ஞாயிறு, 7 ஜூலை, 2013

சும்மா வெளிக்கிடுவமே பலாப்பழம் சாப்பிட்டுட்டுத்தான் .

அண்ணை யார் கதைத்தாலும் அதற்கு முக்கியத்துவப்படுத்தி செவிசாய்ப்பார்.இளைய போராளிகள் சில நேரம் கதைக்கிறதை கேட்கிறதே எங்களுக்கு கஸ்டமாய் இருக்கும் ஆனால் அதற்கு அண்ணை
விலாவாரியாய் விளங்கப்படுத்துவார்.தெரியாத விடயங்களை எவரிடமிருந்தாலும் கேட்டு அறிந்து கொள்ளுவார்.  புலிகள் மிகவும் நல்ல நிர்வாகத்தை நடத்த வேண்டும் என உளம் நிறைய விரும்பியிருந்தார். அவருடைய எதிர்பார்ப்பை ஓரளவுதான் நடைமுறையில் பூர்த்தி செய்யக்கூடியதாய் இருந்தது.தங்களுடைய   சரிகளையும்,பிழைகளையும் ஏற்றுக்கொண்டு,பிழைகளை திருத்தவேணும் என்று சதா சந்திப்புகளில் சொல்லிக்கொண்டு இருப்பார்.
அண்ணையின் பாதுகாப்புகளுக்கு பொறுப்பாக இருந்தவரிடம் பாதுகாப்பு அணியில் உள்ள போராளிகளுக்கு மழை உடுப்பு வாங்கிக்கொடுக்கும் படி அண்ணை சொல்லியிருந்தது.பொறுப்பாளர் வேலைப்பளுக்களுக்கிடையில் 
மறந்துவிட்டார்.அண்ணை கிளிநொச்சியில் இருந்து தன் முகாம் திரும்பிக்கொண்டு இருந்தபோது பாதுகாப்பு  அணியை சேர்ந்த சில போராளிகள் நனைந்து போவதை கண்டுவிட்டார். பொறுப்பாளர்  தோப்புக்கரணம் அடித்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்த புதிது ,ஏரியா அரசியல் பொறுப்பாளர் ஒருவர் மீது ஒரு குடும்பம் குற்றம்  ஒன்றை சுட்டிக்காட்டியிருந்தது.அந்த பொறுப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.தமிழ்ச்செல்வனை நான் சந்திக்கப்போயிருந்த நேரம் அவர் அந்த குடும்பத்தை சந்திக்க வெளிக்கிட்டுக்கொண்டிருந்தார்.என்னையும் வாங்கோவன் என்றார்.அந்த வீட்டை போனோம் அந்த வீட்டின் தலைவனும் தலைவியும்தான் இருந்தார்கள். தமிழ்ச்செல்வன் அந்த விடயத்தை சொல்லி ,எங்களை தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கோ என்றார் .அந்த தாயும் தந்தையும் அழத்தொடங்கிவிட்டார்கள் .கடவுளே நீங்கள் அதுக்கு மன்னிப்பு கேட்ககூடாது.நீங்கள் என்னப்பா பிழைசெய்தனீங்கள்.பிரயத்தனப்பட்டு எல்லாவற்றையும் சமாளித்து வெளிக்கிட்டோம். சும்மா வெளிக்கிடுவமே பலாப்பழம் சாப்பிட்டுட்டுத்தான் . 

ஓவியன்


Share/Save/Bookmark

சனி, 6 ஜூலை, 2013

அண்ணை தன்னளவில் என்றும் எளிமையாய் இருந்தார்

தொண்ணூற்றி ஓராம் ஆண்டு ஆனையிறவு சண்டை முடிய அண்ணை
யாழ்ப்பாணத்தில உள்ள சாளி ( நல்லூர்)முகாமில எங்களை சந்தித்து கதைத்தார்.அது எங்களுக்கான பொதுச்சந்திப்பாய் இருந்தது.அப்போது
கதைக்கும் போது அண்ணை சொன்னார்.நாடு கிடைச்சால் நான் ஊனமுற்ற போராளிகள் மக்களை பார்க்கிறதுதான் என்னுடைய கடமையாய்
இருக்கும்.நாடு கிடைச்சால் நாங்கள் வேகமாய் முன்னேறிவிடுவம் ஏனென்றால் எங்களிட்ட ஊழல் இருக்காது. அந்த எண்ணமே இறுதிவரை அவரிடம் இருந்தது.
 அண்ணை தன்னளவில் என்றும் எளிமையாய் இருந்தார்.காலத்தோடு அவரின் எளிமை துளி கூட மாறவில்லை.யாராவது ஏதாவது பொருட்களை அவருக்கு கொடுத்தால்,இந்தப்பொருள் யாருக்கு நல்லா இருக்கும் என்று ஊகித்து அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.அவர் எப்போதும் போலவே மரக்கட்டிலில் புல்லுப்பாயை விரித்து கைகளை தலைக்குக்கீழ் வைத்து நித்திரை கொள்ளுவார்.
அவரிடம் கேட்டால் சொல்லுவார் எழுபதுகளில் ஓடித்திரியும் காலங்களில்
வயல்வெளிகளிலும் ,தோட்டங்களிலும் இப்படி படுத்து பழகிவிட்டதென்று.

ஒரு நாள் காலை ஏழரை மணிக்கு பாலதாஸ்,நிதிப்பொறுப்பாளர் தமிழீழம்
அவர்கள் என்னை கிளிநொச்சியில் சந்திப்பதாய் முதல் நாளே தெரியப்படுத்தியிருந்தார்.அன்று காலை சரியாக ஏழரைக்கு வந்தார்.
முகமெல்லாம் நித்திரை இல்லாதது பளிச்சென்று தெரிந்தது.என்ன என்று வினவினேன் . அவர் சொன்னார்  தான் முதல் நாள் இரவு மன்னாரில் இருந்து வந்து இரவு மூன்று மணிக்கு அண்ணையை சந்தித்ததாயும்,சந்திப்பு முடிய தான் புதுக்குடியிருப்பு போய் விடிய இங்கு வர இருந்ததாகவும் , அண்ணை சொல்லிச்சாம் நீர் சரியாய் நித்திரை தூங்குகிறீர் கிளிநொச்சியிலேயே ஒரு முகாமை சொல்லி அங்க படுத்திட்டு விடிய போகச்சொன்னாராம்.  நாலு மணிக்கு போய் படுத்ததென்றும் ஐந்து மணிக்கு ஒருத்தன் வந்து எழுப்பினானாம் அண்ணை சொன்னதென்று ,சிங்கன் உங்கதான் படுத்திருக்கிறார் போய் அமத்து என்று,பிறகு என்ன நித்திரை என்று சிரித்த
பாலதாஸ், அண்ணை எனக்குப்பிறகும் ஒராளை சந்திச்சிருக்கிறார் அண்ணை பாவம் என்றுது.
கிட்டண்ணை இறந்த நேரம் அண்ணை மலசல கூடத்திற்குள் இருந்து விக்கி விக்கி அழுததாய் அப்போது அண்ணையின் பாதுகாப்பில் இருந்த போராளி எனக்கு சொல்லியிருந்தான்.தமிழ்ச்செல்வனின்  வீரச்சாவின் போது அவரின் கண்களில் இருந்து கண்ணீர் ஒழுகியதை கண்டேன்.
      


ஓவியன்


Share/Save/Bookmark

வெள்ளி, 5 ஜூலை, 2013

பசிபோக்க இறந்து போன குழந்தைகளை பார்க்கும் கொடுமை

இறுதி யுத்தகாலத்தில் ஒரு நாள் இரட்டைவாய்க்காலில்  இருந்து வலைஞர்மடப்பகுதிக்கு  உட்பக்கமாய் போய்க்கொண்டிருந்தேன்.சிறுவர்கள் பனைவடலியில் இருந்து குருத்தை வெட்டிக்கொண்டிருந்தார்கள்.பசியின் காரணமாய் குருத்தையும் சாப்பிடத் தொடங்கியிருந்தார்கள்.யாரும் யாருக்கும் உதவக்கூடிய வசதியில் இல்லை.மேலே வண்டு சுற்றிக்கொண்டு இருந்தது.அதைக்கடந்து சென்ற நிமிட நேரத்திலே இரண்டு செல்கள் அந்த வடலிப்பகுதியில் வீழ்ந்து புகைகிளம்பியது. அந்த பகுதியை நோக்கி ஓடினேன்.மூன்று குழந்தைகள் இறந்துவிட்டன.அதில் ஒன்று முதுகால் செல்துளைத்து பனையிலும்  குத்தி பனையோடு இறுகியபடிஇருந்தது.  ஒருவர் அந்தக்குழந்தையை இழுத்து எடுத்தார்.நெஞ்சு பிரிந்தநிலையில் குழந்தை இறந்துகிடந்தது.பிரிந்த இரப்பையில் பனங்குருத்துத்தான் இருந்தது. காயங்களுடன் துடித்த குழந்தைகளை புலிகளின் மருத்துவமனைக்கு அனுப்பினோம். நேற்று முன்தினமும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் (சகோதரர்கள்) ஏதோ கிழங்கை பசிதீர்க்க சாப்பிட்டு மாண்டுபோனார்கள். பசிபோக்க இறந்து போன குழந்தைகளை பார்க்கும் கொடுமை உலகில் யாருக்குமே வரக்கூடாது.

யுத்தத்தின் இறுதிவாரத்தில் ஒரு நேர சீனிக்கஞ்சி உப்புக்கஞ்சியாய் மாறியிருந்தது.எனது போராளிகள் ஓய்வு அறையில் கதைத்துக்கொண்டு இருந்தது எனக்கு கேட்டது.பாணும் ஒரு சம்பலும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்?.மீன் குழம்பும் குத்தரிசி சோறும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்?. புட்டும் முட்டைப்பொரியலும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்? நான் போய் கடிந்துகொண்டேன் என்ன நேரம் என்ன கதைக்கிறது என்று தெரியாது என்று.அவர்கள் சிரித்தபடி அந்த இடத்தை காலி செய்தனர். இப்ப நினைக்க கஸ்டமாய் இருக்கு.அவர்கள் விரும்பியதை சாப்பிடாமல் போய் விட்டார்கள்.உடல் முழுக்க புற்றுநோய் வந்து வலிப்பதுபோல் இருக்கிறது.

