செவ்வாய், 9 செப்டம்பர், 2014

தாய் இரந்து கேட்கிறாள்

தாய் தேடுகிறாள் பிள்ளையை
நினைவிற்கு
படங்களோ,கல்லறையோ இல்லை
வாழ்ந்த வீடும்
படித்த பள்ளியும் பாதுகாப்புவலயத்தில்
சுவடுகளையாவது யாரும்
பார்த்தீர்களா? தாய் இரந்து கேட்கிறாள்



Share/Save/Bookmark

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

பிரசவிக்கமுடியா உண்மைகள்

கண்ணீர்ப்புகையால்  
கலைந்துபோகும் புனைவுகள் அல்ல
கண்ணீராய் வடிகின்ற நினைவுகள்
மடிக்கனத்தோடு இறந்தன
பிரசவிக்கமுடியா உண்மைகள்
தொண்டைமுள்ளோடு
எஞ்சிய வாழ்வை தின்று தவிக்கிறான்
கரும்புலிகளின் மருத்துவன்
வழுக்(கி)கை வீழ்ந்தவனின்
இரண்டாவது வாழ்க்கை
இரத்தத்தில் மீன்பிடிக்கும்
இதயமிலா இயந்திர சக்கை


Share/Save/Bookmark

வியாழன், 17 ஜூலை, 2014

அம்மம்மாவின் இரண்டாவது நினைவு தினம் (17/07/2014) இன்றாகும். அவர் நினைவுடன் அவரது பூட்டப்பிள்ளைகள் இலத்திரனியல் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

துளிர்



Share/Save/Bookmark

திங்கள், 7 ஜூலை, 2014

வாழ்வில் மறக்கமுடியா நாள் ( 10/07/2007)

வாழ்வில் மறக்கமுடியா நாள் ( 10/07/2007). அந்த நாளின் காலையும் வழமைபோல விடிந்தது.கிளிநொச்சி நகர் தனக்கே உரிய அழகுடன் சுறுசுறுப்பானது.நான் காலை ஆறரை மணிக்கு கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனை விடுதி நோயாளர்களை பார்வையிடத்தொடங்கி ( Ward rounds)ஏழரை மணிக்கு எனது சுகாதார சேவைகளின் காரியாலயம் வந்து சேர்ந்தேன். பத்திரிகையை பார்வையிட்டு சில நிர்வாக சந்திப்புகளைச் செய்தேன்.எமது தொற்று நோய்த்தடுப்பு அணி மாங்குளத்தில் தனது வேலைத்திட்டத்திக்காய் முழு ஆயத்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.நானும் அந்த அணியுடன் இன்று செல்வதே எனது கடமையாய் இருந்தது. அடிக்கடி ஒவ்வொருவராய் வந்து என்னோடு கதைத்துச் சென்றுகொண்டு இருந்தார்கள். தொற்று நோய்த்தடுப்பு பிரிவு பொறுப்பாளரும் கிளிநொச்சி சுகாதார சேவைகளின் பொறுப்பாளருமான தமிழ்வாணன் என்னிடம் வந்து ஒன்பது மணிக்கு நிகழ்வு,வெளிக்கிடுவமா? எனக்கேட்டார்."ஆம்" என்று சொல்லி எழுந்து சென்று வாகனம் நோக்கிப்போக ஒரு மோட்டார் சைக்கிள் வருகிறது.அந்த மோட்டார் சைக்கிளில் கலைப்பிரியன் வருகிறார்.கலைப்பிரியன் தலைவரின் குடும்பத்தினருக்கான மருத்துவ போராளி. அவர் வந்து என்னை இரகசியமாய் கூப்பிட்டு கதைக்கிறார். தலைவரின் தாய் தந்தையரை நீங்கள் பார்வையிட வேண்டும்,ஒன்பது மணிக்கு கிளிநொச்சிக்கு வருகிறார்கள் என்கிறார். நான் அவர்களுக்கான குடும்ப மருத்துவன். கலைப்பிரியனை அனுப்பிவிட்டுவர தமிழ்வாணன் என்னை நோக்கி வருகிறான்.அவன் எதையும் ஊகிக்கக்கூடியவன் நாங்கள் போய் நிகழ்வை ஆரம்பிக்கிறம் நீங்கள் பின்பு வாருங்கள் என்று சொல்லி விடை பெறுகிறான்.வாகனம் வெளிக்கிட முதல் மீண்டும் வாகன சாரதி தீபன் என்னிடம் வருகிறார்.நான் போய் அவர்களை இறக்கிவிட்டு உங்களை ஏற்ற வருகிறேன் என்கிறார்.வேண்டாம் நான் மோட்டார் சைக்கிளில் வருவேன் என்கிறேன்.அந்த விடையை விரும்பாதவர்போல் போகிறார்.எங்கள் எரிபொருள் தட்டுப்பாடு இருதடவை பயணத்திற்கு இடம் கொடுக்காது.

ஏற்கனவே எமது வாகனங்கள் மீது இரு தடவைகள் கிளைமோர்த்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.ஒரு சக ஊழியரையும் இழந்திருந்தோம்.அதனால் நாங்கள் அவதானமாய் இருந்தோம்.மாங்குளம் - முருகண்டி பாதை இரு பக்கங்களிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததால்
வாகனத்தை பயன்படுத்தியிருந்தோம்.இழப்புகளை குறைப்பதற்காய்   கிளைமோர் பிரதேசங்களில் மோட்டார் ஊர்திகளையே பயன்படுத்தினோம்.

ஸ்ரீலங்கா ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த்தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தாலும் அனைத்து பிரதேசங்களிலும் முடிந்தவரை பணி செய்தோம்.எமது சத்திர சிகிச்சை அணி - ஒன்று பள்ளமடு,பெரியமடு பிரதேசத்தில் கடமையில் இருந்தது. ஒவ்வொரு கிழமையும் நானும் வாமனும்( தமீழீழ சுகாதார சேவைப்பணிப்பாளர்,சத்திர சிகிச்சை அணி-மூன்றின் பொறுப்பு மருத்துவர்)  ,சுதர்சனும்( தமீழீழ பற்சுகாதார  பொறுப்பாளர்) மோட்டார் ஊர்திகளிலேயே சென்று வருவோம்.பின் தங்கிய பிரதேசங்களில் கௌசல்யன் நடமாடும் சேவையையும் கச்சிதமாய் நடத்தியிருந்தோம்.சுதர்சன் அனைத்து பாடசாலைகளிலும் பற் சுகாதார கிளினிக்குகளை வெற்றிகரமாய் நடத்தியிருந்தார்.


Share/Save/Bookmark

சனி, 14 ஜூன், 2014

நீறு பூத்த நெருப்பாய்

தன்னலமற்ற உழைப்பின் ,
உயர் அர்ப்பணிப்பின்
வீரவரலாறு ஒன்று
முள்ளிவாய்க்காலில்  
புதைந்து இருக்கிறது
நீறு பூத்த நெருப்பாய்

தோள் கொடுத்தவர்
குரல் தணித்ததால்
வடம் பிடிக்காதவர்
வானுயர வாயளக்கிறார்  
காலத்தின் கோலம் 

வீரவரலாறு ஒன்று
முள்ளிவாய்க்காலில்  
புதைந்தே இருக்கிறது
நீறு பூத்த நெருப்பாய்


   


Share/Save/Bookmark

சனி, 24 மே, 2014

என்னவளுக்கு !

என்னவளுக்கு !
இன்று 
தொழிலாளர் /உழைப்பாளர் தினம் 
இன்றுதான் 
உன் பிறந்த தினமும் 

"எட்டு மணி நேர வேலை "என்று
தொடங்கி ரஷ்ய புரட்சியே வெடித்தது 
என்னவளே !
எந்த புரட்சியும் இல்லாமல் 
இன்னும் 
இரு எட்டு மணி நேர வேலை செய்கிறாய் 
ஒற்றையாய்
ஒரு தசாப்தம் 
குடும்ப சுமை உன்மீது 
இரட்டையாய் ஒன்றானோம்
புலம் பெயர்ந்து
விரும்பா/எதிர்பாரா புலம்பெயர்வு

எனக்கு எல்லாமே போனஸ் தான்
நீயும் எனக்காய் மாறிப்போனாய்
குழந்தைகளுக்காய்
புதிய மண்ணில்
மீண்டுமொரு போராடியவாழ்வு
அத்திவாரத்திலிருந்து
ஆயுளின் கால்வாசிதான் மீதமிருக்க 

அலைகளில் அசைந்தவாழ்வு
சுனாமியாய் அடித்து ஓய்ந்தது

உயிரால் வரைந்த ஓவியம்
உலகால் கலைந்த சீவியம்

மனிதர்களுக்கு கடின வாழ்வு
பச்சோந்திகளுக்கு இலகு வாழ்வு

மரம் வேரோடு தீப்பற்ற
குருவிகளின் கூடு தொலைந்தது 
வேரற்ற மண்ணில் 
வேதனையோடு மீள கட்டும் கூடு 
குருவிகளுக்கானதா?


சோகங்களை
இயன்றவரை மறைத்து
அமைதியாய் அசைவோம்
காயம் ஏற்று மயிரிழையில்
உயிர் தப்பியவள் நீ
மயிரிழையே
எம் வாழ்வை உயிர்ப்பிக்கிறது
தொடர்ந்தும்
அன்பால் எமை கரை
இயல்பாய் கவிதை வரை
உன்னை வாழ்த்த
நானொன்றும் வேறல்ல
நானும் நீதான்




Share/Save/Bookmark

வெள்ளி, 9 மே, 2014

ஒரு கோழியைப்போல நான் எழுதிய குப்பைகளை என் ஞாபகங்களில் இருந்து கிளரிப்பார்க்கிறேன்.



எனது முதலாவது பிரசுரமான சிறுகதை "கல்லறைக்குள் தீபம் ஒன்று "
1987 ஆம் ஆண்டு உதயனின் சஞ்சீவியில் பிரசுரமாயிற்று. நான் எழுதிய ஏழு ஆரம்பகால கதைகளை " சமுதாயக்காயங்கள்" என்ற பெயரில் தொகுக்க இருந்தேன்.இந்திய இராணுவம் எரித்த வீடுகளில் எங்கள் வீடும் ஒன்றானதில் எனது முதல் தொகுப்பு கருவில் சிதைந்து போயிற்று.  1992  ஆம் ஆண்டு ஈழநாதம் நடத்திய இலக்கிய போட்டியில் எனது சிறுகதை( இவர்கள் புலிகள்) இரண்டாம் இடத்தை பெற்றது. 1994 ஆம் ஆண்டு பொருண்மிய நிறுவனம் நடாத்திய இலக்கிய போட்டியில் "மேம்பாடுகளைத்தேடி " என்ற கட்டுரை முதலாம் இடத்தை பெற்றது. 1998 ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகை நடாத்திய இலக்கிய போட்டியில் ”என்னவளுக்கு” என்ற கவிதை இரண்டாம் இடத்தை பெற்றது.
2004 ஆம் ஆண்டு சர்வதேச மாணவர் பேரவை நடாத்திய இலக்கிய போட்டியில் ”நிழல் ஓவியங்கள்” என்ற சிறுகதை இரண்டாம் இடத்தை பெற்றது. இச்சிறுகதை தமிழீழ தொலைக்காட்சியினரால் குறும்படமாய் ஒளிபரப்பட்டது.  முல்லை கடற்தொழிலாளர்  சங்கம் கரும்புலிகள் நினைவாய் நடாத்திய ஓவியப்போட்டியில் எனது ஓவியமும் பரிசை தட்டிக்கொண்டது. என் இளமைக்காலத்தில் விளம்பரப்பலகைகளுக்கு எழுத்துருக்களை எழுதியிருக்கிறேன். திறந்த இலக்கிய போட்டிகளில் எனது பதினான்கு ஆக்கங்கள் பரிசு பெற்றுள்ளன.
எனது முதலாவது கவிதை தொகுதி ( அந்த நாளை அடைவதற்காய்)

1999 ஆம் ஆண்டு  வெளியானது.இந்நூலின் முன்னுரையை சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதியிருந்தார்.  எனது மூன்றாவதும்( அந்தநாள் எந்தநாளோ) நான்காவதும் ( கண்ணீர்த்துளிகள்) நூல்கள் எங்கு தேடியும் எனக்கு கிடைக்கவில்லை .தயவுசெய்து யாருக்கும் கிடைத்தால் தந்துதவுங்கள். முள்ளிவாய்க்காலில்  பல ஆக்கங்களை இழந்தாலும் , அது இழந்த உயிர்களுடன் ஒப்புநோக்குகையில் தூசாய் போகிறது


Share/Save/Bookmark
Bookmark and Share