வியாழன், 26 ஜூலை, 2012

ஊன்றுகோல்




எங்கட ஊர் யாழ்ப்பணத்தில ஒரு கிராமம் .ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளின்ர 
தொடக்கம் அது .
அம்மா என்னை,தம்பியாக்களை தட்டி எழுப்பினா எழும்புங்கோ எழும்புங்கோ 
நான் எழும்பினன் எனக்கு அடுத்தவனும் எழும்பி சோம்பல் முறித்தான்.
சின்னவன் நல்ல நித்திரையில் கிடந்தான்.நான் எழும்பி வந்து திண்ணையில 
கொஞ்சநேரம் குந்தியிருந்தன்.  முன்னுக்கு மல்லிகைப்பந்தல் வாசம் 
மூக்கைத்துளைத்தது.பந்தலுக்கு கீழ மல்லிகை பூக்கள் கொட்டிக்கிடந்திது.


பந்தலுக்கு அருகில முன்வேலி. தென்னை ஒலையால பின்னி 
வரிசைக்கீறாய் அடைக்கப்பட்டிருந்தது.முன்வேலியில கிழுவையும்
சீமையும் பூவருசுகளும் இடையிடையே முள்முருக்கை மரங்களும் 
பலம் சேர்த்தன.வேலியில எங்கட குடும்ப உழைப்பு சேகரிக்கப்பட்டிருந்தது. 
சில காகங்கள் வேலியிலும் மரக்கொப்புகளிலும் குந்தியிருந்து கா கா என 
எம் காதுகளுக்குள் கரைந்தன.என் அடுத்த தம்பி (வீமன்) வெற்று உரைப்பையுடன் 
வந்தான்.வா அண்ணை விடியப்போகுது போவம்   .
  நாங்கள் கேற்றைத்திறந்து ஒழுங்கைக்குள்ள இறங்கினம்.
எங்கிட வீட்டு ஒழுங்கை மணல் ஒழுங்கை .அனேகமாக 
எங்கட வீட்டு ஒழுங்கையால யாரும் சைக்கிளில புது 
ஆட்கள் போனால் எங்கட நாய் (நெல்சன்)ஒரு கலை
கலைக்கும்.  மணலுக்குள்ள சைக்கிளில வேகமாய் ஓடமுடியாது.
அநேகமாய் அவை விழுவினம்.விழுந்தால் நெல்சன் திரும்பிடும்   
இல்லாட்டி கொஞ்சதூரம் ஓட்டம்தான். 
நாங்கள் எங்கட ஒழுங்கையால நேராய்ப்போய் கொஞ்சம் பெரிய 
பாதையில ஏறும் அந்தப்பாதை சின்ன கல்லுப்பாதை.அதுக்கு 
நேர்முன்னால ஒரு வெளிக்காணி.அது ஆருக்குச் சொந்தம் 
என்று அங்க ஒருத்தருக்கும் தெரியாது.அந்த வெளிக்காணிக்குள்ள 
அங்கும் இங்குமாய் பனைகள் நிற்குது.நான் ஓடி ஓடி விழுந்திருக்கிற 
நொங்குகளைப்பொறுக்கினன்.     
  வீமன் எனக்குப்பின்னால உரப்பையை முதுகுபக்கமாய் போட்டு 
இருகையாலையும் பிடித்து வந்து கொண்டிருந்தான் .நான் உரப்பையை 
நிரப்பிக்கொண்டிருப்பேன்.அண்ணை அங்க கிடக்கு என்று சொல்லுவான் .நான் 
அதைப்பார்க்காட்டி டேய் தருமா !அது தெரியல்லையோ என அதட்டுவான்.  
பை நிரம்ப நாங்கள் வீடு திரும்புவோம்.வீடு களை கட்டத்தொடங்கும்.
