இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

செவ்வாய், 24 டிசம்பர், 2024

நான் அழ விரும்பவில்லை தானாக வருகிறது அழுகை சிவப்பு கம்பள வரவேற்பில்லை இருந்தாலும் கரைந்து போகிறது துயர் கருமுகில்கள் கலைந்துபோகின்றன வழிப்போக்கனின் கனவில் சடைத்த மரங்களே இருக்கிறது தரைக்கீழ் நீரோ வேர்களோ இல்லை


Share/Save/Bookmark

திங்கள், 23 டிசம்பர், 2024

கழுத்தில் தொங்குகிறது இறுதி உணவு

அருகில் ஒரு சிறு கட்டற்ற கிணறு 50 குடும்பங்கள் நேற்று இங்கு இருந்திருக்கும் அழைப்பிற்காய் காத்திருக்கிறேன் சுதர்சன் ஆள் அரவத்திற்கு காது கொடுக்கிறான் வீரனொருவன் குழந்தையை கொஞ்சி மனைவியிடம் கொடுத்தனுப்பிவிட்டு தோள் சுமக்க திரும்புகிறான் வீரனின் இதயத்தின் ஈரம் கண்களில் தெரிகிறது சுதர்சனின் கண்களிலும் கண்ணீர் நிரம்புகிறது எங்களிடம் field compressor வாங்கிப்போகிறா ஜனனி அக்கா சன்னங்களின் பாடலுக்கு குறைவில்லை பயம் இல்லை பசியிருக்கிறது கழுத்தில் தொங்குகிறது இறுதி உணவு


Share/Save/Bookmark

வெள்ளி, 20 டிசம்பர், 2024

திரும்பிப்பார்க்கிறேன்

எமது வன்னிப்பிரதேசத்தில் யுத்தகாலத்தில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மருத்துவசுகாதார பணியும் மக்களுக்கு உதவிகரமாக இருந்தது. குறிப்பாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் இயங்கிய நடமாடும் மருத்துவசேவை , சுகாதார நிலையங்கள் இடர் தீர்க்க உதவின. இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கீழ் பணிபுரிந்த community health worker (CHW ) ற்குரிய சேவைக்கால பயிற்சிகளை நானும் மருத்துவர் ஜெயகுலராஜா ஐயாவும் மூத்த பொது சுகாதார பரிசோதகர் குணரட்ணம் ஐயாவும் வழங்கி அவர்களுக்கான தர உயர்வு வாய்மொழி பரீட்சையை (1999 ஆம் ஆண்டு ) ஆணைவிழுந்தானில் இயங்கிய தொழில்நுட்ப கல்லூரியில் நடத்தினோம். சமாதான காலத்தில் community health worker களுக்கு ஒரு சிறப்பு பாடத்திட்டத்தை உருவாக்கி கிளிநொச்சி இலங்கை செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் அவர்களுக்குரிய பயிற்சிகளை வழங்கி அதில் சித்தியடைந்தவர்களுக்கு community health promoter என்ற உயர்வு வழங்கப்பட்டது. இதில் நண்பன் சிவமனோகரனின் பங்களிப்பை நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன். என்னைப்பொறுத்தவரையில் எவ்வளவு மருத்துவ சுகாதார அறிவுள்ளவர்களை எங்கெங்கு உருவாக்க முடியுமோ அதை செய்வதே எனது நோக்காக இருந்தது.


