வெள்ளி, 19 செப்டம்பர், 2014

இவர்கள் எங்கள் மனங்களில் நிலைத்திருப்பார்கள்

கந்தசாமி ஐயா , ஒரு மூத்த பொது சுகாதார பரிசோதகர்.முன்னாள் கிளி முல்லை மாவட்டங்களின் பதில் மலேரியா தடை பொறுப்பதிகாரி, பதில் கிளிநொச்சி சுகாதரவைத்திய அதிகாரி. அன்பு ,நேர்மை மிக்க உழைப்பாளி.யாழ் அளவெட்டியை பூர்வீகமாய் கொண்டவர்.தொண்ணூறுகளில் மக்கள் யாழில் இருந்து பெருந்தொகையில் வன்னிக்கு  இடம் பெயர்ந்தபோது தமது ஊழியர்களுடன்  ஓய்வின்றி உழைத்த பெருமகன்.இக்காலத்தில் மலேரியா பெரும் பூதமாய் வன்னியை குத்தகைக்கு எடுத்திருந்தது. ஈவு இரக்கமின்றி பல உயிர்களை காவு கொண்டது.  இலங்கையின் மொத்த மலேரியா நோயாளிகளில் எழுபது வீதமான மலேரியா நோயாளிகள் வன்னியில் இருந்தனர்.மீண்டும் மீண்டும் இடப்பெயர்வுகள் அதிக துன்பங்களை தந்த நேரத்தில் அவரது கடமையை நான் பொறுப்பேற்றுக்கொண்டேன்.
எப்போதும் பொது நலனோடும் அதீத சமய நம்பிக்கைகளோடும் வாழ்ந்த கந்தசாமி ஐயா  கிளிநொச்சி வன்னேரிக்குளம் யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லத்தை நடுநாயகமாய் நின்று வளர்த்தெடுத்தார். முதியோர் இல்லத்தோடு தென்னந்தோட்டத்தையும்  உருவாக்கினார். இல்லம் தனது தேவைகளை யாரையும் நம்பியிருக்காமல் தானே பூர்த்தி செய்யவேண்டும் என விரும்பினார்.   தள்ளாத வயதினிலும் அவரது உழைப்பும் கூர்மையும் குறைந்திருந்ததாய் நான் உணரவில்லை. எங்கள் அன்பான ஐயா விபத்தில் கால் முறிந்து பின் இறந்து போனார். முதியோர் இல்லத்தில் அவரது இறுதி நிகழ்வு நடை பெற்றது.இடையில் அவரது உடலை நான் பொறுப்பேற்று,எனது எல்லா வெளிக்கள ஊழியர்களையும் அழைத்து எமது அலுவலகத்தில் ஒரு அஞ்சலி நிகழ்வை நடாத்தினேன்.

காலம் வேகமாய் ஓடிவிடும் எனினும் இவர்கள் எங்கள் மனங்களில் நிலைத்திருப்பார்கள்   


Share/Save/Bookmark

திங்கள், 15 செப்டம்பர், 2014

மருத்துவ பெருந்தகை

மருத்துவ சேவை எப்போதும் இரு பிரிவுகளுக்கூடாக வழங்கப்படும்.1, Curative sector     2,   Preventive sector.  

வன்னியின் போர்ச்சூழலில் Curative sector இல் தனியார் மருத்துவமனையாக இருந்தபோதும் டாக்டர் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனைகளின் பங்களிப்பு குறிப்பிடக்கூடியது. பொன்னம்பலம் மருத்துமனை ஒலுமடுவில் ஆரம்பித்து பின் புதுக்குடியிருப்பு,கிளிநொச்சியில் இயங்கிற்று. இந்த பொன்னம்பலம் மருத்துமனையின் சேவையின் முக்கிய கர்த்தாவாக என்றும் அன்புக்குரிய மருத்துவ பெருந்தகை வைத்தியகலாநிதி கெங்காதரன் ஐயா அவர்கள் இருந்தார்கள்.ஊதியம் பெறாமல் உழைத்தார்கள்.சில ஆயிரத்திற்கு மேற்பட்ட சத்திரசிகிச்சைகளை அவர் இந்த மருத்துவமனைகளில் செய்திருக்கிறார்.   எளிமையும் வேகமும் எப்போதும் அவரிடம் குடியிருக்கும்.புல்லாங்குழல் வாசிப்பதிலும் சளைத்தவர் அல்ல.சில பொது நிகழ்ச்சிகளையும் அக்காலத்தில் நடாத்தி இருந்தார்.    ஒரு குடும்பத்தின் மூன்று  பரம்பரைக்கு பிரசவ மருத்துவராய் இருந்திருக்கிறார்.போர்ச்சூழலில் இவரது மக்களுக்கான மருத்துவப்பணி மிகவும் பெறுமதியானது .எங்கிருந்தாலும் வாழ்க.




Share/Save/Bookmark

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

தாய் இரந்து கேட்கிறாள்

தாய் தேடுகிறாள் பிள்ளையை
நினைவிற்கு
படங்களோ,கல்லறையோ இல்லை
வாழ்ந்த வீடும்
படித்த பள்ளியும் பாதுகாப்புவலயத்தில்
சுவடுகளையாவது யாரும்
பார்த்தீர்களா? தாய் இரந்து கேட்கிறாள்



Share/Save/Bookmark

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

பிரசவிக்கமுடியா உண்மைகள்

கண்ணீர்ப்புகையால்  
கலைந்துபோகும் புனைவுகள் அல்ல
கண்ணீராய் வடிகின்ற நினைவுகள்
மடிக்கனத்தோடு இறந்தன
பிரசவிக்கமுடியா உண்மைகள்
தொண்டைமுள்ளோடு
எஞ்சிய வாழ்வை தின்று தவிக்கிறான்
கரும்புலிகளின் மருத்துவன்
வழுக்(கி)கை வீழ்ந்தவனின்
இரண்டாவது வாழ்க்கை
இரத்தத்தில் மீன்பிடிக்கும்
இதயமிலா இயந்திர சக்கை


Share/Save/Bookmark

வியாழன், 17 ஜூலை, 2014

அம்மம்மாவின் இரண்டாவது நினைவு தினம் (17/07/2014) இன்றாகும். அவர் நினைவுடன் அவரது பூட்டப்பிள்ளைகள் இலத்திரனியல் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

துளிர்



Share/Save/Bookmark

திங்கள், 7 ஜூலை, 2014

வாழ்வில் மறக்கமுடியா நாள் ( 10/07/2007)

வாழ்வில் மறக்கமுடியா நாள் ( 10/07/2007). அந்த நாளின் காலையும் வழமைபோல விடிந்தது.கிளிநொச்சி நகர் தனக்கே உரிய அழகுடன் சுறுசுறுப்பானது.நான் காலை ஆறரை மணிக்கு கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனை விடுதி நோயாளர்களை பார்வையிடத்தொடங்கி ( Ward rounds)ஏழரை மணிக்கு எனது சுகாதார சேவைகளின் காரியாலயம் வந்து சேர்ந்தேன். பத்திரிகையை பார்வையிட்டு சில நிர்வாக சந்திப்புகளைச் செய்தேன்.எமது தொற்று நோய்த்தடுப்பு அணி மாங்குளத்தில் தனது வேலைத்திட்டத்திக்காய் முழு ஆயத்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.நானும் அந்த அணியுடன் இன்று செல்வதே எனது கடமையாய் இருந்தது. அடிக்கடி ஒவ்வொருவராய் வந்து என்னோடு கதைத்துச் சென்றுகொண்டு இருந்தார்கள். தொற்று நோய்த்தடுப்பு பிரிவு பொறுப்பாளரும் கிளிநொச்சி சுகாதார சேவைகளின் பொறுப்பாளருமான தமிழ்வாணன் என்னிடம் வந்து ஒன்பது மணிக்கு நிகழ்வு,வெளிக்கிடுவமா? எனக்கேட்டார்."ஆம்" என்று சொல்லி எழுந்து சென்று வாகனம் நோக்கிப்போக ஒரு மோட்டார் சைக்கிள் வருகிறது.அந்த மோட்டார் சைக்கிளில் கலைப்பிரியன் வருகிறார்.கலைப்பிரியன் தலைவரின் குடும்பத்தினருக்கான மருத்துவ போராளி. அவர் வந்து என்னை இரகசியமாய் கூப்பிட்டு கதைக்கிறார். தலைவரின் தாய் தந்தையரை நீங்கள் பார்வையிட வேண்டும்,ஒன்பது மணிக்கு கிளிநொச்சிக்கு வருகிறார்கள் என்கிறார். நான் அவர்களுக்கான குடும்ப மருத்துவன். கலைப்பிரியனை அனுப்பிவிட்டுவர தமிழ்வாணன் என்னை நோக்கி வருகிறான்.அவன் எதையும் ஊகிக்கக்கூடியவன் நாங்கள் போய் நிகழ்வை ஆரம்பிக்கிறம் நீங்கள் பின்பு வாருங்கள் என்று சொல்லி விடை பெறுகிறான்.வாகனம் வெளிக்கிட முதல் மீண்டும் வாகன சாரதி தீபன் என்னிடம் வருகிறார்.நான் போய் அவர்களை இறக்கிவிட்டு உங்களை ஏற்ற வருகிறேன் என்கிறார்.வேண்டாம் நான் மோட்டார் சைக்கிளில் வருவேன் என்கிறேன்.அந்த விடையை விரும்பாதவர்போல் போகிறார்.எங்கள் எரிபொருள் தட்டுப்பாடு இருதடவை பயணத்திற்கு இடம் கொடுக்காது.

ஏற்கனவே எமது வாகனங்கள் மீது இரு தடவைகள் கிளைமோர்த்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.ஒரு சக ஊழியரையும் இழந்திருந்தோம்.அதனால் நாங்கள் அவதானமாய் இருந்தோம்.மாங்குளம் - முருகண்டி பாதை இரு பக்கங்களிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததால்
வாகனத்தை பயன்படுத்தியிருந்தோம்.இழப்புகளை குறைப்பதற்காய்   கிளைமோர் பிரதேசங்களில் மோட்டார் ஊர்திகளையே பயன்படுத்தினோம்.

ஸ்ரீலங்கா ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த்தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தாலும் அனைத்து பிரதேசங்களிலும் முடிந்தவரை பணி செய்தோம்.எமது சத்திர சிகிச்சை அணி - ஒன்று பள்ளமடு,பெரியமடு பிரதேசத்தில் கடமையில் இருந்தது. ஒவ்வொரு கிழமையும் நானும் வாமனும்( தமீழீழ சுகாதார சேவைப்பணிப்பாளர்,சத்திர சிகிச்சை அணி-மூன்றின் பொறுப்பு மருத்துவர்)  ,சுதர்சனும்( தமீழீழ பற்சுகாதார  பொறுப்பாளர்) மோட்டார் ஊர்திகளிலேயே சென்று வருவோம்.பின் தங்கிய பிரதேசங்களில் கௌசல்யன் நடமாடும் சேவையையும் கச்சிதமாய் நடத்தியிருந்தோம்.சுதர்சன் அனைத்து பாடசாலைகளிலும் பற் சுகாதார கிளினிக்குகளை வெற்றிகரமாய் நடத்தியிருந்தார்.


Share/Save/Bookmark

சனி, 14 ஜூன், 2014

நீறு பூத்த நெருப்பாய்

தன்னலமற்ற உழைப்பின் ,
உயர் அர்ப்பணிப்பின்
வீரவரலாறு ஒன்று
முள்ளிவாய்க்காலில்  
புதைந்து இருக்கிறது
நீறு பூத்த நெருப்பாய்

தோள் கொடுத்தவர்
குரல் தணித்ததால்
வடம் பிடிக்காதவர்
வானுயர வாயளக்கிறார்  
காலத்தின் கோலம் 

வீரவரலாறு ஒன்று
முள்ளிவாய்க்காலில்  
புதைந்தே இருக்கிறது
நீறு பூத்த நெருப்பாய்


   


Share/Save/Bookmark
Bookmark and Share