|
திங்கள், 14 ஜூலை, 2025
போர்ச்சூழல் , அதற்குள் மக்களை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றுவது மக்களின் சுகாதார போசாக்கு நிலையை மேம்படுத்துவதற்காக பல வேலைத்திட்டங்களை நாளும் மேற்கொண்டிருந்தோம். ஒவ்வொருநாள் வேலைத்திட்டங்களுக்கு பின்னும் புதுப்புதுச் செய்திகளை விழிப்புணர்வினை தாயக ஊடங்கங்களுக்கு அனுப்பிவிட்டுத்தான் அடுத்த கடமையிற்கு சென்றேன். அந்தக்காலங்களில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று எனது செய்தியாக்கம் தாயக ஊடங்கங்களில் நாளும் வந்துகொண்டிருந்தன.
வெள்ளி, 20 ஜூன், 2025
நாங்கள் சுவாசிக்கும் காற்று
வயல்கரையில் வியர்வை உலர்த்திய காற்றும்
கடற்கரையில் வெக்கையை தனித்த காற்றும்
கிபீர் இரைச்சலோடு வந்து முகத்தில் அறைந்த காற்றும்
குழந்தையிற்கு பால்மா வாங்கமுடியா தாயின் ஏக்க மூச்சும்
பட்டம் ஏறும் காற்றும்
புல்லாங்குழல் துளையினூடு வெளிவரும் இசைக்காற்றும்
மனிதர்கள் விலங்குகளின் இறுதி மூச்சும்
மகளே !
நாங்கள் சுவாசிக்கும் இக்காற்றே !!
காற்றுக்கு வேலியில்லை, பேதமில்லை
நாடுமில்லை, பகையுமில்லைே

நாங்கள் சுவாசிக்கும் காற்று
வியாழன், 19 ஜூன், 2025
"போர்"
"போர்"
உனது தாயோ
எனது தாயோ அழுவாள்
வாழ்நாள் முழுவதும்
சமத்துவம்
வாழவில்லையெனில்
போர் வாழும்
சமத்துவமான உலகு
ஆறறிவின் இலக்காகவேண்டும்

"போர்"
நீ போய்முடியும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன்
சந்தித்துக்கொண்டதும்
பிரிந்துபோனதும்
நண்ப !
அது உனக்கு வரலாறு
எனக்கு ?
நீ எப்போதும்போல தெளிவாக இருந்தாய்
அப்போது கூட உன்னால் சிரிக்க முடிந்தது
துப்பாக்கி ரவைகள்
ஈசல்களாய் அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்தன
மீண்டும் சந்திப்போம் என்றுகூட சொல்லாமல்
நீ நடந்து கொண்டிருந்தாய்
நீ தந்த ரொட்டித்துண்டுடன்
நீ போய்முடியும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன்

நீ போய்முடியும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன்
திங்கள், 16 ஜூன், 2025
திரும்பிப்பார்க்கிறேன்
1991 ஆம் ஆண்டு ஆரம்பகாலம், சுதுமலையில் இயங்கிய மூன்று மருத்துவவீடுகளில் இருந்த காயமடைந்த போராளிகளுக்கான மருத்துவராக நான் பணி செய்தேன். அநேகமாக ஒவ்வொருநாளும் மூன்று வீடுகளில் இருந்த காயமடைந்த போராளிகளையும் பார்த்துவருவேன். ஒரு காலில் காயமடைந்து மண் மூட்டை சிகிச்சையில் இருக்கும் ஒரு போராளி பற்றி அந்த வீட்டிற்குரிய மருத்துவ போராளி எனக்கு தகவல் தந்தான். அவன் சரியாக சாப்பிடுவதில்லை, மற்றையவர்களுடன் கதைப்பதில்லை, கதைப்பதையே குறைத்துவிட்டான். அன்றிலிருந்து ஒவ்வொருநாளும் அவனோடு அரை மணித்தியாலமாவது கதைத்துவந்தேன். அவனது ஒடுங்கிய முகத்தில் விரிவும் சிரிப்பும் படிப்படியாக வருவதை எல்லோரும் உணர்ந்தார்கள். அவன் ஒரு தனித்துவமான மருத்துவ நிர்வாகியாய் வளர்ந்து , வரலாற்றில் பெயர் பதித்து, தான் நேசித்த மக்களுக்காய் தாய்மண்ணோடு கலந்தான் .அவன் வேறுயாருமல்ல, களமருத்துவப் பொறுப்பாளர் திவாகர்.

