வியாழன், 25 மே, 2017

16 /05 /2009


விடிகாலை, எங்களுக்கு விடியவில்லை . நானும் அன்புவும் மண்மூடைகளால் சூழப்பட்ட மையத்திலிருந்து வெளிவந்தோம். ஜவான் எதிர்ப்பட்டார்.  கடற்கரைப்பக்கத்தை அவன் தொடுத்திட்டான். இன்னுமொரு ஆனந்தபுரம்தான் மிகுந்த கவலையோடு தெரிவித்தார். ஜவானிடம் விடைபெற்று நானும் அன்புவும் நேற்று நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்றோம் .  அங்கு எம் சகபோராளிகள் இல்லை. அவர்கள் வேறு இடத்திற்கு சென்றிருக்கவேண்டும் . பெரியமரம் ஒன்றின் கீழ் விடப்பட்டிருந்த காயமடைந்தவர்களும் இல்லை. கடற்கரை பக்கமிருந்து சரமாரியாக சன்னங்கள் வந்துகொண்டிருந்தன . நாங்கள் நடந்து ரேகா தங்கியிருந்த இடத்திற்கு வந்தோம். அன்பு அன்றிரவு என்னை தொடர்புகொள்வதாய் கூறி சென்றுவிட்டார். ரேகாவுடன் அவரது குடும்பமும் ரேகாவுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றிய மருத்துவ நிர்வாகப்போராளிகளும் நின்றிருந்தனர்.  நானும் ரேகாவும் ஒரு வாகனத்தின் முன் இருக்கையில் இருந்து கதைத்தோம். பெரியவர் நிற்கிறார் ஏதாவதென்றால் சிறு சத்திரசிகிச்சை கூடமாவது அமைக்கவேண்டும் என்றேன். பலவிடயங்களை துயரங்களோடு பகிர்ந்துகொண்டோம். ரேகாதான் டொக்டர் அன்ரி , தேவா அன்ரி , சுதர்சன் தங்கியுள்ள இடங்களை குறித்துக்காட்டினார் . நான் ரேகாவிடம் விடைபெற்று சுதர்சனிடம் சென்றேன். சுதர்சன் கவலையான அந்தநேரத்திலும் என்னைக்கண்டவுடன் முகம் நிறைந்த சிரிப்புடன் வந்தார்.  நான் சுதர்சனை அழைத்துக்கொண்டு டொக்டர் அன்ரியை (பத்மலோஜினி அக்கா) சந்திக்க போனேன். அக்கா தங்கியிருந்த இடத்தில் இருந்து பிரபாவும் கண்ணனும் வந்தார்கள் . டொக்டர் அன்ரியும்
கரிகாலன் அண்ணையும் வெளிக்கிடுகிறார்கள் போகப்போகிறார்கள் என்றார்கள். நான் ஏனோ அக்காவை சந்திப்பதை தவிர்த்து தேவா அன்ரியிடம் போக தீர்மானித்தேன் . சிலதூரம் கடந்து சென்ற கண்ணன் "டொக்டர்" என அழைத்து விடைபெறுவதாய் கை அசைத்தார் . 90  ஆம் ஆண்டு கண்ணன் தனது ஆரம்பப் பயிற்சியின் போது காயமடைந்தார். நான் தான் அவருக்கு சிகிச்சை அளித்தேன். தேவா அன்ரி அப்போதும் இராணுவ உடையோடேயே இருந்தார். தலைவருடன் தான் இருக்கும் படங்களை தலைவரின் படம் கிழியாத முறையில் கிழித்துப்போட்டுக்கொண்டிருந்தார். நீண்ட  உரையாடி விடைபெற்றோம்.   சுதர்சன் தங்கியிருந்த இடத்திற்கு வந்தோம். இடைக்கிடை காயப்படுபவர்களுக்கு முதலுதவி செய்தோம். எங்களுடன் நின்ற சில பெண்பிள்ளைகள் எங்களை தேடிவந்தார்கள் . அவர்களை தங்களின் குடும்பங்களுடன் இணைந்து இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் போகச்சொன்னேன். எந்தநிலையிலும் சரணடையவேண்டாம் என்று அறிவுறுத்தினேன். மக்கள் பெரும் தொகையில்  இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் போய்க்கொண்டிருந்தார் கள் . சிலமக்கள் வந்து தாங்கள் என்ன செய்வது என்று கேட்டார்கள். நிலத்தை பார்த்தபடியே போக சொன்னேன்சுதர்சன் ஐயும் போக சொன்னேன். என்னை அனுப்பிவிட்டு போவதாய் பிடிவாதமாய் சொன்னான்ஒரு இளைஞன் தனது சகோதரி பிரசவவேதனையில் இருக்கிறார் உதவுங்கள் என்றுகேட்டார். அத்தான் சிலநாளுக்குமுன் செல்லில் இறந்துவிட்டதாய் அழுது சொன்னான்.        சுதர்சன் எங்கேயோ தேடி gloves கொண்டுவந்தான். பதுங்கு அகழி ஒன்றில் லாந்தர் வெளிச்சத்தில் பிள்ளை பிறந்தது. நாங்கள்தான் நஞ்சுக்கொடியை கொண்டுவந்து புதைத்தோம். எனது சட்டையில் இரத்தம் பட்டிருந்ததால்சுதர்சன் தனது சட்டை ஒன்றை தந்தார். நாங்கள் தங்கியிருந்த இடத்தில் மக்கள் நடமாட்டமே இல்லை. நாங்கள் இடத்தை மாற்றதீர்மானித்தோம். சுதர்சன் வோக்கியில் தொடர்பெடுத்து களைத்துப்போனான்.   சண்டை உக்கிரமாயிற்று. வானம் நிறைய வெளிச்சக்கூண்டுகள். மனம் தலைவர் தப்பிவிடவேண்டும் எனவேண்டிக்கொண்டது.       



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share