செவ்வாய், 30 ஏப்ரல், 2024
நீ அமைதியாய் இருக்கிறாய்
மனதிலோ எண்ண அலைகள்
உறங்கும்வரை சதா ஏதோ ஓடும்
யாருமறியார்
நீ தத்தி நடந்து
எழுந்து ஓடித்திருந்த முற்றத்தில்
உன் உயிரற்ற உடல் வைக்கப்பட்டிருக்கிறது
பிறப்பும் இறப்பும் எங்கோ எழுதப்பட்டன
அடுத்த ஐம்பது வருட இடைவெளிக்குள்
நீ வாழ்ந்த தடங்கள் மறைந்துவிடும்
இன்றும் நீ நிம்மதியாய் இல்லை
ஏதோ ஒன்றை தேடி ஓடிக்கொண்டிருக்கிறாய்
அல்லது
ஏதோ பிரச்சனை உனை குடைந்துகொண்டிருக்கிறது
வியாழன், 25 ஏப்ரல், 2024
சனி, 20 ஏப்ரல், 2024
நினைவுகளில் தொக்கி நிற்கும்
கண்ணீர்த்துளிகள் உறைவதில்லை
இதயங்களாய் வீழ்ந்து வெடிக்கும்
சன்னங்கள் சுடும் காயங்களும்
ஆறுவதில்லை
பிறந்தோம் வளர்ந்தோம்
தாய்(மண்)மனம் அறிந்தோம்
இலகு வாழ்வு துறந்தோம்
இலக்கு வாழ்விற்காய்
நாலு பேர் சுமந்து போனார்கள்
சாம்பலாய் பூத்தது வாழ்வு
யாரோ ஒருவன் நினைவை சுமப்பான்
இதுதான் நியதி

வெள்ளி, 19 ஏப்ரல், 2024
பசேலென்று
குடைபோல் விரிந்திருந்த ஆலமரம்
விழுதுகளையும் ஊன்றி உறுதி தளராதிருந்தது
வழிப்போக்கருக்கு ஓய்விடம்
சிறார்களுக்கு ஒரு சிறுவானம்
திடீரென சந்தையாகும் ஆலடி
சுற்றுக்கே குளிர்தரும் கற்பகம்
ஆச்சியும் அறிந்த இடம்
எவ்வளவு கதைகளை கேட்டிருக்கும்
காலையும் மாலையும் ஊர்சுற்றி
மதியம் இங்கு சந்திப்போம்
இன்று
பிரதேசபை தறித்துவிட்டது
வெக்கையும் வேர் பிடுங்கிய குழியும்
எங்களுக்குள்ளும்
ஊருக்கே இணைப்பாக இருந்தது
இன்றில்லை
நாளை
பெருங் கட்டிடம் எழும் என்கின்றனர்
பறவைகள்
தரிப்பிடம் இழந்து பறந்துகொண்டிருக்கின்றன

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024
வெள்ளி, 12 ஏப்ரல், 2024
வேடர்கள் வருகிறார்கள்
வன அமைதியை கிழித்து செல்கிறது
ஒரு பறவையின் கூச்சல்
வேடர்கள் வருகிறார்கள்
வனஉயிரிகளின் நாளாந்தம் கலைகிறது
பச்சைக்காடுகளில் சிவப்பு கலக்கிறது
தொங்குநாக்குகளுடன் நாய்கள்
அங்குமிங்கும் திரிகின்றன
நாய்கள் வனத்தில் வாழ்வதில்லை
இறைச்சியோடு வரும் வேடர்களை
வரவேற்கும் இருகால் உயிரினங்கள்
வேடரின் நாய்களை கவனிப்பதில்லை

வேடர்கள் வருகிறார்கள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2024
வயலை தொடர்ந்திருந்தது
பற்றைக்காடு
சிறார் எங்களுக்கு
வயல் ஒரு உலகம்
அக்காடு பிறிதொரு உலகம்
வயலின் குளிர்மையில் ஒன்றாவோம்
காற்றில் சிலிர்ப்போம் மிதப்போம்
செம்பகம் மைனா கிளியென
பறவைகள் எமை பரவசப்படுத்தும்
முயல்களை துரத்துவோம்
பற்றைக்காட்டில்
பனை கொய்யா ஈச்சமரங்கள்
இன்னும் பல
அணில் உடும்பு என
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரிய பல காட்சிகள்
எதுவும் இன்றில்லை

சனி, 6 ஏப்ரல், 2024
காணாமல் போனவனின் தாய்
2008 ஆம் ஆண்டு காலம்
அவன்
தாயாருடன் மல்லாவியில் வசித்தவன்
வவுனியாவுக்கு போனவன் திரும்பிவரவில்லை
உறவென்று ஒரு வளர்ப்புநாய்
குடிசை முன்குந்தில்த்தான்
அவன் உறங்குவான்
காலடியில் நாய் படுத்திருக்கும்
அவன் இல்லையெனில்
முற்றத்தில் விழித்திருக்கும்
இறுதி யுத்தத்தில்
மல்லாவி இடப்பெயர்வன்று
நாய் திடீரென குந்தில் ஏறிப்படுத்தபடி
அங்கேயே இறந்து போயிற்று
2024 ஆம் ஆண்டு காலம்
அன்று தொட்டு இன்றுவரை
மகனை தேடி வவுனியா சென்று
கப்பம் கொடுத்தும் ஒன்றும் இல்லை
அழுவதற்கு கண்ணீர் இல்லை
நாவும் வறண்டு வெடித்துப்போயிற்று
மூச்சிழந்து வீழ்ந்தாள்
காணாமல் போனவனின் தாய்
அழுதபோதும் கண்ணீர் வரவில்லை எனின்
அதன் வேதனையை யார் அறிவார்?
அழும் குரலின் கேரலை
கேட்டிருக்கிறாயா?
துயர்ப்பாடலில்
நடுங்குகிறது சுற்றம்
தாயே !
இனி உனக்கு சோகம் இல்லை
நீதியோடு உன் உடலும் எரியட்டும்

காணாமல் போனவனின் தாய்
வியாழன், 4 ஏப்ரல், 2024
வாழ்க்கையில் கணம் இல்லை
யாவரும் பரஸ்பரம் கனம் பண்ணுவார்
இன்று அப்படியல்ல
இடிந்து கிடந்த கட்டிடக்குவியலில்
ஒற்றைக்கையை வைத்து
உன்னை அடையாளம் கண்டேன்
பசித்த வயிறுக்கு
சோறு போட்ட கையம்மா
சாகாவரம் ஒன்றை நீ கேட்டாய்
அன்பை பரிசளித்தார் கடவுள்
சாகாவரம்
இளமையில் இனிப்பாகவும்
முதுமையில் தனிமையில் கசப்பாகவும்

புதன், 3 ஏப்ரல், 2024
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)