அம்மா முற்றம் கூட்டி தண்ணி தெளிச்சுக்கொண்டிருப்பா. அம்மாவின்ர முகத்தைப்பார்த்தால் முழு நிலாவை 
பார்ப்பதுபோல் குளிர்மையாய்  இருக்கும் .  
 அம்மம்மா 
பாத்திரங்களை மினுக்கிக்கொண்டிருப்பா.மாமா வாளித்தண்ணீ 
கொண்டுவந்து அம்மம்மாவுக்கு உதவியாய் வாளியை நிரப்பிவிட்டுப்போவார்.
எங்களைப்பார்த்து எல்லோருமே மெல்லிய 
புன்னகையை வீசுவினம் .அது காலைவணக்கம் 
சொல்வதைக்குறிக்கும்.அம்மா ஆட்டில் பால் 
எடுக்க செம்போட வருவா நான் போய் முன் குந்தியிருந்து
ஆட்டின் தலையை  தடவிக்கொண்டிருப்பேன்.அம்மா 
மெல்லிய சுடுதண்ணியால் ஆட்டின் மடியைக்கழுவி 
ஒரு கையாள செம்பைப்பிடித்து மற்றக்கையால 
பால் கறப்பா.செம்பு முட்ட பால்வரும்.அம்மா குசினிக்கபோய்
அடுப்பில பாலை காய்ச்சுவா.நான் முற்றத்திற்கு வந்து 
எங்கட முன் கிணற்றடிவளவுக்க போவன் .வீமன் காலைக்கடன் 
முடித்து அம்மப்பாவுடன் நொங்கு வெட்டுற இடத்தில இருப்பான்.
அம்மப்பா ஒரு உரப்பையை நிலத்தில விரிச்சு அதுக்கு மேல 
சதுர மரக்குத்தியை வைச்சு நொங்கை வெட்டுவார்.எங்களுக்கு 
குடிக்கத்தருவார்.பிறகு நொங்கை சின்ன சின்னனாய் வெட்டி 
அதை ஆட்டுக்கு வைப்போம்.ஆடு நல்லா சாப்பிடும்.நான் 
காலைக்கடனை முடிச்சுவர அம்மா கூப்பிடுவா ஓடிவந்து 
தேத்தண்ணியை  குடியுங்கோ ஆறப்போகுது நான் 
முகம் துடைத்து ஓடிவருவேன் .எனக்கு அம்மா ஊத்துற 
பால்த்தேத்தண்ணி  சரியான விருப்பம்.நான் ஆறுதலாய் 
பலகைக்கட்டையில குந்தியிருந்து குடிப்பன். 
  வீமன் வேகமாய் வந்தான் .நான் நொங்கு குடிச்சிட்டன் 
நீ போய் குடி அண்ணா அம்மப்பா பார்த்துக்கொண்டு 
நிற்கிறார்.நான் எழும்ப வீமன் அந்த பலகைக்கட்டையில 
இருப்பான்.
நான் நொங்கை ஆறுதலாய் குடிச்சுக்கொண்டிருக்க 
அம்மம்மா கத்துவா குஞ்சுகள் பள்ளிக்கூடத்திற்கு 
நேரம் போகுது ஓடிப்போய் குளியுங்கோ நான் 
கிணற்றடிக்கு வர வீமனும் வந்திடுவான்.நான் 
இரண்டு வாளி தண்ணி அள்ளி உடம்பில ஊத்திட்டு 
லைவ்போய் சோப் போடுவன் வீமன் அந்த நேரம் குளிப்பான்.
குளிச்சு செவ்வரத்தம் பூ இரண்டு ஆஞ்சு கிணற்று வாளியில 
கழுவி சாமிக்கு எடுத்து போக மாமா மரத்தில குழை   
ஆய்ந்து வைச்சிட்டு கிணற்றடிக்கு வருவார்.  
  
நாங்கள் பள்ளிக்கூட உடுப்பை மாத்திவர 
அம்மா பூரணை நிலா மாதிரி ரொட்டி சுட்டு 
வைச்சிருப்பா ஆறுதலாய் சம்பலோட 
 உருசி பார்த்துச்சாப்பிட இலங்கை வானொலியில 
பொங்கும் பூம்புனல் போய்க்கொண்டிருக்கும் இடைக்கிடை 
நேரமும் சொல்லிக்கொண்டிருக்கும்.அதுக்குதக்க மாதிரி 
நாங்கள் பள்ளிக்கூடம் வெளிக்கிடுவம் .எங்கட பள்ளிக்கூடம் 
பத்தாம் வகுப்பு மட்டும்தான் இருக்கு எங்கிட வீட்டிலிருந்து 
பத்து நிமிச நடையில போகலாம்.வெளிக்கிடையிக்க 
வீமன் மெதுவாய் போய் அம்மப்பாவிட்ட கொடி(பட்டம்)
கட்டிவைக்கச்சொல்லி குசுகுசுத்துட்டு வருவான்.நாங்கள் 
பள்ளிக்கூடத்தை நோக்கி நடையைக்கட்டுவோம் .நான் ஐந்தாம் 
வகுப்பு வீமன் நாலாம் வகுப்பு இரண்டு பேருக்கும் பள்ளிக்கூடம்
போறதில கொஞ்சமும் விருப்பமில்லை ஆனால் இரண்டு பேரும்
பள்ளிக்கூடத்தில முதலாம் பிள்ளையாய்த்தான் வருவோம் .அம்மாக்கு 
நாங்கள் நல்லா படிக்கோணும் என்று ஆசை .நாங்கள் பள்ளிக்கூட 
வாசலுக்குப்போக மாமா சின்னவனை (அர்ச்சுனன்)சைக்கிளில 
கூட்டிப்போவார்.அர்ச்சுனன் அரிவரிபடிக்கிறான்.அழுதுகொண்டுதான் 
பள்ளிக்கூடம் போவான்.மாமா அவனை விட்டிட்டு பெரிய பள்ளிக்கூடம் 
போவார்.மாமா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்.எங்கட பள்ளிக்கூட 
ஆங்கில வாத்திதான் ஒழுக்கம் பார்க்கிறவாத்தியும் எட்டித்தொடக்கூடிய தடியோடை நிற்கும்.              
ஒ இன்றைக்கு வெள்ளிக்கிழமை நமச்சி வாய வாழ்க 
படிக்கோணும் நினைக்கைக்கேயே கால் உளையுது ஆனாலும் 
வெள்ளிக்கிழமை என்றதில சந்தோசம் நாளைக்கு நாளண்டைக்கு
பள்ளிக்கூடம் இல்லைத்தானே ஓடிப்போய் புத்தகத்தை வைக்க அசெம்பிளி பெல் அடிச்சுது.
  வகுப்பில எனக்குப்பக்கத்தில எப்பவும் ஞானம் தான் 
இருப்பான்.அவன் படிக்கமாட்டான்.அடிவாங்க ஆயுத்தமாய் 
ஒன்றுக்கு மேல ஒன்றாய் இரண்டு காற்சட்டை போட்டு 
வருவான்.அடிவாங்கைக்க நோகிறமாதிரி பாசாங்கு செய்வான்.
ஆனால் நேற்று வாங்கின அடி அவனுக்கு நொந்திட்டுது.  நேற்று 
பக்கத்து வளவில களவாய் இளநி ஆயப்போனவன் .மரத்தில ஏற 
முதல் வெளிக்காற்சட்டையை கழற்றி வைத்திட்டு ஏறினவன் .
வெளிக்காற்சட்டை  புதுசு உள் காற்சட்டை  பழசு அதாலதான் 
மரத்திற்கு கீழ வைத்திட்டு ஏறினான்.இளனியை புடுங்கி கீழ 
போடைக்க  ஏந்துறவன் தவறவிட்டுட்டான். சத்தம் கேட்க 
வீட்டுக்காரன் டேய் என்ற சத்தத்தோட வந்தான்.அவன்ர நாய் 
அவனுக்கு முதல் வந்தது இவன் மரத்தால உரசி விழுந்தான்.
வேலி பாய்ஞ்சு ஆட்கள் வந்திட்டாங்கள் .ஆனால் காற்சட்டை  
போச்சு .பள்ளிக்கூடம் விட்ட பிறகு காற்சட்டை இருக்கோ என்று 
பார்க்க ஒரு இடமும் இல்லை.பிறகு பார்த்தால் அந்த வீட்டுக்காரன் 
அந்த நாயுக்கு காற்சட்டையை போட்டு கட்டிவிட்டிருக்கான்.நேற்று 
பயந்து பயந்துதான் ஞானம் வீட்டை போனவன்.          
ஞானம் எம் ஜி யார் ரசிகன் .நான் சிவாஜி ரசிகன் இடைவேளைக்கு 
கிளித்தட்டு போட்டி இருக்கும் .எம் ஜி யாரா?சிவாஜியா அந்த 
பன்னீரண்டு மணி வெயிலில விளையாட்டு கடுமையாய் 
இருக்கும் .
  
வீமன் அண்ணை உச்சு !அண்ணை விடாத !என்று ஒரே கத்திக்கொண்டு 
நிற்பான். 
பள்ளிக்கூடம் விட்டு நானும் வீமனும் வீட்டுக்குப்போனம்.
வீமன் வழிநெடுக கதைச்சுக்கொண்டே வந்தான்.அண்ணா 
இன்னும் கொஞ்ச மாபிள் அடிச்சு வெல்லோனும் அப்ப
ஆயிரம் மாபிள் வந்திரும்.கீரி மாபிள் நூறு வந்திட்டுதண்ணை
பழைய மாபிள் அடிக்க போகக்கூடாது அண்ணை.புதுசுக்கு 
புதுசுதான் அடிக்கோணும் அவனுக்கு மாபிள் விசர் ஆனால் 
அவன் அடிக்கமாட்டான்.நான் அடிக்க அடிக்க எல்லாத்தையும் 
சேர்ப்பான்.மாபிள் அடிக்க போகைக்க அர்ச்சுனனும் வருவான்.
அவனுக்கு இவனைவிட பெரியவிசர்.
 அம்மா எனக்கும் வீமனுக்கும் கோப்பையில சோறு 
போட்டு சாம்பாரும் கீரைக்கறியும் வைத்திருந்தா.வாழைக்காய் 
பொரியலோட சாப்பிடத்தொடங்க அம்மாவும் சாப்பாட்டுக் கோப்பையோட 
வந்தா.அம்மா நாங்க வந்த பிறகுதான் சாப்பிடுவா.அம்மா எங்களை 
பொத்திப்பொத்தி வளர்த்தா .எங்களுக்கு ஏதாவது வருத்தமெண்டால் 
வருத்தம் மாறும்வரை அம்மாவும் ஒழுங்கான சாப்பாடு இராது.
சின்னவன் பள்ளிக்கூடத்தால வந்து சாப்பிட்டு நித்திரைகொண்டு 
எழுந்துவந்தான்.என்ரையும் வீமனின்டையும் புத்தக பைகளில் 
தடவி பாடசாலை பிஸ்கட்டுகளை எடுத்துவந்தான்.நானும் 
வீமனும் பள்ளிக்கூடத்தில தாற பிஸ்கட்டுகளை அங்க சாப்பிடாம 
வீட்டை கொண்டுவருவோம்.சின்னவன் எல்லா பிஸ்கட்டுகளையும் 
எடுத்து மூன்றா பிரித்து மூன்று பேரும் சாப்பிடுவோம்.    
அம்மம்மா சொன்னா குஞ்சுகள் இன்றைக்கு கொஞ்சம் 
தென்னம் பொச்சுமட்டைகள் கொண்டுவந்து அடுப்பு 
புகட்டுக்குள்ள போட்டுவிடுங்கோ. நாளைக்கு அப்பம் 
சுடோனும்.ஓம் அம்மம்மா என்று நான் முந்தி வீமன் 
முந்தி என்று கத்தினம் எங்களுக்கு அப்பம் சரியான 
விருப்பம்.    
பொழுது படயிக்கைதான் மாமா வந்தார்.மாமாவின்ர 
முகம் சரியில்லை .ஏன் என்று அம்மம்மா கேட்க 
ஒன்றுமில்லை என்றிட்டார்.பிறகு அம்மா கேட்டவ 
ஏன் என்று.அப்பத்தான் சொன்னார் .சிவகுமார் என்று 
ஒரு ஆள் ஆமியிட்டை பிடிபடாமல் தற்கொலை செய்திட்டாராம்.
எங்கிட வீடே சோகமாய் மாறிட்டுது.முந்தியும் இப்படித்தான் 
தமிழாராட்சி மகாநாட்டில ஒன்பது பேர் செத்ததால 
எங்கட வீடு சோகம் ஆனது. 

( 2)


அம்மா காலை நாலு மணிக்கு எழுப்பினா.பிள்ளைகள் 
மாமா எழும்பிட்டான்.உங்களை பார்த்துக்கொண்டு நிற்கிறான்.
நான் எழும்ப வீமனும் சோம்பல் முறிச்சு எழும்பினான்.நேற்று 
ஒரு இறாத்தல் பாண்தான் மாமாவுக்கு கிடைச்சது.அதால
அம்மா,அம்மம்மா நேற்று காலைமை சாப்பிடயில்லை .
இன்றைக்கு அதுதான் மாமா எங்களையும் கூட்டிப்போகிறார்.
ஆளுக்கு ஒரு இறாத்தல் பாண் தருவாங்கள் .முந்தியே போய்
லைனிலை நிற்கோணும் .இப்ப சிறிமா ஆட்சிதானே 
சாப்பாட்டுக்கு சரியான தட்டுப்பாடு.நாங்கள் ஏற்கனவே 
மரவள்ளி நட்டிட்டம்.இன்றைக்கு மூன்று இறாத்தல் பாண் 
வாங்கிட்டம் .எல்லாருக்கும் வலு புளுகம். இப்ப வட்டப்பாண் தான் ,மா தட்டுப்பாடு வந்தால் 
பேக்கரிக்காரர் பாணின்ர வடிவத்தை மாத்திப்போடுவினம்.    
போனகிழமை ஒருநாள் மாமாவுக்கு பாண் கிடைக்கயில்லை .அன்றைக்கு நாங்கள் பள்ளிக்கூடம் போகயில்லை.
ஆனால் அம்மா பத்து மணிக்கே உலைவைச்சு கஞ்சி வடிச்சு 
கஞ்சிக்கு கொஞ்சம் தேங்காய்ப்பால் விட்டுத்தந்தா.  
 எங்கட வீட்டை இருபது கோழிக்குக்கிட்ட  நிற்குது 
ஒரு நாளைக்கு ஐந்து ஆறு முட்டை எப்படியும் இடும்.வீமன் 
ஒரு கோழிக்கு அடைவைச்சு இப்ப எட்டு குஞ்சு உடன் திரியுது. 
ஆட்டுப்பால் எங்களுக்குக் காணும் .எங்கட வளவுக்க பத்து 
தென்னை நிற்குது.நாங்கள் ஒருக்காலும் தேங்காய் வாங்கிறதில்லை.
மாமரம்,மாதாளமரம்,தேசிமரம் ,கொய்யாமரம் எல்லாம் நிற்குது. 
பனை மரங்களுக்கும் குறைச்சலில்லை அதால விறகும் பிரச்சனையில்லை.
நாங்கள் சின்னனாய் தோட்டம் செய்வோம்.எங்கட வீடு எங்களுக்கு சொர்க்கம்.  
எங்களுக்கு அம்மா,அம்மம்மா,அம்மப்பா எல்லோருமே 
கதை சொல்லுவினம் .அம்மம்மா பேய்க்கதைதான் சொல்லுவா .
அம்மம்மா சொன்ன கதை ஒன்று இப்பவும் ஞாபகத்தில இருக்கு.
அம்மப்பா வேலையால வீட்டை வரயிக்க இரவு பன்னீரண்டு 
மணியாகிட்டுதாம்.அப்ப ஒரு முனியும் அவரை தொடர்ந்து வந்ததாம் .அம்மப்பா வீட்டு கேற்றை திறந்து உள்ளுக்குவர முனிவந்து
கேற்றில நின்றிட்டுதாம்.அம்மப்பா நினைச்சாராம் இன்றைக்கு 
முனி போகாது.ஏதும் இசகு பிசகு நடந்திடும் என்று கோழிக்கூட்டைத்திறந்து
ஒரு சேவலை கொண்டுபோய் முனியிட்டை குடுத்தாராம் .முனி 
போயிட்டுதாம்.வீமனுக்கு சாரத்தோட போயிட்டுது.
நான் பிறகு அம்மப்பாயிட்ட கேட்டுப்பார்த்தனான்.அவர் சொன்னார்.
நீ அம்மம்மாவிட்ட சொல்லிப்போடாதை அது நான் கள்ளுக்குடிச்சதுக்கு 
கள்ளுக்காரனுக்கு காசுகுடுக்கோனும் அதுதான் ஒரு சேவலைக்குடுத்தனான். 
முனியும் சகுனியும்  மண்ணாங்கட்டி என்றார்.  



அம்மம்மா உடன் நான் அல்லது வீமன் கோவிலுக்குப்போவம்.
காற்சட்டை  போட்டு அதுக்கு மேல சால்வையை வேட்டியாய்
கட்டிப்போவம்.கோவிலால வரயிக்க வேட்டி தோளில  இருக்கும்.  
 எழுபத்தி ஏழாம் ஆண்டுத்தேர்தல் வந்தது.நாம் 
தமிழர்விடுதலைக்கூட்டணி ஆதரவு .எங்கட தொகுதியில 
தர்மலிங்கம் தேர்தலில நின்றார்.நாங்களும் லிங்கம் லிங்கம் 
எங்கட லிங்கம் தர்மலிங்கம் என்று கூட்டம் கீட்டம் எல்லாம் 
கத்தித்திரிஞ்சம். மாமா சொன்னார் நல்லகாலம் தர்மலிங்கம் தேர்தலில நின்றது .
அருணாசலம் நின்றிருந்தால் எப்படிக்கத்தி இருப்பியள் ?
சலம் சலம் எங்கட சலம் அருணாசலம் என்றுதான் 
என்றான் வீமன்.நாங்கள் சிரித்தோம்.  
 கூட்டணி தமிழர்களுக்கு தனிநாடு வேணும் என்ற 
கோரிக்கையை வைத்து தேர்தலில நின்றிச்சினம்.   
 இலங்கையின்ர வடக்கு கிழக்கு பிரதேச மக்கள் 
தனி நாட்டுக்கோரிக்கையிக்கு முழு ஆதரவு தெரிவித்து 
கூட்டணி வடக்கு கிழக்கில் அமோக வெற்றி பெற்றது.
அம்மப்பா சொன்னார் . சர்வதேசம் நாட்டை பிரிச்சுத்தந்திடும் 
ஜனநாயகத்தை உலகம் மதிக்கும் . வீட்டில பயங்கர சந்தோசம் 
ஆனால் அது நீடிக்கயில்லை.சிறிலங்கா ஜனாதிபதி ஜே ஆர் 
ஜெயவர்த்தனா போர் என்றால் போர் சமாதானம் என்றால் 
சமாதானம் என்று சிங்கள பிரதேசத்தில இருந்த தமிழர்கள் 
சொத்துக்கள் பறிக்கப்பட்டு எரியூட்டப்பட்டார்கள் . தப்பியோர் 
அகதியாய் வடக்கு கிழக்கிக்கு வந்து சேர்ந்தார்கள்.சர்வதேசம் 
சர்வசாதாரணமாய் இருந்தது.
 மாமா படிச்சு முடிச்சு வேலை தேட ஒவ்வொரு வேலைக்கும் 
ஒவ்வொரு விலை .வங்கி வேலை என்றால் பாராளமன்ற 
உறுப்பினருக்கு பதினையாயிரம் ரூபா குடுக்கோணும்.
மாமாவிற்கு அது பிடிக்கயில்லை.மாமா வெளிநாடு போக 
முடிவு செய்ய அம்மா சங்கிலியையும் காப்பையும் குடுத்தா.
மாமா எண்பதில கப்பலில வேலை செய்ய தொடங்கிட்டார்.
மாமா வெளிக்கிட்ட கொஞ்ச நாள் வீடு வெறிச்சோடிக்கிடந்தது.
பிறகு களை கட்டத்தொடங்கிற்று.மாதம் ஒரு கடிதம் குறைஞ்சது வரும்.   அம்மா மட்டும் சொல்லுவா என்ர மூன்று பிள்ளைகளும் 
எனக்கு கிட்டவே இருக்கோணும் என்று 
இப்ப நான் பெல்பொட்டம் போடத்தொடங்கிட்டன் .அப்பத்தான் 
ஈழத்தமிழனுக்கு என்றுமில்லாத துயர நிகழ்வொன்று நடந்திது.சிங்கள அமைச்சன் 
ஒருவன் தன்ர பட்டாளத்தோட வந்து யாழ் வாசிகசாலையை 
எரிச்சுப்போட்டான்.தென் கிழக்காசியாவிலேயே சிறந்த 
வாசிகசாலை தமிழன் முன்னேறக்கூடாது என்றதால அழிக்கப்பட்டது. 
அகிம்சை போராட்டம் தோத்து ,ஜனநாயகமும் தோக்க 
எனக்கு மெல்ல மெல்ல ஆயுதப்போராட்டத்தில ஆர்வம் வந்திட்டுது.
நான் இயக்கம் ஒன்றுடன் தொடர்பாகினன். வாழ்வில்முதல் தடவையாய் 
அவர்களோட சேர்ந்து பிலேண்டி குடித்தேன். நீண்ட நேரம் உரையாடலில் 
கழிந்தது. வீட்டுக்குத்தெரியாமல் இயக்கத்தொடர்பை வைச்சிருந்தன்.  
எண்பத்திரண்டு போய் எண்பத்திமூன்று நடந்து கொண்டிருந்தது. ஒரு காலமும் இல்லாத மாதிரி எங்கட மாமரம் நிறைய 
பழங்கள்.நாங்களும் சாப்பிட்டு அயல்களுக்கும் கொடுத்தம்.
இந்த முறை வீமன் அடைவைச்ச கோழியின்ர 
குஞ்சுகள் எல்லாத்தையும் பருந்து பிடிச்சிட்டுது.
எல்லோருக்கும் சரியான கவலை.

