புதன், 24 ஜூன், 2020

திரும்பிப்பார்க்கிறேன்


1970 களில் எங்களது நேரங்களை அழகுபடுத்தியதில் வானொலிக்கு கணிச பங்கிருக்கிறது. காலைத்தென்றலில் தொடங்கி பொங்கும் பூம்புனலில் வசமாகி இரவின் மடியில் வரை மனது குளிர்ந்திருக்கும்.
சனிக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் "ஒரு வீடு கோயிலாகிறது " என்ற தொடர்நாடகமும், ஞாயிற்றுக்கிழமைகளில் " தணியாத தாகம் " என்ற தொடர்நாடகமும் இன்றும் நினைவில் படர்ந்திருக்கிறது. இப்படித்தான் ஒருநாள் கிறிக்கெற் தமிழ் வர்ணனையை வானொலியில் கேட்டுக்கொண்டிருந்தோம். இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து கொண்டிருந்தது. இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கவாஸ்கர் நூறு ஓட்டங்களை பூர்த்தி செய்ய பார்வையாளர் ஒருவர் மாலையுடன் மைதானத்திற்குள் ஊடறுத்து ஓடுகிறார். அவரை துரத்தி இரு போலிஸ்காரர்கள் செல்கின்றனர். இதோ அவரை பிடித்து நிலத்தில் வீழ்த்திவிட்டனர். மாலையையும் ஒரு பொலிஸ்காரர் பறித்துவிட்டார். ஓ! இப்போது பொலிஸ்காரர் மாலையுடன் ஓடுகிறார். பொலிஸ்காரர் மாலையை கவாஸ்கருற்கு போட்டுவிட்டு அவரருகில் வாயெல்லாம் பல்லுடன் நிற்கிறார். இங்கிலாந்து அணிவீரர்கள் யாவற்றையும் வியப்புடன் பார்க்கிறார்கள். வர்ணனையாளர்கள் அப்துல் ஜபாரும் சீனிவாசனும் எங்களையும் மைதானத்திற்கே கூட்டிப்போயிருந்தார்கள்.       


Share/Save/Bookmark

வெள்ளி, 29 மே, 2020

திரும்பிப்பார்க்கிறேன்


2004 ஆம் சித்திரை மாதம் , தலைவரை சந்திக்கிறோம். அடுத்தநாள் காலை திருகோணமலைக்கு வெளிக்கிடவேண்டும். யாருடைய முகத்திலும் ஈயாடவில்லை. அண்ணையின் முகத்திலும் சோகரேகைகளே விரிந்திருக்கிறது. அண்ணை சொல்கிறார் " இரண்டு பக்கமும் எங்கட ஆட்கள்தான், இன்னுமொரு டொக்டர் போனால் நல்லா இருக்கும்" என்னைப்பார்த்து  "யார் வந்தால் நல்லா இருக்கும்"?.  அடுத்தநாள் மனோஜ், அஜோ அண்ணையுடன் நாங்கள் வெளிக்கிட்டோம். மற்றபக்கமும் எம்மால் உருவாக்கப்பட்ட மருத்துவ அணிதான், அது மனதுக்கு திருப்தியாக இருந்தது.   எனது சத்திரசிகிச்சைகூடம் சம்பூரில் இயங்கிற்று, என்னுடன் மருதனும் இருந்தார். அஜோ அண்ணையின் சத்திரசிகிச்சைகூடம் எங்களுக்கும் சண்டைபிரதேசத்திற்கும் நடுவில் இயங்கிற்று. எங்களிடம் காயமடைந்து வந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தோம். உண்மையிலேயே இருபக்கத்தினரும் இருந்தனர். ஆனால்       
நாங்கள் அவர்களைப்பற்றி கேட்கவேயில்லை. 


