பத்மலோஜினி அக்கா யாழ் மருத்துவ பீடத்தின்
முதலாம் அணியில் கல்வி கற்று,பின் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் பொறுப்பு மருத்துவ அதிகாரியாய் இருந்து எண்பதுகளின் இறுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டவர்.
தொண்ணூறாம் ஆண்டு ஈழப்போர் இரண்டு ஆரம்பமானபோது கோட்டையில் இராணுவம் இருந்தது.கோட்டையில் இருந்து இராணுவம் செல் அடிக்க தொடங்க யாழ் மருத்துவமனையில் இருந்து அநேகமான ஊழியர்கள் பயம் காரணமாக வெளியேறிவிட்டனர்.வசதியுள்ள நோயாளர்களும் வெளியேறிவிட்டனர். எஞ்சிய நோயாளர்களை கவனிப்பது மிகக் கடினமாய் இருந்தது.காயமடைந்தவர்கள் தொடர்ச்சியாய் வந்துகொண்டு இருந்தார்கள்.
மானிப்பாய் மருத்துவமனைக்கு நோயாளர்களை மாற்றும்வரை என்னால் முடிந்ததை செய்துகொண்டு இருந்தேன். அப்படியான துயர் நாள் ஒன்றில் பத்மலோஜினி அக்காவை முதல் முதலாய் யாழ் மருத்துவமனையில் சந்தித்தேன். அவர் எல்லா நோயாளர்களையும் பார்வையிட்டு அறிவுரைகள் தந்து போனார். அதற்குப்பின் களமருத்துவர்களாய் வடபகுதியில் நடந்த அநேக சண்டைகளில் ஒன்றாய் கடமையாற்றினோம். தொண்ணூற்றி ஐந்தாம் ஆண்டு இடப்பெயர்வின் போது எல்லா நோயாளர்களையும் பாதுகாப்பாய் இடம்மாற்றி சாவகச்சேரி மருத்துவமனைக்கு வந்து முழு அளவில் கடமை செய்தோம்.
தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு எல்லா காயமடைந்த போராளிகளுடன் வன்னியில் தஞ்சமடைந்தோம்.அக்கா மற்றைய மூத்தமருத்துவர்களுடன் இணைந்து போராளிகளுக்கு சிகிச்சை அளித்ததுடன் விடுதலைப்புலிகளின் மருத்துவபிரிவை வளர்க்க அயராது பாடுபட்டார். விடுதலைப்புலிகளுக்கு எப்போதுமே ஆளணி பற்றாக்குறை ஒரு பெரும் பிரச்சனையாய் இருந்து வந்தது.மருத்துவபிரிவும் துல்லியமாய் வளரவேண்டியிருந்தது.விடுதலைப்புலிகள் வென்றாலும் தோற்றாலும் மருத்துவபிரிவு தனது சுமையோடு வளர்ந்தது. அக்கா
சமாதானகாலத்தில் சில வருடங்கள் கிழக்கு மாகாணத்தில் மக்களுக்கு மருத்துவசேவை வழங்குவதில் முழுமூச்சாய் ஈடுபட்டார்.கருணாவின் பிளவுடன் மீண்டும் வன்னிக்கு வந்து தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகளின் நிர்வாகத்தினை பொறுப்பெடுத்தார்.நிர்வாகப் பொறுப்பாளராய் மட்டுமன்றி அதன் மருத்துவ மேலாளராயும் இருந்தார். கிளிநொச்சி,புதுக்குடியிருப்பில் சிறப்பாக இயங்கிய பொன்னம்பலம் மருத்துவமனைகளில் பொது மக்களுக்கான மருத்துவ கிளினிக்குகளையும் நடாத்திவந்தார். வன்னியில் மருத்துவவசதிகள் அற்ற ஒன்பது இடங்களில் திலீபன் மருத்துவமனைகள் இயங்கிவந்தன.நாளாந்தம் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட வெளிநோயாளர்கள் இந்த ஒன்பது திலீபன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். மருத்துவ தவறுகள் தோன்றாமல் அக்கா வழி நடத்தினார். தனது மருத்துவ அறிவை ஊடகங்களுக்கூடாக மக்களுக்கு கொண்டு சென்றார்.
இறுதியுத்தத்தின் பிற்காலங்களில் தனது திலீபன் மருத்துவமனைக்குரிய
மருத்துவ போராளிகளை காயமடையும் மக்களுக்கு சிகிச்சை வழங்க அரச மருத்துவமனைகளுக்கும் ,காயமடையும் போராளிகளுக்கு சிகிச்சை வழங்க இயக்க சத்திர சிகிச்சைகூடங்களிற்கும் பிரித்துவிட்டார்.முள்ளிவாய்க்கால் அரச மருத்துவமனை மீது இராணுவம் நடாத்திய தாக்குதலில் செவ்வானம்,இறையொளி ஆகிய மருத்துவ போராளிகள் வீரமரணம் அடைந்தனர். இறுதி நாட்களில் ஒரே சத்திரசிகிச்சைகூடத்தில் அக்காவும் நானும் ஒன்றாக பணி செய்தோம்.அக்கா உடல் நலன் குன்றி இருந்தாலும் உரிய நேரத்திற்கு கடமைக்கு வந்து முழுப்பணியும் செய்துதான் போவார்.
முள்ளிவாய்க்காலின் இறுதிநாளில் இராணுவத்தினரிடம் சரணடைந்து அக்கா காணாமல் போனார்.இறுதியாய் இராணுவ பிரதேசத்திற்குள் போகும்போது கூட காயமடைந்த பொதுமகன் ஒருவருக்கு சிகிச்சை அளித்துவிட்டுத்தான் போயிருக்கிறார்.
தன்னை அர்ப்பணித்து விலைமதிப்பற்ற மருத்துவசேவையை வழங்கிய எங்களது அக்காவிற்காய் மருத்துவ உலகம் குரல் குடுக்கவில்லை.நாங்கள் வாழும்வரை அக்காவும் எங்களோடு வாழ்வார்.அக்காவால் உயிர் காப்பாற்றப்பட்டவர்களைப்போல .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக