காலை வணக்கம் , இந்த நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

சனி, 20 பிப்ரவரி, 2021

 அண்ணையின் அம்மாவை நாங்களும் அம்மா என்றுதான் கூப்பிடுவோம்.  அண்ணையின் அப்பாவையும் நாங்கள் அப்பா என்றுதான் கூப்பிடுவோம் ஆனால் அண்ணை "ஐயா" என்றுதான் கூப்பிடுவார். அம்மாவும் அப்பாவும் அண்ணையை துரை என்றுதான் கூப்பிடுவார்கள். துரை என்பது அண்ணையின் வீட்டுப்பெயர். அம்மாவிற்கு பல உபாதைகள் இருந்தன. அப்பா அவரை நன்கு கவனித்துவந்தார். அப்பாவிற்கு எந்தவித நோய்களும் இருக்கவில்லை. அவரது மருத்துவ குருதி பரிசோதனையில் எந்த குறைபாடுகளையும் நான் அறிந்ததில்லை. அப்பா இராணுவ சிறைக்குள் இறந்துபோனதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அப்பா ஒரு நல்ல நேர்மையான மனிதர். 



Share/Save/Bookmark

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

திரும்பிப்பார்க்கிறேன்

  


நான் ஒரு நிர்வாகியாய் வாழ்ந்திருக்கிறேன். நான் இராணுவ முகாமைத்துவத்தையும் மருத்துவ முகாமைத்துவத்தையும் முறையாக ஓரளவு கற்றிருக்கிறேன். நான் முகாமை செய்த துறைகளில் வெறும் முகாமையாளனாய் நான் இருக்க விரும்பியதில்லை, அதை நானும் ஒருவனாய் செய்யக்கூடியவனாகவே இருந்திருக்கிறேன். ஒருபோதும் இன்னொருவரின் திறமையில் குளிர் காய்பவனாக இருந்திருக்கவில்லை. எப்போதும் அடுத்தவர்களிடம் உள்ள சிறப்புக்களை கற்பவனாகவும் அவர்கள் மேலும் வளர உறுதுணையாய் இருந்திருக்கிறேன்.எனது அணியில் உள்ள ஒவ்வொருவரும் தகுதியில் வளரவேண்டும் என்ற அவாவுடன் இருந்திருக்கிறேன். ஒரு முகாமையாளன் அடுத்த முகாமையாளர்களை அடையாளப்படுத்தி தரவேண்டும், அதை நான் செய்திருக்கிறேன். எப்போதும் ஒரு அணியை வெற்றிகரமாக உருவாக்க கூடிய வல்லமையுடன் இருந்திருக்கிறேன். என்னால் முடிந்த பலவற்றை செய்துகாட்ட சந்தர்ப்பங்கள் கிடைக்காமல் போயிருக்கிறது.  குறைந்தளவு தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்திருக்கிறேன். என்னால் செய்ய கடினமான ஒன்றை இன்னொருவரை வைத்து எப்போதும் செய்ய விரும்புபவனல்ல.  ஒவ்வொருவரின் பரஸ்பர மதிப்பளிப்புடனாகவே எனது முகாமைத்துவம் அமைந்தது.நான் ஒருபோதும் மற்றையவர்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி  நினைத்ததில்லை ஆனாலும் சூழ உள்ளவர்களுடன் தேவைக்கேற்ப கலந்தாலோசித்துக்கொள்வேன். நல்லவிடயங்கள் யாரிடம் இருந்து வந்தாலும் அதை நடைமுறைப்படுத்த பின்நிற்பதில்லை. எப்போதும் எனது பதவிகளுக்காக இறங்கிப்போனவனல்ல , எனது முகாமையின் வெற்றியென்பது நிஜமாகவே ஒவ்வொரு பங்காளியினதும் வெற்றியே, எனக்கானதல்ல.  எனது முகாமையின் மையப்புள்ளி மக்கள்நலனே.



Share/Save/Bookmark

திரும்பிப்பார்க்கிறேன்

 


எனது இளையதம்பியார் ( மலரவன்) , அவருக்கு சிறுவயதில் இருந்தே இயற்கையுடன் ஒரு பிணைப்பு இருந்தது. அவரது செய்கைகள் அபரீதமானவை. அவர் இயற்கையை இரசித்து வாழ்ந்தவர். அவருக்கு தரமான பழக்கன்றுகளை உருவாக்குவதில் பெரும் ஈடுபாடு இருந்தது. நல்ல சுவையில் பழங்கள் இருந்தால் அந்த விதைகளை கன்றாக்குவதில் அவர் கைதேர்ந்தவர். அக்கன்றுகளை எல்லாருக்கும் வழங்கவேண்டும் என்பது அவருக்கே உரிய விருப்பு.அவர் ஒன்பது பத்தாம் வகுப்புகளிலேயே தேசிக்காய் கன்று, பசன் புரூட் கன்று, பெரிய கொய்யா கன்று என பலவகை கன்றுகளை தரமான முறையில் உருவாக்கி பொலுத்தீன் பைகளில் மண்ணிட்டு ஓரளவு பெரியளவில் மலிவான விலையில் விற்றுவந்தார். அப்போது எமது குடும்பம் இராமலிங்கம் வீதியில், நல்லூர் பாதையோரமான வீடொன்றில் வாடகைக்கு இருந்தார்கள். வீட்டு படலையில் இந்த கன்றுகள் விற்பனைக்குண்டு என்ற பதாகை எப்போதும் தொங்கும். எனது வீடு தெரியாதவர்களுக்கு நான் இந்த அடையாளத்தைத்தான் சொல்லிவிடுவேன். எனது இளையதம்பியார் தனது தேவைக்குரிய  பணத்தை வீட்டில் கேட்பதில்லை.   இன்று அவர் உயிரோடு இல்லை. நிச்சயமாக அவர் உருவாக்கிய மரக்கன்றுகள் மரங்களாய் அல்லது அதன் வழித்தோன்றல்கள் இருக்கும்.     



Share/Save/Bookmark

திங்கள், 15 பிப்ரவரி, 2021

திரும்பிப்பார்க்கிறேன்

 


இரண்டாயிரம் ஆண்டுகளில் கிளிநொச்சியின் மீளுருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தேன். கிளிநொச்சி சந்தை எங்களது வரைபடத்திற்கு ஏற்றவாறே அமைக்கப்பட்டது. அநேகமாக காலையில் கிளிநொச்சி சந்தையையும் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக சுற்றி பார்த்துவருவேன். அப்போதெல்லாம் சந்தையிற்கு விவசாயிகள் மரக்கறி வகைகளை சைக்கிளில் பின் கரியலில் உறைப்பையில் அல்லது சாக்கில்  உள்வைத்து கட்டி கொண்டுவருவார்கள். சிலர் மோட்டார் சைக்கிளில் கொண்டுவருவார்கள். சந்தையிற்கு மரக்கறிகளை கொடுத்துவிட்டு அநேகமானவர்கள் கிளிநொச்சியில் இயங்கிய பாண்டியன் உணவகத்தில்தான் உணவருந்துவார்கள். பாண்டியன் உணவகத்தில் உணவு தரமாக மட்டுமல்ல மலிவானதாகவும் இருக்கும். பலர் உணவுண்ணும் இடமாகையால் அங்கும் சுகாதார நடைமுறைகளை மறைமுகமாய் பார்த்துதான் எனது காரியாலயம் செல்வேன்.





Share/Save/Bookmark

திரும்பிப்பார்க்கிறேன்

  

1990 - 1995 காலப்பகுதியில் வட இலங்கையில் நடைபெற்ற   இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான போர் முனையில் கள முன்னணி மருத்துவராக பணிபுரிந்தேன். துப்பாக்கி ரவைகளுக்கும் ஷெல் எறிகணைகளுக்கும் விமான குண்டு வீச்சுக்கும் நடுவில் பணிபுரிந்தது எப்போதும் எனக்கு ஒரு சவாலான அனுபவம்தான்.   பலதடவைகள் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறேன். களப்பணியில் பல உயிர்களை காத்திருக்கிறேன் என்பதுபோல் என்மடியில் என் கண்முன்னால் உயிரிழந்தவர்களின் நினைவும் என்னில் ஆழமாய் படிந்துபோய் இருக்கிறது. உண்மையில் ஒவ்வொரு தடவையும் களமுனையில் பணியாற்றி பாதுகாப்பான பகுதியிற்கு மீள்கையில் தப்பிவிட்டோம் என்ற உணர்வு வந்து போகும். சில களச் சம்பவங்களை நினைக்கையில் இப்போதும் மயிர்க்கூச்செறிகிறது.  எனது களமருத்துவப்பணியில் எப்போதும் நேர்த்தியுடன் இயங்கியிருக்கிறேன். எனக்கு மிகப்பொருத்தமான பணி களமருத்துவம்தான் என்ற நினைப்பும் எனக்குண்டு. சிலநேரம் எனது தந்தையும் களமருத்துவர் என்பது காரணமாய் இருக்குமோ தெரியவில்லை .      



Share/Save/Bookmark

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

திரும்பிப்பார்க்கிறேன்

  

 பிள்ளைகளின் உடல் உளநலன் மிகமுக்கியமானது. பிள்ளைகளின் கல்வி எவ்வளவு முக்கியமானதோ அந்தளவிற்கு விளையாட்டு / உடற்பயிற்சிகளும் முக்கியமானவை. இவை பிள்ளைகள் பண்புடன் சமூகத்துடன் இணைந்து வாழ மட்டுமல்ல ஆளுமை விருத்திற்கும் அடிப்படையானவை. 


இரண்டாயிரம் ஆண்டுகளின் சமாதானக்காலம், வன்னியில் பாடசாலை மட்டத்தில் தற்காப்புகலையில் ஒன்றான கராட்டியினை ஆரம்பித்துவைத்தோம். இதற்கான ஆலோசனைக்கூட்டம் கிளிநொச்சி திலீபன் முகாமில் அரசியல் பொறுப்பாளர் தலைமையில் நடந்தது. இதில் கல்விக்கழக பொறுப்பாளர் பேபி அண்ணை, விளையாட்டுத்துறை பொறுப்பாளர், கிளிநொச்சி முல்லைத்தீவு கல்விப்பணிப்பாளர்கள், கராட்டி மாஸ்டர் சோதி அண்ணை போன்ற சிலருடன் ஆலோசகராக நானும் பங்குபற்றினேன். இச்செயற்திட்டத்திற்கு விளையாட்டுத்துறையை சேர்ந்த இன்பன் அவர்கள் இணைப்பாளராக நியமிக்கப்பட்டு குறிப்பிட்ட சிலபாடசாலைகளில் ஆறாம் வகுப்பிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தற்காப்புக்கலையின் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது.   


உண்மையில் பிள்ளைகள் ஒரு தற்காப்புக்கலையினை , யோகக்கலையினை பாடசாலை காலத்திலேயே ஓரளவு கற்றிருப்பது அவர்களது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.



Share/Save/Bookmark
Bookmark and Share