வாழ்வில் மறக்கமுடியா நாள்
( 10/07/2007). அந்த நாளின் காலையும் வழமைபோல விடிந்தது.கிளிநொச்சி
நகர் தனக்கே உரிய அழகுடன் சுறுசுறுப்பானது.நான் காலை ஆறரை மணிக்கு கிளிநொச்சி பொன்னம்பலம்
மருத்துவமனை விடுதி நோயாளர்களை பார்வையிடத்தொடங்கி ( Ward rounds)ஏழரை மணிக்கு எனது
சுகாதார சேவைகளின் காரியாலயம் வந்து சேர்ந்தேன். பத்திரிகையை பார்வையிட்டு சில
நிர்வாக சந்திப்புகளைச் செய்தேன்.எமது தொற்று நோய்த்தடுப்பு அணி மாங்குளத்தில் தனது
வேலைத்திட்டத்திக்காய் முழு ஆயத்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.நானும் அந்த அணியுடன்
இன்று செல்வதே எனது கடமையாய் இருந்தது. அடிக்கடி ஒவ்வொருவராய் வந்து
என்னோடு கதைத்துச் சென்றுகொண்டு இருந்தார்கள். தொற்று நோய்த்தடுப்பு பிரிவு பொறுப்பாளரும்
கிளிநொச்சி சுகாதார சேவைகளின் பொறுப்பாளருமான தமிழ்வாணன் என்னிடம் வந்து ஒன்பது மணிக்கு
நிகழ்வு,வெளிக்கிடுவமா? எனக்கேட்டார்."ஆம்" என்று சொல்லி எழுந்து சென்று
வாகனம் நோக்கிப்போக ஒரு மோட்டார் சைக்கிள் வருகிறது.அந்த மோட்டார் சைக்கிளில் கலைப்பிரியன்
வருகிறார்.கலைப்பிரியன் தலைவரின் குடும்பத்தினருக்கான மருத்துவ போராளி. அவர் வந்து
என்னை இரகசியமாய் கூப்பிட்டு கதைக்கிறார். தலைவரின் தாய் தந்தையரை நீங்கள் பார்வையிட
வேண்டும்,ஒன்பது மணிக்கு கிளிநொச்சிக்கு வருகிறார்கள் என்கிறார். நான்
அவர்களுக்கான குடும்ப மருத்துவன். கலைப்பிரியனை அனுப்பிவிட்டுவர தமிழ்வாணன் என்னை நோக்கி
வருகிறான்.அவன் எதையும் ஊகிக்கக்கூடியவன் நாங்கள் போய் நிகழ்வை ஆரம்பிக்கிறம் நீங்கள்
பின்பு வாருங்கள் என்று சொல்லி விடை பெறுகிறான்.வாகனம் வெளிக்கிட முதல் மீண்டும் வாகன
சாரதி தீபன் என்னிடம் வருகிறார்.நான் போய் அவர்களை இறக்கிவிட்டு உங்களை ஏற்ற வருகிறேன்
என்கிறார்.வேண்டாம் நான் மோட்டார் சைக்கிளில் வருவேன் என்கிறேன்.அந்த விடையை விரும்பாதவர்போல்
போகிறார்.எங்கள் எரிபொருள் தட்டுப்பாடு இருதடவை பயணத்திற்கு இடம் கொடுக்காது.
ஏற்கனவே எமது வாகனங்கள் மீது இரு தடவைகள் கிளைமோர்த்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.ஒரு சக ஊழியரையும் இழந்திருந்தோம்.அதனால் நாங்கள் அவதானமாய் இருந்தோம்.மாங்குளம் - முருகண்டி பாதை இரு பக்கங்களிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததால்
வாகனத்தை பயன்படுத்தியிருந்தோம்.இழப்புகளை குறைப்பதற்காய் கிளைமோர் பிரதேசங்களில் மோட்டார் ஊர்திகளையே பயன்படுத்தினோம்.
ஸ்ரீலங்கா ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த்தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தாலும் அனைத்து பிரதேசங்களிலும் முடிந்தவரை பணி செய்தோம்.எமது சத்திர சிகிச்சை அணி - ஒன்று பள்ளமடு,பெரியமடு பிரதேசத்தில் கடமையில் இருந்தது. ஒவ்வொரு கிழமையும் நானும் வாமனும்( தமீழீழ சுகாதார சேவைப்பணிப்பாளர்,சத்திர சிகிச்சை அணி-மூன்றின் பொறுப்பு மருத்துவர்) ,சுதர்சனும்( தமீழீழ பற்சுகாதார பொறுப்பாளர்) மோட்டார் ஊர்திகளிலேயே சென்று வருவோம்.பின் தங்கிய பிரதேசங்களில் கௌசல்யன் நடமாடும் சேவையையும் கச்சிதமாய் நடத்தியிருந்தோம்.சுதர்சன் அனைத்து பாடசாலைகளிலும் பற் சுகாதார கிளினிக்குகளை வெற்றிகரமாய் நடத்தியிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக