சனி, 1 செப்டம்பர், 2012

என் ஊர்ப்பயணம்


எனக்கு தெரிஞ்ச நாட்களிலேயே எங்கட அப்பா படு சுழியன்.
அப்பாவுக்கு முந்தி ஒழுங்கான வேலை கிடையாது.பிறகு 
புலிகளின்ர காலத்தில அவங்கட அலுவலகம் ஒன்றில 
வேலை செய்தார்.அப்ப புலி என்ற நினைப்பிலேயே இருப்பார்.
இப்ப தாடிக்காரரோட வேலை செய்யுறார்.இப்ப இந்த நினைப்பில 
இருக்கிறார்.
நான் வெளிநாட்டுக்குப்போனதுக்கு இப்பதான் ஊருக்கு வந்திருக்கிறன். 
நான் இன்றைக்கு கனக மாமாவிட்ட போகக்கேட்டன்.அப்பா வேணாம் 
என்றிட்டார்.முந்தி அப்பாவும் கனக மாமாவும் நல்ல ஒட்டு.எங்களுக்கு 
அவை நிறைய உதவி செய்திருக்கினம் .நாங்களும் வீட்டுல இரண்டு 
பிள்ளைகள் நானும் தங்கச்சியும்.கனக மாமாவுக்கு இரண்டு பெடியள்.
மூத்தவன் என்னோடையும் இளையவன் தங்கச்சியோடையும் 
படிச்சவை.இப்ப அப்பாவும் கனக மாமாவும் கதைக்கிறதில்லை.அதால 
அங்க போக்குவரத்து இல்லை.    

எனக்கு அது இப்ப மாதிரி இருக்கு .அப்ப கனக மாமா வன்னியில வேலை செய்தவர்.
அவற்றை இளையவன் இங்க வீரச்சாவு.அப்ப தொலைத்தொடர்புகள் நல்லா இல்லை.
இயக்கம்தான் அவருக்கு அறிவிச்சது மகனுக்கு சீரியஸ் உடன வரச்சொல்லி .அவரை 
கிளாலியில இருந்து கூட்டிவர நானும் போனனான்.அவர் அழுதுகொண்டே வந்தார்.
அவர் என்னைக்கண்டதும் மூத்தவன்தான் வீரச்சாவு என்று நினைச்சிருக்கோனும். 
அவர் எதுவும் யாரிட்டையும் கேட்கயில்லை.அவருக்கு யார் என்றாலும் பிள்ளைதானே.
வீட்டை வந்தவுடன மூத்தவனை கட்டிப்பிடிச்சு அழுதார்.எல்லாம் கண்ணுக்கு முன்னால 
நிற்குது.அவற்றை பிள்ளைகளில அவருக்கு சரியான பாசம் .மிகவும் நேர்த்தியாய் 
பிள்ளைகளை வளர்த்தார்.எங்கட வீட்டுக்கு நேர் முன்னாலதான் அவற்றை வீடு.
எங்கட வீடு இப்ப மாடி வீடு.சுற்று பூந்தோட்டத்தோட
அழகாக இருக்கிறது.கனக மாமாவின்ர வீடு அப்படியே 
இருக்கிற மாதிரி தெரியுது.ஆனால் முன்னுக்கு இருந்த 
மல்லிகைப்பந்தலைக் காணவில்லை.

இன்றைக்கு அப்பா எவ்வளவு ஆசையாய்க் கேட்டார்.எனக்கு 
ஒரு மகன் இருக்கிறான்.அவனுக்கு ஐந்து வயது .அவனை தன்னோட 
அலுவலகத்திற்கு கூட்டிப்போக கேட்டார்.என்ரை மனுசி தொடுவிலையும்
மாட்டன் என்றிட்டுது. அம்மா அதை பெருசுபடுத்தவில்லை.
தங்கச்சியும் பிள்ளையும் எங்களைப்பார்க்க வந்திருக்கிறார்கள்.
மச்சான் வரவில்லை.அம்மா ஏற்கனவே என்னிடம் சொல்லி இருக்கிறார்.
மச்சான் இப்ப எங்கட வீட்டை வாறதில்லை என்று.தங்கச்சியிடம் 
கேட்டேன் எப்படி வந்தீங்கள்?அவர்தான் கூட்டி வந்தவர் .விட்டிட்டு 
கனக மாமாவிட்ட போயிட்டார்.கனக மாமாவும் ,மாமியும் 
தனியத்தானே இருக்கினம் இவர் இடைக்கிடை போய்ப்பார்க்கிறவர்.
மச்சானிட்டை சொன்னனியா நான் கேட்டதை?இல்லை.
அதை கேட்டிருந்தால் செருப்பால அடிச்சிருப்பார் சடக் 
என்று சொன்னாள்.ஏன் இயக்கம் தோற்றது?என்டதைத்தான்
கேட்டிருந்தனான்.நான் அந்தக்கதையை மாற்றினேன். 

நீ கனக மாமாவிட்ட போறனியா?ஆம் என மேலும் 
கீழும் தலையாட்டினாள்.அவைக்கு பிள்ளைகள் 
இல்லை என்று கவலை இல்லையா?திருப்பியும் 
முறைத்துப்பார்த்தாள்.கனக மாமி ஒரு நாள் சொன்னவ 
"பொம்பிளப்பிள்ளைகளே  போராடப்போகைக்க என்ர 
பிள்ளைகள் எப்படி வீட்டை இருக்கும்" சொல்லி ஓரக்கண்ணால் 
என்னைப்பார்த்தாள். எனக்கு ஏதோ நெஞ்சில் நறுக்கென்றது.
ஏதோ என்னில்த்தான் பிழை பிடிப்பதுபோல் இருந்தது.
வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிள் வந்து நின்றது 
அப்பா இறங்கினார் .தாடிக்காரன் ஒருவன் மோட்டார் 
சைக்கிள் ஓடிவந்தான்.என் மனைவியும்,தங்கையும் 
எதிர்ப்பக்கமாய் தலையை திருப்பினார்கள்.

-சுருதி -



Share/Save/Bookmark

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

அன்றும் இன்றும்


அன்றும் இன்றும் 

எத்தனை தடவைகள் 
மயிரிழையில் உயிர்தப்பினேன் 
எண்ணிக்கை எனக்கே தெரியவில்லை 
கிளைமர் பாதைகளில் எமது பயணம் 
வாழும் ஒவ்வொரு நாட்களும் 
போனஸ் நாட்கள் - இருந்தும் 
மகிழ்ச்சிட்கு குறைவில்லை 
கடமைச்சுமையால் 
உடல் களைத்தாலும்
உள்ளம் இளமையாய் இருந்தது 
இழந்தவரின் கனவையும் 
சுமந்து வாழ்கையில் 
எதையும் தாங்கிற்று மனம் 

இன்று 
நடைப்பிணமாயிற்று  வாழ்வு 

-நிரோன்-



Share/Save/Bookmark

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

சிறுவர் ஆக்கங்கள்


1,


பூனையார் பூனையார் 
எலி பிடிக்கும் பூனையார் 
பதுங்கிப்பதுங்கி 
எலி பிடிக்கும் பூனையார் 



Share/Save/Bookmark

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

சுஜோவின் ஹைக்கூ /விடுகதைகள் -03



1,
ஆசைமனதுக்கு 
தொற்றும் நோய் 
ஊழல் 

2,
ஏன்?எதற்கு? புரியாமல்
மனிதரால் மனிதர் சாகிறார்கள்  
பயங்கரவாதம் 

3,
சினிமா நடிகர்களின் 
சிரிப்பு 
அரசியல் வாக்குறுதி 

4,
மனிதன் 
எரிக்கும் காற்று 
பெருமூச்சு 

5,
நெருப்பு,காற்று இல்லாமல் 
எரியாது கற்பூரம்               
பெற்றோர்  உறவுகள் நான் 

6,
அலைகளுக்கிடையில் 
அடைக்கலம் தரும் பாசக்கடல் 
அம்மா  

7,
வானத்திற்கும் நிலத்திற்கும் ஓடும் 
தொட்டால் சுருங்கும் புகைவண்டி 
மழை 


8,
சதா விழித்திருக்கும் 
கண் 
காவலரண் 

9,
மனதில் வடியும் 
ஊனம் 
பொறாமை 

10,
மனம் 
பொங்கும் பொங்கல் 
மகிழ்ச்சி 

11,
மனிதனிடமுள்ள 
நாகாஸ்திரம் 
மன்னிப்பு 

12,
பாட்டி சுட்ட வடை 
காகம் கொண்டு போனது 
கட்சி தாவினார் எம் பி 


13,
பூவோடு 
சேர்ந்து நாரும் மணத்தது
கல்லறைக்கற்கள்       
14,
முளைவிட 
இன்னொரு உலகம் 
மீசை 

15,
சிவந்த உப்பு மழை 
ஏந்திய தாய் 
முள்ளிவாய்க்கால் 

16,
வரவேற்கவும்,
வழியனுப்பவும் பூக்கள் 
அறிவிப்பு:வாடிடும் வாழ்க்கை  

17,
கட்டுப்படுத்தமுடியாதது 
ஆணையும் பெண்ணாய் மாற்றும்
வதந்தி  

18,
இரைதேடி குருவிகள் போக 
குஞ்சுடன் குருவிக்கூடுகள் போயின 
சுனாமி 

19,
பழைய புதுமை மொழி-யாரும் 
புரியாமலே இரசிக்கலாம் 
குழந்தை மொழி 

20,
எழுத்தில் உள்ளது 
நடைமுறையில் வராது 
நல்லிணக்க ஆணைக்குழு 


21,
மாடிகள் பேசப்படுகின்றன 
அத்திவாரங்கள் ?
பூக்களும் வேர்களும் 

22,
ஏழைகளின் 
பாடப்புத்தகம் 
வறுமை 

23,
மயிர்க்கொட்டிகள் 
வண்ணாத்திப்பூச்சிகளாவது 
அடக்குமுறையும் விடுதலையும் 

24,
அம்மா பசிக்குது 
கையில் உணவுமில்லை,காசுமில்லை 
நட்டாறு

25,
கண் தெரியாதவன் 
பெரிதாய் எழுத்துக்களை எழுதுவான் 
நியுட்டனின் மூன்றாம் விதி 



Share/Save/Bookmark

திங்கள், 30 ஜூலை, 2012

நாடு இழந்தவனின் கண்ணீர்த்துளி




Share/Save/Bookmark

சனி, 28 ஜூலை, 2012

இறுதி ஆசை



1,

அவனது சிறுபராயம் விளையாட்டில் கழிந்தது.கிட்டிப்புள்ளு,
கிளித்தட்டு,கிரிக்கட்,உதைபந்தாட்டம் என ஒரே விளையாட்டுத்தான்.
பாடசாலை அணிநடை,மெய்வல்லுனர் அணியிலும் இருந்தான்.

அவன் ஊரில் ஓரளவு பிரபல்யமான கோவில் இருந்தது.அந்தக்கோவில் 
கொடி ஏறினால் பத்து நாள் திருவிழா நடக்கும். நாலாம்,ஏழாம்,ஒன்பதாம்
திருவிழாக்களுடன்   பூங்காவனமும் கோலாகளமாய்   நடக்கும்.எல்லா 
நாள் திருவிழாவிலும் அவனது சமுகமும் இருக்கும். மேளக்கச்சேரிகளுக்கு 
முன் வரிசையில் வாயை ஆவென்றபடி இருப்பான்.பின் வீட்டில் கோயில் 
கட்டி அந்தக்கோயில் கொடிஏறும்.அங்கயும் மேளக்கச்சேரி இருக்கும்.
தகர ரின் எடுத்து மூடியை கழற்றிவிட்டு பழைய கொப்பித்தாள்களை 
அந்தப்பக்கம் வைச்சு சைக்கிள் ரியுப் ரப்பர் எடுத்து ரின் மூடி மாதிரி 
சுற்றிக்கட்டுறது.பிறகு அந்தப்பக்கம் தடியால் அடிச்சு மற்றப்பக்கம் 
தாளம் போட கிட்டத்தட்ட மேளச்சத்தம் வரும்.வீட்டுத்திருவிழாவில
மேள அடி இப்படித்தான் நடக்கும்.
       
ஒரு நாள் இப்படித்தான் பிஸ்கட்டுகளை கடவுளுக்குப் 
படைத்துவிட்டு சாமியை  பல்லக்கு மாதிரி அவனும் தம்பியும் 
வீட்டைச்சுற்றி தூக்கி வந்தனர்  .அப்ப அவனது சித்தி கூப்பிட்டுச் சொன்னா 
படைச்ச பிஸ்கட்டுகளை நாய் சாப்பிடுதென்று ,உடன அவனும் 
தம்பியும் அந்த இடத்திலேயே சாமியை போட்டிட்டு நாயை 
கலைத்துப்போனார்கள் .அதுக்குப்பிறகு   அவனது தாய் 
அவனை கோவில் கட்டி விளையாட விடுறயில்லை.

அவன் எண்பதுகளில இயக்கத்திற்கு சேர்ந்து அரசியல் வேலைகள் 
செய்தான்.அப்ப எல்லாம் அவன் அடிக்கடி நாளுக்கு நூறு கிலோமீட்டர்வரை 
சைக்கிள் ஓட வேண்டியிருக்கும்.அப்ப கராத்தே நீலப்பட்டிவரை பழகினான்.
தொண்ணூறுகளில் சில காலங்கள்(பெருமாள் கோவில் அருகில்) Body building பழகினான். 
பின் இயக்கத்தில் முழுமையாக Kick boxing பழகினான்.யோகாசனத்தை நண்பர்களுக்குப் பழக்கினான்.
இயக்கத்தில் கொமாண்டோ இராணுவப்பயிற்சியை பெற்றிருந்தான்.வன்னி 
முழுக்க புழுதிக்குள்ளாலும் ,கிளைமருக்குள்ளாலும் அவனது மோட்டார் 
சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும்.  

2,

 அவன் 2010 இல் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.
பம்பைமடு மருத்துவமனையில் இருந்து அவனை கொண்டு வந்திருந்தார்கள்.
அவனுக்கு இடுப்புக்குக்கீழ் இயங்காது.வலது பின் இடுப்புப்பக்கமாய் 
படுக்கைப்புண் போட்டு பெட்சீட் சரியான மணத்துடன் ஊறிக்கொண்டிருந்தது.அவனுக்கு 
சரியான காய்ச்சலும் டாக்டர் பரிசோதிச்சு சொன்னார்.காயத்தால் 
வலது இடுப்பு எலும்பு உக்கிப்போட்டுது . "செப்டிசீமியா" ஆளை 
காப்பாத்தேலாது.
உங்கட உறவுகளோட கதைக்கோணும் என்று டாக்டர் கேட்க ,யாரும் 
இல்லை .என்னென்டாலும் தன்னோட கதையுங்கோ எதுக்கும் 
யோசிக்காதையுங்கோ என்றான்.
டாக்டர் சிரமப்பட்டுச் சொன்னார் தம்பி நீங்கள் இரண்டு நாள்தான் 
உயிரோடு இருப்பியள். அவன் எந்த முகமாற்றங்களுமற்று தலையாட்டினான்.
வலியால் முனகி முனகி இன்று இறந்தான்.டாக்டரும் வந்து உறுதிப்படுத்திவிட்டுப்போய்
விட்டார்.தாதி பிரேத அறைக்கு உடலை அனுப்ப காத்து இருக்கிறாள்.
டாக்டரும் கேட்டிருந்தார் உனது இறுதி ஆசை ஏதாவது இருந்தால் சொல் 
நிறைவேற்றுகிறேன் என்று.தாதியும் இதே கேள்வியை கேட்டிருந்தாள்.
அவன் "தமீழீழம் "தான் என்றிருந்தான்.

முற்றும் 

-நிரோன்-




Share/Save/Bookmark

இலங்கை ஒரு ஜனநாயக நாடு




1,

அவன் 
ஒரு புலித்தளபதி 
அவன் குரலுக்கே 
சிங்கள இராணுவம் ஓடிற்று 
அவன் 
கிடைத்த ஆயுத, ஆளணி வளங்களுடன் 
இறுதிவரை 
களத்தில் நின்றான்.
புலிகள் 
எந்த நாட்டின் துணையுமின்றி 
இருபது நாட்டுக்கு மேல் 
உதவி பெற்று, 
சர்வதேச சட்டங்களை மதியாத 
அரக்கர்களுடன் மோதினர்.
சர்வதேசம் 
புலிகளுக்கான 
ஆயுத விநியோகத்தை 
தடுத்துவிட 
புலிகள் தோற்றனர் 

அரசாங்கம் 
ஒலிபெருக்கியில் 
புலிகளை வருமாறும் 
கருணா பிள்ளையான் போல் 
மக்களாகலாம் என்று 
ஆசை மொழி பேசி 
அரவணைப்பது போல் 
அழைத்தது 
சர்வதேச முக்கியஸ்தர்கள் 
தொடர்புகொண்டு 
உயிர் பாதுகாப்பு உத்தரவாதம் வேற 
அதனால் 
பல மூத்த போராளிகளும் 
இராணுவ வலைக்குள் சென்றார்கள் 

அவன் உள் சென்று  
நிலத்தில் இருக்கையில் 
அவனை வருமாறு 
இராணுவ வீரன் ஒருவன் அழைத்தான் 
அவன் போகும் போது
தன்னுடன் நின்ற இளம் போராளியிடம் 
நீ போய் மக்களோட இரு 
என்னை அடையாளம் கண்டுட்டாங்கள் 
அவன் போனான் 
அவன் மண்வெட்டிப்பொல்லுகளால் 
அடித்து,அடித்தே கொல்லப்பட்டான் 
அவனைப்போல் 
பலர் கொல்லப்பட்டனர்.
இறுதியுத்தம் ஒன்றை செய்து 
இறந்திருக்கலாம் என்று 
அவர்கள் நினைத்திருப்பார்கள் 

இந்தப்போரில் 
இறந்த புலிகளைவிட 
சிங்கள இராணுவம் அதிகம் 
மக்களையும் 
சரணடைந்த புலிகளையும் 
கொன்று 
வஞ்சம் தீர்த்தது சிங்களம் 

மீண்டும் மீண்டும் 
துட்டகைமுனு 
எல்லாளன் கதை 

2,

அவன் புலிகூட இல்லை 
ஆனாலும் 
புலிச் சந்தேக நபராய் 
கைது செய்யப்பட்டான் 
சிறை 
அரசாங்கத்தின் பாதுகாப்பில் 
சிறை 
அடித்தும் 
இரு கால்களையும் 
இழுத்துப்பிரித்தும் 
அணு அணுவாய்க் கொல்லப்பட்டான் 
நண்பர்கள் இன்னும் சாகவில்லை 

யாரும் கைது செய்யப்படவில்லை 
வெலிக்கடை ,பிந்துனுவேவ
அரசாங்க சிறைக்கொலைகளைப்போல்
இன்னும்  
 யாரும் கைது செய்யப்படவில்லை 
மூடிய சிறைக்கொலைகளுக்கே
நீதி வழங்கா (அ)நீதிமன்றங்கள் 
வெள்ளை  வான் கொலைகளுக்கா 
நீதி தரப்போகின்றன  

அவனின் ஏழைப் பெற்றோரின் 
அழுகை 
கடவுளில் ஐயுறவை ஏற்படுத்திற்று  

இன்னும் 
எங்கும் பேசிக்கொள்கிறார்கள் 
இலங்கை ஒரு ஜனநாயக நாடு 

இன்னும் 
பெட்டியில் நச்சுப்பாம்புகளாய் 
அவர்களுடன் அடிவருடிகள் 



         - நிரோன்-




Share/Save/Bookmark
Bookmark and Share