செவ்வாய், 30 ஜனவரி, 2024

மீளவும் வரப்போவதில்லை

புகைப்படம் பார்க்கிறேன் கண்கள் அசைய மறுக்கிறது நீ உயிராய் என் முன் யாவும் காட்சியாய் விரிகிறது கனதியான வாழ்வு மீளவருகிறது ஆவலில் உற்றுப் பார்க்கிறேன் நீயில்லை எதுவும் நிஜமில்லை கண்ணீர்ப்படலம் உன்னை மறைக்கிறது பறவையொன்று உள்ளங்கையில் இறங்கிற்று சிறகினில் கவிதையினை கிறுக்கிறேன் அது உயர பறக்கையில் பாடலாகிறது நண்பா! நீ மட்டுமில்லை நீயும் நானும் உலாவிய ஒழுங்கைகள் வடலி நிறை பனை வெளி உணவு தரும் குடிசைகள் மீளவும் வரப்போவதில்லை


Share/Save/Bookmark


Share/Save/Bookmark

திங்கள், 29 ஜனவரி, 2024

மலரன்னை " யாழ் முத்து" விருது பெறுகிறார்



Share/Save/Bookmark

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

வேரறுந்த வாழ்வில் வாசமில்லை

என் சிறுபராயம் தாய்வழி பேரனுடனான சம்பாஷணை இலக்கியத்தின் ஒரு முகம் பூர்வீகம் மறுமுகம் வாழ்வியல் அதன் அகம் தோட்டமும் துரவும் வண்டிலுமாய் எனக்குள் ஓடுகிறது பந்தம் மூதாதையர்களை தேடும் பயணம் என்னோடு முடிந்துவிடுமா? புலம்பெயர்ந்ததின் விளைவு எங்கு போய் முடியும்? முதுசொம்களை தொலைத்த வாழ்வில் பவுசு இருந்தென்ன? இழப்பதற்கு எதுவுமில்லையெனினும் தாய்நிலம் துறவாதீர் ! தாயைப்போல யாருமில்லை வேரறுந்த வாழ்வில் வாசமில்லை தாகத்திற்கு கானல் நீர் தீர்வுமில்லை


Share/Save/Bookmark

வெள்ளி, 26 ஜனவரி, 2024

எனது வாழ்விடம் காணாமல் போயிற்று

ஒரு சிறிய ஊர் அநேகருக்கு அநேகரை தெரியும் ஆள் ஆளுக்கு பட்டப்பெயர்கள் இருக்கும் பொலிஸ் வந்ததில்லை யாருக்கும் ஒன்றென்றால் ஊரே ஒன்றாகும் பகட்டுமில்லை பட்டினியுமில்லை ஆசிரியர் மாணவரை தந்தை பெயர் சொல்லியே அழைப்பர் செருப்புகளற்று நடந்துதிரியும் பட்டம் ஏற்றும் மணல் வெளி பறவையொன்று வானத்தில் படர்ந்து கடலில் இறங்கி வள்ளத்தில் ஏறிற்று என்ற புனைவற்ற கிராமம் பறவைகள் மாடுகளில் மரங்களில் முற்றத்தில் நாளும் கூடும் சந்தையோடு கோலாகல கோயில் திருவிழாக்களும் நாடகங்களும் தாச்சி விளையாட்டும் வேறு என்ன வேணும்? பொய் இல்லை போட்டி இருக்கும் வண்டில்ச்சவாரி கிட்டியடியென நாளும் பொழுதும் நீளும் எனது அழகிய வாழ்விடம் ஒரு பகலுக்கும் இரவுக்கும் இடையில் காணாமல் போயிற்று


Share/Save/Bookmark

ஞாயிறு, 21 ஜனவரி, 2024

இழப்பதற்கும் எதுவுமில்லை

மனதிற்குள் சுழலும் கூரான சக்கரம் 

சதா உழலும் நெருடும்வலி 

யாரோடும் பகிரா காயம் 

உயிரிருக்கும்வரை தீமிதிப்பு 


கனவுமில்லை இதயமுமில்லை 

சிரிப்பதிலும் உயிரில்லை 

நினைப்பதுபோல் நிஜமுமில்லை 

இழப்பதற்கும் எதுவுமில்லை




Share/Save/Bookmark

சனி, 20 ஜனவரி, 2024

இடைநடுவில் 

நின்றுபோன தொடர்பாடல் 

எங்குபோனாய் நீ ?

நெருக்கடியில் 

நொறுங்கிப்போன இதயம் 

சரிசெய்துவர 

உன் தொடர்பு இல்லை 

விடைகள் இல்லா கேள்விகள்  

நீர்க்குமுழிகளாய் பெருத்து உடைகின்றன 

நிழலுக்குள் ஒளிந்திருக்கும் ஒளி போல 

எனக்குள் நீ இருப்பாய் 

இப்படிக்கு 

விடியாத காலையில் 

விடைபெற்றுப்போனவன் 



Share/Save/Bookmark

மனதில் வெட்கையெனினும் வளவினுள் வெள்ளம்

 நான் சிறுவன் 

வேலியில் ஒரு பெரிய பூவரசு 

அம்மம்மாவின் வயதிருக்கும்

பச்சை இதயமாய் விரிந்த இலைகள் 

மஞ்சள் இலைகளின் நிலக்கோலம் 

இலைகள் ஆட்டுக்கு குழை  

எங்களுக்கு பீப்பீ 

சிறார்களுக்கு உள்ளங்கை கோப்பை 

பூவரசு அணில்களின் கோட்டை   

புலுனிகளின் கச்சேரி மேடை 

கண்களுக்கு மட்டுமல்ல மனதிற்கும் குளிர்மை     

பூவரசின் நீண்டகிளைகள்

கதியால்களாகும் நம்பிக்கை 

பூவரசம்பூ பூவுலகின் அதிசயம் 

  

பிறிதொருநாள் 

பூவரசு பட்டு விறகாகியிருந்தது

அந்த இடத்தில மதில் ஓடிற்று 

நிழல் இல்லை 

மதில் மேல் பூனை 

மனதில் வெட்கையெனினும்

வளவினுள் வெள்ளம்         



Share/Save/Bookmark

வெள்ளி, 19 ஜனவரி, 2024

"கவிதையை எழுதாதே கவிதையாய் வாழ்"

 "கவிதையை எழுதாதே 

கவிதையாய் வாழ்"

 

நண்பா!

நீ வாசிக்கமுடியாமல் போன 

கவிதையை 

நான் எழுதப்போவதில்லை 

அதுவும் 

உன்னோடு போனதாய் இருக்கட்டும் 

உன்னருகில் வரும் நாள் 

உனக்காய் நான் எழுதுவேன் 

தோழ மை கொண்டு 




Share/Save/Bookmark

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

இன்னும் நாம் உயிர்க்கவில்லை

வாழவேண்டிய தோழன் வீழ்ந்தான் 

ஒவ்வொரு தோழராய் இழந்தபடி - தினம்   

மனம் பிசையும் வேதனையை சுமந்தபடி 

தணல் மீது தொடர்ந்தும் நடந்தோம் 

மயிரிழையில் உயிர்தப்பி தப்பி

எதற்கும் தயாராய் உழைத்தோம் 

உலகமறியா அர்ப்பணிப்புகளுடன் 

ஒருநாள் யாவும் முடிந்தாயிற்று 

எதுவுமில்லை 

யாரும் காணா இருள் 

அழக்கூட முடியவில்லை 

வெறும் துடிக்கும் இதயத்தை 

கையிற்குள் இறுக்கிப் பொத்தியபடி 

வாழும் பிணமாக ஊர்ந்தோம்  

இன்னும் நாம் உயிர்க்கவில்லை  



Share/Save/Bookmark

 போராளியாதல் 

ஒன்றும் இலகுவல்ல 

புலம்பெயர்வதை போல 

பாசம் கனவு உதறிப்போதல் 

ஒன்றும் எளிதல்ல 

அன்றே இறப்பது போல

நாடிழத்தல் 

ஒன்றும் இலகுவல்ல 

கண்களை இழப்பது போல    



Share/Save/Bookmark

சனி, 13 ஜனவரி, 2024

அவன் சரணடையமுன் நெஞ்சோடு அனைத்திருந்த மகனை மனைவியிடம் கொடுத்தான் மகனோ அவனின் சட்டையை பிடித்திருந்தான் தாய்தான் அந்த பிடியை இளக்கினார் தாய் மனைவியிடம் விடைபெற்று மகனை முத்தமிட்டு விட்டு பேரூந்தில் ஏறியவன்தான் எந்த செய்தியும் இல்லை