ஜூலை இருபத்தி நாலாம் திகதி காலை மாதகலில் இருந்து யாழ் 
நோக்கி மினி பஸ் ஒன்றில் சுட்டுக்கொண்டு போன சிங்கள 
இராணுவத்தால் தனியார் வகுப்பிட்குபோன வீமன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
எங்கள் அருமையான வீடு அல்லோலப்பட்டது.எங்களுக்காகவே வாழ்ந்த 
அம்மா துடித்தாள்.வீட்டின் அத்திவாரத்தில் இருந்து கூரைவரை 
ஆடிற்று.
அம்மா மற்றப்பிள்ளைகளுக்காய் எழுந்து நடமாடினாள். அம்மம்மா ,
அம்மப்பா நோயில் வீழ்ந்தார்கள்.
சின்னவனும் அரை ஆள் ஆகிவிட்டான்.பாவம் 
அவனில் வீட்டுப்பொறுப்பை விட்டு நான் வீட்டைவிட்டு 
வெளிக்கிட்டேன்.தமிழர்களின் சாவுகளுக்கு ஒரு 
முடிவு கட்டவேண்டும் என்றவைராக்கியமே என்னில் 
எல்லாமாய் இருந்தது.அம்மாவுக்குத்தெரியாமல்
அம்மாவின் முகத்தை பார்த்தேன் வந்த அழுகையை 
எனக்குள் புகுத்தியபடி புறப்பட்டேன்.ஒவ்வொரு 
முடக்காய் நின்று நின்று போய் மில்லடியில்
பஸ் எடுத்தேன்.எப்போதும் என்னோடு திரியும் 
வீமன் இல்லாமல் நான் போய்க்கொண்டிருந்தேன்.   

(3)

இன்று இரண்டாயிரத்து  பன்னீரெண்டாம்  ஆண்ட  வைகாசி 
இரெண்டாம் திகதி சிறையில் இருந்து வெளியில் வந்தேன்.
யாரையும் முகம் பார்க்க மனம் அற்று தலை குனிந்தபடியே 
வவுனியாவில் இருந்து யாழ் வந்தேன்.கடைகளில் பத்திரிகைகள் 
தொங்கின.சம்மந்தன் சிங்கக்கொடியை கையில் ஆட்டிக்கொண்டிருந்தார்.
கடையில் தேத்தண்ணி குடிக்க மனம் அற்று திரும்பி வந்தேன்.எனது 
ஊருக்கு போகும் பஸ்ஸின் இலக்கமே தெரியாது விசாரித்து 
அறிந்தேன்.  மில்லடியை ஒருவாறு இனங்கண்டு இறங்கினேன் .
வீட்டை நோக்கி நடக்க யாருமே தெரிந்தவர்களாய் இல்லை.
சிறுவர்கள் எனது பொய்க்காலை வேடிக்கை பார்த்தார்கள்.
போகும் வழியில் பாக்கியம் அன்ரியை அடையாளம் 
கண்டேன்.அவவும் என்னை உற்றுப்பார்த்தா . நீ யார் பிள்ளை.
நான் எதுவும் சொல்லவில்லை.நீ தருனா?தலையை 
ஆட்டினேன்.அவவின் கண்களிலிருந்து கண்ணீர் ஒழுகியது.
 என்னில் ஏதும் மாறுதல்கள் இல்லாமை அவவுக்கு 
சங்கடத்தை கொடுத்திருக்க வேண்டும்.நான் வாழும் 
பிணம் என்பதை அவ எப்படி அறிந்திருக்கமுடியும்?
பிள்ளை வா வீட்டை போவம் .இல்லை அன்ரி
நான் எங்கிட வீட்டை போறன். தம்பி அங்க ஒருத்தரும் 
இல்லை.உங்கட அம்மா நீ வருவாய் வருவாய் என்று 
பார்த்துக்கொண்டிருந்து போன வருசம்தான் சாமியிட்ட 
போனவ.சின்னவன் ?அதுவும் தெரியாதே?அவனை 
இந்தியன் ஆமி சுட்டுக்கொண்டுட்டுது.நான் எங்கட 
வீட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தேன்.பாக்கியம் 
அன்ரியும் வந்தா.எங்கட வளவுக்க ஆட்கள் வாழ்ந்த 
அடையாளங்கள் அழிஞ்சு எல்லாம்  சின்னாபின்னமாய் கிடந்தது.

   தம்பி நான்தான் இப்ப இந்த வீட்டை பார்க்கிறன்.உன்ரை கொம்மா 
உன்ரை பெயரில்தான் இந்த வீட்டை எழுதி பின்னுறுத்து உன்ரை 
மாமாவின்ர பெயரில எழுதினவ. நீ வந்திட்டாய் இனி நீ பார்த்துக்கொள்ளுவாய்.
ஒரு அறையை திறந்து பார்த்தேன்.அந்த அறையில் நாங்க மூன்று பேரும் 
சின்ன  வயதில விளையாடிய விளையாட்டுச்சாமான்களை அம்மா ஒழுங்காய் அடுக்கி வைச்சிருந்தா.பிள்ளை உந்த அறையிக்க 
ஒருத்தரையும் உன்ர கொம்மா போகவிடமாட்டா.ஒரு ஊன்றுகோல் 
சாமி அறையில் இருந்தது.நான் அதை எடுத்தேன்.அது எனக்கு 
இப்போது மிகவும் அவசியம்.தம்பி இது கொம்மா கடைசி காலம் 
பாவிச்சது.உங்கட கொம்மா சொல்லுவா தன்ர பிள்ளைகள் 
தங்கங்கள் என்று.உண்மையோடா?இப்ப என்னில் இருந்து 
ஒரு கண்ணீர்த்துளி வீழ்ந்தது.உங்கட கொம்மா என்னட்டை 
இரண்டு உங்கட குடும்பப்படம் தந்தவ.ஒன்றை தன்ரை சவப்பெட்டியிக்க 
வைக்கச்சொன்னவ.அடுத்ததை நீ வருவாய் உன்னட்டை குடுக்கச்சொன்னவ.     
தம்பி இனி நீ வாழுற அலுவலைப்பார்.
நாளைக்கு நான் விதானையிட்ட கூட்டிப்போறன்.
அங்க பதிஞ்சால் ஏதாவது கிடைக்கும்.எனது 
முகத்தை பார்த்துவிட்டு உனக்கு பிடிக்கயில்லை 
என்றால் வேண்டாம்.உன்னோட படிச்ச ஞானம்தான் 
விதானை.எனக்கு எப்ப பாக்கியம் அன்ரி இங்கிருந்து 
போவா என்றிருக்கிறது.வீட்டுக்குள் இருந்து அம்மா,
வீமா,அர்ச்சுனா,அம்மம்மா,அம்மப்பா என்று கத்தோணும்.
   நான் பொய்க்காலை கழற்றி வைத்திட்டு ஊன்றுகோலுடன் 
முற்றத்திற்கு வந்தேன்.மல்லிகைப்பந்தல் பட்டுப்போய்க்கிடந்தது .
கீழ பூக்களுக்குப்பதிலாய் சருகுகள் பரவியிருந்தன.   
 வானம் வெளிறிக்கிடந்தது .                        
                                     (முற்றும்) 


                                -நிரோன்-
     




      


  
     



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share