ஞாயிறு, 8 ஜூலை, 2012

உண்மைக்கதை -10




அவருக்கு இப்ப இயலாது.எண்பது வயது .சலரோகம்,அஸ்மாவோட
கண் தெரியுறதும் குறைஞ்சுபோச்சு.சத்திரசிகிச்சை செய்தும் பெரிய 
முன்னேற்றம் இல்லை.
அவர் யாழ்ப்பாணத்தில உள்ள பிரபல கோவில் ஒன்றுடன் 
பரம்பரையில் தொடர்புள்ள குடும்பத்தில் பிறந்தார்.அவரது குடும்பம் 
சாதாரண விவசாயக்குடும்பம்.அவர் தனது ஆரம்பக்கல்வியை 
ஊரில் படித்துவிட்டு தொடர்கல்வியை யாழ் (சென்றல்) மத்திய கல்லூரியில் கற்றார். கல்வியில் குறிப்பாக கணிதபாடத்தில் மிகவும் கெட்டிக்காரனாக 
இருந்தார்.பாடசாலை மட்ட உள்ளக விளையாட்டுக்களில் 
திறமைகளை காட்டினார்.கிரிக்கட் ,உதைபந்தாட்டம் ,டேபிள் டெனிஸ்,
பட்மிண்டன் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வமாய் இருந்தார். 



 அந்த காலத்தில் வசதி உள்ளவர்கள் இந்தியாவிற்கு பல்கலைகழக 
கல்வியை தொடரப்போனார்கள் .இவருக்கும் இந்தியாவில் 
பல்கலைக்கழக அனுமதி கிடைத்திருந்தது.ஆனால் இவரது 
குடும்ப பொருளாதாரநிலை காரணமாய் இவரால் போக 
முடியவில்லை. 
இவர் தனது குஞ்சி அப்புவின் (சித்தப்பா)கடையில் வேலை செய்து 
கொண்டு படிக்க கொழும்புக்குப்போனார்.இவர் மிகவும் நேர்மையானவர்.
மனித நேயம் கொண்டவர்.துணிவானவர்.முன்பெல்லாம் யாழ்ப்பாணத்திலிருந்து 
கொழும்புக்கு யாழ்தேவி/மெயில் ரெயில் ஓடும்.அப்பொழுது பல 
யாழ்ப்பாணத்தவர்கள் ரெயில் இருக்கைகளை பிடித்து படுத்து வருவார்கள் .
அதேநேரம் பலர் நின்று பிரயாணம் செய்வார்கள்.இவர் படுத்திருப்பவர்களை 
எழுப்பி ஒரு கரையில் இருக்கவிட்டு நிற்பவர்களை இருத்திச்செல்வார்.
இவரோடு கூடப்போபவர்களுக்கு இவரது செய்கை பயத்தைக்கொடுக்கும்.
இவர் பயணம் செய்யும் போது இது தான் நடக்கும் .மூன்று மொழிகளிலும் 
கதைப்பார்.யாருக்கும் பயப்படுவதில்லை.  
1958 ஆம் ஆண்டு இனக்கலவரம் தமிழர் மீது ஏவிவிடப்பட்டது .சிங்களப்பகுதியில் 
வாழ்ந்த தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்/துரத்தியடிக்கப்பட்டார்கள் .
அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டு,எஞ்சியவை எரிக்கப்பட்டன.
இவர்களது கடை கொழும்பு,பொரளையிலுள்ள கரந்தை சந்தியில் 
இருந்தது.அன்று வேலையாட்கள் வேளைக்கு சென்றுவிட இவரும்,
இவரின் குஞ்சி அப்புவும் தான் கடையில் இருந்தார்கள்.சூழ உள்ள 
தமிழ்க்கடைகள் உடைக்கப்பட்டு சில எரிக்கப்பட்டன.ஒரு எரிக்கப்பட்ட 
கடையுனுள் அதன் முதலாளியை அடித்து,தூக்கி வீசியதை இவர்கள் இருவரும் 
கடை மேல்மாடியில் இருந்து கண்டார்கள்.  
இரவு ஒன்பது மணியளவில் இவர்களது கடையை நோக்கி 
சிங்கள காவாலிக்கூட்டம் பெரும் ஆரவாரங்களுடன் 
கத்தி,பொல்,தீப்பந்தம் சகிதம் வந்தது.  இவர்கள் ஏற்கனவே 
யானை மார்க்(elephant mark)சோடாக்களை அருகில் எடுக்கக்கூடியதாக வைத்திருந்தார்கள்.
பத்து மீட்டர் தூரத்தில் கூட்டம்வர இவர் முதலாவது சோடாவை குலுக்கிப்போட்டு 
அவர்கள் மீது எறிந்தார்.அது சிறு சத்தத்துடன் ஒருவரில் அடிப்பட்டு உடைந்தது.
முதல் எறியிலேயே   நாலு ஐந்து பேர் காயப்பட்டார்கள்.சோடாப்போத்தல் 
கண்ணாடிகள் உருவாக்கிய காயங்களால் இரத்தம் போவது தீப்பந்த வெளிச்சத்தில் 
தெரிந்தது.குஞ்சி அப்புவும் தன் பங்குக்கு ஏறி கொடுத்துக்கொண்டிருந்தார்.
இவரது எறிகள் அநேகமாய் ஆட்களிலே பட்டது.கூட்டம் திரும்பி ஓடுவதும் 
மீள ஆட்சேர்த்து வருவதுமாய் இருந்தது.காயங்களால் அவர்கள் 
கத்துவது அந்த அனர்த்தத்திலும் தெளிவாகக்கேட்டது.இவர் நினைத்தார் 
நாங்கள் தப்ப ஏலாது ஆனால் வருமட்டும் குடுப்பம்.  
விடிய ஐந்து மணிவரை இந்த நாடகம் நடந்தது.நூற்றுக்கு 
மேற்பட்டவர் காயப்பட்டிருப்பார்கள்.கடையிட்கு முன்னால 
கண்ணாடித்துகள் களால் நிலம் நிரம்பி இருந்தது.எட்டு 
குறோர் சோடா எறியப்பட்டிருந்தது.ஒரு குறோரில்
நூற்றினாட்பத்தினாலு சோடாக்கள்.ஐந்து மணியளவில் 
இராணுவம் வந்து இவர்களை பாதுகாப்பாய் கூட்டிப்போனது.
அப்போதைய இராணுவம் நேர்மையாய் ,ஒரு நாட்டின் 
இராணுவமாய் செயற்பட்டது.  
   இவர்களை பொரளை போலிஸ் ஸ்டேசனுக்கு கூட்டிப்போய் 
பதிந்துவிட்டு கபிதாவத்தை பிள்ளையார் கோவிலில் கொண்டுபோய் 
விட்டார்கள்.அங்கு இவர்களைப்போல் பலர் அழுதவண்ணமும் 
ஏக்கத்துடனும் இருந்தார்கள்.இரண்டு நாட்கள் அங்கு தங்க வைக்கப்பட்டார்கள் .
பிஸ்கட்டும்,பால் அற்ற தேநீரும் அங்கு எல்லோருக்கும் வழங்கப்பட்டது.
பின் கொழும்பு துறைமுகத்தினூடாக எண்ணெய்க்கப்பலில் ஏற்றப்பட்டு 
காங்கேசன்துறைக்கு அனுப்பப்பட்டார்கள்.அந்தப்பயணம் மூன்றுநாள் 
எடுத்தது.துறைமுகத்தில் கப்பலில் வந்தவர்களை சிறிபாஸ்கரன்   
என்ற பிரமுகர் வரவேற்றார்.அங்கு சோற்றுப்பார்சல் ஒன்றும் 
வழங்கப்பட்டது.ஐந்து நாட்களுக்குப்பின் சோறு உண்ணுகையில் 
அது அமிர்தமாக இருந்தது.  
 கலவரம் முடிந்த சில மாதங்களின் பின் மீண்டும் கொழும்பு 
சென்று அதே கடையில் வேலை செய்து படித்து வந்தார்.
உதவி மருத்துவர் கல்வியை கற்று மலையகத்தில் 
கடமை செய்யத்தொடங்கினார்.அவரது வீட்டு வேலைக்காக 
அநாதை சிங்களச் சிறுவன் வேலைக்கு வந்தான் .அவனை 
பாடசாலைக்கு அனுப்பி ,பாடம் சொல்லிக்கொடுத்து 
மருந்து கலவையாளர் ஆக்கி பின் அவன் மருந்தாளர் 
ஆகி மாற்றலாகிப்போனான்.
அவர் எல்லா சமய நூல்களையும் வாசிப்பார்.பைபிள் 
வாசிப்பதில் தனிப்பிரியம் .வீட்டில் எல்லாக்கடவுள்களின்
படங்களும் இருக்கும் .புத்த சமயத்தைப்பற்றி விரிவுரை 
ஆற்றும் அறிவு உண்டு. ஆனால் அவர் இந்து.

அறுபதுகளில் அவர் திருமணம் செய்து கொண்டார்.அவரது 
மூன்றாவது மகன் யாழ் மருத்துவ மனையில் பிறந்தான்.
அதை பார்க்க மருத்துவ மனை போனவர் .தனது நண்பனை 
சந்திக்க மாடிக்கட்டடம் ஒன்றின் படிக்கட்டில் ஏறிக்கொண்டிருக்கும் 
போது மருத்துவமனையின் சந்திப்பு நேரம் முடிய வாட்டில் 
நின்றவர்களை வெளியேற்றி வந்த காவலாளி கைக்குழந்தையுடன் 
நின்ற பெண் ஒருவரை படிக்கட்டில் தள்ளிவிட்டான். குழந்தையும் 
பெண்ணும் படிக்கட்டில் அடிபட்டு உருண்டனர்.இவருக்கு கோபம் 
வந்துவிட்டது.காவலாளிக்கு அடிபோட்டார்.காவலாளியின் 
வாய் மூக்கால் இரத்தம் போயிற்று.இவர் 
 கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.வழக்கு நடக்கும் போது அந்த 
கைக்குழந்தையுடன் நின்ற பெண் சாட்சியிட்கு வர மறுத்துவிட்டார்.
இவர் தண்டனை பெற்று வெளியானார்.இந்த சம்பவம் இவரை பாதித்தது. 
இவர் கண் சம்மந்தமான(optometry) மூன்றுவருட பகுதி நேர கற்கையை மலையகத்தில் வேலை செய்தபடி வித்தியோதயாகம்பஸில் கற்றார்.மருந்தியலாளர் 
வெளிவாரிக்கற்கையையும்   பூர்த்தி செய்து லைசென்ஸ்
பெற்றார்.பின் பதிவு பெற்ற மருத்துவ  லைசென்ஸ் பெறும்
போது  மருந்தியலாளர்  லைசென்ஸ் இணை மருத்துவ சபையிடம் ஒப்படைத்தார்.
இவர் மலையகத்தில் வேலை செய்யும் போது பெரிய 
ராம் வகை மோட்டார் சைக்கிளை வைத்திருந்தார்.மலைப்பாதைகளில் 
வேகமாய் ஓட்டிச்செல்வார்.அனுமதி பெற்று வேட்டைத்துப்பாக்கியும் 
வைத்திருந்தார். மெல்போட்  கிரிக்கட் (மென்பந்து)அணியின் தலைவராய் 
பதினைந்து வருடங்கள் இருந்தார்.
வேலையில் லீவு எடுப்பது மிகக்குறைவு :தன் ஊர்க்கோவில் 
கொடியேற்றம்,சென்றல் சென்ஜோன்ஸ் கிரிக்கட் மட்ச், சில 
கட்டாய நிகழ்வுகளுக்கே யாழ்ப்பாணம் வருவார்.
ஒருமுறை மோட்டார் சைக்கிளில் விழுந்து தேய்பட்டார். 
அந்த மக்களின் எல்லா நிகழ்வுகளிலும் அவர் நிற்பார். 