திரும்பிப்பார்க்கிறேன்
சனி, 17 மே, 2025
எதுவும் சொல்வதற்கில்லை
கடல் வற்றிற்று மூச்சுகள் நின்றன
யாருமில்லை ஓலமில்லை
வெந்த பூமியை கழுகுகள் தின்றன
உம் நினைவோடிருப்போம் நினைவிழக்கும்வரை
கனவை சுமக்காத வலியால்
நிதம்
உழன்றுகொண்டிருக்கிறது உயிர்
எதுவும் சொல்வதற்கில்லை
மனம் தவித்துக்கொண்டிருக்கிறது
சாத்தியமேயில்லாத
இன்னொரு சந்திப்புக்காய்

எதுவும் சொல்வதற்கில்லை
வெள்ளி, 2 மே, 2025
வெள்ளி, 11 ஏப்ரல், 2025
நான் புலம்பெயர்ந்து பதினைந்து வருடங்களை கடந்துவிட்டது. நான் இங்கு வந்ததிலிருந்து வேறு இனத்தை சேர்ந்தவர்களோடும் பழக சந்தர்ப்பம் கிடைத்தது , எனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்தை பற்றி சொல்லிவந்திருக்கிறேன். நான் சந்தித்த அநேகருக்கு எமது பிரச்சனை பற்றிய அறிவு அறவே இருந்திருக்கவில்லை என்பது கவலையானது.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025
நண்பா !
நானும் நீயும்
குந்தியிருந்து
கதைத்து சிரித்த
தேர்முட்டி படிக்கல்லை
எட்டி நின்று பார்க்கிறேன்
பிரிவு அன்றுதான் நடந்தது
ஏதோ சொல்லிப்போனாய்?
என்னதான் சொல்லியிருப்பாய்
நினைக்காத நாளில்லை
கோயிலின் சிறுமடம்
நீயும் நானும் தியாகியும்
நினைவில் ஏதும் குறைவில்லை
தனித்திருந்தாலும்
அதே திசையில்
சுமைதாங்கி நடந்திருந்தேன்
இன்று
கால்களில் அசைவிருந்தாலும்
அந்த திசையை காணவில்லை
கனவுகள் இல்லா உறக்கத்தில்
நிம்மதி உண்டுதான்
குடைந்தபடி வலி இருக்கிறதே

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025
சனி, 1 பிப்ரவரி, 2025
திரும்பிப்பார்க்கிறேன்
1996 ஆம் ஆண்டு சித்திரை மாதம் ( திகதி சரியாக தெரியவில்லை) யாழ் மாவட்டம் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. எமது சத்திரசிகிச்சை கூட உபகரணங்களை இயன்றளவு வன்னிக்கு அனுப்பிய பின் கிளாலியூடாக கடற்புலிகளின் படகில் பயணித்து பூநகரியில் இறங்கிய நினைவு இன்றுபோல் இருக்கிறது. அடுத்தநாளிலிருந்து முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள் வரை சத்திரசிகிச்சையாளனாகவோ சத்திரசிகிச்சைகூடங்களை வழிநடத்துபவனாகவோ பயணித்தேன்.எங்கள் சத்திரசிகிச்சை அணிகளின் பணியென்பது சாதாரணமானது அல்ல, எமது பணிகள் சரியான முறையில் பதியப்பட்டிருக்குமானால் சாதனையாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கக்கூடும். எமது சத்திரசிகிச்சையின் வெற்றிவீதம் சர்வதேசத்தில் விதந்துரைக்கப்படுகின்ற வெற்றிவீதத்திற்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல.
சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் நடமாட்டங்களுக்கு நடுவிலும் சத்திர சிகிச்சை கூடங்களையோ மக்களுக்கான மருத்துவசேவைகளையோ நடத்தியிருக்கிறோம். எமது சகாக்களின் அநேகர் தங்களது பணியினூடாவே புடம் போடப்பட்டார்கள். அந்தகாலத்திலெல்லாம் எமது சகாக்களின் பணி நாளாந்தம் சுமார் இருபது மணித்தியாலங்களாய் இருந்திருக்கிறது. எமது சகாக்களின் சிலர் உடலில் ஓடும் குருதியின் அளவைவிட இன்னுமொரு மடங்கு குருதியை மொத்தமாக தமது பணிக்காலத்தில் தேவையானவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.இந்த பணிக்கு பல்வேறு விதத்திலும் உறக்கம் துறந்து உழைத்த பலர் இன்று எம்மோடு இல்லை ஆனால் அவர்கள் என்றும் எம் இதயங்களில் வாழ்வார்கள். எமது சகாக்கள் ஒவ்வொருவருக்கு பின்னாலும் தனித்துவமான வரலாறு இருக்கிறது.
நாம் யாழ்ப்பாணத்தினை இழந்தபோது சிறிலங்கா அரசும் இராணுவ அரசியல் ஆய்வாளர்களும் புலிகளால் இனி பெரிய தாக்குதல்களை செய்யமுடியாது என கணித்தனர் ஆனால் அதற்கு பிறகுதான் பெரும் வரலாற்றுத்தாக்குதல்கள் நடந்தன. தலைமையினதும், மூத்த மருத்துவர்களதும் , மருத்துவநிர்வாகிகளதும், ஒட்டுமொத்த மருத்துவப்பிரிவினதும் கூட்டு முயற்சி யாவற்றையும் சாத்தியமாக்கின.

திரும்பிப்பார்க்கிறேன்
ஞாயிறு, 26 ஜனவரி, 2025
அந்த காலம் இன்றில்லை
அங்கும்
அந்த காலம் இன்றில்லை
இங்கு
காலம் பருவங்களோடு மாறிக்கொண்டிருக்கும்
பனி உருகுவதை போல
என் முதல் தலைமுறை அருகிவிட்டது
என் ஆசிரியர்களும்
என் கண்ணீர்த்திரையினூடேதான் தெரிகிறார்கள்
ஒரு பெருங்கனவு கலைந்துவிட்டது
புதிய உலகம் அந்நியதுதான்
விரும்பியோ விரும்பாமலோ
அந்நியோன்யமாகிவிட்டது

சனி, 18 ஜனவரி, 2025
வழிப்போக்கனிடம் திசை இல்லை
" மக்கள் விடுதலையடைவர் "
கனவுடன் கண்மூடினர்
அருகிலிருந்தவர் அந்தரிக்கின்றனர்
அங்குமில்லை இங்குமில்லை
அமைதியை குலைக்கிறது சாக்குருவி
கேட்கவில்லை
பிறந்த குழந்தையின் சத்தம்
வழிப்போக்கனிடம் திசை இல்லை

வழிப்போக்கனிடம் திசை இல்லை
புதன், 15 ஜனவரி, 2025
சனி, 11 ஜனவரி, 2025
இடைவெளி
அன்று
மாவீரர்களும்
இன்றைய முன்னாள் போராளிகளும்
அருகருகில் வாழ்ந்தார்கள்
இன்று
இடைவெளி
மடுவுக்கும் மலைக்குமாகிறது

இடைவெளி
அது போதும் எனக்கு
என் தம்பி
என் கூட இல்லைத்தான்
இருந்தாலும்
அவன்
எங்களை
தான் நேசித்த மக்களை
எவ்வளவு நேசித்தான்
என்பதை
நான் அறிவேன்
அது போதும் எனக்கு
என் தந்தை
எம்மோடு இல்லைத்தான்
இருந்தாலும்
அவர் எமை நேசித்த ஆழம்
என் உயிரில் இருக்கிறது

அது போதும் எனக்கு
ஞாயிறு, 5 ஜனவரி, 2025
சனி, 4 ஜனவரி, 2025
எனது பதின்ம வயதுகளில் சிறுகதைகள் நாவல்கள் வாசிப்பதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது,குறிப்பிட்ட நூல்களை ருசித்து வாசித்திருந்தேன் ,அதற்கு பின்னான காலங்களில் விருப்பு இருந்தாலும் ஒரு சீரான வாசிப்பு இருந்ததில்லை. இவ்விடைவெளியில் கவிதைகள் குறிப்பாக புதுக்கவிதைகளை வாசிக்கக்கூடியதாய் இருந்தது. நான் விரும்பியும் ஆறி அமர்ந்து வாசிக்கமுடியாமல் போன நூல்களின் எண்ணிக்கை ஒன்று இரண்டல்ல. காலங்களோடு இரசனை மாறும் இருந்தாலும் சில நூல்களின் குளிர்மை இன்றும் நெஞ்சில் இருக்கிறது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)