ஞாயிறு, 8 நவம்பர், 2020

மரம் நடு

 மரம் வளர் 

மரம் வளர வளர 

மழை வரும் 

மழை வர வர 

குளம் நிறையும் 

குளம் நிறைந்தால் 

பயிர் வளரும் 

பயிர் வளர வளர 

குடி உயரும் - ஆகா 

யாவருக்கும் உணவிருந்தால் 

இது போதும் இப்பிறப்பில்  


மரம் நடு - அதில் 

பறவை கூடு கட்டட்டும் 

நீரால் பூமி குளிரட்டும்

இயற்கை வாழ 

இயல்பாய் மழலை வளரட்டும்   

   

கண்ணும் கருத்துமாய் கல்வியும் 

கலையும் சேரட்டும் - கிட்டிப்புள்ளும் 

கிளித்தட்டும் விளையாடி இன்பமாய் 

நட்பு மனதில் இறுகட்டும்


ஆளுக்கொரு சைக்கிள் 

ஊருக்கு ஒரு வாசிகசாலை 

ஓய்விற்கு மரநிழல்

வீட்டுக்கு வீடு 

தோட்டமும்  கோழிவளர்ப்பும் 

விரும்பினால் ஆடு மாடுகளும்

வேண்டா நோய் நெருங்கா - தானாய் வரும் 

சீரும் சிறப்பும் செல்வமும் 


 

 



Share/Save/Bookmark

வெள்ளி, 16 அக்டோபர், 2020


 



Share/Save/Bookmark

சனி, 19 செப்டம்பர், 2020


 



Share/Save/Bookmark


 



Share/Save/Bookmark

சனி, 12 செப்டம்பர், 2020

 எமது அமைப்பில் தாயக மண்ணில் சொற்ப போராளிகளே பணியில் இருந்தகாலம். ஆரம்பத்தில் கம்பர் என்ற வகை சைக்கிளில் பின்னால் பெரிய கரியரில் களத்தில் பத்திரிகையுடன் வயல்வெளிக்கூடாக வந்து எமக்கு சுமையேற்றி போவான். இன்றும் ஞாபகம் இருக்கிறது ஓ! சத்தியநாதா என்ற போஸ்டர் கட்டினையும் ( முதலாவது மாவீரர் சங்கர்) இப்படித்தான் கொண்டுவந்து தந்துபோனான். பின் ரலி வகை சைக்கிளில் வந்தான். பின் சிறிய மோட்டார் சைக்கிளாகி 185 , 200 என்ற மோட்டார் சைக்கிளில் அவனது  பணிச்சுமை கூடியது. ஆரம்ப காலத்தில் சிறுகோயில்களின் முற்றங்களில் அல்லது விளையாட்டு மைதானங்களில் பின் பாடசாலை வகுப்பறைகளில் பேசத்தொடங்கியவன் பின் பெரும்வெளிகளில் நின்று பேசினான், அந்த ஒலி இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அவன் நாளும் பொழுதும் எப்போதும் மக்களின் விடுதலை என்ற கனவோடே திரிந்தான்.  நண்பா!நீ நினைத்த மக்கள் புரட்சி நடக்கவில்லையடா , உன் பசியும் மூ பதினொரு ஆண்டாகியும்  தொடருதடா. கைகூப்பி அஞ்சலிக்கிறோம்.     



Share/Save/Bookmark

சனி, 8 ஆகஸ்ட், 2020

திரும்பிப்பார்க்கிறேன்

  

