ஞாயிறு, 30 ஏப்ரல், 2017
இன்று மேதினம் . தொழிலாளர்களின் தினம். ஈழத்தில் எம் இனம் காயங்களோடு இருக்கிறது . மறைமுகமாக அழிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது. பூர்வீக இருப்பை இழந்துகொண்டிருக்கிறது. நலிந்துபோய் இருப்பதால் நாளாந்தத்தோடு போராடிக்கொண்டிருக்கிறது. எங்களுக்குள் ஒன்றாகமுடியா சாபம் தொடர்கிறது. நாங்கள் ஆக்கிரமிப்பாளனை மறந்து எங்களுக்குள் மோதிக்கொள்கிறோம். எங்களிடம் உள்ள கொஞ்ச சக்தியையும் இழந்துவிடுகிறோம். எங்களை பாதுகாக்கக்கூடிய அரசியல் தீர்வை சிங்களம் தரப்போவதில்லை. இன்றில்லையாயினும் போராட்டம் மீண்டும் எம்மக்களில் இருந்து எழப்போவது தவிர்க்கமுடியாததும் கவலையானதும்தான் .
சனி, 29 ஏப்ரல், 2017
2006 இல் ஒரு நாள் (சுகாதார விஞ்ஞானக்கல்லூரி ஆரம்பிப்பது சம்மந்தமாகவும் அன்று உரையாடப்பட்டது )தலைவருடரான சந்திப்பில் நானும் தமிழ்ச்செல்வனும் கலந்துகொண்டபோது தலைவர் இந்தவிடயத்தையும் சொன்னார் . எமக்கான நெருக்கடி கூடும் போது எங்கட ஆட்களுக்குள்ளேயே சிலர் இடுப்பில இருக்கிற பிஸ்டலை கழற்றிவைச்சிட்டு ஓடுவினம். இந்தவிடயத்தை தீபனும் தலைவர் தன்னிடம் சொன்னதாக பின்பு ஒரு நாள் என்னிடம் சொல்லியிருந்தார் .
நான் அறிய இது பின்பு முள்ளிவாய்க்காலில் நடந்தது.
சனி, 8 ஏப்ரல், 2017
சகோதரன் சத்தியா என் அன்பு சகோதரன்
சகோதரன் சத்தியா என் அன்பு சகோதரன் . எந்தவிடயங்களையும் நேரிடையாக உரிமையுடன் வந்து என்னுடன் கதைப்பவன். நாங்கள் அப்போது ஸ்கந்தபுரத்தில் இருந்தோம். சத்தியா தன் வருங்கால மனைவியை சந்திக்க போகிறான். எமதுமுகாமில் யாருக்கும் இந்தவிடயம் சம்மந்தமாய் எதுவும் தெரியாது. ஒரு நாள் காலை ஸ்கந்தபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஏற்றிப்போகிறேன். நாங்கள் மல்லாவியிற்கு போகவேண்டும் . சத்தியா முகாமில் நின்ற உடையோடேயே வருகிறார். எனது bag இல் அவர் மாற்ற வேண்டிய உடைகள் இருக்கிறது. மாற்றுவதற்கு இடம் தேடினோம். கடைசியில் துணுக்காயில் அமைந்திருந்த சிறுநூலகம்தான் கண்ணில்பட்டது. நான் சென்றி நின்றேன். அவர் மாற்றிவந்தார். மல்லாவி கல்வி திணைக்களம் போனோம். நான் எனக்கு தெரிந்த பிரதி கல்விப்பணிப்பாளருடன் கதைத்துக்கொண்டிருந்தேன். அவர் தன் மனைவியுடன் கதைத்துவிட்டு வந்தார். வரும் வழியில் சத்தியா ஓகே ஆ என்றேன். ஓடும் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர் எழுந்துநின்று தனது இருகைகளையும் தட்டி சத்தமாய் ஓகே என்றார். இறுதியாய் அவரை மாத்தளன் மருத்துவமனையில் சந்தித்தேன். ஆனந்தபுரத்தில் சத்திரசிகிச்சை கூடம் ஆரம்பிக்க இருந்தோம். அது நடக்கவில்லை.
சகோதரன் சத்தியா என் அன்பு சகோதரன்
வெள்ளி, 7 ஏப்ரல், 2017
எப்போது நினைத்தாலும் நெஞ்சு வலிக்கும்.
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இயக்கம் ஒரு அமைப்பாக தெரியும் எங்களுக்கு அது ஒரு அழகான குடும்பம் . சகோ இசை எல்லா வசதியும் இருந்தகாலத்தில் வாழ்ந்தவன் அல்ல. யாவற்றையும் நாங்களாகவே தேடவேண்டிய காலத்தில் வாழ்ந்தவன். 2007 ,2008 களில் மன்னாரில் இருந்து வள்ளங்களூடாக மருந்துகளை பெற்றோம். அதற்கான ஒழுங்குபடுத்தல்களை இசையே செய்தான் . ஒவ்வொரு வள்ள விநியோகத்திற்கும் பத்தாயிரம் ரூபா வள்ள உரிமையாளருக்கு தமிழீழ சுகாதாரசேவையினரால் வழங்கப்பட்டது. எமது பள்ளமடுவில் இயங்கிய சத்திரசிகிச்சைகூட மருந்துவளங்களின் பெரும்பகுதியை நாங்களே பார்த்துக்கொண்டோம். தலைமைக்கு தேவைப்பட்ட முக்கிய பொருள் ஒன்றையும் பெரும் அளவில் பெற்றுக்கொடுத்தோம். இசை 15 / 05 / 2009 அன்று எங்களைவிட்டு பிரிந்தார். எப்போது நினைத்தாலும் நெஞ்சு வலிக்கும்.( இவர்கள் பற்றிய என் நீள் பதிவு வெளிவரும்)
எப்போது நினைத்தாலும் நெஞ்சு வலிக்கும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)