 ஓவியன்



Share/Save/Bookmark

புதன், 3 ஜூலை, 2013

குற்ற உணர்வு

கரும்புலிகளின் முகாமுக்கு மாதத்தில் ஒரு ஞாயிறு நான் போய்வரவேண்டும். அந்த முகாமில் ஆண்,பெண் கரும்புலிகள் பயிற்சி
எடுத்துக்கொண்டிருந்தார்கள்.ஞாயிற்றுக்கிழமைதான் அவர்களுக்கு ஓய்வுநாள்.அந்தப்போராளிகளின் வெள்ளை உள்ளமும்
உபசரிப்பும், கலகலப்பும் என்றும் தனித்துவமானது.
ஒருதடவை அவர்களின் முகாமில் இருந்து விடைபெறும்போது ஒரு கரும்புலி வீரன் அருகில் வந்து என்னுடன் தனிய கதைக்கோணும் என்றான்.சற்றுத்தள்ளிப்போய் என்ன என வினவினேன்.தான் ஒரு பெண் கரும்புலி உறுப்பினரை காதலிப்பதாகவும்,அவளின் விபரங்களையும் சொன்னான். நான் சொன்னேன் அது பிரச்சனை இல்லைத்தானே நீங்கள் சாதாரண போராளியாகி திருமணம் செய்யலாம்.தாம் இருவரும் கரும்புலியாகவே வாழ்வோம் என்று உறுதியாய் சொன்னான்.
நான் கேட்டேன் பொறுப்பாளருக்கு தெரியுமா?யாருக்குமே தெரியாது என்றான்.என்னிடம் என்ன எதிர்பார்ப்பதாய்க்கேட்டேன். யாராவது ஒருவரிடம் சொல்லோனும் அதுதான் என்றான்.நானும் விடைபெற்று அப்படியே போய்விட்டேன். நான் பின்பும் சந்தித்திருக்கிறேன் எந்த வித்தியாசமும் இல்லை அதே கலகலப்புத்தான்.
ஒரு நாள் காலை வழமை போல முதற்கடமையாய் ஈழநாதத்தை கையில் எடுத்தேன்.வெற்றி பெற்ற பெரும் கரும்புலித்தாக்குதலின் செய்தியிருந்தது.அடுத்து நெஞ்சு படபடக்க தலைவருடன் கரும்புலிகள் இருக்கும் படத்தைப்பார்த்தேன்.ஒவ்வொருவராய் பார்த்துப்பார்த்து போக அவனும் அவளும் இருந்தார்கள்.காதலர்களாயே வெடித்திருக்கிறார்கள்.
நான் இந்தக்காதலை உரியவர்களிடம் தெரியப்படுத்தி இருக்கலாமோ?என ஒரு குற்ற உணர்வு எனக்குள் தோன்றிற்று.
பின்பு சில தடவைகள் அண்ணையை சந்திக்கும்போது ,வேறு ஆட்கள் இருந்தமையால் இந்த விடயத்தை கதைக்க முடியவில்லை.ஆறு மாதத்திற்கு பிறகு அண்ணையை தனிய சந்திக்கும்போது இந்த கதையை தொடங்கினேன். அண்ணை சொன்னார் தனக்கு தெரியும் அவற்றை கடிதம் கிடைத்தது அப்ப அவர் வெடிச்சிட்டார். அந்தக்கடிதத்தில உங்களுக்கு தான் தெரியப்படுத்தியதாயும் எழுதியிருந்தார்.சொல்லி சிறிது நேரம் மேல் நோக்கிப்பார்த்தார்.பின் வேறு விடயங்களை சகஜமாய் கதைக்கத்தொடங்கினார். நான் செய்தது சரியோ பிழையோ எனக்கு இன்னும் விளங்கவில்லை.

ஓவியன்




Share/Save/Bookmark

தப்பினோம் பிழைச்சோம்

எண்பத்தி ஐந்தாம் ஆண்டாய் இருக்கவேண்டும்.எனக்கு ஒரு அறிவித்தல் வந்தது.எங்களுடைய வேலை சம்மந்தமாய் கொழும்பு சென்ற ஒருவர் அங்கு கொலை செய்யப்பட்டுவிட்டதாய். அந்த வீட்டுக்கு இந்த அறிவித்தலை தெரியப்படுத்திவிடவும்.நானும் நண்பனும்தான் வெளிக்கிட்டம்.சங்கானைக்குப்போய்,சேர்ச் ரோட்டுக்கு போய் உள்ளுக்குப்போகவேணும். ஒருமாதிரி வீட்டை கண்டுபிடித்து போய் விட்டோம்.இருவருக்குமே இப்படி செய்தி சொல்லி பழக்கமில்லை.அங்கு யாரும் தெரிந்தவராயும் இல்லை.ஒருமாதிரி ஒரு ஐயாவிடம் அந்த செய்தியை சொல்லிவிட்டேன்.திடீர் சாவுதானே அந்த இடம் அல்லோலகல்லோலப்பட்டது.வீட்டில் இருந்த சாமிப்படங்கள் எல்லாம் முற்றத்தில் போட்டு உடைக்கப்பட்டன. அந்த இடத்தில் ஒரு இருநூறு பேர் கூடிவிட்டனர்.நாங்கள் அங்கு இருக்க இன்னொரு போராளி வந்து என்னை அழைத்தான்.நான் எழுந்து போய் என்ன என்று வினவினேன்.உங்களுக்கு சொல்லட்டாம் இறந்தது இவரில்லையாம் அது வேற ஆளாம்.எனக்கு தலை சுற்றிற்று.அவன் போய் விட்டான்.அதில நான் எப்படி சொல்கிறது.நண்பனை இரகசியமாய் அழைத்து விடயத்தை சொன்னேன்.அவன் சொன்னான் இதுக்குள்ள ஒரு ஆள் அமைதியாய் வேலை செய்துகொண்டிருக்கிறார்.அவரை கொஞ்ச தூரம் கூட்டிப்போய் விசயத்தை சொல்லிட்டு போவம்.அப்படியே செய்தோம்.நாம் சொல்லும்போது நாம் எதிர்பார்க்காதமாதிரி அந்த மனிதர் சந்தோசப்பட்டார்.நாங்கள் தப்பினோம் பிழைச்சோம் என்று வந்து சேர்ந்தோம்.எனது நண்பன் எண்பத்தி ஏழில் வீரச்சாவு அடைந்துவிட்டான்.


