இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

சனி, 1 பிப்ரவரி, 2025

திரும்பிப்பார்க்கிறேன்

1996 ஆம் ஆண்டு சித்திரை மாதம் ( திகதி சரியாக தெரியவில்லை) யாழ் மாவட்டம் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. எமது சத்திரசிகிச்சை கூட உபகரணங்களை இயன்றளவு வன்னிக்கு அனுப்பிய பின் கிளாலியூடாக கடற்புலிகளின் படகில் பயணித்து பூநகரியில் இறங்கிய நினைவு இன்றுபோல் இருக்கிறது. அடுத்தநாளிலிருந்து முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள் வரை சத்திரசிகிச்சையாளனாகவோ சத்திரசிகிச்சைகூடங்களை வழிநடத்துபவனாகவோ பயணித்தேன்.எங்கள் சத்திரசிகிச்சை அணிகளின் பணியென்பது சாதாரணமானது அல்ல, எமது பணிகள் சரியான முறையில் பதியப்பட்டிருக்குமானால் சாதனையாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கக்கூடும். எமது சத்திரசிகிச்சையின் வெற்றிவீதம் சர்வதேசத்தில் விதந்துரைக்கப்படுகின்ற வெற்றிவீதத்திற்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் நடமாட்டங்களுக்கு நடுவிலும் சத்திர சிகிச்சை கூடங்களையோ மக்களுக்கான மருத்துவசேவைகளையோ நடத்தியிருக்கிறோம். எமது சகாக்களின் அநேகர் தங்களது பணியினூடாவே புடம் போடப்பட்டார்கள். அந்தகாலத்திலெல்லாம் எமது சகாக்களின் பணி நாளாந்தம் சுமார் இருபது மணித்தியாலங்களாய் இருந்திருக்கிறது. எமது சகாக்களின் சிலர் உடலில் ஓடும் குருதியின் அளவைவிட இன்னுமொரு மடங்கு குருதியை மொத்தமாக தமது பணிக்காலத்தில் தேவையானவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.இந்த பணிக்கு பல்வேறு விதத்திலும் உறக்கம் துறந்து உழைத்த பலர் இன்று எம்மோடு இல்லை ஆனால் அவர்கள் என்றும் எம் இதயங்களில் வாழ்வார்கள். எமது சகாக்கள் ஒவ்வொருவருக்கு பின்னாலும் தனித்துவமான வரலாறு இருக்கிறது. நாம் யாழ்ப்பாணத்தினை இழந்தபோது சிறிலங்கா அரசும் இராணுவ அரசியல் ஆய்வாளர்களும் புலிகளால் இனி பெரிய தாக்குதல்களை செய்யமுடியாது என கணித்தனர் ஆனால் அதற்கு பிறகுதான் பெரும் வரலாற்றுத்தாக்குதல்கள் நடந்தன. தலைமையினதும், மூத்த மருத்துவர்களதும் , மருத்துவநிர்வாகிகளதும், ஒட்டுமொத்த மருத்துவப்பிரிவினதும் கூட்டு முயற்சி யாவற்றையும் சாத்தியமாக்கின.


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share