வெள்ளி, 31 ஜனவரி, 2014

கருணாரத்தினம் அடிகளார்

கிளி father என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட கருணாரத்தினம் அடிகளார் அவர்கள்  நகைச்சுவையுணர்வும் அன்பும் நிறைந்த அளப்பரிய சேவையாளர்.இலங்கை வங்கியில் ஒரு அதிகாரியாய் இருந்து பின் பாதிரியார் ஆனவர்.மிகுந்த தமிழ் உணர்வும்,அறிவும் உள்ளவர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பல மக்கள் இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்து
புது வாழ்க்கையை ஆரம்பித்தார்கள் .அந்தக்காலப்பகுதியில்தான் அவருடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது.
யாழ்ப்பாண இடப்பெயர்வோடு வன்னியில் சுமார் ஆறரை இலட்சம் மக்கள் வாழ்ந்தார்கள்.ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய மருத்துவர்கள்தான் வன்னியில்  இருந்தார்கள்.அவர்களின் உழைப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை.நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒலுமடுவில் இயங்கிய
பொன்னம்பலம் மருத்துவமனையில் பற்சிகிச்சை கிளினிக் நடத்திவந்தேன்.ஒரு களைப்பான நாளில்த்தான் கிளி fatherஐ முதல் முதலாய் சந்தித்தேன்.அவர் பற்சிகிச்சை பெற வந்திருந்தார்.முதல் சந்திப்பிலேயே பல நாள் பழகியவர் போல் ஓர் ஈர்ப்பை பெற்றேன்.
 வன்னியில் மலேரியா தாண்டவம் ஆடிற்று.மலேரியாவாலும்,ஜெயசுக்குறு இராணுவ நடவடிக்கையின் இடப்பெயர்வுகளாலும்  சிறுவர்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.இது ஒரு மிகவும் எச்சரிக்கையான காலம்.  ஆனைவிழுந்தானில் அமைந்திருந்த தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின்  நடுவப்பணியகத்தில் தமிழ்ச்செல்வன் தலைமையில் சிலர் அவசரமாக ஒன்று கூடினோம்.சிறுவர் பட்டினிச்சாவு தவிர்ப்புத்திட்டம் உதயமானது.இந்தக்குழுவில் கிளி father உம் இருந்தார்.இந்த திட்டத்தை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சிறப்பாக நடைமுறைப்படுத்திற்று. வெரித்தாஸ் வானொலி நிதி கிடைக்க உதவிற்று.வன்னி முழுக்க பல சிறு இடங்கள் அமைத்து ,எல்லா சிறுவர்களுக்கும் கற்பிணித்தாய்மாருக்கும்  சமைத்த உணவு நாளுக்கு வெவ்வேறாக வழங்கப்பட்டது.வழங்கவேண்டிய உணவின் பட்டியலை Dr சதானந்தன் துல்லியமாக என்னிடம் தந்திருந்தார்.
நிலைமை ஆறு மாதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருந்தது. பின் கிளிநொச்சிநகர்  திட்டமிடலிலும் எங்களுக்கு ஒத்தாசையாய் இருந்தார்.அப்போது அவர் NGO consortium இன் தலைவராய் இருந்தார். கருமை நிற மோட்டார் சைக்கிளில் ஒரு விளையாட்டு வீரனைப்போல பறந்து திரிவார்.புழுதியே காற்றாகும் பாதைகளில் தோழமைகளுடன் சந்தித்துக்கொள்வோம்.
இறுதியாய் கிளிநொச்சி சுகாதார விஞ்ஞானக்கல்லூரியின் நிகழ்வு ஒன்றில் அவரை சந்தித்தேன்.அவர் அக்கல்லூரியின் நிர்வாகசபையின் உறுப்பினராயும் இருந்தார். அக்காலப்பகுதியில் Northeast Secretariat on Human Rights (NESOHR)இன் தலைவராகவும் அயராது உழைத்திருந்தார். தமிழ்ச்செல்வனின் வீரமரணம் அவரை சரியாக பாதித்திருந்தது.அதற்குப்பின் முகத்தாடி வளர்த்திருந்தார்.தமிழ்ச்செல்வன்  நினைவாக நூலகம் ஒன்றை  அமைக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.

சித்திரை இருபதாம் திகதி 2008ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த்தாக்குதலில் கொல்லப்பட்டார். மீண்டும் எம் கன்னங்கள் நனைந்தன.

-   நிரோன் -   


Share/Save/Bookmark

வியாழன், 30 ஜனவரி, 2014

வீரர்கள் இறப்பதுண்டு இலட்சியம் இறப்பதில்லை




Share/Save/Bookmark

வியாழன், 12 செப்டம்பர், 2013

மின்னஞ்சல்




இன்று காலை எனக்கு காந்தன் என்பவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பும் அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.என்னை ஞாபகம் இருக்கிறதா? எப்படி இருக்கிறீர்கள்?
அன்புடன் காந்தன் என்று மட்டும் இருந்தது.எனக்கு காந்தன் என்ற பெயரில் பலரை தெரியும் .அதில் சிலர் போராளிகள் அவர்களில் சிலர் வீரச்சாவு அடைந்துவிட்டார்கள்.நான் அவர் யார் என்று சரியாக அறியாததால் பதிலளிக்கவில்லை.
இன்று வந்த மின்னஞ்சலை திறந்தேன்.என்னை மறந்துவிட்டீர்களா?
முள்ளிவாய்க்காலின்  இறுதி நாளின் போது நான் தடி ஊன்றி  ஊன்றி
வந்தேன்.நீங்கள் ஒருவரை கூப்பிட்டு ஊன்றுகோல் ஒன்றை எடுத்து தந்தீர்களே. அந்த ஊன்றுகோலில் கூட இரத்தம் பட்டிருந்தது.நீங்கள் அதை கழுவி கொடுக்கச் சொன்னீர்களே. மறந்துவிட்டீர்களா?. அன்புடன் காந்தன் என்றிருந்தது.

இந்த சம்பவம் என் ஞாபகபரப்பில்  ஏதோ ஒருமூலையில் கிடக்கிறது.ஆனால் இந்த காந்தனின் முகம் ஞாபகத்தில் இல்லை.வேறு காந்தர்களின் முகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து போகிறது.


Share/Save/Bookmark

புதன், 14 ஆகஸ்ட், 2013

போராட்ட ஆத்மா சாகாது




மக்கள் எழுபத்து ஏழில்
தனிநாட்டுக்கு தீர்ப்பளித்தனர்
தந்தை செல்வா
தமிழ் மக்களை கடவுளே
காப்பாற்றவேண்டும் என்றார்   
வேறுவழியில்லை
கைகளில் ஆயுதம்


நாங்கள் அடித்தால் அடிவாங்க
பயந்தாங்கோழிகளோ  
மகாத்மாக்களோ இல்லை 
அடித்தார்
திருப்பி அடித்தோம்
அடித்தவரில்
குற்றம் சொல்லா உலகு
திருப்பி அடித்தவரில்
எங்ஙனம் குற்றம் காண்பது?
எங்கள் கைகளை மட்டும் கட்டி
எதிரிக்கு ஆயுதம் கொடுத்தது
மூர்க்கமாய் கால் தடங்கள் போட்டது
முதுகை குறிவைத்தது
இயங்கிய உடல் ஓயலாம்
போராட்ட ஆத்மா சாகாது
அடிமைத்தனத்தை ஏற்காது
நீறு பூத்த நெருப்பாய்
விடுதலை தாகம்  இருக்கும்

ஒரு நாள் தீரும்


Share/Save/Bookmark

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஏன் மௌனம்?



முஸ்லீம் மக்கள்
சிங்கள தமிழ் போரில்
தேவையான போதெல்லாம்
சிங்களத்திற்கு முண்டு தந்தனர்
சிங்களனின் புலனாய்வில்
முதுகெலும்பாய் இருந்தனர்
கிழக்கு தேர்தலிலும்
சிங்களத்துடன் கூட்டாகி
தமிழரை தோற்கடித்தனர் 
ஜெனிவாவிலும்
சிங்களத்திற்கு தோள் கொடுத்தனர்
தமிழ் இலக்கியத்திலும்
சிங்களத்திட்காய் பேசினர் 
கூட இருந்து குழிபறித்தனர்
தமிழர்கள் விழும்போதெல்லாம்
ஏறி உலக்க தவறவேயில்லை
பண்டமாற்றாய் பணம்
சிங்களம் முகத்தில் குத்த
முஸ்லீம் முதுகில் குத்தினர்

இன்று சிங்களம்
பள்ளிவாசல்களை உடைக்கிறது
வாழும் சுதந்திரத்தை பறிக்கிறது 
தமிழன் மட்டுமல்ல
நீயும் அடிமை என்கிறது

நாம் குரல் கொடுப்போம்
ஆக்கிரமிப்பை,அடாவடியை எதிர்க்க
அடுத்தவன் வாழ்வுரிமைக்காக 
ஏன் மௌனம்?

ஏன் மௌனம்?


Share/Save/Bookmark

சனி, 10 ஆகஸ்ட், 2013

ஆத்மா உலாவும் காணி

எழுபதில் கட்டிய வீடு,
முற்றத்தில் மல்லிகை பூக்களாய் சொரிய
வீடே மல்லிகை வாசம்
கிணற்றடியில்
செவ்வந்திபூக்கள் விரிந்திருக்க
நிலமெல்லாம் பாக்குகள்
தேசிமரத்தில் மஞ்சள் பல்ப்புகள்
மூடிக்கட்டியிருக்கும் மாதாளம் பழங்கள்
பழைய பூவரசிலிலும் பூக்கள் 
வளவில் ஆங்காங்கே செத்தல்கள்
அண்ணாந்து பார்த்தால் தேங்காய்க்குலைகள்
ஊஞ்சல் கட்டியிருக்கும் வேம்பு
அணில் ஓடிவிளையாடும் கொய்யா
திடுக்கிட நொங்கு விழும் சத்தம்
நாய் கூடபுகமுடியா வேலி

அம்மா,அம்மாவின் அம்மா,அம்மம்மாவின் அம்மா
அவர்களின் ஆத்மா உலாவும் காணி

கோடி ஆசையோடு வீடு பார்க்க போனோம்
வாசலில்  பூட்டு
முற்றத்தில் குறியீட்டுப்பலகை

" இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது"  


Share/Save/Bookmark

காணாமல் போனவர்



கணவன்
இந்திய இராணுவத்தால்
அல்லது
கூட இருந்தவரால்
காணாமல் போனவர்
தம்பி கடல்தொழிலில்
கடற்பீரங்கி சத்ததிற்கு பின்
காணாமல் போனவன்
மூத்தவன்
செம்மனிக்காலத்தில்
காணாமல் போனவன்
இளையவன்
முள்ளிவைக்காலுக்குப்பின்
சரணடைந்து காணாமல் போனவன்
மருமகளும்,பேரக்குஞ்சுகளும்
அவுஸ்ரேலியாவிற்கான  கடற்பயணத்தில்
காணாமல் போனவர்

இவள் வானத்தையும்
கடலையும் மாறி மாறி பார்க்கிறாள்        




Share/Save/Bookmark
Bookmark and Share