காலை வணக்கம் , இந்த நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

வெள்ளி, 31 மே, 2024

நூலகங்களை எரிப்பதற்கு பெரும் வன்மம் இருக்கவேண்டும் . சாதாரண மனிதர்களால் அதை செய்யமுடியாது. இறுதிப்போரிலும் பாலர் நூல்கள் உட்பட எந்த நூல்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.நல்லிணக்கம் என்று எலும்புக்கூடுகள் கைகுலுக்கலாம், இதயம் மூளைக்கு அது சாத்தியமில்லை.


Share/Save/Bookmark

புதன், 29 மே, 2024

காலமாற்றத்தில் கரும்பலகை வெண்மையாயிற்று கலர்ச்சேலையும் வெள்ளையாயிற்று கடைசித்துளி கண்ணீரில் மிதக்கிறது பாசம் விடைபெறாமலே நித்திரையானது உடல்


Share/Save/Bookmark

ஞாயிறு, 26 மே, 2024

சிலந்திவலையில் சிக்கியது மனம்

நாம் சிறுவயதில் வாழ்ந்த வீடு கைவிடப்பட்டிருக்கிறது பாழடைந்துவிட்டது சிலந்திவலையில் சிக்கியது மனம் மெல் ஒலியில் பாடல் கேட்கும் வீட்டில் பல்லிகள் சொல்லும் சத்தம் வளவின் ஒவ்வொரு சாணிலும் நினைவுகள் சிந்தியிருக்கின்றன நடைபாதையில் வடலிகள் பாசி படர்ந்திருக்கும் கிணற்றில் பழைய மீன்களின் வழித்தோன்றல்கள் சுற்றியிருந்த வெளிவளவில் மாளிகைவீடுகள் காணாமல் போயிருந்த காலத்திலும் ஒரு வரலாறு கட்டப்பட்டிருக்கிறது


Share/Save/Bookmark

வெள்ளி, 24 மே, 2024

திரும்பிப்பார்க்கிறேன். நான் க.பொ. த உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன்.அப்போது பல்வேறு இயக்கங்கள் இருக்கின்றன என்ற அறிவு கூட எனக்குள் இருக்கவில்லை,நான் ஒரு இயக்கத்துடன் தொடர்பில் இருந்தேன். அப்பாவிற்கு இது தெரிந்துவிட்டது, என்னை கூப்பிட்டு தனியே கதைத்தார். நீ செய்யுறதில தவறில்லை, ஆனால் இது சீரியஸான விஷயம், விளையாட்டில்லை. கொள்கையில கடைசி மட்டும் மாறாமலும் உண்மையாகவும் இருக்கோணும் , கன விசயங்களை நீ இழக்க வேண்டிவரும்.எனக்கு எல்லாம் சொல்லுற நீ இதை எனக்கு சொல்லவில்லை, அது எனக்கு ஓ கே . அப்பாவிற்கு உது தெரிஞ்சமாதிரி வேற ஆட்களுக்கும் தெரிஞ்சிருக்கும்தானே? அப்பாதான் என் வழிகாட்டி மட்டுமில்லை, அவர் எனக்குள் அதிசயமும்தான். அப்பாவின் வாழ்வில் எளிமையும் சிக்கனமும் இருந்தாலும் தேவையானவருக்கும் தாராளமாய் உதவுவார். அப்பா வேலைக்கு மட்டும்தான் நீளக்கால்ச்சட்டை போடுவார் மற்றப்படி வெளியில் போகும் பொது வேட்டிதான் கட்டுவார். அப்பா சிறுவயதிலிருந்தே விவசாயத்தோடு ஒன்றி வாழ்ந்திருந்தாலும் ஒரு பூக்கன்று நட்டவரில்லை, பராமரித்தவரில்லை. அப்பா இந்துசமயத்தை சேர்ந்தவரென்றாலும் பைபிளை குரானை சரளமாக வாசித்திருந்தவர் .


Share/Save/Bookmark

ஞாயிறு, 19 மே, 2024

முதியோர்கள் வீடுகளில் ஒன்றாக வாழ்வது ஒரு கொடை, அவர்களது அனுபவம் / பட்டறிவு எந்த பல்கலைக்கழத்திலும் கிடைக்கமுடியாதது. புலம் பெயர்ந்து வாழும் எமது அடுத்த / அடுத்தடுத்த சந்ததி இந்த வாய்ப்பை பெரும்பாலும் இழந்துவிடுகின்றனர். இதை சந்ததிகளுக் கிடையிலுள்ள இடைவெளிகளில் பார்க்கலாம். நான் புலம்பெயர்ந்திருந்தாலும் தனிப்பட்ட முறையில் புலம்பெயர்வை நான் வெறுக்கிறேன். தாயகத்திலிருந்து என்னிடமும் புலம்பெயர் வாய்ப்புகளை வினாவுகிறார்கள். மருத்துவர்கள் இந்த நாட்டுக்கு வராதீர்கள், மொழி படித்து இங்கு மருத்துவ அங்கீகாரம் பெறுவது சிரமமானது. அக்கரையிற்கு இக்கரை பச்சை என்பது சரியாக பொருந்தும்.


Share/Save/Bookmark

சுதர்சனின் நினைவ

சுதர்சனின் நினைவு வருகையில் அதிலிருந்து மீளுவது எனக்கு இலகுவல்ல. அவனது திருமணத்திலும் அவனது தந்தை தாயாக நானும் எனது மனைவியும்தான் இருந்து நடத்தினோம். அன்றொருநாள் தமிழ்வாணனின் வித்துடல் கனகபுரம் துயிலும் இல்லத்தில் விதைத்துவிட்டு எமது பணிமனைக்கு வந்தும் எதுவும் செய்யமுடியவில்லை . இரவு பத்து மணியளவில் நான் வெளிக்கிட்டேன் , துயிலுமில்லத்திற்கு போய் அந்த அமைதியான சூழலில் சில மணிநேரம் இருந்தால் மனம் ஒருமைப்படும் , சுதர்சனும் என்னோடு வந்தான் . அவன் துயிலுமில்லத்தில் குலுங்கி அழுத காட்சி இப்போதும் என்னை அழுத்துகிறது.சிரித்துக்கொண்டே திரிபவனின் அழுகை துயர் நிறைந்தது.


Share/Save/Bookmark
நாங்கள் சாதாரணமானவர் எங்கள் வாழ்வை நாங்களும் உங்கள் வாழ்வில் நீங்களும் மகிழ்வில் செழிப்பதே எம்மனது ஒருவர் வாழ்விற்காய் அடுத்தவர் நசுக்கப்படல் தர்மமில்லை ஆதலால் உங்களை எதிர்த்தோம் சந்ததி வாழ வேறு தேர்வு இல்லை எதிரியோடு பொருதுவது கடினமில்லை துரோகிகளை களைவது இலகுமில்லை காலம்தான் பச்சோந்திகளை வெளிக்காட்டும் சிலவேளை வெற்றி தோல்வி முடிந்திருக்கும்


Share/Save/Bookmark

சனி, 18 மே, 2024

நீ நடந்துலாவிய காடுகள் பறவைகளின் சத்தம் நீந்திய கடல் அலைகளின் நடனம் உருமறைத்த பயிற்சித்திடல் பதுங்கியிருக்கும் நிழல் ஒவ்வொருவரிலும் கரிசனை அது உனக்கேயானது எல்லாவற்றிற்கும் அருகில் நீ குழைத்துத்தரும் சொற்கள் இருக்கின்றன நீதான் இல்லை சூரியன் இல்லா பூமியில் ஒரு கைவிளக்காக உன்நினைவுகள்


Share/Save/Bookmark

May-18

முல்லைத்தீவில் கம்பிவேலிக்குள் மக்கள் சூழ இராணுவம் அகோர வெயில் குடிக்க நீர் கிடைக்கவில்லை முதுகிலும் காலிலும் இருந்த எரிகாயங்கள் வியர்வையில் மேலும் எரிந்தன சரணடையுமாறு அறிவிப்புகள் மனது நேற்று இரவுச்சண்டையில் அண்ணையை நகர்த்தியிருப்பர் என்று நம்பியிருந்தது ஒரு சடப்பொருளாக இருந்தேன் யாரையும் தலைநிமிர்ந்து பார்க்கமுடியவில்லை


Share/Save/Bookmark

வியாழன், 16 மே, 2024

May-17

இன்றைய நாளின் ஒவ்வொரு மணித்துளியும் ஒவ்வொரு நாளாய் இருந்தன பதினைந்து வருடங்கள் கடந்தாலும் அந்தநாள் வலி யாருக்கும் வரக்கூடாது நேற்றுவரை முடிபுகள் இருந்தன இன்று என்னவாயிற்று ? யாராவது ஒழுங்கமைப்பார்களா? அடுத்த நாள் நிச்சயமில்லை சா பயம் துளியுமில்லை இனி யாரையும் காணப்போவதுமில்லை பழைய திட்டம் மட்டும் மனதில் வேறு எதுவுமில்லை கூப்பிடு தூரத்தில் எதிரி யாரிடமும் விடை பெறமுடியவில்லை அந்தரத்தில் நகர்ந்தேன் இன்னும் நம்பமுடியவில்லை என்ன நடந்தது?


Share/Save/Bookmark

சனி, 11 மே, 2024

போருக்கு பிந்திய காலம் யார் யாரோடு என்று புரியவில்லை முட்கம்பிகள் சிக்கிக்கிடக்கின்றன முட்படுக்கையில் வாழ்வு காணாமலான பட்டியலில் புத்தபகவானே முதலிடம் காவியுடையில் சாத்தான்கள் சமாதானம் எட்டும் தூரத்திலில்லை பாதாளத்தில் பொருளாதாரம் பஜிரோவில் அதிகாரம் மொய்க்கும் கொசுக்களாய் படையினர் குடிசையில் பசியோடு குழந்தைகள் வேர்களை பிடுங்கும் அரசு உறங்குநிலை விதைகளை அறியுமா? காலத்திடம் கேள்வி இருக்கும் தகுந்த பதிலும் இருக்குமா?


Share/Save/Bookmark
இரு அலைகளுக்கிடையில் நீ புன்னகைத்துப்போனாய் மெல்லிய இருளிலும் அது ஒளிர்ந்தது துயரின் வலி அகன்றது ஆழ்கடலாகவே உனை பார்த்தோம் இன்று அலைகள் இல்லா கடலில் ஒரு பெரும் அமைதி கனக்கிறது சூரிய சந்திரர் உலாவும் நீலவானமாய் பார்க்கிறோம் எம் வலியினை நீ அறியாய் அது போதும் எங்களுக்கு


