செவ்வாய், 3 மார்ச், 2015

மருத்துவப்பெருந்தகை கெங்காதரன் ஐயா

மருத்துவப்பெருந்தகை கெங்காதரன் ஐயாவை 95 ஆம் ஆண்டளவில்  யாழ் மருத்துவமனையில் முதல் முதலாய் சந்தித்தேன்.கையில் ஏற்பட்ட காயம் ஒன்றிற்கு சிகிச்சை பெறவந்திருந்தார்.காயத்துடனும் மலர்ந்தமுகத்துடனேயே இருந்தார் நான் இறுதியாய் சுதந்திரபுரத்தில் சந்திக்கும் பொழுதும் அதே மலர்ந்தமுகம்தான். அவரை அதற்கு முன்பு சந்திக்காது இருந்தாலும் அவரை அறிந்திருந்தேன்.யாழ்ப்பாணத்தில் உருவாகிய தனியார் மருத்துவக்கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவராயும் ஐயா இருந்தார்.
இரண்டாவது, மூன்றாவது, --- தடவைகள்  ஒலுமடுவில் இயங்கிய பொன்னம்பலம் மருத்துவமனையில் பற்சிகிச்சை கிளினிக் நடாத்த சென்றபோது சந்தித்தேன்.பின் துணுக்காய்,கிளிநொச்சி  பொன்னம்பலம் மருத்துவமனைகளில் நெருக்கமானோம்.
ஐயா மிகவும் எளிமையானவர்,மென்மையானவர் ஆனால் அதீத சுறுசுறுப்பானவர். பத்துவருடங்கள் அரசசேவையில் இருந்தார்.முல்லைத்தீவு மாவட்ட வைத்தியாலையின் மாவட்டவைத்திய அதிகாரியாய் 1960 களில்
இருந்தார்.அப்போது பெட்ரோல்மக்சின் உதவிடன் அவசர சிசேரியன் சத்திரசிகிச்சை செய்து தாயையும் பிள்ளையையும் காப்பாற்றியவர். 
  ஐயா மருத்துவத்துறையில் ஒரு சகலகலாவல்லவர். அவரிடம் எப்போதுமே ஒரு நீதி இருந்தது. அதுதான் அந்த ஓய்வற்ற உழைப்பைக்கொடுத்தது.அவர் பல பல ஆயிரம் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்திருக்கிறார். பல ஆயிரம் சத்திரசிகிச்சைகளை செய்திருக்கிறார். ஆறு தசாப்தங்கள் மருத்துவப்பணி செய்திருக்கிறார்.
சுகாதார விஞ்ஞானக்கல்லூரியின் தலைவராக நியமிக்கும் போதும் அன்போடு ஏற்றுக்கொண்டார்.சுகாதார விஞ்ஞானக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவின் போது  மாணவர்களுக்கு ஐயா பட்டமளிப்பது இன்றும் மனக்கண்முன்னால் விரிகிறது.
 புல்லாங்குழலை தானாகவே பயின்று ,அந்த இசையாலும் மக்களை மகிழ்வூட்டிய வள்ளல். இவரது புல்லாங்குழல் இசை இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலும்  பல தடவைகள் ஒலிபரப்பானது குறிப்பிடத்தக்கது.  
      . ஐயாவும் அவர் மனைவியும் மிகவும் தங்களுக்குள் அன்பாக இருந்தவர்கள். இவரது மனைவி பாம்பு தீண்டி எதிர்பார்க்காமல் உயிர் இழந்தவர். மனைவியின்  திடீர் இழப்பிற்குபின் ஐயா எப்படி மீள் எழுவார் என்று ஐயுற்றோம்.ஐயா மீள எழுந்து தன் அளப்பரிய சேவையை தொடர்ந்தார். ஐயா மருத்துவராயும் அவர் மனைவி தாதியாகவும்   தாங்களே தயாரித்த சுகாதார கருத்தூட்டல்கள் இன்றும் என் காதுகளுக்கு கேட்கிறது.
ஐயாவிற்கு மெக்கானிக் அறிவும் இருந்தது. பல உபகரணங்களை அவரே திருத்துவார். எதையும் வீணாக்கவிடமாட்டார். மிகவும் சிக்கனமாய் பொன்னம்பலம் மருத்துவமனை இயங்கவேண்டும் என்பதிலும் கரிசனையாய் இருந்தார். மூத்த போராளியொருவர் இறுதிப்போரின் பின் 
நீண்டகாலம் புனர்வாழ்வு பெற்று  வெளிவந்து ஐயாவை சந்தித்திருக்கிறார். ஐயா ஒரு இலட்சம் ரூபாவை கொடுத்து ஐம்பது ஆயிரம் உமக்கு மிகுதி ஐம்பது ஆயிரம் ரூபாவை நீர் நல்லாவரும்போது தரவேண்டும் என்று கொடுத்திருக்கிறார்.இதுதான் ஐயா.ஐயாவின் தென்னந்தோட்டத்தில் பல ஏழைக்குடும்பங்களை குடியேற்றி வாழவும் வழிகாட்டியவர்.  ஐயாவின் வன்னியில் வாழ்ந்தகாலம்  ஒரு வரலாற்றின் தடம்      
தேசியத்தலைவர் அவர்களால் ஐயாவிற்கு" மாமனிதர் " விருது வழங்க கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இறுதிப்போர்ச்சூழல்

அக்கணத்தை தின்றுவிட்டது.  ஐயாவின் உடலைச்சுமந்து வன்னியெங்கும் அஞ்சலி செய்ய இயலாத மனம் துடிக்கிறது. போய்வாருங்கள் ஐயா. வன்னியில் வீசும் காற்றிலாவது எங்கள் எல்லோரினதும் உரையாடல்கள் கலந்திருக்கும்.       


Share/Save/Bookmark

வியாழன், 19 பிப்ரவரி, 2015

மகிழ்வும் இல்லை கவலையும் இல்லையாம்

ஒரு மாதம் கழிந்துவிட்டது
காணாமல் போனவர்
இருக்கிறாரா ? இல்லையா?
சிறு செய்திகூட இல்லை  
என்ன இணக்கம் வேண்டிக்கிடக்கிறது
விதவையா? சுமங்கலியா ?
இரண்டும் கெட்டவாழ்வு
அப்பா வர பொங்குவோம்
நல்ல உணவை உண்ணும் போதும்
பிள்ளைக்கு / கணவனுக்கு ?
இரவும் பகலும் துயரில் கரையும்
விடையில்லா அந்தரித்த வாழ்வு

அண்டங்காக்காவுக்கு
மகிழ்வும் இல்லை கவலையும் இல்லையாம்
பிணங்களைப்போல   


Share/Save/Bookmark

சனி, 14 பிப்ரவரி, 2015

Dr பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை

Dr பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை (தனியார்)1996 ஆம் ஆண்டில் மாங்குளத்திற்கு   அண்மையிலுள்ள ஒலுமடு என்ற அழகிய கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.இடப்பெயர்ந்த மக்கள் தமது மருத்துவ தேவைகளை பெறக்கூடியவாறு வன்னியின் மையத்தில் மருத்துவமனை அமைந்தது சாலப்பொருந்திற்று. இறுதிவரை சில மக்கள் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனையை ஒலுமடு மருத்துவமனையென்றும் அழைத்தனர்.இந்த (ஒலுமடு)மருத்துவமனையின் மக்கள் நம்பிக்கையிற்கு அதன் பொறுப்பு மருத்துவராயிருந்த Dr தர்மேந்திராவும் ,எமது மூத்த மருத்துவர்
Dr கெங்காதரனும் வழிகோலினர் என்றால் அது மிகையல்ல. ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஜெயசுக்குறு நடவடிக்கையால் இம்மருத்துவமனை இரண்டாகி புதுகுடியிருப்பிற்கும் , மல்லாவியிற்கும்  இடம்பெயர்ந்தது , பின் மல்லாவிக்கிளை கிளிநொச்சியிற்கு  10/02/2001 அன்று புதுப்பொலிவோடு இடம்மாறிற்று.2008 இன் பிற்பகுதியில்  கிளிநொச்சி மருத்துவமனை மீண்டும்

இடம்பெயர்ந்து விசுவமடுவில் இயங்கிற்று. யுத்தத்தில்   மருத்துவமனையும் காணாமல் போயிற்று.நினைவுகள்தான் எஞ்சியிருக்கிறது.


Share/Save/Bookmark

சனி, 7 பிப்ரவரி, 2015

ஒரு மருத்துவ ஆளுமை

1996 பிற்பகுதி, ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி நோக்கி "சத்ஜெய " இராணுவ நடவடிக்கை கிளிநொச்சியில் இருந்து மக்கள் எல்லாம் இடம் பெயர்ந்து செல்கிறார்கள்.ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்களும் மீள இடம்பெயர்கிறார்கள்.கிளிநொச்சியில்த்தான் மக்களுக்கான பெரிய மருத்துவமனை இருந்தது.அந்த மருத்துவமனை அக்கராயனில் அமைந்திருந்த சிறு மருத்துவமனைக்கு மாறுகிறது. செல்லுக்கும் துப்பாக்கி ரவைகளுக்கும் மத்தியில் சில ஊழியர்களோடும் போராளிகளோடும் மருத்துவமனை பொருட்களை தம் உயிர்களை பணயம் வைத்து மாற்றுகிறார் வைத்தியகலாநிதி விக்னேஸ்வரன் அவர்கள்.பழையகால எக்ஸ்ரே இயந்திரத்தை மாற்றுவது இலகுவான வேலை அல்ல.அக்கராயனில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை இயங்க ஆரம்பிக்கின்றது.தினம் ஆயிரம் தொடக்கம் இரண்டாயிரம் வெளிநோயாளர்கள்.மருத்துவமனை எங்கும் நோயாளர்கள்.ஆளணியோ ஐந்தில் ஒன்று கூட இருக்காது. மாவட்ட வைத்திய அதிகாரி விக்னேஸ்வரனின் ஒப்பற்ற உழைப்பு மக்களை காத்தது. விக்னேஸ்வரன் ஒரு மருத்துவ ஆளுமை.இயன்றவரை அரச அரசசார்பற்ற நிறுவனங்களை ஒன்று திரட்டி மருத்துவமனையின் சேவையை இயன்றவரை பூரணப்படுத்தினார்.  அவரும் ,சக உத்தியோகத்தர்களும்,ஊழியர்களும், தொண்டர்களும் சுமந்த வேலைப்பளு எழுத்தில் எழுதிவிடமுடியாதது.    போர்ச்சூழலில் பொருளாதார,மருந்து, எரிபொருள்த்தடைக்கும்  நடுவில் இடப்பெயர்வோடு மருத்துவமனைகளை நடாத்துவது இலகுவானது அல்ல. 


