செவ்வாய், 30 ஜனவரி, 2024
மீளவும் வரப்போவதில்லை
புகைப்படம் பார்க்கிறேன்
கண்கள் அசைய மறுக்கிறது
நீ உயிராய் என் முன்
யாவும் காட்சியாய் விரிகிறது
கனதியான வாழ்வு மீளவருகிறது
ஆவலில் உற்றுப் பார்க்கிறேன்
நீயில்லை எதுவும் நிஜமில்லை
கண்ணீர்ப்படலம் உன்னை மறைக்கிறது
பறவையொன்று உள்ளங்கையில் இறங்கிற்று
சிறகினில் கவிதையினை கிறுக்கிறேன்
அது உயர பறக்கையில் பாடலாகிறது
நண்பா!
நீ மட்டுமில்லை
நீயும் நானும்
உலாவிய ஒழுங்கைகள்
வடலி நிறை பனை வெளி
உணவு தரும் குடிசைகள்
மீளவும் வரப்போவதில்லை
திங்கள், 29 ஜனவரி, 2024
ஞாயிறு, 28 ஜனவரி, 2024
வேரறுந்த வாழ்வில் வாசமில்லை
என் சிறுபராயம்
தாய்வழி பேரனுடனான சம்பாஷணை
இலக்கியத்தின் ஒரு முகம்
பூர்வீகம் மறுமுகம்
வாழ்வியல் அதன் அகம்
தோட்டமும் துரவும் வண்டிலுமாய்
எனக்குள் ஓடுகிறது பந்தம்
மூதாதையர்களை தேடும் பயணம்
என்னோடு முடிந்துவிடுமா?
புலம்பெயர்ந்ததின் விளைவு
எங்கு போய் முடியும்?
முதுசொம்களை தொலைத்த வாழ்வில்
பவுசு இருந்தென்ன?
இழப்பதற்கு எதுவுமில்லையெனினும்
தாய்நிலம் துறவாதீர் !
தாயைப்போல யாருமில்லை
வேரறுந்த வாழ்வில் வாசமில்லை
தாகத்திற்கு கானல் நீர் தீர்வுமில்லை

வேரறுந்த வாழ்வில் வாசமில்லை
வெள்ளி, 26 ஜனவரி, 2024
எனது வாழ்விடம் காணாமல் போயிற்று
ஒரு சிறிய ஊர்
அநேகருக்கு அநேகரை தெரியும்
ஆள் ஆளுக்கு பட்டப்பெயர்கள் இருக்கும்
பொலிஸ் வந்ததில்லை
யாருக்கும் ஒன்றென்றால் ஊரே ஒன்றாகும்
பகட்டுமில்லை பட்டினியுமில்லை
ஆசிரியர் மாணவரை
தந்தை பெயர் சொல்லியே அழைப்பர்
செருப்புகளற்று நடந்துதிரியும்
பட்டம் ஏற்றும் மணல் வெளி
பறவையொன்று வானத்தில் படர்ந்து
கடலில் இறங்கி வள்ளத்தில் ஏறிற்று
என்ற புனைவற்ற கிராமம்
பறவைகள் மாடுகளில் மரங்களில்
முற்றத்தில் நாளும் கூடும் சந்தையோடு
கோலாகல கோயில் திருவிழாக்களும்
நாடகங்களும் தாச்சி விளையாட்டும்
வேறு என்ன வேணும்?
பொய் இல்லை போட்டி இருக்கும்
வண்டில்ச்சவாரி கிட்டியடியென
நாளும் பொழுதும் நீளும்
எனது அழகிய வாழ்விடம்
ஒரு பகலுக்கும் இரவுக்கும் இடையில்
காணாமல் போயிற்று

எனது வாழ்விடம் காணாமல் போயிற்று
ஞாயிறு, 21 ஜனவரி, 2024
இழப்பதற்கும் எதுவுமில்லை
மனதிற்குள் சுழலும் கூரான சக்கரம்
சதா உழலும் நெருடும்வலி
யாரோடும் பகிரா காயம்
உயிரிருக்கும்வரை தீமிதிப்பு
கனவுமில்லை இதயமுமில்லை
சிரிப்பதிலும் உயிரில்லை
நினைப்பதுபோல் நிஜமுமில்லை
இழப்பதற்கும் எதுவுமில்லை
இழப்பதற்கும் எதுவுமில்லை
சனி, 20 ஜனவரி, 2024
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




