புதன், 3 ஜூலை, 2013

குற்ற உணர்வு

கரும்புலிகளின் முகாமுக்கு மாதத்தில் ஒரு ஞாயிறு நான் போய்வரவேண்டும். அந்த முகாமில் ஆண்,பெண் கரும்புலிகள் பயிற்சி
எடுத்துக்கொண்டிருந்தார்கள்.ஞாயிற்றுக்கிழமைதான் அவர்களுக்கு ஓய்வுநாள்.அந்தப்போராளிகளின் வெள்ளை உள்ளமும்
உபசரிப்பும், கலகலப்பும் என்றும் தனித்துவமானது.
ஒருதடவை அவர்களின் முகாமில் இருந்து விடைபெறும்போது ஒரு கரும்புலி வீரன் அருகில் வந்து என்னுடன் தனிய கதைக்கோணும் என்றான்.சற்றுத்தள்ளிப்போய் என்ன என வினவினேன்.தான் ஒரு பெண் கரும்புலி உறுப்பினரை காதலிப்பதாகவும்,அவளின் விபரங்களையும் சொன்னான். நான் சொன்னேன் அது பிரச்சனை இல்லைத்தானே நீங்கள் சாதாரண போராளியாகி திருமணம் செய்யலாம்.தாம் இருவரும் கரும்புலியாகவே வாழ்வோம் என்று உறுதியாய் சொன்னான்.
நான் கேட்டேன் பொறுப்பாளருக்கு தெரியுமா?யாருக்குமே தெரியாது என்றான்.என்னிடம் என்ன எதிர்பார்ப்பதாய்க்கேட்டேன். யாராவது ஒருவரிடம் சொல்லோனும் அதுதான் என்றான்.நானும் விடைபெற்று அப்படியே போய்விட்டேன். நான் பின்பும் சந்தித்திருக்கிறேன் எந்த வித்தியாசமும் இல்லை அதே கலகலப்புத்தான்.
ஒரு நாள் காலை வழமை போல முதற்கடமையாய் ஈழநாதத்தை கையில் எடுத்தேன்.வெற்றி பெற்ற பெரும் கரும்புலித்தாக்குதலின் செய்தியிருந்தது.அடுத்து நெஞ்சு படபடக்க தலைவருடன் கரும்புலிகள் இருக்கும் படத்தைப்பார்த்தேன்.ஒவ்வொருவராய் பார்த்துப்பார்த்து போக அவனும் அவளும் இருந்தார்கள்.காதலர்களாயே வெடித்திருக்கிறார்கள்.
நான் இந்தக்காதலை உரியவர்களிடம் தெரியப்படுத்தி இருக்கலாமோ?என ஒரு குற்ற உணர்வு எனக்குள் தோன்றிற்று.
பின்பு சில தடவைகள் அண்ணையை சந்திக்கும்போது ,வேறு ஆட்கள் இருந்தமையால் இந்த விடயத்தை கதைக்க முடியவில்லை.ஆறு மாதத்திற்கு பிறகு அண்ணையை தனிய சந்திக்கும்போது இந்த கதையை தொடங்கினேன். அண்ணை சொன்னார் தனக்கு தெரியும் அவற்றை கடிதம் கிடைத்தது அப்ப அவர் வெடிச்சிட்டார். அந்தக்கடிதத்தில உங்களுக்கு தான் தெரியப்படுத்தியதாயும் எழுதியிருந்தார்.சொல்லி சிறிது நேரம் மேல் நோக்கிப்பார்த்தார்.பின் வேறு விடயங்களை சகஜமாய் கதைக்கத்தொடங்கினார். நான் செய்தது சரியோ பிழையோ எனக்கு இன்னும் விளங்கவில்லை.

ஓவியன்




Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share