சுத்தி இருக்கிற எல்லாச் சனத்திட்கும் கொடுக்கிறதாம்.சின்னப்பிள்ளைகள் பள்ளிக்கூடம் முடிய ஒருக்கா இந்தப்பக்கம் வந்துதான் போவாங்களாம்.
ஊரில முந்தி இயக்கத்திற்கு பின்னால திரிஞ்ச கொஞ்சம் இப்ப அவங்களோட நிற்கிறாங்கள் பச்சோந்திகள் பஞ்சமிகள் என்று பேசினா.

அம்மா சுகமாய் இருங்கோ பிறகு கதைக்கிறன்

- நிரோன்-  




Share/Save/Bookmark
Bookmark and Share