சனி, 22 ஜூன், 2024

அன்பு

அன்பு தொலைவதில்லை அணிகலன் அணிவதில்லை அது அதிசயம் அடைபடா ஊற்று அளவிடா ஆனந்தம் அடைக்கலம் தரும் குடிசை அரவமில்லா பிணைப்பு ஆழமறியா கடல் அர்த்தம் தரும் பிறவிப்பலன்


Share/Save/Bookmark

ஞாயிறு, 16 ஜூன், 2024

மீண்டும் தொடங்கும் மிடுக்கு

தேர்ந்த நூல்களை சேகரித்தல் தித்திப்பு ஓய்வில் தேர்ந்து வாசித்தல் தென்றல் முத்தமிடும் தருணங்கள் அனுபவங்கள் தித்திப்பானவை சேகரிப்புகளை இழத்தல் கொடியது உறவுகளை இழப்பதுபோல மீண்டும் மீண்டும் இழத்தல் இதயத்தில் குதியிருக்கும் ஆணிகள் வசந்தத்தை இழந்தாலும் மீண்டும் தொடங்கும் மிடுக்கு தூர தேசத்தில் துக்கம் தீரா கவலை துருத்திக்கொண்டிருக்கிறது தோளில் தூக்கி போகமுடியா கடமை எந்தப்பணியும் செய்யா பிணி என்னைத்தொடர்கிறது


Share/Save/Bookmark

வெள்ளி, 31 மே, 2024

நூலகங்களை எரிப்பதற்கு பெரும் வன்மம் இருக்கவேண்டும் . சாதாரண மனிதர்களால் அதை செய்யமுடியாது. இறுதிப்போரிலும் பாலர் நூல்கள் உட்பட எந்த நூல்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.நல்லிணக்கம் என்று எலும்புக்கூடுகள் கைகுலுக்கலாம், இதயம் மூளைக்கு அது சாத்தியமில்லை.


Share/Save/Bookmark

புதன், 29 மே, 2024

காலமாற்றத்தில் கரும்பலகை வெண்மையாயிற்று கலர்ச்சேலையும் வெள்ளையாயிற்று கடைசித்துளி கண்ணீரில் மிதக்கிறது பாசம் விடைபெறாமலே நித்திரையானது உடல்


Share/Save/Bookmark

ஞாயிறு, 26 மே, 2024

சிலந்திவலையில் சிக்கியது மனம்

நாம் சிறுவயதில் வாழ்ந்த வீடு கைவிடப்பட்டிருக்கிறது பாழடைந்துவிட்டது சிலந்திவலையில் சிக்கியது மனம் மெல் ஒலியில் பாடல் கேட்கும் வீட்டில் பல்லிகள் சொல்லும் சத்தம் வளவின் ஒவ்வொரு சாணிலும் நினைவுகள் சிந்தியிருக்கின்றன நடைபாதையில் வடலிகள் பாசி படர்ந்திருக்கும் கிணற்றில் பழைய மீன்களின் வழித்தோன்றல்கள் சுற்றியிருந்த வெளிவளவில் மாளிகைவீடுகள் காணாமல் போயிருந்த காலத்திலும் ஒரு வரலாறு கட்டப்பட்டிருக்கிறது


Share/Save/Bookmark

வெள்ளி, 24 மே, 2024

திரும்பிப்பார்க்கிறேன். நான் க.பொ. த உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன்.அப்போது பல்வேறு இயக்கங்கள் இருக்கின்றன என்ற அறிவு கூட எனக்குள் இருக்கவில்லை,நான் ஒரு இயக்கத்துடன் தொடர்பில் இருந்தேன். அப்பாவிற்கு இது தெரிந்துவிட்டது, என்னை கூப்பிட்டு தனியே கதைத்தார். நீ செய்யுறதில தவறில்லை, ஆனால் இது சீரியஸான விஷயம், விளையாட்டில்லை. கொள்கையில கடைசி மட்டும் மாறாமலும் உண்மையாகவும் இருக்கோணும் , கன விசயங்களை நீ இழக்க வேண்டிவரும்.எனக்கு எல்லாம் சொல்லுற நீ இதை எனக்கு சொல்லவில்லை, அது எனக்கு ஓ கே . அப்பாவிற்கு உது தெரிஞ்சமாதிரி வேற ஆட்களுக்கும் தெரிஞ்சிருக்கும்தானே? அப்பாதான் என் வழிகாட்டி மட்டுமில்லை, அவர் எனக்குள் அதிசயமும்தான். அப்பாவின் வாழ்வில் எளிமையும் சிக்கனமும் இருந்தாலும் தேவையானவருக்கும் தாராளமாய் உதவுவார். அப்பா வேலைக்கு மட்டும்தான் நீளக்கால்ச்சட்டை போடுவார் மற்றப்படி வெளியில் போகும் பொது வேட்டிதான் கட்டுவார். அப்பா சிறுவயதிலிருந்தே விவசாயத்தோடு ஒன்றி வாழ்ந்திருந்தாலும் ஒரு பூக்கன்று நட்டவரில்லை, பராமரித்தவரில்லை. அப்பா இந்துசமயத்தை சேர்ந்தவரென்றாலும் பைபிளை குரானை சரளமாக வாசித்திருந்தவர் .


Share/Save/Bookmark

ஞாயிறு, 19 மே, 2024

முதியோர்கள் வீடுகளில் ஒன்றாக வாழ்வது ஒரு கொடை, அவர்களது அனுபவம் / பட்டறிவு எந்த பல்கலைக்கழத்திலும் கிடைக்கமுடியாதது. புலம் பெயர்ந்து வாழும் எமது அடுத்த / அடுத்தடுத்த சந்ததி இந்த வாய்ப்பை பெரும்பாலும் இழந்துவிடுகின்றனர். இதை சந்ததிகளுக் கிடையிலுள்ள இடைவெளிகளில் பார்க்கலாம். நான் புலம்பெயர்ந்திருந்தாலும் தனிப்பட்ட முறையில் புலம்பெயர்வை நான் வெறுக்கிறேன். தாயகத்திலிருந்து என்னிடமும் புலம்பெயர் வாய்ப்புகளை வினாவுகிறார்கள். மருத்துவர்கள் இந்த நாட்டுக்கு வராதீர்கள், மொழி படித்து இங்கு மருத்துவ அங்கீகாரம் பெறுவது சிரமமானது. அக்கரையிற்கு இக்கரை பச்சை என்பது சரியாக பொருந்தும்.


Share/Save/Bookmark
Bookmark and Share