செவ்வாய், 29 அக்டோபர், 2024
ஆயுளின்
முற்றுப்புள்ளிக்கு முன்
மீள சந்திக்க விரும்பிய
பால்ய நண்பர்கள்
வாசிக்க விரும்பிய
பல புத்தகங்கள்
எழுத நினைத்தும்
எழுதாத கவிதை
என் சகாக்களின் வாரிசுகளை
பார்த்து மனம் நிறைய
தொட்டு ஒற்றிக்கொள்ள
அவர் பாதம் பட்ட மண்
வயல்களின் பசுமையில்
கண்கள் குளிர்ந்துபோக
கடற்கரையில் காற்று வாங்கி
கையசைத்துபோனவரை நினைந்து
ஒரு பறவையைப்போல
திசையறிமால் பறக்கிறது மனது
வெள்ளி, 25 அக்டோபர், 2024
திரும்பிப்பார்க்கிறேன் ( சுயபுராணம்)
திரும்பிப்பார்க்கிறேன் ( சுயபுராணம்)
எங்களுக்கான யாழ் மாவட்ட கிறிக்கற் நடுவர் சங்கத்தின் கிறிக்கற் நடுவர்களுக்கான வகுப்புகள், பரீட்சை மற்றும் யாழ் மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் உதைபந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான வகுப்புகள், பரீட்சை , செய்முறை பரீட்சை யாவும் யாழ் இந்துக்கல்லூரியில் வார இறுதி நாட்களில் நடைபெற்றது. எனது சக மாணவர்களாக அமரர்களான பத்மநாதன் ஐயா ( யாழ் பல்கலைக்கழக விளையாட்டு உத்தியோகத்தர்), சண்முகலிங்கம் அண்ணை ( இரும்பர்), றொகான் ராஜசிங்கம் ( விளையாட்டு உதவி கல்விப்பணிப்பாளர்) உள்ளிட்ட குறிப்பிட்ட பிரபலமானவர்கள் சிலர் இருந்தார்கள்.
யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் கரப்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான வகுப்புகள், பரீட்சை யாழ் ஸ்ரான்லி கல்லூரியில் நடைபெற்றது, ஆறு பேர் பரீட்சையில் சித்தியடைந்தோம்.யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் கப்டன் குணசிங்கம் இருந்தார்.
1995 ஆம் ஆண்டிற்கு பின் இவர்களது தொடர்பு இல்லாமல் போய்விட்டது.
2000 ஆண்டுகளின் சமாதானகாலத்தில் தேசிய வலைப்பந்தாட்ட சங்கத்தின் வலைப்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான எழுத்துப் பரீட்சையை வவுனியாவிலும், செய்முறை பரீட்சையை கிளிநொச்சி சென் திரேசா பெண்கள் கல்லூரியிலும் எடுத்தோம், ஆறு அல்லது ஏழு பேர் பரீட்சையில் சித்தியடைந்தோம். பரீட்சையை நடத்துவதற்காக விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்புடன் தேசிய வலைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவி உட்பட சிலர் கொழும்பில் இருந்து வந்திருந்தார்கள்.
சில விடயங்கள் நேற்றுப்போல் இருக்கும் ஆனால் உண்மை அப்படியல்ல. எனக்கு விருப்பமான தொழில் sports journalism .

திரும்பிப்பார்க்கிறேன் ( சுயபுராணம்)
வியாழன், 17 அக்டோபர், 2024
சகோதரனே! நீ தப்பிவிட்டாய் !
சகோதரனே!
அருகில்த்தானே இருந்தாய் எங்கு போனாய்?
பதினைந்து வருடமாயிற்று
மக்கள் நலனைவிட வேறு என்ன நீ அறிவாய்?
எதையும் காணாமல் போய்விட்டாய்
சிதறி உடைந்த கண்ணாடியில்
என் தாயகம் தெரிகிறது
செழித்து வளர்ந்திருக்கிறது
நெருஞ்சிமுட்கள்
நீ தப்பிவிட்டாய் !
சிறு வயது எண்ணங்கள்
இங்கு இறந்தவர்
வேறு உலகில்
ஒன்றாய் வாழ்வர்
அங்கு இறப்பவர்
இங்கு வருவர்
ஆத்மாவிற்கு
இறப்பில்லையெனில்

சகோதரனே! நீ தப்பிவிட்டாய் !
திங்கள், 14 அக்டோபர், 2024
உன் தலைவனை கூட என் தாயகம் பாதுகாத்து அனுப்பியதே வரலாறு
நீ
ஏற்றுக்கொள்கிறாயோ இல்லையோ
எனக்கு இன மத வெறியில்லை
நீ கூட
எனக்கு நண்பனுமில்லை பகைவனுமில்லை
ஆனானும்
உன்னோடு என்வாழ்வும் சிலவேளை ஒத்துப்போகிறது
உன் தந்தை இறந்தபோது இறுதிநிகழ்விலும்
நீ பங்குபற்றமுடியவில்லை
உன் ஒன்றுவிட்ட சகோதரனையும் தோழமைகளையும்
அரச பயங்கரவாதத்திற்கு இழந்ததுபோல்
நானும்
என் சகோதரனையும் ஒன்றுவிட்ட சகோதரர்களையும்
தோழமைகளையும் களத்தில் இழந்தேன்
உன் வலி உனக்கு வலிமை தந்தது
நான் நூலகம் எரித்த சாம்பலிலிருந்து
வந்தவர்களிலொருவன்
வந்த வழி மறந்தவனில்லை
உன் எழுச்சி எனக்கு மகிழ்வுதான்
என் தேசத்தை அழித்தவர்களுள் நீயுமொருவன்
என்றபோதும்
உன் கொள்கை மாறா வாழ்வு என்னை ஈர்த்தது
உன் செயலால்
அழிக்கப்பட்ட என் தாயக அடையாளங்களை
மீளுருவாக்கம் செய்தபின்னாவது
வா! வாக்கு கேட்க
இப்போது போய்விடு
உன் தலைவனை கூட
என் தாயகம் பாதுகாத்து அனுப்பியதே வரலாறு

உன் தலைவனை கூட என் தாயகம் பாதுகாத்து அனுப்பியதே வரலாறு
சனி, 12 அக்டோபர், 2024
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)