Share/Save/Bookmark

வெள்ளி, 12 ஜனவரி, 2024

நெஞ்சினுள் ஒரு நெருஞ்சிமுள்

 வழுக்கையாறு வாய்க்காலிருந்து 

கூப்பிடு தூரத்தில் மூன்று வயல்கள்

வரம்புக்கட்டுவதும் மூலைகொத்துவதும்

நெல் விதைப்பதும் களைபிடுங்குவதும் 

வயலின் பசுமையில் நாங்களும் இருந்தோம் 

இருபோக விதைப்பு 

சிலகாலம் ஒருபோகமானது 

மூன்று வயல்களிலும் 

வெவ்வேறு நெல்லினங்கள் விதைப்போம் 

ஒன்று பிழைத்தாலும் மற்றையது கைவிடாது 

நானறிந்து நட்டம் ஏற்பட்டதில்லை    

இறுதி பலவருடங்கள் 

யாரோதான் செய்தார்கள் 

செய்தார்களோ இல்லையோ தெரியவில்லை  


பயிர்களோடு சேர்ந்து அசையும் மனம்

புலுனிகளும் வேறு குருவிகளும் பாடும் இசை 

வயலோடும் வயலை சுற்றியும் நட்புவட்டம்      

முதல் நெல்லில் பொங்கும் பொங்கல் 

அரிசிமா மணக்கும் கொழுக்கட்டை 

அறுவடையும் சூடடிப்பும் 

வைக்கோலும் அந்த சுனையும் 

எப்படி மறப்பது?


மூன்று தலைமுறையின் 

வியர்வை கலந்த மண் 

பார்க்க ஆட்கள் இல்லை 

வயல் விற்பனையாயிற்று 

வயலில்லா முதல் பொங்கல் நெருங்குகிறது 

நெஞ்சினுள் ஒரு நெருஞ்சிமுள் 

வயல்கள் வீடாக மாறும் காலம் 



Share/Save/Bookmark

ஞாயிறு, 7 ஜனவரி, 2024

 அம்மா!

ஒரு அதிசய உலகம்தான் 

அம்மாவின் பாசவலைக்குள் சிக்கியிருக்கும் பிள்ளைகள் 

அம்மா நித்திரை கொள்வதை காணுவதில்லை 

நோய் நொடியிருந்தாலும்  

அம்மா குடும்பத்திற்காக இயங்கிக்கொண்டிருப்பார் 

அவரது துயர் யாரும் அறிவதில்லை 

அம்மா பிள்ளைகளை நிமிர்த்திவிடும் நெம்புகோல் மட்டுமல்ல 

   

தீரா கடனுடன் வாழும் பிள்ளைகள்  



Share/Save/Bookmark

 அரசியல் பகை நிரந்தரமுமில்லை 

தற்செயலானது  தற்குறியானது 

ஆபத்தானது  அதிசயமானதும் - அது 

மிகைப்படுத்தலால் உறங்குவதுமில்லை  

கொள்கைகளோடு சேர்ந்ததுமில்லை 

கூலிகளால் தீர்மானிக்கப்படுகிறது 

மதம் மதங்கொள்வதும் 

சிறிய இனம் இரையாவதும் 

இன்று நேற்று வந்ததில்லை 

உரிமையை பறிப்பதில் தொடங்கி 

உயிரெடுப்பதில் முடியும் 



Share/Save/Bookmark

சனி, 6 ஜனவரி, 2024

 அவரவருக்கு 

அவர் இலட்சியம் / எதிர்பார்ப்பு பெரியது 

அவர்களது வாழ்வு அவர்களுக்கானது 

அடுத்தவர் தலையிடுவது முறையல்ல

எல்லாராலும் எல்லாம் செய்யமுடிவதில்லை 

சொல்லும் செயலும் ஒன்றாயிரு  

தனித்திருந்தாலும் தனித்துவமாயிரு    



Share/Save/Bookmark

புலம்பெயர்வு

 புலம்பெயர்வு 

வசதி வாய்ப்புகளை தந்திருக்கலாம் 

ஏன்? 

(போலிப்)பெருமையை கூட தந்திருக்கலாம் 

இருந்துமென்ன 

அவரது சந்ததி அடையாளம் இழக்கும்நாள்

வெகுதொலைவில் இல்லை  

உழைப்பின் வலி தீரமுன்      

கொடுக்கும் விலை கொடியது

புலம்பெயர்ந்தோர் புலன்பெயர்ந்தவரல்ல 

நீரும் எண்ணெயுமாய் அங்கும் இங்கும்     



Share/Save/Bookmark

வெள்ளி, 5 ஜனவரி, 2024

 குழந்தைகளுடன் 

நட்பாகும் மருத்துவன் 

வாழ்நாள் பேறுபோல

குழந்தை வளர வளர 

நட்பின் வயதும் வளரும் 

குழந்தை பெரியவராக 

அவரது உலகம் வானத்தில் விரிந்திக்கும் 

நட்சத்திரங்களாய்

குழந்தையும் மருத்துவனை மறப்பதில்லை 

மருத்துவனும் குழந்தையை மறப்பதேயில்லை  

நீண்ட இடைவெளியில்  திடுதிப்பென சந்திக்கையில் 

குழந்தையே மருத்துவனாகிறான்

மருத்துவனே குழந்தை போல்

ஒரு நோயாளியாக     



Share/Save/Bookmark
Bookmark and Share