Share/Save/Bookmark

வியாழன், 28 மே, 2020

திருப்பிப்பார்க்கிறேன்

1994 ஆம் ஆண்டு, சிறப்பு பயிற்சி முகாம், முகாம் பொறுப்பாளராக கடாபி அவர்கள் இருந்தார். பயிற்சியின் இணைப்பாளராக ராஜு அண்ணை இருந்தார். நான் முகாமின் மருத்துவப்பொறுப்பாளராய் இருந்தேன். மூவரும் பயிற்சியிலும் பங்குபற்றினோம். பயிற்சி காலை ஐந்து மணிக்கு தொடங்கி மாலை ஆறு மணிக்கு முடியும். கடாபி அவர்கள் மிக நேர்த்தியாக நிர்வாகம் செய்தார். ராஜு அண்ணையும் கடாபி அவர்களும் தங்களுக்கே உரிய கடமைகளை ஆர்ப்பாட்டமில்லாமல் அழகாக செய்தார்கள்.எங்களது முழு உழைப்பும் அந்த பயிற்சி முகாமை வெற்றிகரமாய் முடிப்பதுதான். எங்களுடன் பயிற்சி எடுத்த சக போராளிகளின் பாடத்திட்டங்களில் ஏற்படும் சந்தேகங்களை அப்பப்ப நானும் நிவர்த்தி செய்தேன்.ஓய்வுநேரங்களில் ராஜு அண்ணை பயிற்சி வழங்குபவர்களுடன் இராணுவ விஞ்ஞானத்தில் உள்ள தெரியாத விடயங்களை கேட்டுக்கொண்டிருப்பார். அநேகமாக நானும் ராஜு அண்ணையுடன் இருப்பேன். அந்த பயிற்சி முகாம் எங்கட அமைப்பின் வளர்ச்சியில் முக்கியமானது. அந்த பயிற்சி முகாமில் வசந்தன், மாதவன், ராஜேஷ், குமரன், மணியரசன், அறிவன் உள்ளிட்ட பலர் பயிற்சி எடுத்திருந்தார்கள். ராஜு அண்ணையையும், கடாபி அவர்களும் நண்பராய், சகோதரராய், ஆசான்களாய் என்றும் என் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள் .


Share/Save/Bookmark

செவ்வாய், 5 மே, 2020

பழைய நினைவுகளிலிருந்து

எனது கணிசமான எழுத்துக்கள் பொதுவெளிக்கு வராமல் ஏதோ ஒரு காரணத்தால் அழிந்துபோயிற்று. அழிவதற்கு பலவழிகள் இருந்திருக்கின்றன. நான் களமருத்துவ கடமையிற்கு செல்லும்போது எப்போதும் என்னிடம் note book உம் பேனையும் இருக்கும். இயற்கையை ரசிப்பதும் கவிதைகள் எழுதுவதும்தான் ஓய்வுநேரத்தில் என் பொழுதுபோக்கு. அப்படித்தான் 1991 ஆம் ஆண்டு ஆனையிறவு தாக்குதல்   
காலத்திலும் ஒரு சிறுகவிதைகள் நிரம்பிய note book எனது காற்சட்டை பையினுள் இருந்தது. தொடையில் காயமடைந்து இரத்தக்குழாய் அறுந்த  போராளி ஒருவரின்  இரத்தப்போக்கை கட்டுப்படுத்துகையில் எனது note book போராளியின் குருதியில் ஊறிற்று. கவிதைகள்  அழிந்துபோனாலும் அந்த போராளியின் காலினை காப்பாற்றிய திருப்தி இன்றும் இருக்கிறது.1993 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும்  ஒரு கவிதைக்கொப்பியை தவறவிட்டிருக்கிறேன். இந்த கவலையில் சிலகாலம் கவிதை எழுதாமலும் இருந்திருக்கிறேன். 1987 இல்  இந்திய இராணுவத்தாலும் 2009 இல் இலங்கை இராணுவத்தாலும் என் எழுத்துக்கள் அழிந்துபோயிற்று. ஒரு கடின வாழ்க்கையின் பதிவுகளை காப்பாற்றமுடியாமல் போன துயர் என்றும் என் மனதில் அப்பியிருக்கும்.  


Share/Save/Bookmark

புதன், 29 ஏப்ரல், 2020

பழைய நினைவுகளில் இருந்து.


பாதுகாப்பகழி அமைப்பது தொடர்பான கட்டுரை ஒன்றை எழுதி ஈழநாதத்திற்கு அனுப்பிவிட்டு எமது விழி மருத்துவ இதழுக்கு  பாதுகாப்பகழி அமைப்பது பற்றிய கட்டுரை ஒன்றை எழுதிக்கொண்டிருந்தேன். கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனையில் இருந்து அவசர அழைப்பு வருகிறது. பூநகரியிலிருந்து பதின்ம வயது சிறுவன் ஒருவன் பாம்புகடித்து மயக்கநிலையில் உள்ளதான தகவல். கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இருந்து உடனடியாக  கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனையிற்கு செல்கிறேன். சிறுவனின் பெற்றோர் பாம்பினை உயிருடனேயே கொண்டுவந்திருந்தனர்.  ஒளித்து பிடித்து விளையாடும்போது சிறுவனுக்கு
பாதுகாப்பகழியினுள்  பாம்பு கடித்திருக்கிறது. சிறுவனை காப்பாற்றினோம் கூடவே பாதுகாப்பகழியின் பராமரிப்பைப்பற்றியும் எழுதவேண்டி வந்தது.



Share/Save/Bookmark

வியாழன், 5 டிசம்பர், 2019

தனோஜன்

இன்று அதிகாலை வாமனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. ஓ தனோஜனும் எங்களைவிட்டு போய்விட்டானாம். ஒவ்வொருமுறையும் இழப்புகளை அறிகையில் மனதில் எங்கிருந்து என்று தெரியவில்லை புதியவலி வருகிறது. நான் இருக்கும் இடத்தில் தனோஜனை அறிந்தவர் யாருமில்லை அதனால் என்துக்கத்தை பகிரமுடியாமல் திக்குமுக்காடினேன். மதியம்தான் வாமனுடன் கதைக்கமுடிந்தது. என்னவேலை செய்தாலும் தனோஜன்தான் முன்னுக்கு நிற்கிறான். 2007 ஆம் ஆண்டில் சுட்டதீவு (பரந்தன்) கடற்கரையோரமாய் ஒருதொகுதி காவலரண்களை நாங்கள் பொறுப்பெடுத்திருந்தோம். காவலில் இருக்கின்ற எம் சகபோராளிகள் பகல் நேரங்களில் பதுங்குகுழி அமைக்கின்ற கடினவேலைகளையும் செய்வார்கள். அநேகமாய் நான் அங்கு செல்லும்போது எனது மோட்டார் சைக்கிளில் எனக்கு பின்னுக்கு அவன் இருப்பான். தனோஜனாய் கேட்டுத்தான் வருவான். பரந்தன் சந்தையில மரவள்ளிக்கிழங்கும் மாட்டிறைச்சியும் வாங்குவோம் என்பான் ,வாங்கிப்போவோம். காவலரண் கடமையில் இருப்பவர்களுக்கு நல்ல உணவு சமைத்துக்கொடுக்கும் அவா அவனிடம் இருக்கும்.தனோஜன் மாட்டிறைச்சியும் மரவள்ளிக்கிழங்கும் போட்டு சமைப்பது எனக்கு மட்டுமல்ல எங்கள் எல்லோருக்கும் புதிதுதான் , அதன் சுவையும் தனிதான். தனோஜன் எமது சகபோராளி, எமது பணிமனையின் கணனி இயக்குனரும் தான் . முன்பெல்லாம் எங்களுக்குள் இழப்புகள் வரும்போது எஞ்சியிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் ஆற்றுப்படுத்துவோம். இழப்புகளின் வலியை திசை திருப்ப எமது வேலைகளில் அதீதமாய் ஈடுபடுவோம். இன்றைய நாள் நீண்ட கடினமான நாளாக இருக்கிறது.


Share/Save/Bookmark

சனி, 19 அக்டோபர், 2019

அன்றொரு மதிய பொழுது

இராணுவப்பிரதேசத்திற்குள் காயமடையும் போராளிகளுக்கு அங்குதான் எங்காவது சிகிச்சை வழங்கப்படும். அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கி காயம், சிகிச்சையின்  முன்னேற்றம் தொடர்பாய் அறிக்கை வழங்கவேண்டும். அப்படியொருநாள் (திருநகரில்) தொலைபேசியில் பேசிமுடித்து வெளியில் வர  மலரவன் மாஸ்டர் என் ஒன்றுவிட்ட தம்பி நின்றுகொண்டிருந்தான். போகாதையுங்கோ அண்ணை உங்களுக்கு தெரிந்த இன்னொரு ஆளோடையும்
கதைக்கோணும். அவன் தொலைபேசியில் தொடர்பெடுத்து தந்தான். நான் கதைத்தவன் மிக ஆவலாய் கதைத்தான். அவனுக்கு தேவையான மருத்துவ உதவியை எப்பவோ செய்திருந்தேன். உண்மையில் பலருக்கு அப்படி உதவியை (கடமையை) செய்வதுண்டு எனக்கு பிறகு அவர்களை ஞாபகம் இருப்பது அரிது. அன்றும் அப்படித்தான் இருந்தும் ஞாபகம் இல்லை என்றால் அவன் புண்பட்டு விடுவான் என்று அவனை தெரியும் என்றேன். சிலகிழமைகளுக்கு பின்  அவன் உயிரோடு இல்லை என்பதை சொல்லி மலரவன் மாஸ்டர் கலங்கினான்.  மலரவன் மாஸ்டர் இளகிய மனம் உள்ளவன் அவனையும் களமுனையில் இழந்துவிட்டோம்.    


Share/Save/Bookmark
Bookmark and Share