Share/Save/Bookmark

வெள்ளி, 30 ஜனவரி, 2015

இயற்கையோடு வாழ்ந்தவரின் நினைவுகள்

சி.இராசரத்தினம் (மூத்த எழுத்தாளர் கச்சாயில் இரத்தினம் )அவர்கள் மலையக (தேவாலக்கந்த) பாடசாலையில் தலைமை ஆசிரியராய் இருந்தவர்.பின் ஓய்வு பெற்று சுழிபுரத்தில் இயங்கிய துரையப்பா அன் சன்ஸ் என்ற பெரும் வர்த்தக நிலையத்தில் பிரதம கணக்கராய் இருந்தவர்.அதே காலத்திலேயே பல வேறு வர்த்தக நிலையங்களின் கணக்காய்வாளராகவும் இருந்தார்.
கச்சாயில் இரத்தினம் அவர்கள் இலங்கையில் இருந்து வெளியான ஆரம்ப சரித்திர நாவலை ( வன்னியின் செல்வி )  எழுதியவர்.எழுத்துகளுடன் மட்டும் நில்லாமல் மேடை நாடகங்களை எழுதி இயக்கி பாத்திரம் ஏற்று பாடி,நடித்து புல்லாங்குழல்,mouth organ ,ஆர்மோனியத்துடன் இசை அமைத்து,மேடைக்கான திரைச் சீலைகளை தானே வரைந்த வல்லவர். இவரது நூற்றி ஐம்பதிற்கு மேற்பட்ட சிறு கதைகள் இலங்கை, இந்திய பத்திரிகை,வானொலி,சஞ்சிகைகளில் பிரசுரமாகி இருக்கிறது. இவரது நூற்றுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கிறது.இலங்கை தமிழ் வானொலியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இலங்கை தமிழ் வானொலி நாடகஎழுத்துருக்களில்  அதிக பங்களித்தவர்களில் நால்வரில் ஒருவராக இவரையும் குறிப்பிட்டுள்ளார். இவர் பல பரிசில்களையும் பெற்றுள்ளார்.”இலவு காத்த கிளி” என்ற கதை அகில இலங்கை ரீதியில் முதற் பரிசு பெற்றது.கவிதையிலும் முதற் பரிசு பெற்றுள்ளார். 1964 ஆம் ஆண்டு தேன்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் அப்போதைய மட்டக்களப்பு  தமிழரசுக்கட்சி  பாராளமன்ற உறுப்பினர் ராசதுரை அவர்களால் கௌரவிக்கப்பட்டார். புலிகளின் குரலில் ஒலிபரப்பான அவரது பேட்டிதான் அவரது இறுதி இலக்கிய பங்களிப்பு என்று நினைக்கிறேன். யாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவரால் தனது கற்கைக்காக இவரது ஆக்கங்கள் ஆய்வுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.  
      

யாழ்ப்பாண பெரும் இடப்பெயர்வின் போது தென்மராட்சி பிரதேசம் மக்களால் நிரம்பி வழிந்தது.யாழ் மருத்துவமனையின் பெரும்பகுதி மந்திகைக்கு இடம்பெயர்ந்திருந்ததால் சாவகச்சேரி மருத்துவமனை ஆளணி பற்றாக்குறையால் திக்குமுக்காடிற்று. நானும் இருபத்திநான்கு மணிநேரமும்  அங்கு கடமையில் இருக்கவேண்டியதாயிற்று. எனது அம்மா சகோதரர் உறவினர் இடம்பெயர்ந்து நுணாவிலில் ஒருவீட்டில் ஒரு அறையில் இருந்தார்கள்.அன்று  04/02/1996 விடிகாலை வீட்டை போய் ஒரு தேநீர் அடித்துவருவோம் என்று புறப்பட்டுபோனேன். அறைக்குள் உள்செல்ல அம்மப்பா தான் சாய்மனைக்கதிரையில் படுத்திருந்தபடி   என்னைக்கண்டார். என் அம்மாவை கூப்பிட்டு நான் வந்திருப்பதாகவும் தேநீர் கொண்டுவரச்சொன்னார். அடுப்பு  முற்றத்தின் ஒருகரையில் இருந்தது. அம்மப்பா தேநீர் குடித்துக்கொண்டிருந்தார். நான் முகம் கழுவி வந்து பலாக்கட்டையில் இருந்தபடி தேநீரை சுவைக்க தொடங்கினேன்.திடீரென   அம்மா கத்தினார் பப்பா! நான் போய் அவர் இறந்ததை உறுதிப்படுத்தினேன்.இதயம் கல்லாயிற்று.ஒரு அறைக்குள் உடலை வைத்திருக்கமுடியாது மறு அறைகளுக்குள்ளும் ஆட்கள் இருக்கிறார்கள். இயன்றவரை இறுதி கிரியைகளை சிறப்பாக செய்தோம்.நாடு அறிந்த ஒருவரை ஊருக்குகூட தெரியாமல் அவர் விரும்பிய   கண்ணாடிப்பிட்டிசுடலையில் எரித்துவிட்டு நேராக மருத்துவமனைக்கே போனேன்.காலத்தின் தேவை இப்படி இருந்தது.    

அம்மப்பாவின் வாழ்க்கை எப்போதும் நடுத்தரம்தான் அதிலும் சாதாரணம்தான்.அம்மப்பாவின் எழுத்தின் முதல் வாசகி அம்மம்மாதான்  .அம்மம்மா மிகவும் அன்பானவர் , அமைதியானவர், அதிர பேசத்தெரியாதவர். அம்மப்பா சுறுசுறுப்பானவர் , வேலி அடைக்கும் போதும் ஒரு ஆளாய் நிற்பார். வயலில் நெல் விதைக்கையிலும் நிற்பார், அறுவடையிலும் நிற்பார். சந்தைக்கு போய் மீன் வாங்கிவந்தால் ஒரு கிழமைக்கு இருக்கும்.வீட்டில் மல்லிகை பூத்து கொட்டிக்கிடக்கும் ,செவ்வரத்தம் பூ விடிகாலையையே அலங்கரிக்கும்,எலுமிச்சை,மாதுளை,மாமரம் என்று எல்லாம் அம்மப்பாவின் கைவண்ணம்தான். ஆடுகளுக்கு குழை ஒடித்து மாட்டுக்கு ஓலை கிழித்து எங்கும் அவர் நிற்பார்  . அவர் இறந்தது அவர் நட்ட மரங்களுக்கு தெரிய நியாயமில்லை.அம்மம்மா வெளிநாட்டில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் இல்லை.  அதிக எதிர்பார்ப்புகள் அற்று இயற்கையோடு வாழ்ந்தவரின் நினைவுகள் என் நெஞ்சை அழுத்துகின்றது.


Share/Save/Bookmark

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை நினைவு

கிளிநொச்சி நகரில் சுமார் ஐந்து வருடங்களுக்கு பின் மக்கள் மீள்குடி யேறத்தொடங்கினர். நீண்டகால இடைவெளி என்பதால்  கிளிநொச்சி பற்றைகளாலும் பாம்புகளாலும் கண்ணிவெடிகளாலும் நிரம்பிக்கிடந்தது.
யுத்த சூழலின் போதும் மக்களின் மீள்குடியேற்றத்தித்காய் கிளி பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை (தனியார்)10/02/2001 அன்று ஆரம்பிக்கப்பட்டு 2008 ஆண்டுவரை தன் பணியை ஆற்றிற்று. இந்த  மருத்துவமனையின் சீரிய பணிக்கு பலமருத்துவர்கள், பணியாளர்கள்,நிர்வாகிகள் உழைத்திருக்கிறார்கள். இந்த மருத்துவமனையில் பல நூறு பிரசவங்கள் வெற்றிகரமாய் நடந்திருக்கின்றன.எந்த தாய் மரணங்களும் ( Maternal Death ) நிகழவில்லை  என்பது பெருமையுடன் குறிப்பிடவேண்டியது.  இறுதிக்காலத்தில் Dr மலரவனை பொறுப்பு மருத்துவராய் நியமித்திருந்தேன்.  Dr மலரவனும் ,அவர் சகி   Dr பிரியவதனாவும் இரவுபகலாய் உழைத்தார்கள். இவர்கள் இன்று எம்மோடு இல்லையென்பது பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை நினைவுவர மனதை வேதனைப்படுத்துகிறது.


Share/Save/Bookmark

வியாழன், 8 ஜனவரி, 2015

வரலாற்றில் எழுவான் வாழ்வான் தாய்மண்ணைப்போல

அழுங்குப்பிடி கைமாறுமா?
காணாமல் போனவர்
செய்தி கிடைக்குமா?
துயிலும் இல்லங்களை 
குத்திக்கிளறியவர்
தண்டிக்கப்படுவரா?
நிலம்திண்ணிகளும்
ஒட்டுண்ணிகளும்
எம்மினமழிக்கையில்
சர்வதேசத்திற்கு   சாட்சியாகி
சலித்துபோயிற்று அற்ப வாழ்வு   
பாலகன்
பிடித்து சுடப்பட்டான்
புல்லாங்குழல்
விறகாய் எரிந்திற்று
கொலைஞன் மக்களால் தோற்று
வரலாற்றில் வீழும் நேரம்
மரணம்வரை போராடி வீழ்ந்தவன்
வரலாற்றில் எழுவான்  வாழ்வான்

தாய்மண்ணைப்போல   


Share/Save/Bookmark
Bookmark and Share