வெள்ளி, 20 ஜூன், 2025
நாங்கள் சுவாசிக்கும் காற்று
வயல்கரையில் வியர்வை உலர்த்திய காற்றும்
கடற்கரையில் வெக்கையை தனித்த காற்றும்
கிபீர் இரைச்சலோடு வந்து முகத்தில் அறைந்த காற்றும்
குழந்தையிற்கு பால்மா வாங்கமுடியா தாயின் ஏக்க மூச்சும்
பட்டம் ஏறும் காற்றும்
புல்லாங்குழல் துளையினூடு வெளிவரும் இசைக்காற்றும்
மனிதர்கள் விலங்குகளின் இறுதி மூச்சும்
மகளே !
நாங்கள் சுவாசிக்கும் இக்காற்றே !!
காற்றுக்கு வேலியில்லை, பேதமில்லை
நாடுமில்லை, பகையுமில்லைே
வியாழன், 19 ஜூன், 2025
"போர்"
"போர்"
உனது தாயோ
எனது தாயோ அழுவாள்
வாழ்நாள் முழுவதும்
சமத்துவம்
வாழவில்லையெனில்
போர் வாழும்
சமத்துவமான உலகு
ஆறறிவின் இலக்காகவேண்டும்

"போர்"
நீ போய்முடியும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன்
சந்தித்துக்கொண்டதும்
பிரிந்துபோனதும்
நண்ப !
அது உனக்கு வரலாறு
எனக்கு ?
நீ எப்போதும்போல தெளிவாக இருந்தாய்
அப்போது கூட உன்னால் சிரிக்க முடிந்தது
துப்பாக்கி ரவைகள்
ஈசல்களாய் அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்தன
மீண்டும் சந்திப்போம் என்றுகூட சொல்லாமல்
நீ நடந்து கொண்டிருந்தாய்
நீ தந்த ரொட்டித்துண்டுடன்
நீ போய்முடியும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன்

நீ போய்முடியும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன்
திங்கள், 16 ஜூன், 2025
திரும்பிப்பார்க்கிறேன்
1991 ஆம் ஆண்டு ஆரம்பகாலம், சுதுமலையில் இயங்கிய மூன்று மருத்துவவீடுகளில் இருந்த காயமடைந்த போராளிகளுக்கான மருத்துவராக நான் பணி செய்தேன். அநேகமாக ஒவ்வொருநாளும் மூன்று வீடுகளில் இருந்த காயமடைந்த போராளிகளையும் பார்த்துவருவேன். ஒரு காலில் காயமடைந்து மண் மூட்டை சிகிச்சையில் இருக்கும் ஒரு போராளி பற்றி அந்த வீட்டிற்குரிய மருத்துவ போராளி எனக்கு தகவல் தந்தான். அவன் சரியாக சாப்பிடுவதில்லை, மற்றையவர்களுடன் கதைப்பதில்லை, கதைப்பதையே குறைத்துவிட்டான். அன்றிலிருந்து ஒவ்வொருநாளும் அவனோடு அரை மணித்தியாலமாவது கதைத்துவந்தேன். அவனது ஒடுங்கிய முகத்தில் விரிவும் சிரிப்பும் படிப்படியாக வருவதை எல்லோரும் உணர்ந்தார்கள். அவன் ஒரு தனித்துவமான மருத்துவ நிர்வாகியாய் வளர்ந்து , வரலாற்றில் பெயர் பதித்து, தான் நேசித்த மக்களுக்காய் தாய்மண்ணோடு கலந்தான் .அவன் வேறுயாருமல்ல, களமருத்துவப் பொறுப்பாளர் திவாகர்.

திரும்பிப்பார்க்கிறேன்
சனி, 17 மே, 2025
எதுவும் சொல்வதற்கில்லை
கடல் வற்றிற்று மூச்சுகள் நின்றன
யாருமில்லை ஓலமில்லை
வெந்த பூமியை கழுகுகள் தின்றன
உம் நினைவோடிருப்போம் நினைவிழக்கும்வரை
கனவை சுமக்காத வலியால்
நிதம்
உழன்றுகொண்டிருக்கிறது உயிர்
எதுவும் சொல்வதற்கில்லை
மனம் தவித்துக்கொண்டிருக்கிறது
சாத்தியமேயில்லாத
இன்னொரு சந்திப்புக்காய்

எதுவும் சொல்வதற்கில்லை
வெள்ளி, 2 மே, 2025
வெள்ளி, 11 ஏப்ரல், 2025
நான் புலம்பெயர்ந்து பதினைந்து வருடங்களை கடந்துவிட்டது. நான் இங்கு வந்ததிலிருந்து வேறு இனத்தை சேர்ந்தவர்களோடும் பழக சந்தர்ப்பம் கிடைத்தது , எனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்தை பற்றி சொல்லிவந்திருக்கிறேன். நான் சந்தித்த அநேகருக்கு எமது பிரச்சனை பற்றிய அறிவு அறவே இருந்திருக்கவில்லை என்பது கவலையானது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)