Share/Save/Bookmark

திரும்பிப்பார்க்கிறேன்

நான் அங்கு ஞாயிற்றுக்கிழமைகளில்த்தான் செல்வது வழக்கம் , அன்று அவர்களுக்கு பயிற்சிநாள் இல்லை. இங்கு பயிற்சி எடுப்பவர்கள் எண்ணிக்கையில் குறைவானாலும் அன்பாலும் கலகலப்பாலும் குறைந்தவர்கள் இல்லை. எனது மோட்டார் சைக்கிள் எப்போதும் தூசு படித்துதான் இருக்கும் ஆனால் இம்முகாமிலிருந்து நான் வெளிக்கிடும் போது கழுவி துடைக்கப்பட்டிருக்கும், உண்மையில் இது எனக்கு பிடிப்பதில்லை. நான் அங்கு சென்று எனது கடமைகளை முடித்தபின் முகாம் பொறுப்பாளர் வழமைபோல் சாப்பிடக்கூப்பிட்டார். நான் பொறுப்பாளரிடம் ஒரு போராளியை பற்றி வினாவி எங்கே அவர் எனக்கேட்டேன். பொறுப்பாளரும் நீங்கள் அவனை பார்க்கவில்லையா? இல்லையே , அவனது குடும்பம் இராணுவக்கட்டுப்பாட்டுப்பகுதியில் வாழ்ந்துவருகிறது. அவனின் தாயார் போன மாதம் இறந்து எல்லாம் நடந்து முடிந்துவிட்டது,இரண்டுநாளுக்கு முதல்த்தான் எங்களுக்கு செய்தி கிடைத்தது. ஓ அப்படியா! ஆனால் அவன் வழமைபோல பயிற்சி எடுக்கிறான், எப்பிடியென்றாலும் அவனுக்குள்ள சோகம் இருக்கு. நான் வந்து சாப்பிடுகிறேன். அவன் தங்கும் கொட்டிலை கேட்டறிந்து அங்கு போனேன். அவனே வரவேற்றான் இருந்தாலும் அவன் மறைக்க முயலும் சோகம் வெளித்தெரிந்தது. அம்மாவை நான் நாலு வருசமாய் பார்க்கவில்லை . எனக்கு முதல் அம்மாவிற்கு போயிருவாவென்று நான் நினைச்சிருக்கவில்லை. கதைக்கமுடியாமல் ததும்பியவன் தொடர்ந்து கதைத்தான். நான் சின்னனில சாப்பாட்டு பார்சலை எடுக்காமல் பெடியள் கூப்பிட அவங்களோட பள்ளிக்கூடம் வெளிக்கிட்டுடுவான். அம்மா சாப்பாட்டை கட்டிக்கொண்டு கலைச்சுக்கொண்டு ஓடிவருவா, ஒருநாள் இல்லை இப்பிடி பலநாள் , சாப்பாட்டை என்ர பாக்கில வைச்சிட்டு மூச்சு வாங்கியபடி நான் போறதையே பார்த்துக்கொண்டு நிற்பா. சிலநேரம் அவ நிற்கிற இடம் பள்ளிக்கூட வாசலாகவும் இருக்கும். அவனை தேற்ற கதைத்துக்கொண்டிருந்தேன். உங்களிட்ட அம்மாவின் படம் இருக்கா? இல்லை என்றான். நான் உரியவர்களிடம் தெரியப்படுத்தினேன். நான் அடுத்த முறை அங்கு செல்கையில் அவனிடம் தாயின் படம் மட்டுமல்ல குடும்பப்படமும் இருந்தது. இன்று அவர்கள் இல்லை.


Share/Save/Bookmark

வியாழன், 9 மே, 2024

வயல்கள் கட்டிடங்களால் நிரம்ப வேலிகள் மதில்களாயின போதையை போல வாகனங்கள் பெருகுகின்றன குளம் புனரமையா மண்ணில் பெய்யும் மழையும் வீணாகிறது கட்டிடங்கள் வளர்ந்து காற்றோட்டத்தை ஊடறுக்க வெக்கை இலவசமாகிறது எங்கள் குழிகளை நாங்களே வெட்டுவோம்


Share/Save/Bookmark

செவ்வாய், 7 மே, 2024

காரிருளில் தோன்றிய பேரொளி எங்களை செதுக்கிய உளி அன்பில் உருவான பரந்த வெளி எளிமையே வாழ்வான விடிவெள்ளி நினைத்தாலே நெஞ்சினுள் விழும் மழைத்துளி நீங்கள் இல்லா வெற்றிடங்களில் எவருமில்லை தொட முயன்றும் தொட முடியா வானம் போல கனவுகளில் வந்தும் கலைந்து போகிறீர் ஒரு கை ஓசையை யாரும் கேட்டதுண்டா?


Share/Save/Bookmark

சனி, 4 மே, 2024

நானும் வன்னியும் - சிலநினைவுகள்

எனக்கு இலக்கம் இருபத்தியாறு ஒரு பொருந்தா இலக்கம் போல் இருக்கிறது. கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையின் இணைப்பாளராக இருபத்தியாறு சேவைகளைத்தான் என்னால் நடாத்த முடிந்திருக்கிறது . இருபத்தியாறு தடவைகள்தான் என்னால் இரத்தம் வழங்கக்கூடியதாக இருந்திருக்கிறது. வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் சுகாதார நோய்த்தடுப்பு கடமைக்காக நான் சென்று வராத பாதைகள் ஒழுங்கைகள் இருக்கமுடியாது என நினைக்கிறேன். ஒரு சராசரி சத்திரசிகிச்சை மருத்துவர் தன் வாழ்நாளில் செய்கின்ற சத்திரசிகிச்சைகளின் எண்ணிக்கையைவிட நிச்சயமாக நான் அதிகம் செய்திருப்பேன்.என் சத்திரசிகிச்சைகளின் பெறுபேறுகளும் சிறந்தது என்பதில் எனக்கு ஆத்ம திருப்தியிருக்கிறது.


Share/Save/Bookmark
நான் நம்பியிருக்கவில்லை மயிர்க்கொட்டி வண்ணாத்திப்பூச்சி ஆவதை மயிர்கொட்டியோடு மரமும் எரிந்தது இருகிழமை பொறுத்திருந்தால் வண்ணாத்திப்பூச்சிகள் வண்ண மயமாக்கியிருக்கும் பொறுத்தார் பூமியாள்வார்


Share/Save/Bookmark

வெள்ளி, 3 மே, 2024

மருத்துவமனை தாயொருவர் கணுக்கால் சுளுக்கி வந்திருந்தார் மகன் திடீரென இறந்த துக்கம் முகத்தில் பூசப்பட்டிருந்தது எப்ப வந்தனீங்கள் அம்மா? ஒருமாதம் முகத்தில் ஒரு கலவரம் வலிக்குதா அம்மா ஓம் நீங்கள் நடக்கிறீங்கள்தானே அது பிரச்சனை இல்லை பேரன் வருவான் தம்பி மொழிபெயர்த்து சொல்லுவியா? முகத்தில் ஒரு ஏக்கம்


Share/Save/Bookmark

புதன், 1 மே, 2024

எங்கும் நீ இல்லை எந்த விம்பங்களிலும் நீ இல்லை தொட்டுப்போகும் காற்றில் நீ இருக்கிறாய் சுவாசமாய் நீ இருக்கிறாய் பறவைகளின் நளினத்தில் நிறைகிறது வயல் சில பறவைகளில் பூக்கள் பூத்திருந்தன இசையோடு பூத்திருந்த பூக்கள் அசைந்ததில் நான் வானத்தில் இருந்தேன் ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு பெயர் வெவ்வேறு மொழியிலும் பறவைகளின் உறவுகளாய் சுமந்து திரியும் மாடுகளை வியந்து பார்க்கிறேன்


Share/Save/Bookmark
முற்றத்தில் சிறுகுருவிகளின் குலாம் ஒரே அளவில் ஒன்றையொன்று ஒத்திருந்தன என் சிறியமகள் விளையாடிக்கொண்டிருந்தாள் அப்பா! எனக்கு ஒரு குருவி வேண்டும் அவவின் அம்மாவிடம் கேட்போமா? தலையாட்டினேன் என் கைபிடித்து தத்தித்தத்தி நடந்துவந்தாள் இடைநடுவில் நின்றாள் களைத்துவிட்டீங்களோ? இல்லை அப்பா! அம்மாக்குருவி என்னை தன்னிடம் தருமாறு உங்களிடம் கேட்குமா? என் விடையறியாமலே திரும்புவோம் என்றாள் தூக்கச்சொன்னாள் என் கழுத்தை கட்டிக்கொண்டாள்


Share/Save/Bookmark
Bookmark and Share