வியாழன், 21 மார்ச், 2024
உங்கள் நண்பனல்ல
எந்த இலட்சியத்திற்காய்
உங்களை தந்தீர்களோ
அந்த இலட்சியத்திற்கு
மாறாய் போபவன்
உங்கள் நண்பனல்ல
விலைபோகமுடியாதவனே போராளி
கூட்டுக்குள் வாழ்ந்தாலும்
ஒரு மெழுகுதிரியாய் ஒளிர்வான்
ஞாயிறு, 17 மார்ச், 2024
அவன்
என்னோடு பள்ளியில் படித்தவன்
வகுப்பறை கட்டுப்பாடுகளை மீறிக்கொண்டிருப்பான்
ஒரே அடிவாங்குவான் அழுவான்
அடுத்தநாளும் அப்படித்தான்
வீட்டிலும் அடிவாங்கிய காயங்களுடன் வருவான்
பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தினான்
ஊரடங்கு நேரத்தினுள்
இந்திய இராணுவத்தால் சுடப்பட்டான்
அவனுக்கு ஒரு வியாதி இருந்திருக்கிறது
பெற்றோருக்கோ ஊரவருக்கோ ஆசிரியருக்கோ
அது தெரிந்திருக்கவில்லை
பாவம் அவனுக்கும் அது தெரிந்திருக்கவில்லை
காலப்புண் ஆறுவதில்லை

நண்பா! நீயும் நானும் ஒன்றல்ல வேறுமல்ல
நான் எழுதியதை நீயோ
நீ எழுதுவதை நானோ எழுதுவதில்லை
நண்பா !
நீ புலம்பெயர முடிவெடுத்தாய்
புகையிரத நிலையம்வரை வந்தேன்
நாற்பது வருடங்கள்
நீ நட்பின் இறகில் சிறகெடுத்தும்
நான் குருதி தொட்டும்
எழுதிக்கொண்டிருக்கிறோம்
நான் மாறிவிட்டதாய் நீ சொல்கிறாய்
வலியின் விசாலம் நீ அறியாய்
பல உயிருறவுகளை பறிகொடுத்தேன்
இனி புது உலகம் சாத்தியமில்லை
நண்பா! நீயும் நானும் ஒன்றல்ல
வேறுமல்ல

நண்பா! நீயும் நானும் ஒன்றல்ல வேறுமல்ல
திங்கள், 11 மார்ச், 2024
அங்குதான் அவர்கள் இருக்கிறார்கள்
என் அனுபவங்கள் எனக்கானவை
அதேபோல் உங்களதும்
நெருப்பு மழைக்குள் இறங்கியும்
ஏதோ ஒரு கரை சேர்ந்தேன்
உள்காயங்களோடு
ஆற்றுப்படுத்த
இதயத்தையே சிறகாக்கி விசுறுகிறேன்
நினைவு சோரும்வரை
இழப்புகளின் வலி திணறி எழ
மூச்சுத்திணறி மீள்வேன்
யாருமறியாமல்
நாளையும் விடியுமா?
கசியா இரகசியமாய்
மூடியிருந்த வாழ்வு
எரிந்துபோகுமா?
இதயசிறகு படபடக்க
உயிர் காவுகிறேன்
வழிப்போக்கனாக
மலையடிவாரத்தில்
ஏதோ கிறுக்கிப்போனான் கவிஞன்
வழிமாறிய குயிலொன்று
அதை பாடுகிறது
இன்னோர் பிரபஞ்சத்திற்கு கேட்கிறது
அங்குதான் அவர்கள் இருக்கிறார்கள்

அங்குதான் அவர்கள் இருக்கிறார்கள்
சனி, 2 மார்ச், 2024
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