1977ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னணியில் 
ஸ்ரீலங்கா அரசாங்கம் முழுமையாக இருந்தது.
சிங்களப்பகுதியில இருந்த தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் ,
கொழுத்தப்பட்டார்கள்.சொத்துக்கள் சூறையாடப்பட்டது.
ஜனாதிபதி ஜே ஆர் போர் என்றால் போர் சமாதானம் 
என்றால் சமாதானம் என்று ஆயுதமற்ற அப்பாவி தமிழ் 
மக்களை நோக்கிக்கூறினார்.மலையகத்தின் இவர்களது 
எஸ்டேட் பகுதியும் தாக்கப்பட இருப்பதாக தகவல் 
கிடைத்தது.இவர்களது பகுதியில் வாழ்ந்த சிங்கள ஊழியர்கள் 
தமது பொருட்களை இவரிடம் பாதுகாப்பிற்கு ஒப்படைத்துவிட்டு 
சிங்களப்பகுதிக்கு போய்விட்டார்கள்.இவர்களது பகுதியை 
பாதுகாக்கும் திட்டம் தீட்டப்பட்டது.ஆண்கள் சுற்றுக்காவல்களில் 
ஈடுபடுவார்கள்.பெட்ரோல் குண்டுகளும் தயாரிக்கப்பட்டு 
ஆயுத்தமாக இருந்தார்கள்.இவர் வேட்டைத்துப்பாக்கியுடன் 
இருந்தார்.நாட்டு சிங்களவருக்கு தகவல் கசிந்து நல்ல 
காலம் கடைசிவரை அவர்கள் இவர்கள் பக்கம் வரவில்லை. 
   கலவரம் முடிய இவர்களது பகுதிகள் ஈடாய் 
பொறுப்பாய் இருந்த சிங்கள முகாமையாளர் 
இம்புல்த்தேனியா உடன் தமது பகுதித்தமிழருக்கு  
தகுந்த பாதுகாப்பை உருவாக்கவில்லை என 
கடுமையாய் வாதாடி தனது வேலையை 
இராஜினாமா செய்தார்.இராஜினாமா செய்தமைக்கு 
இன்னும் ஒரு காரணமும் இருந்தது.அந்த பிரதேச 
எம் பி தொண்டமான் கலவரத்திற்கு காரணமான 
ஜே ஆரின் அரசாங்கத்தில் இணைந்துவிட்டார்.
அந்த மக்கள் இவரை மிக்க கவலையுடன் வழியனுப்பினர். 
வேலையை இராஜினாமா செய்து வந்ததால் 
குடும்பம் கஷ்டப்படத்தொடங்கிற்று.பின் மாங்குளத்தில் 
காணி வாங்கி தோட்டம் செய்யத்தொடங்கினார்.முதல் 
முறை போட்ட எள்ளும்,உளுந்தும் நல்ல விளைச்சளைத்தந்தது.
இரண்டுவருடங்களில் இவருக்கு முல்லைத்தீவு மருத்துவமனையில் 
வேலை கிடைத்தது.இங்கு சில வருடம் மருத்துவராய் வேலை 
செய்து ஓய்வு பெற்றார். வன்னியில் மருத்துவர் பற்றாக்குறையால் 
தொடர்ந்தும் வன்னியிலே வேலை செய்தார்.சர்வதேச செஞ்சிலுவைச் 
சங்கத்தின் நடமாடும் அலகு ஒன்றின் பொறுப்பு மருத்துவராய் பதின்மூன்று 
வருடங்கள் வேலை செய்தார் .வன்னியின் போர்க்காலத்தில் இருபத்தைந்து (1980-2005)
வருடங்கள் மருத்துவராய் கடமை செய்தார். 
இவரின் வீடு இந்திய ஆமியால் எரிக்கப்பட்ட வீடுகளில் 
ஒன்றானது.அதற்கான நட்ட ஈடு அவர்களால் வழங்கப்படும்போது 
அதை அவர் பெறவில்லை.

அவர் ஆயுள்வேத மருத்துவத்தையும் நன்கு கற்று தேறி ஆயுள்வேத 
மருத்துவ லைசென்சையும் பெற்றார்.அவர் இரு மருத்துவத்தில் 
தகுதி பெற்றிருந்தார்.இருந்தும் மருத்துவத்தை வைத்து 
உழைப்பதை இயன்றவரை தவிர்க்கவே விரும்பினார்.
இயக்கங்களின் ஆரம்ப வளர்ச்சிக்காலத்தில் தன்னாலான 
பங்களிப்பை செய்தார்.பத்திற்கு மேற்பட்ட வரலாற்று 
களச்சமர்களில் களமருத்துவராய் பங்குபற்றினார்.ஐம்பது 
வருடத்திற்கு மேல் மருத்துவ சேவையை கண்ணியமாய் 
வழங்கிய வெற்றிலை கூட பாவிக்காத ஒழுக்கசீலன் 
என்றும் நல்லவர் மனதில் வாழ்வார். தனது இளையமகனின் (மாவீரன்)நினைவுகளுடன் 
எஞ்சிய நாட்களை கடக்கிறார்.

-நிரோன் - 



  










Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share