தொண்ணூறுகளின்ற ஆரம்ப காலம், யாழ்ப்பாணத்தில ஒரு அழகான கிராமத்தின்ர மூன்று சிறு ஒழுங்கைகள் சந்திக்கும் சந்தியில் சைக்கிளில் நின்று நாங்கள் மூவர் கதைத்துக் கொண்டு இருந்தோம். மூன்று பேரும் ஒவ்வொரு பாதையால் வந்ததால் அந்த இடம் எங்களுக்கு பொதுப்புள்ளியாயிற்று.அப்போது ஒருபாதையால் ஒருவர் சைக்கிளில் பாட்டோடு வந்து கொண்டிருந்தார்.சைக்கிள் இரண்டு பக்க பனைவேலியையும் மாறி மாறி தொட்டுக்கொண்டுவந்தது.அவருக்கு வெறி என்பதை நாங்கள் ஊகித்துக்கொண்டோம்.நான் மற்றவர்களை அவதானமாய் தள்ளி நிற்கச்சொன்னேன். அவரி வாயில் இருந்து "ராஜாதி ராஜன் இந்த ராஜா ராஜா" என்ற பாடல் ராகமாய் போய்க்கொண்டிருந்தது.
சந்திக்கு கிட்ட வரவும் அவரை துரத்தி வந்த நாய் அவரில பாயவும் சரியாய் இருந்தது.ஒரு கொஞ்ச நேரத்தில உருட்டி உருட்டி கடிச்சுப்போட்டுது.அவர் உடுத்திருந்த சாரம் கந்தலாய்ப்போயிற்று. நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து கத்தினம் நாய் விட்டிற்று போயிற்று.அந்த மனிதனைப்பார்க்க பாவமாய் இருந்தது.அயல் சனங்களும் வந்திற்றுது.நாங்கள் வந்த சனங்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்பிட்டு ,அயல் வீடு ஒன்றில பழைய சாரம் வாங்கி அந்த ராஜாவுக்கு கொடுத்தம்.
அந்த ராஜா மீண்டும் இந்தப்பாட்டோட போனார்.ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை வாழ,ஒரு ராணியும் இல்லை ஆள--- என்ற பாட்டோட போனார்.
நான் அவரை மீண்டும் எதிர்பாராது வன்னியில் கண்டேன்.அதுவும் இயக்க நிறுவனமொன்றில் ஊழியராய்.அவர் என்னை அடையாளம் கண்டதை நான் உணர்ந்துகொண்டேன்.நான் அவரை அடையாளம் கண்டதாய் அவர் இறக்கும்வரை காட்டிக்கொள்ளவில்லை.அவர் ஒரு சிறந்த அர்ப்பணிப்புமிக்க ஊழியராய் இருந்தார்.கைவேலியில் காயமடைந்த மக்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருக்கும்போது செல்தாக்குதலில்
உடல் சிதறி இறந்து போனார்.அவரது தலையையும் இரு பாதங்களையும் ஒரு பலாமரத்துக்கருகில் புதைத்தோம்.புதைகுழியிட்குள் ஒரு மூக்குப்பேனியையும் அடையாளத்திட்காய் வைத்தோம்.உறவினர்களுக்கு
அவர் இறந்ததை அறிவிக்கமுடியவில்லை.
- ஓவியன் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக