அது தமிழன்
தன்னைத்தானே ஆண்ட காலம். சமாதானக்காலம் என்றாலும் பனி மூசிப்பெய்யும்
மாசிமாதம்.ஒருநாள் காலைபொழுதில் வழமைபோல்
காரியாலயத்தில் முதல் வேலையாய் பத்திரிகையை புரட்டினேன். ஒரு செய்தி நெஞ்சை பலமாய்
குத்திற்று. ஒரு ஐம்பத்திநான்கு வயது மூன்று பிள்ளைகளின் தாய் குளிரினால் நேற்று அதிகாலை இறந்ததாய் செய்தி .உடனேயே
எல்லா கடமைகளையும் புறந்தள்ளிவிட்டு அந்த
கிராமத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன்.இன்றுதான் மரண வீடு நடப்பதால்
வீட்டை
அடையாளப்படுத்த கடினம் இருக்கவில்லை.அதை வீடு என்று சொல்வதை விட பெரிய குடிசை
என்று சொல்வதே பொருத்தப்பாடானது.
அங்கு
ஏற்கனவே எமது பிரிவின் மாவட்ட பொறுப்பாளரும் வேறு அரசியல் போராளிகளுடன்
நின்றார்.மாவட்ட பொறுப்பாளர் அந்தப்பெண்ணின் நோய் அடையாள அட்டையை என்னிடம்
காண்பித்தார்.அந்தப்பெண் சிறுநீரக பாதிப்பு
நோயாளி .ஒரு தடவை கொழும்புக்கும் போய்வந்திருக்கிறார் . அவருக்கு சிறுநீரக
மாற்றுச் சிகிச்சைக்கு மருத்துவர்கள் சிபார்சு செய்திருக்கிறார்கள்.எமது மாவட்டப்
பொறுப்பாளர் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்துடன்
ஒழுங்குபடுத்தி அதற்குரிய செலவை புனர்வாழ்வுக்கழகம்
ஏற்கயிருந்திருக்கிறது. இரண்டு
நாட்களாய் வீட்டில் இயலாமல் இருந்திருக்கிறார்.வசதியீனம் காரணமாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை.நேற்று கூட்டிப்போகும்
உத்தேசத்தில் இருந்திருக்கிறார்கள்.விதி முந்திவிட்டது. நான் அந்த தாயின்
கணவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தேன்.அந்த இடைவெளிக்குள் மாவட்டப் பொறுப்பாளர்
நோய் அடையாள அட்டையை பிரதி எடுத்துவந்திருந்தார். பிரதியோடு நான்புறப்பட்டேன்.எங்களால்
செய்யக்கூடிய உதவிகளை ஒழுங்குசெய்ய மாவட்டப்பொறுப்பாளர் அங்கு நின்றுவருவதாய்
சொன்னார்.அரசியல் போராளிகளும் தங்களது பணியை செய்துகொண்டிருந்தார்கள்.
நான்
காரியாலயம் வர ஒரு போராளி எனக்காய் காத்திருந்தான்.என்னைக்கண்டதும் முதுகுப்பையில்
இருந்து எடுத்து ஒரு கடிதத்தை தந்தான்.அது கடிதம் அல்ல .அந்த பத்திரிகை
செய்தித்துண்டு.
மதி அக்கா (
தலைவரின் மனைவி) கொடுத்து விட்டிருந்தா.நான் விபரத்தை சரியாய் எழுதி அந்தப்
போராளியிடம் கொடுத்து அக்காவிடம் கொடுக்கச்சொன்னேன்.சில நாட்களுக்குப் பின் அண்ணையை
( தலைவர்)
வேறுவிடயமாய்
சந்திக்கும் போது , அவ்வளவு கடமைக்குள்ளும் அந்த பத்திரிகைச்
செய்தியையும் கேட்டார். அந்த தாயின் பிள்ளைகளின் வயதை கேட்டு ,ஏதாவது உதவி அவர்களுக்கு தேவைப்படின் உரிய
ஒழுங்குகளை செய்து கொடுக்கும்படி கூறினார்.
-ஓவியன்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக