வெள்ளி, 7 செப்டம்பர், 2012

சுஜோவின் ஹைக்கூ/விடுகதைக்கவிதைகள் 4


அழவில்லை
உடைகிறது மனது 
விவாகரத்து 


உயிர் 
அறுபட்ட கணம் 
மரணம் 

இறப்பை நினையாது 
பிறப்பில் சிரிக்கும் மனிதன் 
கூர்ப்பு 

மற்றையவர் தோல்வியை நினையாது 
தன்வெற்றியை கொண்டாடல் 
தற்புகழ்ச்சி 

நாய் கிழித்த உடுப்பு 
புது டிசைன்னாகிறது 
நாகரீகம்  

உடைத்த அரிசி அரைக்கப்படுகிறது 
போருக்குப் பிந்திய போர் 
வன்னி (2010)

உலக முதல் இராஜதந்திரி 
நரியாரா?நாரதரா?
மனக்குழப்பம் 

மிதந்தவன் தப்பினான் 
தாண்டவன் 
கூழ்முட்டை 

இனத்தின் துகிலுரிந்து 
தனக்கு சுருக்கிட்டான் 
அடிவருடி 

ஏழைக்குழந்தைகளின் 
எதிர்காலத்திற்காய் எரிகிறது 
குப்பிவிளக்கு 

தண்ணியிலிருந்து 
தங்கம் வரை தங்கியிருக்கிறது 
விளம்பரத்தில் 

ஈழக்குழந்தைக்கு  
கள்ளிப்பால் ஊட்டியது 
இந்தி  

தத்தி தத்தி நடக்கிறது 
குழந்தையா?ஆட்டுக்குட்டியா?
முதுமை 


மனித ஆயுள் அடங்குவது 
காலம் காலமாய் காத்துவைத்த 
ரங்குப்பெட்டியிலோ/பணப்பெட்டியிலோ அல்ல 
சவப்பெட்டியில் "நியதி"


ஒருவன் வெல்வதற்காய் 
மற்றையவன் தோற்கிறான் 
முதலாளித்துவம்   

சீனியில் மொய்க்கும் 
எறும்புகள் 
சினிமா ரசிகர்கள் 

செத்ததில் முளைக்கும் 
புழுக்கள் 
அடைவுகடைகள் 

  சீனி மா விற்றும் 
சினிமா பார்த்தல்
குறைப்பிரசவம் 

வெள்ளிக்கிழமை 
சமையல் பாத்திரங்கள் தனி 
வாயும் வயிறும் ஒன்றுதான் 

வாக்குறுதி தரும் 
கவரிங் நகைகள் 
அரசியல் வாதிகள் 

அன்று யாழ் நூலகம்
இன்று பள்ளிவாசல் 
காவி நிறமாய் எரிகிறது  

மரம் இல்லாதவனம் 
பாலைவனம் 
மொட்டைத்தலை 

ஐயா மெழுகுமாதிரி
ஐயோ ஈரல்குலையை  காணவில்லை 
மகிந்த சிந்தனை 

காடழித்து மரம் கடத்தல் 
ஆனால் மிருகநல அமைச்சர் 
மகா நாயக்கர்கள் 

உணவைக்கண்டதும் 
காகம் கரைந்து இனத்தை அழைக்கிறது 
தேர்தல் காலத்து ஒலிபெருக்கி

ஊரெங்கும் நன்றாய் அடுப்பெரியும் 
இவன் வீட்டில் புகைதான் 
விறகுவெட்டி 

ஆட்டை சாப்பிட்டு,மாட்டை சாப்பிட்டு 
மனிசனை சாப்பிடுவது 
கடனும் வட்டியும்

இவர் அழுவதில்லை 
கண்ணீர் வற்றியதால் 
முன்னாள் போராளிகள்

திரி இழந்தன குத்துவிளக்குகள்  
வெளிச்சம் இழந்தது வீடு 
விதவைகள் 


தேன்கூட்டில் 
தேன் எடுத்துக்கொடுப்பவன் 
பத்திரிகையாளன்  

வீதியெல்லாம் தோரணங்கள் 
யாருடைய மரணம்?
தென்னங்குருத்துனுடையதா ?

மொட்டைத்தலைக்கு 
தலைவாருகிறார்கள்
மாகாணசபை (இலங்கை)    


மொட்டைத்தலைக்கும் 
முழங்காலுக்கும் முடிச்சு 
இலங்கையும் ஜனநாயகமும் 

கன்றுகளின் எதிர்காலத்தை தின்று 
வண்டி இழுக்கும் செக்குமாடு 
அரச தமிழ் அமைச்சர்கள் 

பிள்ளை இறந்தபோது -ஐயோ!
பிறக்காமல் இருந்திருக்கலாம் 
வயிறும் பசியும் 

அரைகுறையாய் எரிந்துகிடக்கும் 
அநாமோதாயப் பிணங்கள் யாருடையவை?
கறும்துணியால் கண்கள் கட்டப்பட்ட நீதிதேவதை    

பிறக்கும்போதே 
இறக்கும் செய்தி சொல்லப்படுகிறது 
பூமி உருண்டை 

நாறும் பிணத்திற்கு 
சென்ட் தடவும் தொழில் 
இலங்கை வெளிவிவகார அமைச்சர்  

கிடைப்பதும் இல்லை 
விடுவதாயும் இல்லை 
அதிஷ்ட லாபச்சீட்டு 


ஆண்டி அரசனானான் 
அரசன் ஆண்டியானான் 
அதிஷ்ட லாபச்சீட்டு 

மிருககொலைக்கு தடை 
மனித கொலைக்கு ஊக்குவிப்பு 
இலங்கை ஜனநாயக்குடியரசு 

குளத்தில் மீன் பிடிக்கிறான் 
வெள்ளைக்காரன் 
நாரைகள் 


மீள்குடியேற்றத்தில் 
ஒரு குடியேற்றம் 
புத்தர் சிலைகள் 




Share/Save/Bookmark

வியாழன், 6 செப்டம்பர், 2012

என் அம்மம்மா


இன்று காலை தொலைபேசி அடித்தது. என் அம்மம்மா 
இறந்துவிட்டாவாம்.அம்மம்மாவிற்கு தொண்ணூறு வயது.
சில நாட்களாய் கடும் சுகயீனம் உற்றிருந்தா. நேற்றும் அம்மம்மாவுடன் தொலைபேசியில் 
கதைத்தேன்.என்னால தொடர்ந்து கதைக்கேலாமல் 
கிடக்கு ராசா என்று தொலைபேசியை அம்மாவிட்ட 
குடுத்திட்டா.இறப்புகளைக்கண்டு பழகிப்பழகி வெறும் மரமாய்ப்போன 
வாழ்க்கையில் எங்கிருந்தோ கண்ணீர்த்துளிகள் வருகின்றன.
நான் பிறந்ததிலிருந்து இன்றுவரை எனக்கு அம்மம்மாவைத்தெரியும்.
நாங்கள் பிஞ்சுகளாய் இருக்கைக்க அம்மம்மா 
நிலாக்காட்டி சோறு ஊட்டுவா.நிறைய கதைகள் சொல்லுவா.
அம்மம்மா சில வருடங்கள் ஆசிரியையாய் வேலை செய்தவ.
அதுவும் சின்னப்பிள்ளைகளுக்குத்தான் படிப்பிச்சவ.அதனாலதான் 
என்று நினைக்கிறன் அவ கதைகள் சொல்லைக்க நிஜமாய் நடக்கிறதை பார்க்கிற 
மாதிரி இருக்கும். நாங்கள் திருப்பி திருப்பி சொன்ன கதைகளைக்கூட கேட்பம்.
அம்மம்மா சலிப்பில்லாமல் சொல்லுவா.  
அம்மம்மாவிற்கு அரசியல் தெரியாது.களவு பொய் தெரியாது.
யாரையுமே பிரிச்சுப்பார்க்கமாட்டா .எல்லோருக்கும் உதவி செய்வா.
அம்மம்மாவின்ர ஐயா(அப்பா) PWDஓவசியறாய் இருந்தவர்.
அம்மாவின்ர குடும்பம் எப்பவுமே நடுத்தரக்குடும்பம் தான். 

 அம்மம்மாவிற்கு எழுபிள்ளைகள்.அம்மப்பாவிட்கு சாதாரண 
வருமானம்தான்.அம்மப்பா கொஞ்சம் தண்ணியும் பாவிப்பார்.
இருந்தும் ஒருநாளும் அம்மம்மா அம்மப்பாவோட சண்டை 
பிடிச்சதை நான் பார்க்கயில்லை.எங்கட வீட்டை யார் வந்தாலும் 
சாப்பிடுற நேரமென்றா சாப்பிட்டு தேத்தண்ணீர் குடிக்கிற நேரமென்றால்   
தேத்தண்ணீ குடுத்துத்தான் அனுப்புவா. 
என்னோட என் நண்பர்கள் (திலீபன் உட்பட)வருவார்கள்.வந்தால் 
சாப்பிட்டோ/தேத்தண்ணீ குடித்தோ எங்கட வேலை பிரிக்கிற 
இடமாய் அது இருக்கும்.அம்மம்மாவிற்கு சாப்பாடு தாறதைவிட
வேறு ஒன்றையும் அறிந்திருக்கமாட்டார்.நான் எந்த நேரமும் 
வீட்டை போவன் அம்மம்மா உடன சாப்பாடு தருவா.நான் வீட்டைப்பொருத்தவரை
பொறுப்பில்லாதவன்.என்னால வீட்டுக்கு எந்த ஆதாயமும் இல்லை 
என்றதும் அவைக்குத்தெரியும்.ஆனால் ஒருநாளும் 
ஏற்றுக்கொள்ள முடியா சொல் ஒன்றை எனக்கு சொன்னதில்லை.அம்மம்மா 
சைவம் மச்சம் சாப்பிடமாட்டா.நான் ஒரு நாள் அம்மம்மாவிட்ட கேட்டன். 
அம்மம்மா மாடு சமைச்சு தருவிங்களோ என்று.அம்மம்மா சொன்னா 
கொண்டுவா சமைச்சு தாறன். நான் வாங்கி வந்து வெட்டிக்குடுக்க 
அம்மம்மா சமைச்சுத்தந்தா.ரொட்டியும் சுட்டுத்தந்தா .நான் கொண்டுபோய் 
சென்றியில பிரிச்சு சாப்பிட்டம்.இப்படி கொஞ்சக்காலம் தொடர்ந்திது.   
அவவின்ர ஒரு பேரன் வீரச்சாவு அடையிக்க    
அம்மம்மா முதல் தடவை சத்தம் போட்டு அழுததைப்பார்த்தேன்.
பிறகு அம்மப்பா இறந்து, அதட்குப்பிறகும் இரண்டு 
பேரன்கள் வீரச்சாவு அடைஞ்சிட்டாங்கள். கவலைகளுக்குள் 
வாழ்ந்தாலும் எதையுமே வெளிக்காட்டாமல் எல்லோருடமும் 
பழகி வந்தா.சில காலம் வெளி நாட்டிலும் வாழ்ந்தார்.பின் 
தாய் மண்ணில் மூத்தமகளுடன் வாழ்ந்தார்.சமாதான நேரம் 
நான் இறுதியாய் அவரை சந்தித்தேன்.  

 இறுதிவரை முழு ஞாபச்சக்தியோட அவ இருந்தா.தொலைபேசியில
குரலை வைச்சே ஆட்களை அடையாளம் காணுவா.பூட்டப்பிளைகளோட 
இறுதிக்காலமும் மகிழ்வாய்த்தான் இருந்தா.  இரண்டு வயது பூட்டி 
அம்மம்மாவின் படத்தோடு திரிகிறாளாம். படுக்கும் போதும் தலையணைக்குக்கீழ்
படத்தை வைத்துப்படுக்கிறாளாம். என்னால்த்தான் எதுவுமே அம்மம்மாவிற்கு 
செய்யமுடியவில்லை. மனதில் ஏதோவொன்று பிசைகிறது.

-நிரோன்- 

  





Share/Save/Bookmark

சனி, 1 செப்டம்பர், 2012

என் ஊர்ப்பயணம்


எனக்கு தெரிஞ்ச நாட்களிலேயே எங்கட அப்பா படு சுழியன்.
அப்பாவுக்கு முந்தி ஒழுங்கான வேலை கிடையாது.பிறகு 
புலிகளின்ர காலத்தில அவங்கட அலுவலகம் ஒன்றில 
வேலை செய்தார்.அப்ப புலி என்ற நினைப்பிலேயே இருப்பார்.
இப்ப தாடிக்காரரோட வேலை செய்யுறார்.இப்ப இந்த நினைப்பில 
இருக்கிறார்.
நான் வெளிநாட்டுக்குப்போனதுக்கு இப்பதான் ஊருக்கு வந்திருக்கிறன். 
நான் இன்றைக்கு கனக மாமாவிட்ட போகக்கேட்டன்.அப்பா வேணாம் 
என்றிட்டார்.முந்தி அப்பாவும் கனக மாமாவும் நல்ல ஒட்டு.எங்களுக்கு 
அவை நிறைய உதவி செய்திருக்கினம் .நாங்களும் வீட்டுல இரண்டு 
பிள்ளைகள் நானும் தங்கச்சியும்.கனக மாமாவுக்கு இரண்டு பெடியள்.
மூத்தவன் என்னோடையும் இளையவன் தங்கச்சியோடையும் 
படிச்சவை.இப்ப அப்பாவும் கனக மாமாவும் கதைக்கிறதில்லை.அதால 
அங்க போக்குவரத்து இல்லை.    

எனக்கு அது இப்ப மாதிரி இருக்கு .அப்ப கனக மாமா வன்னியில வேலை செய்தவர்.
அவற்றை இளையவன் இங்க வீரச்சாவு.அப்ப தொலைத்தொடர்புகள் நல்லா இல்லை.
இயக்கம்தான் அவருக்கு அறிவிச்சது மகனுக்கு சீரியஸ் உடன வரச்சொல்லி .அவரை 
கிளாலியில இருந்து கூட்டிவர நானும் போனனான்.அவர் அழுதுகொண்டே வந்தார்.
அவர் என்னைக்கண்டதும் மூத்தவன்தான் வீரச்சாவு என்று நினைச்சிருக்கோனும். 
அவர் எதுவும் யாரிட்டையும் கேட்கயில்லை.அவருக்கு யார் என்றாலும் பிள்ளைதானே.
வீட்டை வந்தவுடன மூத்தவனை கட்டிப்பிடிச்சு அழுதார்.எல்லாம் கண்ணுக்கு முன்னால 
நிற்குது.அவற்றை பிள்ளைகளில அவருக்கு சரியான பாசம் .மிகவும் நேர்த்தியாய் 
பிள்ளைகளை வளர்த்தார்.எங்கட வீட்டுக்கு நேர் முன்னாலதான் அவற்றை வீடு.
எங்கட வீடு இப்ப மாடி வீடு.சுற்று பூந்தோட்டத்தோட
அழகாக இருக்கிறது.கனக மாமாவின்ர வீடு அப்படியே 
இருக்கிற மாதிரி தெரியுது.ஆனால் முன்னுக்கு இருந்த 
மல்லிகைப்பந்தலைக் காணவில்லை.

இன்றைக்கு அப்பா எவ்வளவு ஆசையாய்க் கேட்டார்.எனக்கு 
ஒரு மகன் இருக்கிறான்.அவனுக்கு ஐந்து வயது .அவனை தன்னோட 
அலுவலகத்திற்கு கூட்டிப்போக கேட்டார்.என்ரை மனுசி தொடுவிலையும்
மாட்டன் என்றிட்டுது. அம்மா அதை பெருசுபடுத்தவில்லை.
தங்கச்சியும் பிள்ளையும் எங்களைப்பார்க்க வந்திருக்கிறார்கள்.
மச்சான் வரவில்லை.அம்மா ஏற்கனவே என்னிடம் சொல்லி இருக்கிறார்.
மச்சான் இப்ப எங்கட வீட்டை வாறதில்லை என்று.தங்கச்சியிடம் 
கேட்டேன் எப்படி வந்தீங்கள்?அவர்தான் கூட்டி வந்தவர் .விட்டிட்டு 
கனக மாமாவிட்ட போயிட்டார்.கனக மாமாவும் ,மாமியும் 
தனியத்தானே இருக்கினம் இவர் இடைக்கிடை போய்ப்பார்க்கிறவர்.
மச்சானிட்டை சொன்னனியா நான் கேட்டதை?இல்லை.
அதை கேட்டிருந்தால் செருப்பால அடிச்சிருப்பார் சடக் 
என்று சொன்னாள்.ஏன் இயக்கம் தோற்றது?என்டதைத்தான்
கேட்டிருந்தனான்.நான் அந்தக்கதையை மாற்றினேன். 

நீ கனக மாமாவிட்ட போறனியா?ஆம் என மேலும் 
கீழும் தலையாட்டினாள்.அவைக்கு பிள்ளைகள் 
இல்லை என்று கவலை இல்லையா?திருப்பியும் 
முறைத்துப்பார்த்தாள்.கனக மாமி ஒரு நாள் சொன்னவ 
"பொம்பிளப்பிள்ளைகளே  போராடப்போகைக்க என்ர 
பிள்ளைகள் எப்படி வீட்டை இருக்கும்" சொல்லி ஓரக்கண்ணால் 
என்னைப்பார்த்தாள். எனக்கு ஏதோ நெஞ்சில் நறுக்கென்றது.
ஏதோ என்னில்த்தான் பிழை பிடிப்பதுபோல் இருந்தது.
வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிள் வந்து நின்றது 
அப்பா இறங்கினார் .தாடிக்காரன் ஒருவன் மோட்டார் 
சைக்கிள் ஓடிவந்தான்.என் மனைவியும்,தங்கையும் 
எதிர்ப்பக்கமாய் தலையை திருப்பினார்கள்.

-சுருதி -



Share/Save/Bookmark

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

அன்றும் இன்றும்


அன்றும் இன்றும் 

எத்தனை தடவைகள் 
மயிரிழையில் உயிர்தப்பினேன் 
எண்ணிக்கை எனக்கே தெரியவில்லை 
கிளைமர் பாதைகளில் எமது பயணம் 
வாழும் ஒவ்வொரு நாட்களும் 
போனஸ் நாட்கள் - இருந்தும் 
மகிழ்ச்சிட்கு குறைவில்லை 
கடமைச்சுமையால் 
உடல் களைத்தாலும்
உள்ளம் இளமையாய் இருந்தது 
இழந்தவரின் கனவையும் 
சுமந்து வாழ்கையில் 
எதையும் தாங்கிற்று மனம் 

இன்று 
நடைப்பிணமாயிற்று  வாழ்வு 

-நிரோன்-



Share/Save/Bookmark
Bookmark and Share