இன்றைக்கு எப்படிஎன்டாலும் அவனோடை கதைக்கோணும் .
அவன் என்னை தன்னுடன் கதைக்குமாறு என் நண்பன் ஊடாக
தெரியப்படுத்தியிருந்தான்.அவன் யார் என்று ஓரளவு புரிந்தாலும்
அவனது முகம் ஞாபகத்திற்கு வரவில்லை.அவன் ஒரு இளம்
போராளி 2007அல்லது 2008இல் இடுப்பில் காயப்பட்டு இடுப்பிற்கு கீழ்
இயங்காது.அவன் இப்போது வவுனியா ஆஸ்பத்திரியில
இருக்கிறான் .
தம்பி எப்படியிருக்கிறீங்கள்?
அண்ணா நீங்களா?சந்தோசம் அண்ணை.நீங்கள் எப்படியும்
கதைப்பீங்கள் என்று எதிர்பார்த்தனான் .
அண்ணை படுக்கைப்புண் வந்து இப்ப அது பெருத்து
வலது இடுப்பெலும்பு முழுசாய் உக்கிற்றுது.சரியான
வலி அண்ணை .ஒரு ஊசிக்கும் கேக்குதில்லை.இரண்டு
சிறுநீரகமும் பழுதாய்போச்சு .நாளைக்கே கதைக்கேலாமல்
போகலாம் என்று சொல்லீனம். எப்படியிருக்கிறீங்கள்?
இருக்கிறம் தம்பி நாளைக்கு சாகப்போறவனிட்ட என்னத்தை
சொல்லுறது?வீட்டுக்காரர் எப்படி ? கதையை மாற்றுவதட்காய்
கேட்டேன்.
எனக்கு ஒரு அண்ணன் தான் அவன் வேலை செய்யுறான்.
அப்பாக்கு தொய்வு வருத்தம் தானே .அம்மா இடைக்கிடை
வருவா விபூதியோட .அதுகளுக்கு என்னால கஷ்டம்.
அங்க இருந்திருந்தால் எனக்கு பிரச்சனை இல்லை .இன்னும்
கொஞ்சக்காலம் இருந்திருப்பன்.அப்படி வேற ஆக்களால
பார்க்க ஏலாது .நான் கரும்புலி மேஜர் சிறிஅண்ணை மாதிரி
சாதிச்சிருப்பன்.இப்ப வீணாய் சாகப்போறன்.
தொடர்ந்து கதைத்தான் .நான் கதைக்க வார்த்தைகளை
தேடிக்கொண்டிருந்தேன்.
அண்ணை எங்களுக்கு இயக்கத்தைத்தவிர யாரைத்தெரியும்?
அண்ணை எங்களுக்கு இயக்கத்தைத்தவிர யாரைத்தெரியும்?
எங்கட ஆட்கள் எல்லாம் கஷ்டப்படுறாங்கள்.முந்தி எங்களுக்கு
பந்தம்பிடிச்ச கொஞ்சம் இப்ப அவனுக்கு பந்தம் பிடிக்குது.
எங்கட சிலதும் ஆமியோடையும் ஒட்டுக்குழுவோடையும்
திரியுது.கடைசி நேரத்தில கொஞ்சம் பங்கருக்குள்ள தானே
ஒளிச்சிருந்ததுகள் அதுகள் தான்.விடாமல் கதைத்துக்கொண்டிருந்தான்.
இடைக்கிடை அண்ணை உங்களுக்கு ஏதும் வேலை இருந்தால்
நிற்பாட்டுங்கோ என்றும் சொன்னான். பாவம் அவன் இப்ப
அவனோட கதைக்காட்டி எப்ப அவனோட கதைக்கிறது.
அண்ணை முந்தி நாங்கள் இருந்தமாதிரி ஒருநாளாவது
வாழோணும் என்று ஆசையாய் இருக்கு.நான் மேல
போனால் உங்கட பெடியலிட்ட சொல்லுவன் அண்ணை
உங்களுடன் கதைச்சன் எண்டு. என்னைப்பற்றி நான்
உங்களுக்கு தெரியப்படுத்திட்டன் அண்ணை .எனக்கு
மாவீரர் கல்லறையும் இல்லை இறுதி மரியாதையும்
இல்லை பிரச்சனையில்லை அண்ணை.இடைக்கிடை
இப்ப உடம்பெல்லாம் வலிக்குது என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
கதைத்துக்கொண்டிருக்கும் போதே அவனது தொலைபேசி
நின்றுவிட்டது .பின் அவனுடன் தொடர்புஏற்படுத்த முயன்றேன்.
வெற்றியளிக்கவில்லை.அடுத்தஇரண்டாம்நாள்அவன் இறந்துவிட்டதை
நண்பன்தெரியப்படுத்தினான்.அவனது தகனம் வவுனியாவில்
நடந்ததாகவும் தான் உட்பட ஆறு பேர் பங்குபெற்றியதாய்
அறியப்படுத்தினான்.
என் உளவளசிகிச்சையாளர் என்னை எழுத
தூண்டுகிறார்.அதனால் எழுதவேண்டியிருக்கிறது.
-நிரோன்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக