வியாழன், 5 டிசம்பர், 2019

தனோஜன்

இன்று அதிகாலை வாமனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. ஓ தனோஜனும் எங்களைவிட்டு போய்விட்டானாம். ஒவ்வொருமுறையும் இழப்புகளை அறிகையில் மனதில் எங்கிருந்து என்று தெரியவில்லை புதியவலி வருகிறது. நான் இருக்கும் இடத்தில் தனோஜனை அறிந்தவர் யாருமில்லை அதனால் என்துக்கத்தை பகிரமுடியாமல் திக்குமுக்காடினேன். மதியம்தான் வாமனுடன் கதைக்கமுடிந்தது. என்னவேலை செய்தாலும் தனோஜன்தான் முன்னுக்கு நிற்கிறான். 2007 ஆம் ஆண்டில் சுட்டதீவு (பரந்தன்) கடற்கரையோரமாய் ஒருதொகுதி காவலரண்களை நாங்கள் பொறுப்பெடுத்திருந்தோம். காவலில் இருக்கின்ற எம் சகபோராளிகள் பகல் நேரங்களில் பதுங்குகுழி அமைக்கின்ற கடினவேலைகளையும் செய்வார்கள். அநேகமாய் நான் அங்கு செல்லும்போது எனது மோட்டார் சைக்கிளில் எனக்கு பின்னுக்கு அவன் இருப்பான். தனோஜனாய் கேட்டுத்தான் வருவான். பரந்தன் சந்தையில மரவள்ளிக்கிழங்கும் மாட்டிறைச்சியும் வாங்குவோம் என்பான் ,வாங்கிப்போவோம். காவலரண் கடமையில் இருப்பவர்களுக்கு நல்ல உணவு சமைத்துக்கொடுக்கும் அவா அவனிடம் இருக்கும்.தனோஜன் மாட்டிறைச்சியும் மரவள்ளிக்கிழங்கும் போட்டு சமைப்பது எனக்கு மட்டுமல்ல எங்கள் எல்லோருக்கும் புதிதுதான் , அதன் சுவையும் தனிதான். தனோஜன் எமது சகபோராளி, எமது பணிமனையின் கணனி இயக்குனரும் தான் . முன்பெல்லாம் எங்களுக்குள் இழப்புகள் வரும்போது எஞ்சியிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் ஆற்றுப்படுத்துவோம். இழப்புகளின் வலியை திசை திருப்ப எமது வேலைகளில் அதீதமாய் ஈடுபடுவோம். இன்றைய நாள் நீண்ட கடினமான நாளாக இருக்கிறது.


Share/Save/Bookmark
Bookmark and Share