குமாரி ,யாழ் லங்கா சித்த ஆயுள்வேத கல்லூரியில் கல்வி கற்றவர்.பெண் மருத்துவ போராளியாய் அவரை தொண்ணூறுகளில் இருந்து நான் அறிவேன்.2006 களில் அவர் தமீழீழ சுகாதார சேவைகளின் ஓர் அலகான சுதேச மருத்துவ பிரிவின் துணைப் பொறுப்பாளராய் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர் ஒரு குழந்தையின் தாயாக இருந்தார்.அவரது கணவர் களமுனையி ல் காயமடைந்து ஒரு காலை தொடையோடு இழந்திருந்தார்.இந்நிலையிலும் குமாரி அவர்கள் தன் கடமையை நேர்த்தியாய்
செய்துகொண்டிருந்தார். சுதேச மருத்துவ பிரிவின் கீழ் மூலிகை பண்ணையொன்று கிளிநொச்சி ஐம்பத்தைந்தாம் கட்டை சந்திக்கருகில் இயங்கிவந்தது.சுமார் எழுநூறு வகை மூலிகை தாவரங்கள் அங்கு பராமரிக்கப்பட்டுவந்தன. வன்னியில் எங்கு என்னென்ன மூலிகைகளை பெறலாம் என்பதை அவர் அறிந்து வைத்திருந்தார்.வடமாகாணத்தில் கடமை புரிந்த ஆயுள்வேத மருத்துவர்களோடு சிறந்த இணைப்பை வைத்திருந்தார்.
நாம் இயன்ற அளவில் முழு அளவிலான நடமாடும் மருத்துவ சேவைகளை கஸ்டப்பிரதேசங்களிலும் பாதுகாப்பு அற்ற பிரதேசங்களிலும்
நடாத்திவந்தோம். அதில் சுதேச மருத்துவமும் ஒரு அங்கமாக இருந்தது.அங்கெல்லாம் சுதேசமருத்துவராய் குமாரி அக்கா சேவை வழங்கிக்கொண்டு இருப்பார்.தனது குழந்தையையும் கூட்டிக்கொண்டு அடிக்கடி கிளைமர் அடிபடும் பிரதேசங்களான நெடுங்கேணி,சேமமடு,குஞ்சுக்குளம், தட்சனாமருதமடு,இலுப்பைக்கடவை என்று எல்லா இடங்களிலும் மருத்துவசேவையில் பங்கேற்றார்.
சுதேச மருத்துவபிரிவின் கீழ் ”திலீபனா ” சுதேச மருந்து உற்பத்தி நிலையம் இயங்கிவந்தது.ஐம்பதிற்கும் மேற்பட்ட சுதேச மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டன.போர் உச்சம் பெற்றிருந்தபோதும் ஒரு தொகுதி மருந்துகள்
கையிருப்பில் இறுதிவரை வைத்திருந்தோம்.
”சுதேச ஒளி ”என்ற காலாண்டு இதழையும் சுதேச மருத்துவபிரிவு நடாத்திவந்தது. ஐந்து இதழ்கள் வெளியாகியிருந்தன.பல ஆயுள்வேத மருத்துவர்கள் ஆக்கங்களை எழுதியிருந்தனர்.சுதேச மருத்துவ கற்கை நெறியொன்றை சுகாதார விஞ்ஞானக்கல்லூரியில் ஆரம்பிக்கும் திட்டங்களோடு இருந்தோம்.
முள்ளிவாய்க்காலில் ,அந்த இறுதிநாட்களில் மருத்துவ விடுதியில் கடமையில் இருந்தபோது எதிரியின் செல்வீச்சில் குமாரி வீரமரணம் அடைந்தார்.
மக்களுக்காய் வாழ்ந்தவர் நினைவில் நனைகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக