1,
அவன்
ஒரு புலித்தளபதி
அவன் குரலுக்கே
சிங்கள இராணுவம் ஓடிற்று
அவன்
கிடைத்த ஆயுத, ஆளணி வளங்களுடன்
இறுதிவரை
களத்தில் நின்றான்.
புலிகள்
எந்த நாட்டின் துணையுமின்றி
இருபது நாட்டுக்கு மேல்
உதவி பெற்று,
சர்வதேச சட்டங்களை மதியாத
அரக்கர்களுடன் மோதினர்.
சர்வதேசம்
புலிகளுக்கான
ஆயுத விநியோகத்தை
தடுத்துவிட
புலிகள் தோற்றனர்
அரசாங்கம்
ஒலிபெருக்கியில்
புலிகளை வருமாறும்
கருணா பிள்ளையான் போல்
மக்களாகலாம் என்று
ஆசை மொழி பேசி
அரவணைப்பது போல்
அழைத்தது
சர்வதேச முக்கியஸ்தர்கள்
தொடர்புகொண்டு
உயிர் பாதுகாப்பு உத்தரவாதம் வேற
அதனால்
பல மூத்த போராளிகளும்
இராணுவ வலைக்குள் சென்றார்கள்
அவன் உள் சென்று
நிலத்தில் இருக்கையில்
அவனை வருமாறு
இராணுவ வீரன் ஒருவன் அழைத்தான்
அவன் போகும் போது
தன்னுடன் நின்ற இளம் போராளியிடம்
நீ போய் மக்களோட இரு
என்னை அடையாளம் கண்டுட்டாங்கள்
அவன் போனான்
அவன் மண்வெட்டிப்பொல்லுகளால்
அடித்து,அடித்தே கொல்லப்பட்டான்
அவனைப்போல்
பலர் கொல்லப்பட்டனர்.
இறுதியுத்தம் ஒன்றை செய்து
இறந்திருக்கலாம் என்று
அவர்கள் நினைத்திருப்பார்கள்
இந்தப்போரில்
இறந்த புலிகளைவிட
சிங்கள இராணுவம் அதிகம்
மக்களையும்
சரணடைந்த புலிகளையும்
கொன்று
வஞ்சம் தீர்த்தது சிங்களம்
மீண்டும் மீண்டும்
துட்டகைமுனு
எல்லாளன் கதை
2,
அவன் புலிகூட இல்லை
ஆனாலும்
புலிச் சந்தேக நபராய்
கைது செய்யப்பட்டான்
சிறை
அரசாங்கத்தின் பாதுகாப்பில்
சிறை
அடித்தும்
இரு கால்களையும்
இழுத்துப்பிரித்தும்
அணு அணுவாய்க் கொல்லப்பட்டான்
நண்பர்கள் இன்னும் சாகவில்லை
யாரும் கைது செய்யப்படவில்லை
வெலிக்கடை ,பிந்துனுவேவ
அரசாங்க சிறைக்கொலைகளைப்போல்
இன்னும்
யாரும் கைது செய்யப்படவில்லை
மூடிய சிறைக்கொலைகளுக்கே
மூடிய சிறைக்கொலைகளுக்கே
நீதி வழங்கா (அ)நீதிமன்றங்கள்
வெள்ளை வான் கொலைகளுக்கா
நீதி தரப்போகின்றன அவனின் ஏழைப் பெற்றோரின்
அழுகை
கடவுளில் ஐயுறவை ஏற்படுத்திற்று
இன்னும்
எங்கும் பேசிக்கொள்கிறார்கள்
இலங்கை ஒரு ஜனநாயக நாடு
இன்னும்
பெட்டியில் நச்சுப்பாம்புகளாய்
அவர்களுடன் அடிவருடிகள்
- நிரோன்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக