திங்கள், 4 பிப்ரவரி, 2013

ஒரு அகதியின் புலம்பல்




இன்று எங்களை எமது தொழிலகத்திலிருந்து ஒரு தொழிற்சாலை காட்டக்
கூட்டிப்போயிருந்தார்கள்.நாங்கள் ஏழு பேர் போய் இருந்தோம். அந்த தொழிற்சாலை எனது எதிர்பார்ப்பை மீறி மிகப்பெரிதாகவும் மிகவும் நவீனமானதாயும் இருந்தது.எமது காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்  சாலையைப்போல் நான்கு மடங்காவது பெரிதாக இருக்கும்.இது உணவு தயாரிக்கும்  தொழிற்சாலை.அந்த தொழிற்சாலையில் வெறும் இரு நூற்றி அறுபது ஊழியர்களே கடமை செய்கிறார்கள். கிட்டத்தட்ட முழுக்க கொம்பியுட்டர் ஊடாக இயக்கப்படுகிறது. 
   
எனக்கு மனதில் ஏதோ குடையத்தொடங்கியது.எங்களுக்கு நாடு இல்லை.
இருந்தால் நாங்களும் இதை மாதிரி போடுவம். சமாதான காலத்தில் ஒரு முறை வெளி நாடு வந்து போயிருந்தேன். அப்ப எதையும் புதிதாய் கண்டால் அதை விளாவாரியாய் படமெடுத்து அது சம்மந்தமான அனைத்து தகவலும் தேடி கொண்டு போயிருந்தேன்.அதுல ஒரு கொஞ்சம் அங்க பிரயோசனப்பட்டுது. இப்ப இந்த தொழிற்சாலையைப் பார்க்கிறதுல
ஏதோ உயிரில ஒன்று விடுபட்ட மாதிரியான ஒரு உணர்வும் நெஞ்சில் ஒரு வலியும்தான் .      

இந்த தொழிற்சாலை பற்றி  நான் கதைக்க விரும்புபவர்கள் இப்போது உயிரோடு இல்லை.அவர்களை ஒவ்வொன்றாயும் கூட்டாயும் இழந்தாயிற்று. அவர்களைப்பற்றி , அவர்களின் விருப்புகளைப்பற்றி ,
அவர்களின் உழைப்பைப்பற்றி அவர்களின் அர்ப்பணிப்பைப்பைப்பற்றி
எழுதுபவர்கள் குறைந்து போயிற்று.உண்மைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் குறைந்து போகிறது.
போர் நெருக்கடி அதிகரித்தபோது எப்படியாவது விடுதலையை தக்கவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டவர்கள் தவித்தார்கள்.இரவு பகலென உழைத்தார்கள். எங்களுக்கு நிலம் இனி இல்லை என்றுவரும்வரை அவர்கள் பணி தொடர்ந்தது. பணியில் பலர் வீர மரணம்
அடைந்தனர். இறுதி நாட்களில் எல்லாம் இரு நேரக்கஞ்சிதான் வரும் அதிலும் ஒரு நேரத்தை மக்களிடம் கொடுத்துவிட்டு வாழ்ந்தவரில் இறந்தவர் அதிகம்.   அதனால் உண்மைகளின் கதைகளை படிக்கமுடியாது.

இறுதி நாள்வரை எங்களுடன் நின்ற மக்களை மனம் அசைபோடுகிறது. அந்த மணித்துளிகளில் வந்து என்ன செய்வது? என்று வினவி நின்ற மக்களை போய்வாருங்கள் என்று சொல்லவைத்த எமது ஏலாமையை எப்படி மீண்டும் நினைப்பது? தோற்றுப்போனோமா ? தேற்றமுடியாமல் நிலத்தில் சுருண்டு படுத்துக்கிடந்ததை யாரோடு மீட்டுவது? அந்த பறந்து திரிந்த துப்பாக்கிச்சன்னங்கள் ஏன் எங்கள் உயிரை விட்டுவைத்தன. விடை தெரியவில்லை எமக்கு. இறுதி கணத்திலும் சக போராளியின் வித்துடலை மணல் கிண்டி புதைத்து விட்டுத்தானே வந்தோம் கதைக்கமுடியாமல்.

நாளும் மக்களின் துயர் அறிந்து மேலும் சிதைந்து போகிறது மனம்.அரசோடு சேர்ந்தியங்கும் கூலிகளைவிட ஏன்? அனைத்துத்தமிழரும் ஒன்றாக முடியாது . ஏன் நாங்களே சண்டை போட்டுக்கொள்ள வேண்டும்? எமது சண்டை எதிரிக்குத்தானே வாய்ப்பாகும்.அவிந்த மனத்தில் முள்ளாய் எழுகின்றன கேள்விகள்.
ஒன்றாகாவிட்டால்கூட பரவாய் இல்லை ஏன்? எங்களுக்குள் சண்டை பிடிப்பான்? நான் ஒரு சாதாரணன் . உங்களில் பலரைப்போல எமது மக்களின் விடிவே எனது கனவு.
ஏதோ ஒரு தூரத்தில் இருந்து அதைக்கேட்டால் போதும்.இந்த அகதிக்கு ஆசை கொஞ்சம் கூடத்தான் என்று நினைக்காதீர்கள்.

- நிரோன் -



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share