கிளி father என்று எல்லோராலும்
அன்பாக அழைக்கப்பட்ட கருணாரத்தினம் அடிகளார் அவர்கள் நகைச்சுவையுணர்வும் அன்பும் நிறைந்த அளப்பரிய
சேவையாளர்.இலங்கை வங்கியில் ஒரு அதிகாரியாய் இருந்து பின் பாதிரியார்
ஆனவர்.மிகுந்த தமிழ் உணர்வும்,அறிவும் உள்ளவர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பல மக்கள் இடம்பெயர்ந்து வன்னிக்கு
வந்து
புது வாழ்க்கையை ஆரம்பித்தார்கள் .அந்தக்காலப்பகுதியில்தான்
அவருடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது.
யாழ்ப்பாண இடப்பெயர்வோடு வன்னியில் சுமார் ஆறரை இலட்சம்
மக்கள் வாழ்ந்தார்கள்.ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய மருத்துவர்கள்தான்
வன்னியில் இருந்தார்கள்.அவர்களின் உழைப்பை
சொல்ல வார்த்தைகள் இல்லை.நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒலுமடுவில் இயங்கிய
பொன்னம்பலம் மருத்துவமனையில் பற்சிகிச்சை கிளினிக்
நடத்திவந்தேன்.ஒரு களைப்பான நாளில்த்தான் கிளி fatherஐ முதல் முதலாய் சந்தித்தேன்.அவர் பற்சிகிச்சை பெற
வந்திருந்தார்.முதல் சந்திப்பிலேயே பல நாள் பழகியவர் போல் ஓர் ஈர்ப்பை பெற்றேன்.
வன்னியில் மலேரியா
தாண்டவம் ஆடிற்று.மலேரியாவாலும்,ஜெயசுக்குறு இராணுவ நடவடிக்கையின் இடப்பெயர்வுகளாலும் சிறுவர்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்கிப்
போய்க் கொண்டிருந்தார்கள்.இது ஒரு மிகவும் எச்சரிக்கையான காலம். ஆனைவிழுந்தானில் அமைந்திருந்த தமிழர்
புனர்வாழ்வுக்கழகத்தின் நடுவப்பணியகத்தில்
தமிழ்ச்செல்வன் தலைமையில் சிலர் அவசரமாக ஒன்று கூடினோம்.சிறுவர் பட்டினிச்சாவு
தவிர்ப்புத்திட்டம் உதயமானது.இந்தக்குழுவில் கிளி father உம் இருந்தார்.இந்த திட்டத்தை தமிழர் புனர்வாழ்வுக்கழகம்
சிறப்பாக நடைமுறைப்படுத்திற்று. வெரித்தாஸ் வானொலி நிதி கிடைக்க உதவிற்று.வன்னி
முழுக்க பல சிறு இடங்கள் அமைத்து ,எல்லா சிறுவர்களுக்கும் கற்பிணித்தாய்மாருக்கும் சமைத்த உணவு நாளுக்கு வெவ்வேறாக
வழங்கப்பட்டது.வழங்கவேண்டிய உணவின் பட்டியலை Dr சதானந்தன் துல்லியமாக என்னிடம் தந்திருந்தார்.
நிலைமை ஆறு மாதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
அடைந்திருந்தது. பின் கிளிநொச்சிநகர் திட்டமிடலிலும் எங்களுக்கு ஒத்தாசையாய்
இருந்தார்.அப்போது அவர் NGO consortium இன் தலைவராய்
இருந்தார். கருமை நிற மோட்டார் சைக்கிளில் ஒரு விளையாட்டு வீரனைப்போல
பறந்து திரிவார்.புழுதியே காற்றாகும் பாதைகளில் தோழமைகளுடன் சந்தித்துக்கொள்வோம்.
இறுதியாய் கிளிநொச்சி சுகாதார விஞ்ஞானக்கல்லூரியின் நிகழ்வு
ஒன்றில் அவரை சந்தித்தேன்.அவர் அக்கல்லூரியின் நிர்வாகசபையின் உறுப்பினராயும்
இருந்தார். அக்காலப்பகுதியில் Northeast Secretariat on Human Rights (NESOHR)இன் தலைவராகவும்
அயராது உழைத்திருந்தார். தமிழ்ச்செல்வனின் வீரமரணம் அவரை சரியாக
பாதித்திருந்தது.அதற்குப்பின் முகத்தாடி வளர்த்திருந்தார்.தமிழ்ச்செல்வன் நினைவாக நூலகம் ஒன்றை அமைக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.
சித்திரை இருபதாம் திகதி 2008ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின்
கிளைமோர்த்தாக்குதலில் கொல்லப்பட்டார். மீண்டும் எம் கன்னங்கள் நனைந்தன.
- நிரோன் -