1996 ஆம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1997 ஆம் ஆண்டின் முற்பகுதியாக இருக்கவேண்டும். நான் ஒட்டிசுட்டானில் அமைந்திருந்த அபயன் மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவராய் இருந்தேன். மாதம் ஒருமுறையாவது கரும்புலிகளின் முகாமிற்கு செல்வது வழக்கம். அப்போது அமைந்திருந்த அவர்களின் முகாமிற்கு முத்தையன் கட்டு குளத்திற்கு வலதுபக்கமாய் சென்று போகவேண்டும். பசுமை என்ற மருத்துவமனைக்கு இடதுபக்கமாய் சென்று போகவேண்டும். கரும்புலிகளின் முகாமிற்கு மாதவன் அவர்கள் பொறுப்பாக இருந்தார்கள். நான் வழமையான எனது கடமைகளை முடித்து, பின் மதியபோசனமும் உண்டபின் மாதவன் அவர்கள் அங்கிருந்தவர்களுடன் ஒரு உரையாடலுக்கு ஒழுங்குபடுத்தினார். தரையில் பாய்களை ஒழுங்காக விரித்து அதன்மேல் நாங்கள் இருந்தோம். எப்போதும் புன்னகை தவழும் குமுதன்தான் அந்த கேள்வியை கேட்டான் " தமிழீழம் எப்படி இருக்கும்? தமிழீழத்தில் மக்கள் எப்படி வாழ்வார்கள் ? ". எல்லோரின் முகங்களிலும் ஆவல் விசாலித்திருந்தது. நான் எனது குறை அறிவுடன் என் கனவு தேசத்தை பற்றி முடிந்தவரை சொன்னேன். அவர்களில் சிலருக்கு என்னைவிட அதிக கற்பனை இருந்ததையும் அவர்கள் இதை பலதடவை உரையாடியிருக்கிறார்கள் என்பதையும் அனுமானிக்க கூடியதாய் இருந்தது.  நீண்டநேர உரையாடலில் அவர்களின் மகிழ்ச்சியின் அளவை என்னால் எழுதிமுடிக்கமுடியாது.      



Share/Save/Bookmark

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

திரும்பிப்பார்க்கிறேன்

 

வடமாகாணத்திற்குரிய தலைநகராய், மாங்குளம் பகுதியை ஒரு பெருநகராக்க திட்டமிட்டிருந்தோம். மாங்குளம் சந்தியில் இருந்து 1-2 கி மீ  தூரத்தில் நாற்சதுரவடிவில் மாங்குளம் சந்தியை சுற்றி அகல பாதையமைக்க திட்டத்தில் இருந்தது. முருகண்டியில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைய திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணங்களால் எதுவுமே நடைபெறவில்லை.



Share/Save/Bookmark

வெள்ளி, 17 ஜூலை, 2020

அன்பால் பிணைந்த உறவை எவரால் அறுத்தெறியமுடியும் ?

கனவுகள் எல்லாம் மெய்ப்பதும் இல்லைநினைவுகள்போல காய்ப்பதும் இல்லை வீரர்கள் எல்லாம் களத்தில் மாய்வதும் இல்லைஇலக்கை அடையும்வரை அவர் ஓய்வதும் இல்லை


தாய்நிலம் காக்க புறப்பட்ட சேய்கள்காயம் ஆற ஒன்றாவார்கள் - சுயநலம் அறியா மாவீரர் சுவடுகள் தேடி ஓடி வருவார்கள்  கவலைகளால் பின்னிய வலைகளை மீறி எகிறி எழுவார்கள் - அன்பால் பிணைந்த உறவை எவரால் அறுத்தெறியமுடியும் - அதுவரை காத்திருக்கும் தாய்நிலம் புழுங்கியபடி    





Share/Save/Bookmark

திங்கள், 29 ஜூன், 2020

தாய்மண்

தாய்மண் நினைவில்
கடலளவு கவலைகளுக்குள்
மூழ்கியிருந்தாலும்
ஒப்பற்ற அன்பு பண்பு அர்த்தம் நிறை
உறவுகளோடு வாழ்ந்தோம் எனும் கசிவில்
மிதக்கிறேன் வானுயர்வில் 