 ஓவியன்  


Share/Save/Bookmark

செவ்வாய், 2 ஜூலை, 2013

என்ர குஞ்சுகள் கஷ்டப்பட்டிடுங்கள்

கிளிநொச்சிக்கும் அக்கராயனுக்கும் இடையில்,செழிப்பான அந்த கிராமம் அமைந்திருக்கிறது.தென்னைகளால் நிரம்பிய அந்தக்கிராமம் அகதியாய் வந்தவர்களை எப்போதும் வரவேற்றது.அந்தக்கிராமத்து போராளியொருவன்  எங்கள் பிரிவில் இருந்தான்.அவனின் பெற்றோரிடமிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் கிடைத்திருந்தது.அந்தப்போராளியின் தாய் மரணப்படுக்கையில் இருப்பதாகவும் மகனை தாய் பார்க்கவிரும்புவதாகவும் எழுதப்பட்டிருந்தது.நாங்கள் உடனடியாய் அந்தப்போராளியை விடுப்பில் அனுப்ப தீர்மானித்து எங்கள் பிரதான முகாமுக்கு எடுத்தோம்.
நான் மன்னார் போகும் வழியில் அவனை வீட்டில் இறக்கிவிட்டு,தாயின் நோயை விசாரிக்க அவனுடன் கூடச்சென்றேன்.அவர்கள் குடும்பநிலை சுமாராய் இருந்தது.சிறு தோட்டம் ,ஆடு மாடு,கோழிகள் நின்றன.மண் வீடு என்றாலும் அழகாக இருந்தது.தாய் படுத்த படுக்கையாய் கிடந்தாள்.தகப்பனும் சகோதரியும் அவனை கொஞ்சினார்கள்.தாயுக்கு அருகில் மகன் இருக்க தாய் விழித்துக்கொண்டாள்.அவனை மாறி மாறி கொஞ்சினாள்.அது ஒரு வழமையான தமிழ்ப்பாசக்குடும்பம்.எனக்கு இருக்க ஒரு கதிரை தந்தார்கள்.தகப்பன் கதைப்பது குறைவென்றாலும் ஓடித்திரிந்தார்.பத்துநிமிசத்தில கேட்காமல் சாப்பாடு வந்தது. வெள்ளைப்புட்டு சம்பல் முட்டைப்பொரியல். தாயின் நோயை விசாரித்தேன். தாயின்ற வயிறு வீக்கமாயும் இருந்தது.தாயிற்கு வயிற்றில கட்டியாம் ஆனால் அது கான்சர் இல்லையாம்.நோய் மட்டைகளையும் காட்டினார்கள்.கிளிநொச்சி அரசாங்க ஆஸ்பத்திரியில இருந்து வவுனியா அனுப்பி ,அங்கிருந்து அனுராதபுரம் அனுப்பியும் நோயாளி ஒப்பெரசன் தாங்கமாட்டார் என்று திருப்பி அனுப்பிட்டினம்.கட்டி இனி வெடிச்சிடும் என்றும் சொல்லிவிட்டிருக்காங்கள். என்ர பிள்ளை இருக்கிறான் எனக்கு கொள்ளிவைக்க, நான் இல்லாமல் என்ர குஞ்சுகள் கஷ்டப்பட்டிடுங்கள் தாய்  இடைக்கிடை புலம்பிக்கொண்டாள்.
அடுத்தநாளே கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனையில் ஒப்பெரசன் செய்யப்பட்டது.தாய் பூரணகுணமடைந்தாள்.
போராளியின் சகோதரியின் திருமணத்தின் போதும் எங்கள் எல்லோருக்கும் அழைப்புவிடப்பட்டிருந்தது. அந்தக்குடும்பத்தை மிக சந்தோஷ மனநிலையில் பார்த்தோம் .பின் மகன் மாவீரன் ஆனான்.தாயை தவிர ஏனையோர் இறுதி யுத்தத்தில் கிபீர் அடித்து இறந்து போனார்களாம்.தாய் சித்தம் கலங்கிப்போனாள் .பூவோடு கனகபுரம் துயிலும் இல்லத்தை நோக்கிப்போவாவாம் .யாரும் கண்டு பிடித்து வருவார்களாம்.அண்மையில் அந்த தாய் இறந்து போனாள்.அவளின் உடலை சவப்பெட்டி இல்லாமல், துணியால் சுற்றி ,தடிகளோடு கட்டி,காவி சுடலையில் எரித்தார்களாம்.


