செவ்வாய், 7 ஏப்ரல், 2015

கல்லறை இல்லாதபூமியில்

தாயே!
உன் மரண அறிவித்தல் பார்த்தேன்
உளம் உருகி கருகிப்போனேன்

அம்மாவுக்கு மூன்றுபிள்ளைகள்
கடைக்குட்டி " மாவீரன் ”
ஒரு தடவை காப்பாற்றினேன்
பின் வித்துடலாய் வந்தான்     
பத்துவருடங்களுக்கு முன்
தாயை
பத்துவருடங்களின் பின்
யாழில் பார்த்தேன்
மீனுக்கு முள்ளெடுத்து    
பழஞ்சோறு தந்தாள்
மூத்தபிள்ளைகளுக்காய்
மட்டுமல்ல
சின்னவனின் கல்லறைக்கும்
விளக்கேற்ற வாழ்வதைச்சொன்னாள்    
சின்னவனின் நினைவுகளில்
பொக்குவாய் நிறைந்து
முழு நிலாவாய் தெரிந்தாள்

தாயின் மரண அறிவித்தலில்
சின்னவனின் பெயரில்லை
பயம்
வாழ்வின் பிடிப்பையும் தின்னுமா? 
கல்லறை இல்லாதபூமியில்
அமாவாசை இருட்டு  

    

  


Share/Save/Bookmark

திங்கள், 6 ஏப்ரல், 2015

1999 ஆம் ஆண்டு கிளிநொச்சி

1999 ஆம் ஆண்டு கிளிநொச்சி சுகாதார அதிகாரி பணிமனையால்  கிளிநொச்சி சுகாதார அதிகாரி பணிமனை பிரிவிற்குள் பல ஆய்வுகளை செய்தோம். அதன்படி குழந்தைகளின் பிறப்புநிறை இரண்டுகிலோவைவிட குறைவாக இருந்தது ( இலங்கையின் சராசரி இரண்டரை கிலோ) கர்ப்பவதியின் நிறை அதிகரிப்பு 5.4 கிலோவாக (இலங்கையின் சராசரி 7.5 கிலோ) இருந்தது.சுமார் ஆயிரம் மாணவர்கள் பாடசாலையை இடைநிறுத்தியிருந்தார்கள். பாடாசாலைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொடுத்தோம் அப்படியிருந்தும் பெரும்பாலான மாணவர்களை பாடசாலைக்கு உள்ளீர்க்கமுடியவில்லை. உண்மையிலேயே உணவுதான் அவர்களின் பிரச்சனையாக இருந்தது. போசாக்கு சம்மந்தமான பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்தோம்.போசாக்கு கல்வியூட்டலை ஆசிரியர் , மாணவர், வீடுகள்வரை முழுமைப்படுத்தினோம். பல கண்காட்சிகளை நடாத்தினோம்.சிறுவர் பட்டினிச்சாவு தவிர்ப்பு திட்டத்தை தொடர்ந்து உலக உணவுத்திட்டத்தின் (WFP )    need  assessment இற்கான கிளி முல்லை மாவட்டத்திற்கான consultant ஆக WFP ஆல் நியமிக்கப்பட்டேன். புலிகளின் கட்டுப்பாட்டில் கிளி முல்லை மாவட்டங்களுக்கு அப்பால் மன்னார்,வவுனியா,யாழ்ப்பாணத்தின் சிறுபகுதிகளும் இருந்தது. நான் முழுமையான விபரத்தையே அறிக்கையாக கொடுத்தேன்.WFP ஏற்றுக்கொண்டு என் அறிக்கையில் உள்ள ஆலோசனைகளுக்கு ஏற்ப தங்களது உணவு திட்டத்தை எங்கள் பிரதேசத்தினுள்ளும் அமுல்ப்படுத்தினார்கள். இச்செயற்பாடும் எனக்கு எமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தொற்று நோய்களைகட்டுப்படுத்துவதில் உதவிற்று. 2005 ஆம் ஆண்டுக்காலத்தில் பிறப்புநிறை சராசரி 2.9 கிலோவாக இருந்தது ( இலங்கையின் சராசரி இரண்டரை கிலோ) கர்ப்பவதியின் சராசரி நிறை அதிகரிப்பு 8.7 கிலோவாக (இலங்கையின் சராசரி 7.5 கிலோ) இருந்தது.  

