சனி, 22 பிப்ரவரி, 2014

துயரம் பூதமாய் வளர்கிறது

உலகம்
ஒரு பக்கத்திற்கு
ஆயுதத்தை அள்ளிக்கொடுத்தது
ஒரு பக்கத்திற்கு
ஆயுதங்கள் போவதை தடுத்தது
வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது
கபடம் கலந்த வரவழைப்பால்  
வீரர்கள் சரணடைந்தார்கள்
காணாமல் போனார்கள்
தோள் கொடுத்த மக்கள்
சிதைந்துபோனார்கள்
துயரம் பூதமாய் வளர்கிறது   


Share/Save/Bookmark

புதன், 12 பிப்ரவரி, 2014

அம்மா

அம்மா
இருந்த உணவை பகிர்ந்து
எம் வயிறு நிரப்பி
நீரை மட்டும் நீ குடித்து
சிரித்தபடி எமை வளர்த்தாய்
வளர்ந்தால்
உன்னை பார்ப்பார் என்றோ
படித்து பெரியவர் ஆவார் என்றோ
நீ கனவு கண்டிருப்பாய்
எதுவும் நடக்கவில்லை
யாருக்கும் உதவும் உன்மனம்
பிள்ளைகளோடு பிறந்ததால்
பிள்ளைகள் உன்னோடு இல்லை
ஒருபோதும் நீ நினைத்திருக்கமாட்டாய்
உன் இறுதிசடங்கில் கூட
உன் பிள்ளைகள் வரமாட்டார் என்று 
அம்மா நீ விரும்புவாயோ
இல்லையோ
அடுத்த பிறப்பிலும்

நீதான் எமக்கு அம்மாவாகவேண்டும்


Share/Save/Bookmark

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

மக்களுக்காய் வாழ்ந்தவர் நினைவில் நனைகிறோம்.

குமாரி ,யாழ் லங்கா சித்த ஆயுள்வேத கல்லூரியில் கல்வி கற்றவர்.பெண் மருத்துவ போராளியாய் அவரை தொண்ணூறுகளில் இருந்து நான் அறிவேன்.2006 களில் அவர் தமீழீழ சுகாதார சேவைகளின் ஓர் அலகான  சுதேச மருத்துவ பிரிவின் துணைப் பொறுப்பாளராய் நியமிக்கப்பட்டிருந்தார்.  
 அவர் ஒரு குழந்தையின் தாயாக இருந்தார்.அவரது கணவர் களமுனையி ல் காயமடைந்து ஒரு காலை தொடையோடு இழந்திருந்தார்.இந்நிலையிலும் குமாரி அவர்கள் தன் கடமையை நேர்த்தியாய் செய்துகொண்டிருந்தார். சுதேச மருத்துவ பிரிவின் கீழ் மூலிகை பண்ணையொன்று   கிளிநொச்சி ஐம்பத்தைந்தாம் கட்டை சந்திக்கருகில்  இயங்கிவந்தது.சுமார் எழுநூறு வகை மூலிகை தாவரங்கள் அங்கு பராமரிக்கப்பட்டுவந்தன. வன்னியில் எங்கு என்னென்ன மூலிகைகளை பெறலாம் என்பதை அவர் அறிந்து வைத்திருந்தார்.வடமாகாணத்தில் கடமை புரிந்த ஆயுள்வேத மருத்துவர்களோடு சிறந்த இணைப்பை வைத்திருந்தார். 

நாம் இயன்ற அளவில் முழு அளவிலான நடமாடும் மருத்துவ சேவைகளை கஸ்டப்பிரதேசங்களிலும் பாதுகாப்பு அற்ற பிரதேசங்களிலும்
நடாத்திவந்தோம். அதில் சுதேச மருத்துவமும் ஒரு அங்கமாக இருந்தது.அங்கெல்லாம் சுதேசமருத்துவராய் குமாரி அக்கா சேவை வழங்கிக்கொண்டு இருப்பார்.தனது குழந்தையையும் கூட்டிக்கொண்டு அடிக்கடி கிளைமர் அடிபடும் பிரதேசங்களான நெடுங்கேணி,சேமமடு,குஞ்சுக்குளம், தட்சனாமருதமடு,இலுப்பைக்கடவை என்று எல்லா இடங்களிலும் மருத்துவசேவையில் பங்கேற்றார்.
சுதேச மருத்துவபிரிவின் கீழ் ”திலீபனா ” சுதேச மருந்து உற்பத்தி நிலையம் இயங்கிவந்தது.ஐம்பதிற்கும் மேற்பட்ட சுதேச மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டன.போர் உச்சம் பெற்றிருந்தபோதும் ஒரு தொகுதி மருந்துகள்
கையிருப்பில் இறுதிவரை வைத்திருந்தோம்.
”சுதேச ஒளி ”என்ற காலாண்டு இதழையும் சுதேச மருத்துவபிரிவு நடாத்திவந்தது. ஐந்து இதழ்கள் வெளியாகியிருந்தன.பல ஆயுள்வேத மருத்துவர்கள் ஆக்கங்களை எழுதியிருந்தனர்.சுதேச மருத்துவ கற்கை நெறியொன்றை சுகாதார விஞ்ஞானக்கல்லூரியில் ஆரம்பிக்கும் திட்டங்களோடு இருந்தோம்.  
முள்ளிவாய்க்காலில் ,அந்த இறுதிநாட்களில் மருத்துவ விடுதியில் கடமையில் இருந்தபோது எதிரியின் செல்வீச்சில் குமாரி வீரமரணம் அடைந்தார்.  

மக்களுக்காய் வாழ்ந்தவர் நினைவில் நனைகிறோம்.


Share/Save/Bookmark

புதன், 5 பிப்ரவரி, 2014

சிவமனோகரன் (1963-2009)



நண்பா!  எண்பதுகளில்
ஒரு கூட்டுக்குள் வளர்ந்தோம்
தொண்ணூறுகளில்
நீ கூடுவிட்டுபோனாய் - இருந்தும்
கூடு போகும் இடமெல்லாம்
சுமை பிரித்து அருகில் இருப்பாய்
அன்றும் வலைஞர்மடத்தில்
எம் அருகில்
Cluster குண்டில் நீ மடிந்தாய்
ஓடிவந்தோம்
இரண்டரை தசாப்த நட்புடன்
நீ கையசைக்காமல் போய்விட்டாய் 

உன் மனைவியோடு சேர்ந்துகொண்டாய்


Share/Save/Bookmark

திங்கள், 3 பிப்ரவரி, 2014

எங்கே என் குழந்தை




Share/Save/Bookmark

வெள்ளி, 31 ஜனவரி, 2014

கருணாரத்தினம் அடிகளார்

கிளி father என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட கருணாரத்தினம் அடிகளார் அவர்கள்  நகைச்சுவையுணர்வும் அன்பும் நிறைந்த அளப்பரிய சேவையாளர்.இலங்கை வங்கியில் ஒரு அதிகாரியாய் இருந்து பின் பாதிரியார் ஆனவர்.மிகுந்த தமிழ் உணர்வும்,அறிவும் உள்ளவர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பல மக்கள் இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்து
புது வாழ்க்கையை ஆரம்பித்தார்கள் .அந்தக்காலப்பகுதியில்தான் அவருடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது.
யாழ்ப்பாண இடப்பெயர்வோடு வன்னியில் சுமார் ஆறரை இலட்சம் மக்கள் வாழ்ந்தார்கள்.ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய மருத்துவர்கள்தான் வன்னியில்  இருந்தார்கள்.அவர்களின் உழைப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை.நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒலுமடுவில் இயங்கிய
பொன்னம்பலம் மருத்துவமனையில் பற்சிகிச்சை கிளினிக் நடத்திவந்தேன்.ஒரு களைப்பான நாளில்த்தான் கிளி fatherஐ முதல் முதலாய் சந்தித்தேன்.அவர் பற்சிகிச்சை பெற வந்திருந்தார்.முதல் சந்திப்பிலேயே பல நாள் பழகியவர் போல் ஓர் ஈர்ப்பை பெற்றேன்.
 வன்னியில் மலேரியா தாண்டவம் ஆடிற்று.மலேரியாவாலும்,ஜெயசுக்குறு இராணுவ நடவடிக்கையின் இடப்பெயர்வுகளாலும்  சிறுவர்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.இது ஒரு மிகவும் எச்சரிக்கையான காலம்.  ஆனைவிழுந்தானில் அமைந்திருந்த தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின்  நடுவப்பணியகத்தில் தமிழ்ச்செல்வன் தலைமையில் சிலர் அவசரமாக ஒன்று கூடினோம்.சிறுவர் பட்டினிச்சாவு தவிர்ப்புத்திட்டம் உதயமானது.இந்தக்குழுவில் கிளி father உம் இருந்தார்.இந்த திட்டத்தை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சிறப்பாக நடைமுறைப்படுத்திற்று. வெரித்தாஸ் வானொலி நிதி கிடைக்க உதவிற்று.வன்னி முழுக்க பல சிறு இடங்கள் அமைத்து ,எல்லா சிறுவர்களுக்கும் கற்பிணித்தாய்மாருக்கும்  சமைத்த உணவு நாளுக்கு வெவ்வேறாக வழங்கப்பட்டது.வழங்கவேண்டிய உணவின் பட்டியலை Dr சதானந்தன் துல்லியமாக என்னிடம் தந்திருந்தார்.
நிலைமை ஆறு மாதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருந்தது. பின் கிளிநொச்சிநகர்  திட்டமிடலிலும் எங்களுக்கு ஒத்தாசையாய் இருந்தார்.அப்போது அவர் NGO consortium இன் தலைவராய் இருந்தார். கருமை நிற மோட்டார் சைக்கிளில் ஒரு விளையாட்டு வீரனைப்போல பறந்து திரிவார்.புழுதியே காற்றாகும் பாதைகளில் தோழமைகளுடன் சந்தித்துக்கொள்வோம்.
இறுதியாய் கிளிநொச்சி சுகாதார விஞ்ஞானக்கல்லூரியின் நிகழ்வு ஒன்றில் அவரை சந்தித்தேன்.அவர் அக்கல்லூரியின் நிர்வாகசபையின் உறுப்பினராயும் இருந்தார். அக்காலப்பகுதியில் Northeast Secretariat on Human Rights (NESOHR)இன் தலைவராகவும் அயராது உழைத்திருந்தார். தமிழ்ச்செல்வனின் வீரமரணம் அவரை சரியாக பாதித்திருந்தது.அதற்குப்பின் முகத்தாடி வளர்த்திருந்தார்.தமிழ்ச்செல்வன்  நினைவாக நூலகம் ஒன்றை  அமைக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.

சித்திரை இருபதாம் திகதி 2008ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த்தாக்குதலில் கொல்லப்பட்டார். மீண்டும் எம் கன்னங்கள் நனைந்தன.

-   நிரோன் -   


Share/Save/Bookmark

வியாழன், 30 ஜனவரி, 2014

வீரர்கள் இறப்பதுண்டு இலட்சியம் இறப்பதில்லை




Share/Save/Bookmark
Bookmark and Share