சி.இராசரத்தினம் (மூத்த எழுத்தாளர் கச்சாயில் இரத்தினம் )அவர்கள் மலையக (தேவாலக்கந்த) பாடசாலையில் தலைமை ஆசிரியராய் இருந்தவர்.பின் ஓய்வு பெற்று சுழிபுரத்தில் இயங்கிய துரையப்பா அன் சன்ஸ் என்ற பெரும் வர்த்தக நிலையத்தில் பிரதம கணக்கராய் இருந்தவர்.அதே காலத்திலேயே பல வேறு வர்த்தக நிலையங்களின் கணக்காய்வாளராகவும் இருந்தார்.
கச்சாயில் இரத்தினம் அவர்கள் இலங்கையில் இருந்து வெளியான ஆரம்ப சரித்திர நாவலை ( வன்னியின் செல்வி ) எழுதியவர்.எழுத்துகளுடன் மட்டும் நில்லாமல் மேடை நாடகங்களை எழுதி இயக்கி பாத்திரம் ஏற்று பாடி,நடித்து புல்லாங்குழல்,mouth organ ,ஆர்மோனியத்துடன் இசை அமைத்து,மேடைக்கான திரைச் சீலைகளை தானே வரைந்த வல்லவர். இவரது நூற்றி ஐம்பதிற்கு மேற்பட்ட சிறு கதைகள் இலங்கை, இந்திய பத்திரிகை,வானொலி,சஞ்சிகைகளில் பிரசுரமாகி இருக்கிறது. இவரது நூற்றுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கிறது.இலங்கை தமிழ் வானொலியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவில்
பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இலங்கை தமிழ் வானொலி நாடகஎழுத்துருக்களில்
அதிக
பங்களித்தவர்களில் நால்வரில் ஒருவராக இவரையும் குறிப்பிட்டுள்ளார். இவர் பல பரிசில்களையும் பெற்றுள்ளார்.”இலவு காத்த கிளி” என்ற கதை அகில இலங்கை ரீதியில் முதற் பரிசு பெற்றது.கவிதையிலும் முதற் பரிசு பெற்றுள்ளார்.
1964 ஆம் ஆண்டு தேன்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் அப்போதைய மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி பாராளமன்ற உறுப்பினர் ராசதுரை அவர்களால் கௌரவிக்கப்பட்டார்.
புலிகளின் குரலில் ஒலிபரப்பான அவரது பேட்டிதான் அவரது இறுதி இலக்கிய பங்களிப்பு என்று
நினைக்கிறேன். யாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவரால் தனது கற்கைக்காக இவரது ஆக்கங்கள் ஆய்வுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண பெரும் இடப்பெயர்வின் போது தென்மராட்சி பிரதேசம் மக்களால் நிரம்பி வழிந்தது.யாழ் மருத்துவமனையின் பெரும்பகுதி மந்திகைக்கு இடம்பெயர்ந்திருந்ததால் சாவகச்சேரி மருத்துவமனை ஆளணி பற்றாக்குறையால் திக்குமுக்காடிற்று. நானும் இருபத்திநான்கு மணிநேரமும்
அங்கு கடமையில் இருக்கவேண்டியதாயிற்று. எனது அம்மா சகோதரர் உறவினர் இடம்பெயர்ந்து நுணாவிலில் ஒருவீட்டில் ஒரு அறையில் இருந்தார்கள்.அன்று 04/02/1996 விடிகாலை வீட்டை போய் ஒரு தேநீர் அடித்துவருவோம் என்று புறப்பட்டுபோனேன். அறைக்குள் உள்செல்ல அம்மப்பா தான் சாய்மனைக்கதிரையில் படுத்திருந்தபடி என்னைக்கண்டார். என் அம்மாவை கூப்பிட்டு நான் வந்திருப்பதாகவும் தேநீர் கொண்டுவரச்சொன்னார். அடுப்பு முற்றத்தின் ஒருகரையில் இருந்தது. அம்மப்பா தேநீர் குடித்துக்கொண்டிருந்தார். நான் முகம் கழுவி வந்து பலாக்கட்டையில் இருந்தபடி தேநீரை சுவைக்க தொடங்கினேன்.திடீரென அம்மா கத்தினார் பப்பா! நான் போய் அவர் இறந்ததை உறுதிப்படுத்தினேன்.இதயம் கல்லாயிற்று.ஒரு அறைக்குள் உடலை வைத்திருக்கமுடியாது மறு அறைகளுக்குள்ளும் ஆட்கள் இருக்கிறார்கள். இயன்றவரை இறுதி கிரியைகளை சிறப்பாக செய்தோம்.நாடு அறிந்த ஒருவரை ஊருக்குகூட தெரியாமல் அவர் விரும்பிய கண்ணாடிப்பிட்டிசுடலையில் எரித்துவிட்டு நேராக மருத்துவமனைக்கே போனேன்.காலத்தின் தேவை இப்படி இருந்தது.
அம்மப்பாவின் வாழ்க்கை எப்போதும் நடுத்தரம்தான் அதிலும் சாதாரணம்தான்.அம்மப்பாவின் எழுத்தின் முதல் வாசகி அம்மம்மாதான் .அம்மம்மா மிகவும் அன்பானவர் , அமைதியானவர், அதிர பேசத்தெரியாதவர். அம்மப்பா சுறுசுறுப்பானவர் , வேலி அடைக்கும் போதும் ஒரு ஆளாய் நிற்பார். வயலில் நெல் விதைக்கையிலும் நிற்பார், அறுவடையிலும் நிற்பார். சந்தைக்கு போய் மீன் வாங்கிவந்தால் ஒரு கிழமைக்கு இருக்கும்.வீட்டில் மல்லிகை பூத்து கொட்டிக்கிடக்கும் ,செவ்வரத்தம் பூ விடிகாலையையே அலங்கரிக்கும்,எலுமிச்சை,மாதுளை,மாமரம் என்று எல்லாம் அம்மப்பாவின் கைவண்ணம்தான். ஆடுகளுக்கு குழை ஒடித்து மாட்டுக்கு ஓலை கிழித்து எங்கும் அவர் நிற்பார் . அவர் இறந்தது அவர் நட்ட மரங்களுக்கு தெரிய நியாயமில்லை.அம்மம்மா வெளிநாட்டில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் இல்லை. அதிக எதிர்பார்ப்புகள் அற்று இயற்கையோடு வாழ்ந்தவரின் நினைவுகள் என் நெஞ்சை அழுத்துகின்றது.