    

  


Share/Save/Bookmark

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

ஆனந்தபுரத்தில் உக்கிரசமர் நடந்துகொண்டிருந்தது

ஆனந்தபுரத்தில் உக்கிரசமர் நடந்துகொண்டிருந்தது. ஆனந்தபுரத்தினுள் சத்திரசிகிச்சைகூடம் அமைக்கமுடியுமா? என என்னிடம் வினவப்பட்டது.ஏற்கனவே எமது சத்திரசிகிச்சைகூடங்கள் மாத்தளன் ( சத்திரசிகிச்சைகூடம்- 3), முள்ளிவாய்க்காலில் (   சத்திரசிகிச்சைகூடம்- 1)
அதிவினைத்திறனுடன் இயங்கிக்கொண்டிருந்தன.   சத்திரசிகிச்சைகூடம்- 2 , ஏற்கனவே மக்களின் நலன்கருதி  முள்ளிவாய்க்கால் மருத்துவமனையுடன் இணைத்திருந்தேன். அதன் பொறுப்பு மருத்துவர் கமலினி அவர்களும் கடமையின்போதே செல்வீச்சால் எமைவிட்டு பிரிந்திருந்தார். மற்றைய  சத்திரசிகிச்சை கூடங்களின் வினைத்திறனில் எப்பாதிப்புகளும் ஏற்படாமல் நான் சிறு சத்திரசிகிச்சை அணியை ஒன்றாக்கி(தொற்றுநோய் தடுப்பு பொறுப்பாளரை மட்டும் விட்டு விட்டு) போவதற்கான ஏற்பாடுகளை செய்து காத்திருந்தோம். சுதர்சன்தான் அணிக்கு தேவையான அடிப்படை பொருட்களையும் ஒன்றாக்கினான்.  சத்தியாவும்,சில மருத்துவ போராளிகளும் ஆனந்தபுரத்தினுள் உச்சகடமையில் இருந்தார்கள்.அவர்களையும் என்னோடு இணைக்கும் எண்ணம் எனக்கு பலத்தைதந்தது.  இரவு இரண்டு மணிக்கு போகத்தேவையில்லை என்றபதில் வந்தடைந்தது. 

    

  


Share/Save/Bookmark

வியாழன், 2 ஏப்ரல், 2015

எங்கே எம் பிள்ளை?

இராணுவம் முன்னேற ஒவ்வொரு இடங்களுமாய் விடுபட்டுக்கொண்டு இருக்கும். இறுதியில் இடம்மாறும் சத்திரசிகிச்சைகூடமாய் எங்கள்   சத்திரசிகிச்சைகூடம் இருக்கும். இயன்றவரை எல்லா பொருட்களையும் அனுப்பிவிட்டு, சரிபார்த்துவிட்டு போகும் இறுதிக்கணங்கள் (மன்னாரிலிருந்து). மார்கழி 31
2008  மதியநேரம் , நாங்கள் காக்கா கடைச்சந்தியில் நின்றோம். நான் சந்தியில் நின்று A-9 பாதையை பார்த்தேன். பாதை நீட்டுக்கு நாய்கள் சிலதை தவிர எவருமே இல்லை. மனம் கனத்தது. சுதர்சன் இராணுவம் உள்ளுக்கு வந்திருக்கும்,போவோம் போவோம் என கரைந்துகொண்டிருந்தான்( முள்ளிவாய்க்கால் வரை) . அவனது திருமணத்தில் அவனது தந்தையும் தாயுமாய் நானும் மனைவியுமே இருந்து நடாத்தினோம். எங்கே எம் பிள்ளை?  


Share/Save/Bookmark

செவ்வாய், 31 மார்ச், 2015

மணலாறு / தமிழர்களின் இதயபூமி

மணலாறு / தமிழர்களின் இதயபூமி
மூ எட்டு மணிக்குள் வெளியேறு !
ஒலிபெருக்கி அலற
பூர்வீக மக்கள் 
வளம்நிறைந்த நிலம் துறந்து
அகதியாகி
நா எட்டு வருடங்கள்  
குடியேற்றத்தோடு ஆக்கிரமிப்பு
தமிழர்நிலம் துடிதுடிக்க துண்டானது
வட ஆட்சி பெற்றும்
மீள்குடியேற்றம் இல்லை
யாவும் கண்துடைப்பிற்கே

அடுத்த நூற்றாண்டில்
ஈழத்தில் தமிழனின் வீதம்
அருகிவிடும்
சிங்கள,முஸ்லீம் வீதம்
பெருகிவிடும்
தமிழனின் உரிமைக்கேள்வி
செவிடன் காதில் ஊதப்படும் சங்கு  
புலத்தில் ஈழத்தமிழர்
சுயம் இழப்பர்
அரைவாசி தேறுவதே கடினம்  

சில தசாப்தங்களுக்கு முன்
வேலிக்கு கூட சண்டைபிடித்த
ஈழத்தமிழன் 
ஐந்து நூற்றாண்டுக்குப்பின்
ஆராய்ச்சிக்கு தேடப்படுவான்

பிறப்புவீதம் மடங்காகவேண்டும்
சுயபொருளாதாரம்
வன்னியில்,கிழக்கில்,மலையகத்தில்
நிலையாகவேண்டும்
பூர்வீக நிலங்களை இழக்காதே!
பூர்வீகத்தை இழந்துவிடுவாய்.
    

  


Share/Save/Bookmark

சனி, 28 மார்ச், 2015

உயிரின் அலைவரிசையில் ஒலிப்பது

மகளே!
கிழிந்த சட்டைக்காய் அழாதே!
கிழித்த சட்டைதான்
இங்கு latest  design

ஆச்சியின் பொக்குவாய்ச்சிரிப்பில் 
பூரித்த என் இதயத்தை
இங்கு கடந்து போகிறது  
ஒரு ஆச்சியின்  சிரிப்பு 
கட்டிய பற்களுடன்

போசனைக்குறைபாட்டால்
என் சமூகம் அவதியுற
யோ/போசனைகூடி 
அவதியுறுகிறது
இங்கு ஒருசமூகம்

பேரனின் வியர்வை ,
அண்ணனின்  குருதி கலந்த மண்ணில்
வேர்விட்டமரம் நீ
வெயிலில்
காணாமல் போகும் பனியோடு
கரைந்து போகிறேன் நான்
தாமரை இலையில் நீர்போல

அம்மா குழைத்து
உள்ளங்கையில் வைக்கும்
சோற்றுருண்டை
முழு நிலாவைவிட அழகு மகளே!
அதுதான் என் பூமி மகளே!   
பச்சை வயலும்,  
பனங்கூடலும்,குளக்கரையும்
நிசப்த காடுகளும்
ஒத்தனம் தரும் பூமியில்
ஏது சூதுவாது ?

ஆடு மாட்டின் பால்போல
வெள்ளையாய்
பனங்கள்ளும் ,கடல்நுரையும்
உன்சிரிப்பும் மகளே!
நீலம் போடாத வெண்மை மகளே!

நிலம் தொடாமல்
அந்தரத்தில் துயில்கொள்ளும்
என் மனதில் நிறைவது எல்லாம்
நீ நடந்து திரியும் மண்தான் மகளே!
உயிரின் அலைவரிசையில் ஒலிப்பது
தேசப்பாடல்மட்டும்தான் மகளே!

எட்ட இருந்தாலும்
ஒட்டி இருக்கிறாய்
அது எப்படி ?
என் அழகிய தமிழ்மகளே!


  


Share/Save/Bookmark

சனி, 21 மார்ச், 2015

அ(க)ருகிப்போவாயோ?

மதம் பிடித்தது
மதகுருக்களுக்கு
வதம் நடந்தது
சிறு இனங்களுக்கு
நிச்சயமாய்
இந்துமத சித்தாத்தர்
இதயம் நொந்திருப்பார்
காவியுடை மட்டும்
பிக்கு கையில் சிக்கிற்று
புத்தசிந்தனைகள் தப்பிற்று
புத்தபகவான் நிர்வாணமானார் 


மனக்காயங்களோடு அகதியானோம்
மக்களுக்கு மீட்சிவர
காயங்களை குடைந்து,குடைந்து
சாட்சியானோம்
ஆட்சிமாற
சர்வதேசம் கட்சிமாறும்
சூழ்ச்சி ஆளும் உலகில்
இது புதினமல்ல
"அயல்" பெயருக்கு மட்டும்
எம்தாயக பசிக்கு ஊட்டும்
கள்ளிப்பால் "அயல்"
அது காந்தியின் தேசமல்ல
கோட்சேயின் தேசம்  
வயல் எரிந்து,வயிறு எரிந்து
நீ எரிகையில்
வெளிச்சம் அயலுக்குத்தான்
அ(க)ருகிப்போவாயோ?

துளிர்த்துவருவாயோ?    


Share/Save/Bookmark
Bookmark and Share