ஞாயிறு, 7 மார்ச், 2021

திருப்பிப்பார்க்கிறேன்

  


1985 இன் ஆரம்பகாலமாக இருக்கவேண்டும். காலை பதினொரு மணியளவில்  அம்மம்மா வீட்டிற்கு களைத்து வீழ்ந்து போனேன். அம்மம்மா காலை சாப்பாடு தந்து கேட்டார் " சந்தையிற்கு போய் மீன் வாங்கி தருவீரா ?. ஓம் அம்மம்மா , ஏன் என்று கேட்டேன். என்னெண்டா குஞ்சு " இரண்டு பெடியள் வந்து மத்தியானத்திற்கு ஐந்து சாப்பாடு பார்சல் கேட்டவங்கள்" . அப்படியா அம்மம்மா " நான் வாங்கி தருகிறேன்".

அப்போது புளொட் இயக்கத்திற்கும் எங்கட இயக்கத்திற்குமான பகை கொதிநிலையில் இருந்தது. புளொட் இயக்கத்தவர்கள்தான் சாப்பாடு பார்சல் கேட்டிருப்பார்கள் என்பதில் எனக்கு ஐயுறவு இருக்கவில்லை. புளொட் இயக்கம் எமது இயக்கத்தை சேர்ந்த எனக்கு தெரிந்த சிவா சின்னசிவா உட்பட ஆறு பேரை சுழிபுரத்தில் கொலைசெய்து புதைத்து சிலமாதங்கள்தான். அம்மம்மாவின் சாப்பாடு பார்சல் என்பது ஒரு சாதாரண சாப்பாடு பார்சல் இல்லை, ஒரு சாப்பாடு பார்சலில் இரண்டு பேர் சாப்பிடும் அளவு பெரியது. அப்படியிருந்தும் கட்டும்போது ஆறு சாப்பாடு பார்சல் வந்துவிட்டது. அவர்கள் இரண்டு மணியளவில்தான் சைக்கிலில்வந்து பெல் அடித்தார்கள். அவர்களுக்கு என்னைக்கண்டதும் முகத்தில் திகைப்பு தெரிந்தது, எனக்கு அதிலொருவரைதான் தெரிந்திருந்தது, அவன் ஒரு நல்ல போராளி. மன்னிக்கவும் அண்ணை " இது உங்கட வீடு என்று தெரியாது". அது பிரச்சனை இல்லை என்றவாறே சாப்பாடு பார்சல்களை கொடுத்தேன், அவர்கள் நன்றி சொல்லி வாங்கிக்கொண்டார்கள்.   



Share/Save/Bookmark

வெள்ளி, 5 மார்ச், 2021

திரும்பிப்பார்க்கிறேன்

 

இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியமா? இந்த கேள்வியை நான் எனக்குள் பலதடவைகள் கேட்டிருக்கிறேன். உண்மையில் இனங்களுக்கிடையிலான பகைமையை ஆரம்பித்தவர்கள் சிங்களத்தலைவர்கள்தான். அதற்கு தமிழர்களின் சிறப்பான  முன்னேற்றம்தான் காரணமாய் இருந்தது. தமிழர்கள் சிறுபான்மையாக இருந்ததால் அரசு தலைமையிலான வன்முறையை எதிர்கொள்ளமுடியாமல் இருந்தது. தங்களை காப்பாற்றிக்கொள்ளவே போராடவேண்டிவந்தது. நல்லிணக்கத்திற்கு மொழி தெரியாமை காரணம் என்று சொல்லுவது ஏற்புடையதில்லை. எனது தந்தை, தாய்வழி பேரன் ஆகியோர் தமிழ் ஆங்கிலம் சிங்களம் என மூன்றுமொழிகளையும் பேசும் வல்லமையுடன் வாழ்ந்தவர்கள் ஆனாலும் அவர்களுக்கு சிங்கள அரசுடன் இணங்கிவாழலாம் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழர் மீதான இன அழிப்பை ஜனநாயக முறைகளில் தீர்ப்பதற்கான வழிமுறைகள் தெரியவில்லை. 



Share/Save/Bookmark

செவ்வாய், 2 மார்ச், 2021

திரும்பிப்பார்க்கிறேன்

 

2009  போர் முடிந்தபின் இலங்கை அரசு தனது இனப்படுகொலையை உலகிற்கு மறைக்க முழுமுயற்சி எடுத்தது. அதற்கு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழர்களையும் பயன்படுத்தியது. இலங்கையரசின் இச்செயற்பாட்டை முறியடிக்க நேரடி சாட்சி என்ற வகையில் நானும் என்னால் முடிந்தவரை முயன்றேன். உண்மையிலேயே அந்தக்காலங்கள்தான் என்வாழ்க்கையில் அதிக துன்பகாலங்களாய் உணர்ந்தேன். ஒவ்வொருமுறையும் நடந்தவிடயங்களை மீள நினைத்து வெளிப்படுத்தவேண்டியிருந்தது. நான் மனநிலையிலேயும் மிகவும் மட்டமானநிலையிலும் இருந்தேன். இரவுகள் நித்திரை இல்லாமல் கழிந்தன. ஒரு போராளியாக வாழும்போது மகிழ்வும் துன்பமும் இருக்கும் ஆனால் அதற்கு பின்னான இரண்டு மூன்று வருடங்கள் எனக்கு துன்பம் மட்டுமான காலமாய் இருந்தது. ஆனாலும் இன்று நினைக்கையில் ஏதோ சிறுதிருப்தி இருக்கிறது.   



Share/Save/Bookmark
Bookmark and Share