Share/Save/Bookmark

புதன், 24 ஜூன், 2020

திரும்பிப்பார்க்கிறேன்


1970 களில் எங்களது நேரங்களை அழகுபடுத்தியதில் வானொலிக்கு கணிச பங்கிருக்கிறது. காலைத்தென்றலில் தொடங்கி பொங்கும் பூம்புனலில் வசமாகி இரவின் மடியில் வரை மனது குளிர்ந்திருக்கும்.
சனிக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் "ஒரு வீடு கோயிலாகிறது " என்ற தொடர்நாடகமும், ஞாயிற்றுக்கிழமைகளில் " தணியாத தாகம் " என்ற தொடர்நாடகமும் இன்றும் நினைவில் படர்ந்திருக்கிறது. இப்படித்தான் ஒருநாள் கிறிக்கெற் தமிழ் வர்ணனையை வானொலியில் கேட்டுக்கொண்டிருந்தோம். இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து கொண்டிருந்தது. இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கவாஸ்கர் நூறு ஓட்டங்களை பூர்த்தி செய்ய பார்வையாளர் ஒருவர் மாலையுடன் மைதானத்திற்குள் ஊடறுத்து ஓடுகிறார். அவரை துரத்தி இரு போலிஸ்காரர்கள் செல்கின்றனர். இதோ அவரை பிடித்து நிலத்தில் வீழ்த்திவிட்டனர். மாலையையும் ஒரு பொலிஸ்காரர் பறித்துவிட்டார். ஓ! இப்போது பொலிஸ்காரர் மாலையுடன் ஓடுகிறார். பொலிஸ்காரர் மாலையை கவாஸ்கருற்கு போட்டுவிட்டு அவரருகில் வாயெல்லாம் பல்லுடன் நிற்கிறார். இங்கிலாந்து அணிவீரர்கள் யாவற்றையும் வியப்புடன் பார்க்கிறார்கள். வர்ணனையாளர்கள் அப்துல் ஜபாரும் சீனிவாசனும் எங்களையும் மைதானத்திற்கே கூட்டிப்போயிருந்தார்கள்.       


Share/Save/Bookmark

வெள்ளி, 29 மே, 2020

திரும்பிப்பார்க்கிறேன்


2004 ஆம் சித்திரை மாதம் , தலைவரை சந்திக்கிறோம். அடுத்தநாள் காலை திருகோணமலைக்கு வெளிக்கிடவேண்டும். யாருடைய முகத்திலும் ஈயாடவில்லை. அண்ணையின் முகத்திலும் சோகரேகைகளே விரிந்திருக்கிறது. அண்ணை சொல்கிறார் " இரண்டு பக்கமும் எங்கட ஆட்கள்தான், இன்னுமொரு டொக்டர் போனால் நல்லா இருக்கும்" என்னைப்பார்த்து  "யார் வந்தால் நல்லா இருக்கும்"?.  அடுத்தநாள் மனோஜ், அஜோ அண்ணையுடன் நாங்கள் வெளிக்கிட்டோம். மற்றபக்கமும் எம்மால் உருவாக்கப்பட்ட மருத்துவ அணிதான், அது மனதுக்கு திருப்தியாக இருந்தது.   எனது சத்திரசிகிச்சைகூடம் சம்பூரில் இயங்கிற்று, என்னுடன் மருதனும் இருந்தார். அஜோ அண்ணையின் சத்திரசிகிச்சைகூடம் எங்களுக்கும் சண்டைபிரதேசத்திற்கும் நடுவில் இயங்கிற்று. எங்களிடம் காயமடைந்து வந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தோம். உண்மையிலேயே இருபக்கத்தினரும் இருந்தனர். ஆனால்       
நாங்கள் அவர்களைப்பற்றி கேட்கவேயில்லை. 


Share/Save/Bookmark

வியாழன், 28 மே, 2020

திருப்பிப்பார்க்கிறேன்

1994 ஆம் ஆண்டு, சிறப்பு பயிற்சி முகாம், முகாம் பொறுப்பாளராக கடாபி அவர்கள் இருந்தார். பயிற்சியின் இணைப்பாளராக ராஜு அண்ணை இருந்தார். நான் முகாமின் மருத்துவப்பொறுப்பாளராய் இருந்தேன். மூவரும் பயிற்சியிலும் பங்குபற்றினோம். பயிற்சி காலை ஐந்து மணிக்கு தொடங்கி மாலை ஆறு மணிக்கு முடியும். கடாபி அவர்கள் மிக நேர்த்தியாக நிர்வாகம் செய்தார். ராஜு அண்ணையும் கடாபி அவர்களும் தங்களுக்கே உரிய கடமைகளை ஆர்ப்பாட்டமில்லாமல் அழகாக செய்தார்கள்.எங்களது முழு உழைப்பும் அந்த பயிற்சி முகாமை வெற்றிகரமாய் முடிப்பதுதான். எங்களுடன் பயிற்சி எடுத்த சக போராளிகளின் பாடத்திட்டங்களில் ஏற்படும் சந்தேகங்களை அப்பப்ப நானும் நிவர்த்தி செய்தேன்.ஓய்வுநேரங்களில் ராஜு அண்ணை பயிற்சி வழங்குபவர்களுடன் இராணுவ விஞ்ஞானத்தில் உள்ள தெரியாத விடயங்களை கேட்டுக்கொண்டிருப்பார். அநேகமாக நானும் ராஜு அண்ணையுடன் இருப்பேன். அந்த பயிற்சி முகாம் எங்கட அமைப்பின் வளர்ச்சியில் முக்கியமானது. அந்த பயிற்சி முகாமில் வசந்தன், மாதவன், ராஜேஷ், குமரன், மணியரசன், அறிவன் உள்ளிட்ட பலர் பயிற்சி எடுத்திருந்தார்கள். ராஜு அண்ணையையும், கடாபி அவர்களும் நண்பராய், சகோதரராய், ஆசான்களாய் என்றும் என் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள் .