ஓவியன்


Share/Save/Bookmark

திங்கள், 1 ஜூலை, 2013

அண்ணை எப்போதுமே தெளிவானவர்

தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு , நானும் ஒரு பொறுப்பாளரும் அண்ணையை சந்திக்க போயிருந்தோம்.அண்ணையை சந்திக்கப்போனால் பொதுவாய் அங்கதான் சாப்பாடு.இடியப்பமும் சொதியுமென்றாலும் அந்த மேசைச்சாப்பாடு ஒரு தனி ரகம்தான்.கொத்துரொட்டி போட்டாலும் மூன்று நாலு வகைகள் இருக்கும்.அண்ணையை யார் சந்திக்கப்போயினமோ பொதுவாய் அவைக்கு விருப்பமான சாப்பாடுதான் இருக்கும்.சிலர் வருகினமென்றால் கட்டாயம் பன்றிக்கறி இருக்கும். எனக்கு அன்று பல்லுப்பிரச்சனை அண்ணை பிடிச்சிட்டுது.அன்றைக்கு சோறும் மாட்டிறைச்சி கறியும் கத்தரிக்காய் பால்கறியும்தான்.  நான் இறைச்சி சாப்பிட கஸ்டப்பட்டேன்.அண்ணை தான் சாப்பிட்டுக்கொண்டே இடைக்கிடை நல்ல இறைச்சி தேர்ந்து எனக்கு போட்டுக்கொண்டிருந்திது.எனக்கு சரியான கஸ்டமாய் இருந்திது.
பொறுப்பாளர் அவருடைய துறையின் கீழ் உள்ள ஒருபிரிவு ஆரம்பித்து பத்து வருடங்கள் ஆகிறதாம்.அந்தப்பிரிவு ஒரு மலர் செய்யவிரும்புவதாகவும் சொல்லி,அந்தப்பிரிவின் ஆரம்பகால பொறுப்பாளர் இயக்கத்தில் இருந்து விலத்தியுள்ளதால் அவரின் பெயரை பயன்படுத்தலாமா என்று கேட்டார்.அப்போது அண்ணை உடனடியாய் பதில் சொன்னார்.அப்ப நீங்கள் என்ன பொய் வரலாறோ எழுதப்போறியள்?.
அண்ணை எப்போதுமே தெளிவானவர். பின் ஒரு தடவை ஒருவர் அண்ணையுடன் கதைக்கும் போது மாத்தையா அண்ணையை மாத்தையா என்று கூறினார். அண்ணை உடனடியாய் மாத்தையாவை விட உமக்கு வயசு கூடவோ?என்று கேட்டார்.

ஓவியன்

         


Share/Save/Bookmark
Bookmark and Share