Share/Save/Bookmark

திரும்பிப்பார்க்கிறேன்

மாத்தையா என்றும் சங்கேத மொழியில் மைக் அல்fவா என்றும் அழைக்கப்பட்டவர். இவருக்கும் எனக்குமான தொடர்பு நெருக்கமாக இருந்ததில்லை , தொண்ணூறுகளில் எங்களது பொறுப்பாகவும் இருந்தார்,அவரது பொதுச்சந்திப்புகளில் சந்தித்து இருந்தாலும் ஒருமுறை கூட மனம் விட்டு கதைத்ததில்லை . எண்பத்தியேழாம் ஆண்டு இந்திய இராணுவத்துடன் சண்டை தொடங்கிய நேரம் , யாழில் குளப்பிட்டி சந்திக்கும் ஆனைக்கோட்டைக்கும் இடைப்பட்ட பாதையில் மாத்தையா அண்ணை நின்று தாக்குதலுக்கான கட்டளை இட்டுக்கொண்டிருந்தார்.நான் இன்னுமொரு போராளியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். அவர் கேட்டதின் பேரில் சைக்கிளில் ஏற்றிக்கொண்டுபோய் அவர் சொன்ன இடத்தில விட்டேன், போகும் போதும் அவர் ஏதும் கதைக்கவில்லை, என்னை அவர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை, அது ஒரு பதற்றமான சூழலும்தான். கொக்குவிலில் இருந்த முகாம் ஒன்றில் தனி சந்திப்பை முடித்துவிட்டு அண்ணையுடன் வெளியில் வந்தேன். அண்ணை சந்திப்பு கொட்டிலை நோக்கிப்போனார். சந்திப்பு கொட்டிலிலிருந்து மாத்தையா அண்ணை வெளியில் வந்தார் , என்னைக்கண்டவுடன் அவரின் முகம் மாறியதை அவதானித்தேன். பின் அவர் அண்ணையுடன் கொட்டிலுக்குள் போய்விட்டார். தொண்ணூற்றியோராம் ஆண்டு ஆனையிறவு சண்டை நேரம் நான் மருதங்கேணியில் எனக்குரிய கள மருத்துவக்குழுவுடன் நின்றிருந்தேன். சண்டைக்களத்திலுள்ள கள மருத்துவக்குழுவின் மருத்துவர் காயமடைந்து பின் அதை பிரதி செய்த மருத்துவரும் காயமடைந்துவிட்டார். நான் எனது மருத்துவக்குழுவில் இருந்த மூத்த மருத்துவப்போராளியிடம் எனது அணியை வழிநடாத்த சொல்லிவிட்டு அதை மேலிடத்திற்கு அறிவித்துவிட்டு ஒரு மருத்துவப்போராளியையும் அழைத்துக்கொண்டு நேரடி களத்திலுள்ள கள மருத்துவக்குழுவை நோக்கி செல்வீச்சுகளுக்கிடையில் போய்க்கொண்டிருந்தேன். குறிப்பிட்ட தூரம் சென்றுகொண்டிருந்தபோது மாத்தையா அண்ணையின் அறிவிப்பு வந்தது " அங்கு போவது பாதுகாப்பு இல்லை,நின்ற இடத்திற்கே திரும்பவும்" . மாத்தையா அண்ணையிற்கு கீழிருந்த தாக்குதல் அணி பப்பா அல்fவா என்ற சங்கேத மொழியில் அழைக்கப்பட்டது. அந்த அணியிலிருந்த பலர் எனக்கு தெரிந்தவர்களாக இருந்தார்கள். மாத்தையா அண்ணையுடனான எனது இறுதி சந்திப்பை நான் எழுதப்போவதில்லை.


Share/Save/Bookmark

சனி, 7 டிசம்பர், 2024

கடிதத்தை எழுதிவிட்டேன் எங்கு சேர்ப்பது? உன்னையும் என்னையும் ஒருகோடுதான் பிரித்தது கோடு கடலாகி மலையாயிற்று பெருநினைவுகளில் மனதினுள் சுனாமி எழுகிறது பாறையாகிக்கொண்டே இறுகுகிறது இதயம் கனவுகளில் பசுமையுமில்லை அனலுமில்லை ஒளியுமில்லை இருளுமில்லை உப்புசப்பில்லா வாழ்வின் கனவில் வேறு என்ன தெரியும்?


Share/Save/Bookmark

வியாழன், 5 டிசம்பர், 2024

எனது " கண்ணீர்த்துளிகள்" என்ற கவிதைத்தொகுதி சகோதர நண்பன் தமிழ்ச்செல்வன் அவர்களின் 45 வது நினைவுநாளில் 2007 ஆம் ஆண்டு மார்கழியில் வெளிவந்தது. சகோதரன் தனோஜன் இக்கவிதைகளை நூல்வடிவமாக்கினான். இக்கவிதைத்தொகுதி தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சமர்பித்திருந்தேன் , அதில் " சகோதரா! உன் அருகில் ஒரு இடம் வை அருகில் வந்து உறங்குவதற்கு " என்றே எழுதியிருந்தேன். இன்று எங்கோ நிற்கிறேன் , மாவீரர்களுக்கும் எங்களுக்குமான தூரம் அருகிலில்லை, உயிரிழை அன்பில் மட்டும் இணைந்திருக்கிறேன்.


Share/Save/Bookmark

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

சாவை தொட்டு வந்தாலும் மரணத்திற்கு ஒத்திகை இல்லை மரணம் ஒரு முற்றுப்புள்ளி இறுதிப்பார்வையில் பதிந்திருக்கும் படம் யாது? விஞ்ஞானம் செல்ல வேண்டியதூரம் அருகிலில்லை


Share/Save/Bookmark
Bookmark and Share