Share/Save/Bookmark

செவ்வாய், 5 மே, 2020

பழைய நினைவுகளிலிருந்து

எனது கணிசமான எழுத்துக்கள் பொதுவெளிக்கு வராமல் ஏதோ ஒரு காரணத்தால் அழிந்துபோயிற்று. அழிவதற்கு பலவழிகள் இருந்திருக்கின்றன. நான் களமருத்துவ கடமையிற்கு செல்லும்போது எப்போதும் என்னிடம் note book உம் பேனையும் இருக்கும். இயற்கையை ரசிப்பதும் கவிதைகள் எழுதுவதும்தான் ஓய்வுநேரத்தில் என் பொழுதுபோக்கு. அப்படித்தான் 1991 ஆம் ஆண்டு ஆனையிறவு தாக்குதல்   
காலத்திலும் ஒரு சிறுகவிதைகள் நிரம்பிய note book எனது காற்சட்டை பையினுள் இருந்தது. தொடையில் காயமடைந்து இரத்தக்குழாய் அறுந்த  போராளி ஒருவரின்  இரத்தப்போக்கை கட்டுப்படுத்துகையில் எனது note book போராளியின் குருதியில் ஊறிற்று. கவிதைகள்  அழிந்துபோனாலும் அந்த போராளியின் காலினை காப்பாற்றிய திருப்தி இன்றும் இருக்கிறது.1993 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும்  ஒரு கவிதைக்கொப்பியை தவறவிட்டிருக்கிறேன். இந்த கவலையில் சிலகாலம் கவிதை எழுதாமலும் இருந்திருக்கிறேன். 1987 இல்  இந்திய இராணுவத்தாலும் 2009 இல் இலங்கை இராணுவத்தாலும் என் எழுத்துக்கள் அழிந்துபோயிற்று. ஒரு கடின வாழ்க்கையின் பதிவுகளை காப்பாற்றமுடியாமல் போன துயர் என்றும் என் மனதில் அப்பியிருக்கும்.  


Share/Save/Bookmark

புதன், 29 ஏப்ரல், 2020

பழைய நினைவுகளில் இருந்து.


பாதுகாப்பகழி அமைப்பது தொடர்பான கட்டுரை ஒன்றை எழுதி ஈழநாதத்திற்கு அனுப்பிவிட்டு எமது விழி மருத்துவ இதழுக்கு  பாதுகாப்பகழி அமைப்பது பற்றிய கட்டுரை ஒன்றை எழுதிக்கொண்டிருந்தேன். கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனையில் இருந்து அவசர அழைப்பு வருகிறது. பூநகரியிலிருந்து பதின்ம வயது சிறுவன் ஒருவன் பாம்புகடித்து மயக்கநிலையில் உள்ளதான தகவல். கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இருந்து உடனடியாக  கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனையிற்கு செல்கிறேன். சிறுவனின் பெற்றோர் பாம்பினை உயிருடனேயே கொண்டுவந்திருந்தனர்.  ஒளித்து பிடித்து விளையாடும்போது சிறுவனுக்கு
பாதுகாப்பகழியினுள்  பாம்பு கடித்திருக்கிறது. சிறுவனை காப்பாற்றினோம் கூடவே பாதுகாப்பகழியின் பராமரிப்பைப்பற்றியும் எழுதவேண்டி வந்தது.



Share/Save/Bookmark
Bookmark and Share